பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

இந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்

இந்திய மென்பொருள் சேவைத் துறையின் ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக ஆரோக்கியமாக இருந்தன. உண்மையில் மென்பொருள் சேவை அளிக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் மற்றும் வர்த்தகம் சக்கைப் போடு போட்டன.

மழை தொடர்ந்து பெய்தால் அங்கங்கே நூற்றுக் கணக்கில் முளைக்கும் காட்டுக் காளான்கள் போல அந்தச் சமயத்தில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நோக்கத்தில், மென்பொருள் சேவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், பெயரில் மட்டுமே 'இன்·போடெக்', 'இன்·போஸிஸ்' என்று இணைப்புச் சேர்த்துக் கொண்டு, ஏமாறக் காத்திருந்த பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய பேர்வழிகள் ஏராளம்.

செபி (SEBI) நிறுவனமும், இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு
  • முதலீட்டாளர்களுக்குக் களை எது பயிர் எது என்று அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
  • பங்குச் சந்தை வர்த்தக முறைகளை மேம்படுத்துவது, மற்றும்
  • நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவது
என்று நல்ல காரியம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இருந்தும் இந்தியப் பங்குச் சந்தை முறைகளில் இன்னமும் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளன. ஆகப் பெரிய ஓட்டை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

மண்டபத்தில் யாராவது சொல்லி செபிக்குத் தெரிந்ததா அல்லது அவர்களே கண்டு பிடித்தார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்டு பிடித்து விட்டார்கள். எப்படியோ செபி கண்கொத்திப் பாம்பாகச் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து முறைப் படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. பாராட்ட வேண்டியதுதான்.

காகிதப் பங்கு பத்திரங்கள் முறை வழக்கொழிந்து மின் பங்குகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. இதனால் பல முறைகேடுகள் ஒழிந்து விட்டன. இருந்தும் சமீபத்தில் இந்தியாவில் பல மின் பங்கு வைப்புக் கணக்குகளை (depository account) ஒருவரே பினாமி பெயர்களில் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வநதுள்ளது.

பங்கு வைப்புக் கணக்குகளை நடத்தும் நிறுவனங்கள் (Depository Participants) புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது வைப்பாளரின் அடையாளத்தை சந்தேகமறப் பெற வேண்டியது அவர்களின் முதன்மைப் பொறுப்பு. பினாமி கணக்குகள் ஏற்படுத்த முடியாமல் தடுக்க செபி இந்தப் பொறுப்புக்களையும், அவற்றிலிந்து தவறினால் கடும் விளைவுகளை DP நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கடும் எச்சரிக்கைகளையும் அறிவித்திருந்த போதும் இந்தக் கதி.

மிகப் பெயர் போன DP நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூட இந்தப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளன. ஒருவர் யெஸ் (Yes) வங்கியின் பங்குகளை முதன்மைச் சந்தையில் மிக அதிக அளவில் யாருக்கும் சந்தேகம் வராமல் வாங்கும் நோக்கத்தில் பல பினாமி கணக்குகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றியும் உள்ளார்.

அவர் எத்தனை கணக்குகள் ஏற்படுத்தினார் தெரியுமா? இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள்! இவர் வில்லாதி வில்லனென்றால், இவருக்குத் தம்பி ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய பினாமி கணக்குகள் சுமார் ஆயிரத்து ஐநூறு.

மனிதர் வாங்கிய பங்குகளை சந்தை அல்லாத வர்த்தகத்தில் (off market transaction) விற்ற கொஞ்ச நாளில் செபிக்கு எப்படியோ ஊசல் வாடை எட்டி விட்டது. மாட்டிக் கொண்டார் பாவம். கூடச் சேர்ந்து மாட்டிக் கொண்டிருக்கும் DP நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்புகளிலிருந்து தவறியதால் மாட்டிக் கொண்டனவா அல்லது திருட்டில் கூட்டாளிகளா என்பது இன்னமும் தெரியவில்லை. ஒரே ஆளுக்கு ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் என்றால் சந்தேகம் பலமாகதான் வருகிறது.

பலர் முதன்மைச் சந்தையில் பங்குகள் வாங்கி அவை சந்தையில் பட்டியலிடப் பட்டதும் அதிக விலையில் விற்று குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் ஆசையில் ஆழம் தெரியாமல் இந்த மாதிரிப் புதை சேறுகளில் காலை விட்டு விடுகிறார்கள். நான் தரமானவை என்று கருதும் பங்குகளில் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்வதால் முதன்மைச் சந்தை பக்கம் போவதேயில்லை.

வங்கிகள் தத்தம் முதலீடுகளை அதிகரிக்க பங்குச் சந்தையைக் கூடிய விரைவில் நாடக் கூடும். 2007 ஆண்டு வாக்கில் இந்திய வங்கிகள் BASEL II விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும். பொருளாதாரம் போகும் வேகத்தில், இந்திய வங்கிகள் துறை அபரிமிதமான் வளர்ச்சியைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றிப் பணம் பண்ணக் கூடிய விஷமிகளைக் கண்டறியக் கூடிய விழிப்பு முதலீட்டாளர்களிடம் வேண்டும் மேலும் படிக்க

வால்மார்ட் - என்ன பிரச்சனை ? - 2



சென்னையிலும், பெங்ளூரிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பெருகி வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவை கொடுக்கும் ஊதியம் போன்றவை சில நேரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு சமன்பாடு இல்லாத நம் சமுதாயத்தில் இந்த நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துவதாகவே எனக்கு தோன்றும். அரசு நிறுவனங்களிலும், பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை விட பல மடங்கு அதிக சம்பளத்தை மென்பொருள் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 30வயதிற்கும் உட்பட்ட இளைஞர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களைச் சார்ந்த, இவர்களைக் குறிவைத்து இயங்கும் பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உதாரணமாக உல்லாச கேளிக்கை இடங்கள். நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து, பேஷன் ஷோ வரை எங்களைப் போன்றவர்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயங்கள் ஒரு பகுதி சமுதாயத்திற்கு அந்நியமாக தோன்றுகிறது. பொருளாதர ரீதியில் ஒரு வீட்டுக் கடன் பெறும் பொழுது கூட எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை, முக்கியத்துவம் பிறருக்கு கிடைப்பதில்லை. இதுவெல்லாம் ஏற்கனவே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது போல தான் தோன்றுகிறது.

இன்று ஏதோ ஒரு டிகிரியுடன் நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே ஒரு நல்ல வேலையில் நுழைந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையில் என்ன செய்கிறோம், ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கும். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவிற்கு வருகின்றன வேலைகளில் 50%-70% வேலைகள் Production Support /Maintenance வேலைகள் தான். சமீபத்தில் ABN AMRO நிறுவனம் இன்போசிஸ் மற்றும் TCS நிறுவனங்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வேலைகளை கொடுத்தது. இதில் பெரும்பாலான வேலைகள் Production Support /Maintenance தான். இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mechanical Engineer) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Copy-paste செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் உள்ள பிற துறைகளில் நல்ல சம்பளம் இல்லை. ஏனெனில் outsourcing இந்த துறைகளில் குறைவாகவே உள்ளது அல்லது கொஞ்சமும் இல்லை.

ஒரு பிரிவினர் நிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருக்க கொஞ்சமாக படிப்பறிவு உள்ள semi-skilled or unskilled ஊழியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். மிகக் குறைந்த சம்பளம் தான். பணியும் கடினம். அவர்களுக்கு அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும். வேறு வழி கிடையாது.

மற்றொரு பிரிவினர் இருக்கின்றனர். எந்த வேலையும் கிடைக்காமல் சிலர் ஆட்டோ ஓட்டுகின்றனர். சிலர் டூ வீலர்களில் பொருள்களை பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள், தள்ளு வண்டிகளிலும், பிளாட்பாரங்களிலும் வியபாரம் செய்யும் சிலர் இப்படி ஒரு மிகப் பெரிய கூட்டம் தன் அன்றாட தேவைகளுக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

படித்தும் வேலை கிடைக்காத நிறையப் பேரை பார்த்திருக்கிறேன். கல்லூரியில் டிகிரி முடித்து விட்டு ஆட்டோ ஓட்டுபவர்களையும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் காவலர்களாக வேலை செய்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாதவர்கள் எங்கோ மூலை முடுக்குகளில் சின்ன கடை வைத்துக் கொள்வார்கள்.

"எங்கள் காலத்தில் இருந்தது போல் இன்று மளிகைக் கடையை வைத்து பணமெல்லாம் பெரிதாக சம்பாதித்து விட முடியாது. ஏதோ காலத்தை ஓட்டலாம்" என்று என் அப்பா சொல்வார். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கடைத் தெருவில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. இன்று மூலை முடுக்கெல்லாம், திரும்பிய பக்கமெல்லாம் கடைகள் தான். தெருவுக்கு தெரு குட்டிக் கடைகள் முளைத்து விட்டன.

இது எதனால் ஏற்பட்டது ? இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் ? இதனைச் செய்து தான் தீர வேண்டுமா ?

நல்ல வேலைவாய்ப்பு இருந்தால் இந்த வேலை இவர்களுக்கு தேவையில்லை தான். தற்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை ஒரு நிர்பந்தம் காரணமாக எழுவது. அவர்களுக்கு அதை செய்வதில் ஆர்வமோ, உடன்பாடோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனாலும் செய்து தான் தீர வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட முடியும்.

இந்தியா போன்ற மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நாட்டில் அரசாங்கமோ, இங்கிருக்கும் தனியார் நிறுவனங்களோ மட்டுமே வேலைவாய்ப்பை பெருக்கி கொடுத்து விட முடியாது. இவ்வளவு மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய நிறுவனங்களோ, மூலதனமோ இந்தியாவில் அதிகம் இல்லை.

கடந்த நிதி நிலை அறிக்கையில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. இது போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கைகளிலும் வரும். அதனைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அரசாங்கம் எப்படி இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் ? எங்கிருந்து பணம் வரும் ? எல்லாமே Populist அறிவிப்புகள். கூட்டணி கட்சிகளை/ஓட்டு வங்கிகளை திருப்தி படுத்தும் நடவடிக்கைகள். இது வரை அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டதென தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைக்களுக்கு என்ன தான் தீர்வு ஏற்பட முடியும் ?

வால்மார்ட், k-Mart/Sears, Target போன்ற நிறுவனங்களை இந்தியாவில் திறக்க அனுமதிப்பது முழுமையான தீர்வாகும் என்று சொல்லமுடியா விட்டாலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

எப்படி ?

வால்மார்ட் ஏதோ மளிகை சாமான்களை விற்கும் நிறுவனம் என்றோ, இருக்கின்ற மளிகைக் கடைகளை காலி செய்து விட்டு பணத்தை அள்ளிக் கொண்டு அமெரிக்காவிற்கு பறந்து விடும் என்றோ கூறப்படும் வாதங்கள் அர்த்தமற்றவை. வால்மார்ட் போன்ற நிறுவனங்களால் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை (Trade deficit) தற்பொழுது சுமார் 150பில்லியன் டாலர்கள். 1989ல் இது சுமார் 6பில்லியனாக இருந்தது. அடுத்து வந்த 14ஆண்டுகளில் இது பல மடங்கு உயர்ந்து 2003ல் 124 பில்லியனை எட்டியது. 2004ல் மற்றொரு 20% உயர்ந்து 150பில்லியன் டாலர்களை எட்டியது என அமெரிக்க அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

இது கூறும் தகவல்கள் என்ன ?

சீனாவின் ஏற்றுமதி மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது

இதற்கு முக்கிய காரணம் வால்மார்ட் போன்ற ரீடையல் நிறுவனங்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் அது உண்மை.

பொருளாதாரத்தில் Push, Pull என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. Push என்பது Manufacturing நிறுவனங்கள் தாங்கள் எந்தப் பொருள்களை உற்பத்திச் செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்து சந்தைக்கு அனுப்பும் முறை. இது தான் ஆரம்ப காலங்களில் - 1980 வரை வழக்கில் இருந்த முறை

Pull என்பது, ரீடையல் நிறுவனங்கள் சந்தையில் என்ன பொருள் விற்கும், எவ்வளவு விற்கும், அதற்கு பயனீட்டாளர்கள் என்ன விலை கொடுப்பார்கள், என்ன தரத்தில் அதனை எதிர்பார்ப்பார்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது.

இந்த Pull முறையைக் கொண்டு வந்து அமெரிக்கச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ரீடைல் நிறுவனங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக வால்மார்ட் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனா - அமெரிக்க Trade deficitல் வால்மார்ட்டின் பங்கு சுமார் 10% என்பதில் இருந்து வால்மார்ட் ஏற்படுத்திய தாக்கம் நமக்கு புரியும்.

வால்மார்டின் தாரக மந்திரம் ஒன்றே ஒன்று தான் - குறைந்த விலை




அமெரிக்காவெங்கிலும் இருக்கும் தன் கிளைகளுக்கு வால்மார்ட் மிகக் குறைந்த விலைக்கு பொருள்களை சீனாவில் இருந்து பெற்று வரும். அமெரிக்காவில் இருக்கும் தன் கிளைகளுக்கு சீனாவில் உற்பத்திச் செய்யும் பொருள்களை இறக்குமதி செய்யும். இதனால் சீனாவில் Manufacturing நிறுவனங்களின் வளர்ச்சி அதிகளவில் உயர்ந்தது. சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே சென்றது.

அமெரிக்காவில் செய்யப்பட்ட பல பொருள்களின் விலை அதிகமானதால் சீண்டுவார் இல்லாமல் போயின. அமெரிக்க Manufacturing நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. சுமார் 1.5மில்லியன் வேலைகளை அமெரிக்கர்கள் இழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் இழந்த வேலைகள் சீனாவிற்கு சென்றன. சீனாவில் பல வேலைவாய்ப்புகள் உருவாகின. சீனாவின் பொருளாதாரமும் Manufacturing மூலம் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டது.


இந்த மாற்றங்களை வால்மார்ட் எப்படி ஏற்படுத்தியது ? சீனாவிற்கு ஏற்பட்ட இது போன்ற மாற்றங்கள் இந்தியாவிலும் ஏற்பட முடியுமா ?

அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

மேலும் படிக்க

WALMART - என்ன பிரச்சனை ? - 1



சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

மேலும் படிக்க... மேலும் படிக்க

பணம் காய்க்கும் பங்குகள் - 1 - Follow-up

கடந்த வாரம் IDFC பங்குகளை வாங்கலாம் என்று இங்கு பரிந்துரை செய்யப்பட்டது

இந்து பிஸ்னஸ் லைன் பத்திரிக்கையும் இன்று வெளியிட்டுள்ள தனது முதலீட்டு பரிந்துரையில் அதேப் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள் மேலும் படிக்க

சென்ஸெக்ஸ் தொட்ட கடந்த மாத உச்சம் - 8722 !!

[முன்னுரை: தமிழ் சசி என்னை நம்பி இங்கே எழுத் இடம் அளித்திருக்கிறார். அவருக்குப் பணிவான வந்தனம். அவரது நம்பிக்கை வீண்போகாமலிருக்க முயற்சிப்பேன் என்ற உறுதிமொழியுடன் இந்த முதல் பதிவைப் பதிக்கிறேன். நான் பங்குச் சந்தையைப் பற்றிக் கற்றது கைமண் அளவு. கற்றுக் கொள்ள வேண்டியது கடலளவு. ஆகவே என் கருத்துக்களில் தவறிருந்தால் மன்னித்துத் தயங்காமல் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொண்டு மேலும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன். -உதயகுமார் நளினசேகரன்]

சென்ஸெக்ஸ் குறியீடு கடந்த செப்டம்பர் மாதம் இறுதி நாள் வர்த்தகத்தில் 8634 என்ற அளவில் முடிவுற்றது. குறியீடு இந்த ஆண்டு 8000 என்ற அளவைத் தாண்டினால் கவலைப் பட வேண்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன் இந்திய நிதியமைச்சர் கூறி வந்தார். இப்பொழுது என்னவென்றால், பங்குச் சந்தை வளர்ச்சி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது என்கிறார்.

பங்குச் சந்தை வல்லுனர்கள் கூட பங்கு விலை/ஈட்டும் வருவாய் (Price/Earnings) விகிதம் 17 அல்லது 18 என்ற ஆரோக்கியமான அளவிலேயே உள்ளதால் கவலையில்லை என்று தெரிவிக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்த விகிதங்கள் இன்னமும் 13 முதல் 15 என்ற அளவில்தான் உள்ளன.

இது ஒரு புறமிருக்க, நாம் இந்த வளர்ச்சியைப் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம்.

இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் எனக்குத் தெரியும் வாய்ப்புகளில் சில:
  • ப்ரிக் (BRIC) அறிக்கையின் படி இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளுக்குச் சிறப்பாக இருக்கப் போகிறது. 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் ஆக அதிகம் மக்கள் உழைக்கும் வயதில் இருக்கப் போகிறார்கள்
  • தகவல் தொழில் நுட்பத் துறையில் அமெரிக்காவின் 50 சதவிகித்திற்கும் அதிகமான சேவை நுகர்வுகள் இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன. தற்போது ABN Amro போன்ற ஒப்பந்தங்களின் நோக்கைப் பார்த்தால் ஐரோப்பியத் துணைக் கண்டத்திலிருந்தும் இந்தியச் சேவை நுகர்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன
  • மருத்துவச் சுற்றுலா (medical tourism) துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி
  • வாகனங்கள், மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித் துறையானது உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதித் தேவை அளவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியால் சிறப்பாக வளர்ந்து வருகிறது
  • பன்முக நூலிழை ஒப்பந்தம் அமலில் இருந்து விலக்கப் பட்ட பிறகு சீனாவின் மேல் அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஏற்படுத்திய ஏற்றுமதித் தடையால் இந்தியாவின் துணி மற்றும் ஆடை உற்பத்தித் துறை எதிர்பார்க்கும் வளர்ச்சி
  • சராசரி இந்தியனின் போக்கு எதிர்காலப் பொறுப்புகளை முன்னோக்கி சேமிக்கும் நோக்கிலிருந்து செலவழித்து மகிழும் போக்கிற்கு மாறிக் கொண்டிருப்பதால் அவரது நுகரும் போக்கு (Consumerism) வளர்ந்து அதனால் சந்தையில் உற்பத்திப் பொருட்களுக்கு தேவை அதிகரித்திருக்கும் நிலை
  • இந்த ஆண்டு பருவமழை இது வரை நல்ல அளவில் உள்ளதால் விவசாயத் துறையும் நல்ல விளைவுகளை எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு
  • நடந்து முடிந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 8 சதவிகிதத்தைத் தாண்டியிருக்கிறது. விவசாயத் துறையின் வளர்ச்சி மட்டுப் பட்டிருந்தாலும், உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன
  • இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றப் போவது வங்கித் துறை. தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய முதலீடுகளுக்குத் தேவையான பணத்தைச் சந்தையிலிருந்து புரட்டித் தொழில் வளர்ச்சிக்குத் தர வேண்டிய கடமை இந்தத் துறைக்கு உள்ளது

ஆக, பல நோக்கிலிருந்து பார்த்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சிச் செய்திகள் ஆரோக்கியமான எதிர்பார்ப்பைத் தருவதாக உள்ளன.

இந்த வளர்ச்சிக்கு ஆபத்தாகப் போகக் கூடும் சில போக்குகள் என்ன?

  • பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் இந்தியா மில்லினியம் வளர்ச்சிக் குறிக்கோள்களில் - அதாவது மனித வள மேம்பாட்டில் பின் தங்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது
  • இன்னமும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உழைக்கும் வயதில் இருப்பவர் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் தேவை. அவற்றை நம்மால் தக்க சமயத்தில் ஏற்படுத்த முடியவில்லையென்றால் விளையக் கூடிய பின்விளைவுகள் பாதகமானவை
  • இந்த நிலையில் இடது சாரிக் கட்சிகள் சில பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒரு புறம் பல்லாயிரக் கணக்கில் பல்கிப் பெருகி வரும் சேவை மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படக் கூடும் ஆபத்தைக் கருத்தில் கொள்ள முயற்சி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. அதிக வருவாய் மற்றும் சற்றே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இந்தியனுக்கு அளிக்கக் கூடிய அத்தகைய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க யோசனைகள் செய்வதாகத் தெரியவில்லை. அதரப் பழமையான சில தொழிலாளர் நலச் சட்டங்களை, ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன், அடைகாத்து வருகிறார்கள்
  • பண்ணை மற்றும் விவசாயத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் (சாலைகள், குளிர்பதன வசதிகள்) மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. இதற்கான தொழில்நுட்பதை இறக்குமதி செய்து தேவையான முதலீடுகளைச் செய்யக் வல்ல தனியாரின் அந்நிய முதலீடுகளுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்
  • அரசின் தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்றவை அரசுக்கு ஏகப் பட்ட பொருட் செலவைத் தரக் கூடியவை. இந்தத் திட்டங்கள் எந்தத் திசையில் செல்லப் போகின்றன என்பதில் தெளிவில்லை
  • பேசல் II நியமங்களை அமலுக்குக் கொண்டு வந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கும் அரசு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை வழங்க வேண்டிய வங்கிகளில் அதன் முதலீட்டு விகிதத்தைக் குறைக்க இயலவில்லை. முறையான செலவுகளுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்கும் நம் அரசு, வங்கிகளில் தனது முதலீட்டை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் அதிகரிக்கப் போவது எப்படி?
  • சில வாரங்களுக்கு முன் தரமற்ற சில தரகர்களும், நேர்மையற்ற சில நிறுவனர்களும், சில கறுப்புப் பண முதலை முதலீட்டாளர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு சல்லிக்காசு பங்குகள் (மற்றும் வழக்கிலில்லாப் பங்குகள்) விலைகளை எக்கச் சக்கமாக ஏற்றி, பல விபரம் தெரியா முதலீட்டாளர்களின் பொருள் இழப்புக்குக் காரணமானார்கள். அரசு அமைப்புகள் சற்றே விழிப்புடன் செயல்பட்டதால் இந்த இழப்பு மேலும் பெரிதாகாமல் சமயத்தில் தவிர்க்கப் பட்டது. இருந்த்தும் இந்தியப் பங்குச் சந்தை இந்த வகை ஆபத்துகளை இன்னமும் முழுமையாகத தவிர்க்கவில்லை.

சென்ஸெக்ஸின் இந்த வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய நோக்கு என்னவென்றால் மேற்கூறிய நிலைகளோ, அல்லது வளர்ச்சிக்கு பாதகம் என்று கருதப் படும் எந்தவொரு செய்தியோ (உதாரணங்கள்: உயர்ந்து வரும் கச்சா எண்ணை விலை, மும்பை வெள்ளம், கட்ரீனா சூறாவளி ஏற்படுத்திய சேதம், ஈரான் இந்தியாவிற்கு திரவ எரிவாயு அளிக்கச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாக வந்த செய்தி) சென்ஸெக்ஸ் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.

சென்ஸெக்ஸ் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் - "இந்தியாவில் இன்று திறந்த நிலையில் முதலீடு இல்லாத ஒருவனுக்கு முதலீட்டு அறிவு மட்டு" என்று அன்னிய முதலீட்டாளர்களிடையே வளர்ந்து கொண்டிருக்கும் எண்ணமும் எதிர்பார்ப்பும்தான். கடந்த ஜீன் மாதம் முதல், மாதம் ஒரு பில்லியன் என்ற அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இந்தியாவில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகம் என்றாலும் சீனாவிற்குக் கிடைக்கும் அந்நிய முதலீடுகளை ஒப்பிடும் போது இந்தியா இன்னமும் மிகக் குறைவாகத்தான் முதலீடுகளைப் பெறுகிறது. அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வந்து கொண்டிருந்த முதலீடுகள் போக இன்று ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கூட இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க

பணம் காய்க்கும் பங்குகள் - 1

நல்ல நிறுவனங்களின் பங்குகள், பணம் காய்க்கும் மரங்கள். நல்ல நிறுவனங்களின் பங்குகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீண்ட காலம் பயணம் செய்தால் அந்தப் பங்குகளுடன், நம்முடைய பணமும் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்தகைய சில நல்லப் பங்குகளை "பணம் காய்க்கும் பங்குகள்" என்ற தலைப்பில் கூறலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு அவசியம் ஒரு Disclaimer கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையை 100% சரியாக கணிப்பது யாராலுமே முடியாத காரியம். சில கணிப்புகளின் அடிப்படையில் விலை உயரும் என்று நான் நம்புகிற/அல்லது பரவலாக நம்பப்படுகிற பங்குகளை தான், நான் இங்கு பரிந்துரை செய்யப் போகிறேன். அதே சமயம் சொல்லப்படுகின்ற உயர்வை இந்தப் பங்குகள் அடையாமலும் போகலாம். இங்கு சொல்லப்படும் பங்குகள் நீண்டகால முதலீட்டிற்கு உகந்த பங்குகளாகத் தான் இருக்கும். குறுகிய காலத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலீட்டாள்கள் மட்டும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

IDFC - INFRASTRCUTURE DEVELOPMENT AND FINANCE CORPORATION

இந்த ஆண்டு ஜூலை மாதம் IPO வந்த இந்தப் பங்குகளின், தற்போதைய விலை ரூ 71 . IPO விலையில் இருந்து தற்போதைய விலையை ஒப்பிடும் பொழுது முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே இந்தப் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம்.

ஏன் இந்தப் பங்குகளை வாங்கலாம் ?

IDFC நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். குறிப்பாக மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சாலைகள் போன்றவற்றுக்கு கடன் கொடுக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

நாட்டின் பெருகிவரும் உள்கட்டமைப்பு தேவைகள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். 2005ம் ஆண்டில் இந் நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு கடன் தேவைகளில் 25% கடன் வழங்கியுள்ளது.

அது சரி.. கடன் கொடுக்கும் நிறுவனமாயிற்றே, கொடுக்கும் கடன் சரியாக வசூல் செய்யாவிட்டால் பிரச்சனை தானே ?

Non performing assets (NPA) என்பது திருப்பி செலுத்தப்படாத, நிலுவையில் நிற்கும் கடன். இந்தியாவில் உள்ள நிதி மற்றும் வங்கிகளின் முக்கிய பிரச்சனையே இந்த நிலுவையில் இருக்கும் கடன் தொகை தான். பல வங்கிப் பங்குகளை விட HDFC பங்குகள் மட்டும் எகிறிக் கொண்டே இருக்கிறதே எப்படி ? மிகவும் குறைவான NPA இருக்கும் வங்கிகளில் HDFC முக்கியமான நிறுவனம். அதாவது HDFC தான் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து விடுகிறது. IDFC யும் அது போலத் தான். IDFCக்கும் அந்தப் பிரச்சனை இல்லை.

இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமானால், உள்கட்டமைப்பு பெருக வேண்டும், உள்கட்டமைப்பு பெருகினால் IDFC மற்றும் இது போன்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வளரும். இந்த நிறுவனங்கள் உயர்ந்தால், அந்தப் பங்குகளை வாங்கும் நாமும் உயர்வோம். மேலும் படிக்க