பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Wednesday, September 28, 2005

பணம் காய்க்கும் பங்குகள் - 1

நல்ல நிறுவனங்களின் பங்குகள், பணம் காய்க்கும் மரங்கள். நல்ல நிறுவனங்களின் பங்குகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீண்ட காலம் பயணம் செய்தால் அந்தப் பங்குகளுடன், நம்முடைய பணமும் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்தகைய சில நல்லப் பங்குகளை "பணம் காய்க்கும் பங்குகள்" என்ற தலைப்பில் கூறலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு அவசியம் ஒரு Disclaimer கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையை 100% சரியாக கணிப்பது யாராலுமே முடியாத காரியம். சில கணிப்புகளின் அடிப்படையில் விலை உயரும் என்று நான் நம்புகிற/அல்லது பரவலாக நம்பப்படுகிற பங்குகளை தான், நான் இங்கு பரிந்துரை செய்யப் போகிறேன். அதே சமயம் சொல்லப்படுகின்ற உயர்வை இந்தப் பங்குகள் அடையாமலும் போகலாம். இங்கு சொல்லப்படும் பங்குகள் நீண்டகால முதலீட்டிற்கு உகந்த பங்குகளாகத் தான் இருக்கும். குறுகிய காலத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலீட்டாள்கள் மட்டும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

IDFC - INFRASTRCUTURE DEVELOPMENT AND FINANCE CORPORATION

இந்த ஆண்டு ஜூலை மாதம் IPO வந்த இந்தப் பங்குகளின், தற்போதைய விலை ரூ 71 . IPO விலையில் இருந்து தற்போதைய விலையை ஒப்பிடும் பொழுது முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே இந்தப் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம்.

ஏன் இந்தப் பங்குகளை வாங்கலாம் ?

IDFC நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். குறிப்பாக மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சாலைகள் போன்றவற்றுக்கு கடன் கொடுக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

நாட்டின் பெருகிவரும் உள்கட்டமைப்பு தேவைகள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். 2005ம் ஆண்டில் இந் நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு கடன் தேவைகளில் 25% கடன் வழங்கியுள்ளது.

அது சரி.. கடன் கொடுக்கும் நிறுவனமாயிற்றே, கொடுக்கும் கடன் சரியாக வசூல் செய்யாவிட்டால் பிரச்சனை தானே ?

Non performing assets (NPA) என்பது திருப்பி செலுத்தப்படாத, நிலுவையில் நிற்கும் கடன். இந்தியாவில் உள்ள நிதி மற்றும் வங்கிகளின் முக்கிய பிரச்சனையே இந்த நிலுவையில் இருக்கும் கடன் தொகை தான். பல வங்கிப் பங்குகளை விட HDFC பங்குகள் மட்டும் எகிறிக் கொண்டே இருக்கிறதே எப்படி ? மிகவும் குறைவான NPA இருக்கும் வங்கிகளில் HDFC முக்கியமான நிறுவனம். அதாவது HDFC தான் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து விடுகிறது. IDFC யும் அது போலத் தான். IDFCக்கும் அந்தப் பிரச்சனை இல்லை.

இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமானால், உள்கட்டமைப்பு பெருக வேண்டும், உள்கட்டமைப்பு பெருகினால் IDFC மற்றும் இது போன்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வளரும். இந்த நிறுவனங்கள் உயர்ந்தால், அந்தப் பங்குகளை வாங்கும் நாமும் உயர்வோம்.

Leia Mais…
Sunday, September 25, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2

இந்திய ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் பற்றி நான் பெரிய அளவில் விளக்கம் தரத் தேவையில்லை. இந்தியப் பங்குச்சந்தை 16,000ஐ எட்டும் என்று செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை எந்தளவிற்கு விற்கும், அது போல பங்குச்சந்தையில் ஊழலா ? என்று கேள்விக்கணையுடன் செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை பரபரப்பாக விற்குமா என்று சிந்தனையில் தான் நிறைய செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியப் பங்குச்சந்தை இந்த ஆண்டு 8000ஐ எட்டும் என்று மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே நம்பப்பட்டது. நான் கூட இது குறித்து அப்பொழுது ஒரு கட்டுரை எழுதினேன்.

எனவே குறியீடு 8000ஐ எட்டியது ஆச்சரியத்தை கொடுக்க வில்லை. ஆனால் அது எட்டப்பட்ட விதம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நிய முதலீடு, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறன.

கடந்த மாதம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி The Economist ல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை கேலி செய்துள்ளது. இது மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் என்றாலும், இந்தக் கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் உள்கட்டமையப்பு குறித்து இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. பல வருடங்களாக பொருளாதாரச் சீர்திருத்தம் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறது. இது தவிர நிலக்கரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்திருப்பதாக The Economist தெரிவிக்கிறது.

இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு கொடுத்து வரும் நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்களை தனியமார் மயமாக்கத்திற்கு எழுந்துள்ள பிரச்சனைகள் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன. இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் இத்தகைய அரசியல் தடைக்கற்களும், மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

இத்தகைய சூழலில் பங்குச்சந்தை எந்தக் கவலையும் இல்லாமல் 8500 புள்ளிகளை எட்டுகிறது. இந்தியப் பங்குச்சந்தை குறியீடு உயர்வது இந்தியப் பொருளாதாரம் உயர்வதின் அறிகுறி என்ற வாதம் நிச்சயமாக சரியானது அல்ல. அது போல இந்தியா ஒளிர்கிறது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.

பின் எதனால் பங்குச்சந்தை உயர்கிறது ?

இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்ல, உலகின் பல பங்குச்சந்தைகளும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசியாவில் இந்தியாவை விட தாய்வான் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் குவிந்து கொண்டு இருக்கிறது.

ஏன் ? அது தான் Global liquidity

இப்பொழுது உலகில் நிலவும் பொருளாதார சூழல் தான் பல பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கியமான காரணம்

அமெரிக்காவின் கையிருப்பில் (Federal Reserve) இருக்கும் டாலர் மற்றும் உலகின் பல நாடுகளின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலவாணி, இவை தான்


Global liquidity எனப்படுகிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 20% அதிகரித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று liquidity இருந்ததில்லை என்று The Economist தெரிவிக்கிறது.

ஏன் இந்த நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது ?

அமெரிக்காவின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக (3.75%) இருக்கிறது. இந்த குறைவான வட்டி விகிதத்தை பயன்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் நிறுவனங்கள் பிற நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஆசியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் தங்கள் நாணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மிக அதிகமான அந்நியச் செலவாணி தேவை. எனவே அமெரிக்க டாலர் மற்றும் பாண்டுகளை (Bonds) அதிகளவில் வாங்கி தாங்கள் அந்நியச்செலவாணி கையிருப்பை அதிகப்படுத்துகின்றன (இது குறித்த எனது முந்தைய கட்டுரை - உலகின் பொது நாணயம்). அந்நியச் செலவாணி அதிகரிக்கும் பொழுது இந் நாடுகளின் கையிருப்பில் இருக்கும் உள்நாட்டுப் பணமும் அதிகரிக்கிறது. இது இந் நாடுகளில் உள்ள வங்கிகளின் பணக்கையிருப்பை அதிகரிக்கிறது.

வங்கிகள் இதனால் அதிக அளவில் கடன் கொடுக்க தயராக இருக்கிறன. வட்டியும் குறைகிறது. வட்டி குறைவதால் மக்கள் சேமிப்பை அதிகம் விரும்பவதில்லை. மாறாக வீடு மற்றும் பிற முதலீடுகளில் செலவழிக்கத் தொடங்குகின்றனர். மக்கள் செலவு செய்யும் பொழுது அது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

இது தான் இப்பொழுது பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இருக்கும் வட்டியால் பொதுமக்களும் அதிக அளவில் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு பணம் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தற்பொழுது வசந்த காலம் தான். மக்கள் இதில் செய்துவரும் பெரும் முதலீடுகளால் அமெரிக்க வங்களில் கையிருப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த அதிகப்படியான பணத்தை இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் பிற பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். எனெனில் இங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். இதனால் பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் ? இது தொடருமா ?

இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. எப்படி ?

கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக செலவழிக்க தொடங்கும் பொழுது பொருட்களுக்கு இருக்கும் அதிகமான தேவையால் (Demand)
பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது பணவீக்கமும் குறைவாகத் தான் இருக்கிறது. காரணம், அமெரிக்கச் சந்தையில் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பொருட்கள் மலிவான விலையில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு வித்தியாசமான பொருளாதார சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவி வருகிறது

சமீப காலாங்களில் அமெரிக்கவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார ஏற்றாதாழ்வுகளுக்கு உலகில் நிலவும் இந்த liquidity தான் காரணம் என்று சில பொருளாதார வல்லுனர்கள் நினைக்கின்றனர். இது ஆசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் டாலர் உலகின் பொது நாண்யமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் வெகுவிரைவில் சீன நாணயம், யூரோ நாணயம் போன்றவற்றால் பாதிப்படையும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர். அதனால் அமெரிக்க வட்டி வகிதத்தை உயர்த்தி பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சிலரின் கருத்து.

ஆனால் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும். அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே வட்டி விகிதங்களை அதிகப்படியாக உயர்த்தாமல் 0.25% என்ற விகிதத்தில் அமெரிக்கா குறைவாக படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

உலகின் நிலவும் இந்த பொருளாதாரச் சூழல்களே இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் ஏனைய பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கிய காரணம்.

அது சரி.. இந்தியப் பங்குச்சந்தையை ஏன் இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிவைத்து உயர்த்துகின்றன ? இந்தியப் பங்குச்சந்தையின் Valuation மிக அதிகமாக இருக்கிறது என்று செல்கிறார்களே அது உண்மை தானா ? Valuation அதிகமாக இருப்பதால் இந்தியப் பங்குகள் மேலும் உயரும் சாத்தியங்கள் இருக்கிறதா ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம்

Leia Mais…
Saturday, September 24, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 1

பங்குச்சந்தையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது ? இந்தக் கேள்வி சில வாரங்களாக இந்திய ஊடகங்களில் அதிகமாக அலசப்படுகிறது. பலரும் பல யூகங்களை முன்வைக்கின்றனர். BSE பங்குச்சந்தைக் குறியீடு 10,000 புள்ளிகளை எட்டும், 16,000 எட்டி விடும் தூரம் தான் போன்ற பேச்சுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 8000 நோக்கி பங்குச்சந்தை சரியும் என்ற எண்ணம் பரவலாக தென்பட தொடங்கி இருக்கிறது.

நான் சென்னையில் இருந்து இங்கு வந்த பொழுது பங்குச்சந்தை 6000ஐ கடக்கும் நிலையில் இருந்தது. இங்கு வந்த சில மாதங்களில் குறியீடு 8000ஐ எட்டி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து வந்த சில நாட்களில், ஜெட் வேகத்தில் குறியீடு 8500ஐ எட்டி என்னை அச்சப்படுத்தியது. ஆம் ...குறியீட்டின் உயர்வு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையே ஏற்படுத்தியது.

இந்த உயர்வுக்கு என்ன காரணம் ? பங்குச்சந்தைக்கு ஏதேனும் சாதகமான சூழல் நிலவியதா ?

உண்மையில் பங்குச்சந்தையை உயர்த்தக் கூடிய, இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்த்தக் கூடிய எந்த நிகழ்வும் கடந்த சில மாதங்களில் நடக்க வில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால் குறியீடு அவற்றை பற்றிக் கவலை கொள்ள வில்லை. உயர்ந்து கொண்டே தான் இருந்தது. அது போலவே பங்குச்சந்தையின் உயர்வுக்கு பிறகு பங்குவிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய Correction கூட நிகழ வில்லை. இது போன்றவை தான் அனைவரது மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்தியப் பங்குச்சந்தையின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் - Global excess Liquidity. தற்பொழுது உலகில் இருக்க கூடிய மிக அதிக அளவிலான பண புழக்கம். இது பற்றி அலசுவதற்கு முன்பாக இந்த உயர்வின் காரணமாக எழுந்திருக்கும் ஊடக எண்ணங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவலை போன்றவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

இந்தியப் பங்குச்சந்தையின் எதிர்காலம் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. அடுத்து வரும் சில ஆண்டுகளில் குறியீடு 15,000 கடக்கும் என்ற பரவலான எண்ணத்தில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் அது படிப்படியாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கேற்ப வளர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறக்கூடிய சூதாட்ட மையமாக இந்தியப் பங்குச்சந்தை மாறி விடக்கூடாது.

ஹர்ஷத் மேத்தாவின் ஊழலால் பங்குச்சந்தை உயர்ந்த நிலையும் அதன் பிறகு கேத்தன் பராக்கின் கதையுடனும் தற்போதைய நிலை ஓப்பிட்டு பார்க்கப்படுகிறது. பிரதமர், நிதியமைச்சர், மைய அரசின் புலனாய்வு துறை, வருமான வரித் துறை போன்ற அனைத்து துறைகளும் பங்குச்சந்தையை கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியப் பங்குச்சந்தைக்கு பணம் வரும் வழிகள் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. வங்கிகளில் இருந்து ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தைக்கு பணத்தை மாற்றியது போல தற்பொழுது ஏதேனும் செய்யப்படுகிறதா என்பது குறித்து அரசாங்கம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. பங்குத் தரகர்களின் அலுவலகங்கள், வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது தேவை தானா என்று கேள்வி எழுப்பப்படுகிற அதே நேரத்தில் குப்பை நிறுவனங்களின் சூம்பிக் கிடந்த பங்குகள் விலை எகிறியுள்ளதை பார்க்கும் பொழுது பங்குச்சந்தையில் மற்றொரு ஊழல் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிகழ்வுகள் இந்தியப் பங்குச்சந்தையை உலகின் பல முண்ணனி பங்குச்சந்தைகளின் தரத்திற்கு இணையாக உயர்த்தி இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தை என்றில்லாமல் ஆசியாவில் இருக்க கூடிய பல பங்குச்சந்தையிலும் இந்த முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு 8.5 பில்லியன் டாலர்களுக்கு முதலீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இவர்களின் முதலீடு இது வரையில் 8பில்லியன் டாலரை எட்டி விட்டது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் செய்யும் முதலீடு தான் குறியீடுகளின் உயர்வுக்கு முக்கிய காரணம். சில பங்குங்களில் சில பங்குத் தரகர்களின் தகிடு தத்தங்கள் நடந்திருக்கிறது என்றாலும் இந்தியப் பங்குச்சந்தையின் மொத்த உயர்வுக்கும் காரணம் இந்த கோல்மால் வேலைகள் தான் என்று முடிவு செய்து விட முடியாது ? காளைச் சந்தையில் சில பங்குகளில் இது போன்றவை நிகழ்வது சர்வசாதாரணம்.

இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு முக்கிய காரணம், நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய Global Liquidity தான்.

இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்

எனது பங்குச்சந்தை பதிவை கடந்த சில மாதங்களாக வேலைப்பளு, இந்திய பங்குச்சந்தையை கவனிக்க முடியாத நேர வேறுபாடு போன்ற சூழலால் எழுத முடியாத நிலையில் இருந்தேன். எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்கள் பலருக்கு (சும்மா ஒரு பந்தா தான், கொஞ்சம் பேர் தான் மெயில் அனுப்பி இருந்தாங்க) முடிந்த வரையில் பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன். சிலருக்கு அனுப்ப முடியவில்லை. இவ்வாறான நண்பர்களின் ஆதரவு தான் மறுபடியும் என்னை எழுத தூண்டி இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி

Leia Mais…