பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Monday, January 24, 2005

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 3 - P/E Ratio

நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை (Fundamental Analysis) என்று சொல்வார்கள்.

பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். அடிப்படை ஆய்வு(Fundamental Analysis), டெக்னிக்கல் ஆய்வு (Technical Analysis). இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.

இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.

நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.

பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள்சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.

இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம். பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/ERatio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.

ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).

ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.

P/E = Market Price / EPS

Market Price = பங்குகளின் சந்தை விலை
EPS = ஒரு பங்குடைய லாபம்

EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.

EPS = Net Profit / No. of outstanding shares

அதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS

ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்

EPS = 35,000 / 10,000 = 3.5

இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.

சரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.

P/E = Market Price / EPS

பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்
ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5

P/E = 35/3.5 = 10

இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது ?

P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.

மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.

நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.

மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)

நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).

இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.

இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?
P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) ?

1 என்று இருக்கும் பங்குகளில் தானே ? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.

அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.

நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிகவளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.

புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா ? அடுத்தப் பதிவில் P/E பற்றித் தொடர்கிறேன்.குழப்பம் தெளிகிறதா என்று பார்ப்போம்.

இப் பதிவைச் சார்ந்த முந்தையப் பதிவுகள்

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 1

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2


Leia Mais…

தடுமாறும் சந்தை

கடந்த இரு வாரங்களாகவே பங்குச்சந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. சந்தையின் தடுமற்றத்தைப் பற்றி தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - தடுமாறும் சந்தை

சனவரி 10 - 14ம் தேதி வரையிலான சந்தையின் கடும் சரிவு பற்றி - சந்தையில் ஒரு சுனாமி

Leia Mais…

ஹர்ஷத் மேத்தா – 4

ஹர்ஷத் மேத்தா தொடர் தற்பொழுது தமிழோவியத்தில் வெளிவருகிறது.

தொடரின் 4ம் பாகம்

தொடரின் 3ம் பாகம்


Leia Mais…
Wednesday, January 19, 2005

அள்ள அள்ளப் பணம்

கிழக்குப் பதிப்பகம் வெளியீடு
ஆசிரியர் : சோம.வள்ளியப்பன்

இந்தியப் பங்குச்சந்தையே ஒரு விந்தையானச் சந்தை. எதனால் எழுகிறது. எதனால் சரிகிறது என்றே சில நேரங்களில் புரியாது. அடிப்படை இல்லாதப் பங்குகள் கூட திடீரென்று ஏற்றம் பெறும். கோமாளி அரசியல்வாதிகள் பலர் இருக்கும் நம் நாட்டில், அவர்களின் பல கோமாளித்தனங்கள் பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கும். கூட்டணி ஆட்சியின் பல இழுப்புகளுக்கு ஏற்றவாறு பங்குச்சந்தையும் அல்லாடும். இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பலர், பங்குச் சந்தையின் பக்கம் தலைகாட்டுவதில்லை.

வங்கிகள் கூட 15% அளவுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் பங்குச்சந்தையைப் பற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. ரிஸ்க் எடுத்து பணம் இழப்பதை விட சுமாராக கிடைக்கும் 10-15% போதுமானது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் வட்டி விகிதம் சரிந்து இன்று 5%-6% அளவுக்கு சொற்ப வட்டியே கிடைக்கும் நிலையில் பங்குச் சந்தையின் மேல் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.

ஆனால் இந்த முதலீடுகள் வங்கிகளில் உள்ள வைப்பு நிதி போல அல்ல. நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரணமாகவே நிறைய குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நிதி விவகாரங்களை தெளிவாக, எளிமையாக, இந்தியப் பங்குச்சந்தையின் சூழலுக்கு ஏற்றவாறு விவரிக்கும் புத்தகம் இருந்தால் தான் பங்குச்சந்தையைப் பற்றியே அறியாத ஒருவர் முதலீடு செய்ய முடியும். இது பற்றி ஏதாவது ஆங்கில புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் நிறுவனத்தில் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாங்கள் முனைந்த பொழுது எளிமையாக எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை. NSE பங்குச்சந்தை கையேடுகளைக் கொண்டு தான் பங்குச்சந்தையை கற்றோம். ஆனால் அது வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். முதலீடு செய்ய உதவாது. குஜராத்தியில் சில புத்தகங்கள் இருக்கக் கூடும் (ஏனெனில் ஹர்ஷத் மேத்தா முதல் பல புரோக்கர்கள் குஜராத்திகள் தான்). ஆனால் தமிழில் இது தான் ஒரே புத்தகம் மற்றும் சிறந்த புத்தகம் என்று பத்ரி தனது முன்னுரையில் கூறியிருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளலாம். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளை சிறப்பாக இந்தப் புத்தகம் விளக்குகிறது.

எந்த வித அலுப்பும் ஏற்படுத்தாமல் புத்தக நடை சிறப்பாக இருக்கிறது. வள்ளியப்பன், அவருடைய முதலீட்டு கதைகளை சொல்லிக் கொண்டே நம்மை புத்தகம் முழுவதும் அழைத்துச் செல்கிறார். புத்தகம் போகிற போக்கில் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்கிறது. புளி வியபாரத்துடன் சுவரசியமாக ஆரம்பமாகும் புத்தகம் இன்போசிஸின் கோடிஸ்வரர் கதை, நூலாசிரியர் பார்தி பங்குகளை பிறர் பேச்சிசைக் கேட்டு லாபமிழந்த கதை என்று கதையோடு பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை விளக்குகிறது.

அதைப் போலவே பங்குகள் எந்த நேரத்தில் எகிறும், சரியும் போன்ற பட்டியல்களும் சிறப்பாக இருக்கிறது. பங்குகளை சிறுக சிறுக வாங்குதல் (Systematic Investment Plan போல ), சிறுக சிறுக விற்பது (Systematic withdrawal Plan போல ) போன்ற நுட்பங்களும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். நூலாசிரியரின் இருபது ஆண்டு கால முதலீட்டு அனுபவம் புத்தகத்தில் தெரிகிறது.

முதலீட்டாளர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடு போல உதவும் வகையில் பங்குச் சந்தையைப் பற்றிய முக்கிய வார்த்தகைகளைப் பட்டியலிட்டு விளக்கியிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

புத்தகத்தில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல சில குறைகளும் இருக்கிறது.

 • புத்தகம், முதலீடு பற்றிய விஷயங்களை போதுமான அளவு விளக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. நிறுவனங்களின் அடிப்படையைச் சார்ந்த முதலீட்டை விட Momentum Trading எனப்படும் சூழ்நிலையைச் சார்ந்த முதலீட்டையே புத்தகம் பல இடங்களில் வலியுறுத்துவது போல தோன்றுகிறது. சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நிறுவனங்களின் அடிப்படையைச் சார்ந்து முதலீடு செய்யும் பொழுது நஷ்டம் ஏற்படுவதில்லை (அப்படின்னு ஒரு நம்பிக்கை).
 • அதைப் போலவே மற்றவரின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்யும் முறை மிகத் தவறானது என்றே பல பங்குச் சந்தை வல்லுனர்கள் சொல்கிறார்கள். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் வேண்டுமானால் இம் முறையைப் பின்பற்றலாம். பார்தி பங்குகளில் மற்றொருவருடைய பேச்சைக் கேட்டதாலேயே தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்றும், இது தவறான முறை என்று கூறினாலும், அதையே சில இடங்களில் வலியுறுத்தும் பொழுது முரண்பாடாக தெரிகிறது.
 • Trading முறைப்பற்றி விளக்கினாலும், எப்படி Trading செய்யலாம் என்பது போன்ற சில நுட்பங்களை விளக்கியிருக்கலாம்.
 • நூலாசிரியர் முதலீடு செய்தக் காலத்தில் தற்பொழுது உள்ளது போன்ற எளிமையான வர்த்தக முறைகள் இல்லை. அதன் பாதிப்பு புத்தகம் நெடுகிலும் தென்படுகிறது. அவர் முதலீடு செய்தக் கதைகளை விவரிக்கும் பொழுது அந்தக் கால சூழ்நிலையை ஒட்டியே விவரிக்கிறார் (பெயர் மாற்றுதல் போல). ஆனால் இக் கால சூழ்நிலையைச் சார்ந்த விவரிப்புகள் இல்லை. இது புதிதாக பங்குகளை கற்றுக் கொள்ள முனைவோருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். டிமேட், இணையம் சார்ந்த வர்த்தகம் பற்றி ஒரு சிறு குறிப்பு மட்டுமே இறுதியில் காணப்படுகிறது. 2004ல் புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் இக் கால வர்த்தக முறையை ஒட்டி கதைகளை எழுதியிருக்கலாம்.
 • பக்கம் 223, Delivery யில் இன்று வாங்கியப் பங்குகளை நாளை விற்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் இன்று வாங்கியதை நாளை விற்கலாம். BTST - Buy Today, Sell Tommorrow என்ற முறை ICICIயில் இருக்கிறது. 5paisa, Sharekhan போன்ற புரோக்கர்களிடமும் இவ்வாறு செய்ய முடியும். நம் டீமேட் கணக்குக்கு பங்குகள் வருவதற்கு முன்பே விற்க இயலும்.
 • Index - குறியீடு பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்திருக்கலாம். நிறையப் பேருக்கு குறியீடு என்றாலே என்ன என்று தெரியவில்லை. எனக்கு கூட குறியீடுகள் பற்றி விளக்கம் கேட்டு சில மின்னஞ்சல்கள் வந்தன. அதன் பேரிலேயே நான் கூட அதைப் பற்றி எழுதினேன்.

நூலாசிரியரே இறுதியில் கூறியிருப்பது போல, இது ஒரு ஆரம்பம் தான். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கு நிச்சயமாக இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். முதலீடுகளிலேயே பல முறைகள் இருக்கிறது. அதையெல்லாம் விளக்க பல புத்தகங்கள் வேண்டும்.

ஒரு நல்ல ஆரம்பத்தை துவக்கி வைத்த சோம.வள்ளியப்பன் மற்றும் கிழக்கு பதிப்பகத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

Leia Mais…
Thursday, January 13, 2005

சந்தையின் சரிவு

இந்த வாரம் சந்தையில் கடுமையானச் சரிவு. இன்று முன்னேற்றம் என்று ஒரு நிச்சயமற்ற தன்மை.

வரும் வார தமிழோவியம் இதழ் பங்குச் சந்தை பார்வையில், பங்குச் சந்தையின் தற்போதைய சூழ்நிலைப் பற்றிய கட்டுரை வெளியாகும்.

அதைப் போலவே ஹர்ஷத் மேத்தா பற்றிய தொடரும் தமிழோவியம் இதழிலேயே வெளிவரும்

அனைவருக்கும் எனது பொங்கள் நல்வாழ்த்துக்கள்

Leia Mais…
Sunday, January 09, 2005

விடைபெறும் முன்...

இன்று பங்குச் சந்தையில் மிகச் சொற்பமான அளவுக்கே முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதத்தினரே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இந்த 6 சதவீதத்தில் கூட மும்பை, தில்லி போன்ற வட மாநில மக்கள் தான் அதிகம். தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் சில ஆயிரங்கள் தேறும். அதுவும் சென்னை, கோயம்புத்தூர் என்ற இரண்டு நகரங்களிலும் தான் நிறையப் பேர் இருப்பார்கள்.

ஆனால் இந்த நிலையிலிருந்து நிச்சயம் மாற்றம் வரும். நிறைய முதலீட்டாளர்கள் தற்பொழுது பங்குச் சந்தையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் சொற்ப வட்டி, பங்குச் சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகள் போன்றவையே அவர்களை பங்குச்சந்தைப் பக்கம் இழுத்து வருகிறது. தமிழகத்தில் சில ஆயிரங்களாக இருக்க கூடிய முதலீட்டாளர்கள், லட்சத்தை தொடும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது. நம்மைப் போன்ற புதிய தலைமுறையினர் தான் அதிகளவில் பங்குச் சந்தைப் பக்கம் வருகிறார்கள்.

பத்ரி கூட இதனைக் கணித்து தான் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் "அள்ள அள்ளப் பணத்திற்கு" நிறைய விளம்பரம் செய்கிறார் என்று நினைக்கிறேன் (நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வில்லை. பொங்கல் விடுமுறையில் படிக்க வேண்டும்)

பத்ரி, சொல்லக்தக்கதாக இருந்தால், எந்தளவுக்கு இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பிருக்கிறது என்று சொல்லுங்கள்.

விற்பனை ஊக்கம் தருவதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வருடம் பங்குச் சந்தைப் பற்றிய ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. குறியீடுகள் உயர்ந்ததால் ஏற்பட்ட ஆர்வம் மட்டுமல்ல. TCS, NTPC போன்ற IPO வும் பலமான ஆர்வத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. TCS பங்குகளை வெளியிட்ட பொழுது ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். இதைப் போல கவர்ச்சிகரமான IPO இந்த வருடமும் சந்தைக்கு வந்தால், இன்னும் நிறைய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை பக்கம் வருவார்கள்.

பங்குச் சந்தை ஒன்றும் புரியாத புதிர் அல்ல. கூர்ந்து கவனித்தால் நமக்கு எளிதாக விளங்கி விடும். முதலில் குறைந்த அளவிற்கு முதலீடு செய்யலாம். பிறகு சந்தையின் சூட்சமம் தெளியும் பொழுது முதலீடுகளை அதிகரிக்கலாம்.

என் பதிவைப் பொறுத்த வரை நிறையப் பேர் படிப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் என்னை அது பெரிதாக பாதித்ததில்லை. நான் மட்டுமே படிக்காமல் ஒரு சிலராவது படிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.

இந்த வருத்தம், இந்த வாரத்தில் ஓரளவு குறைந்துள்ளது. தமிழ்மணத்தின் "இந்த வார நட்சத்திரமாக" நான் இருந்ததால் நிறையப் பேர் என் வலைப்பதிவிற்கு விஜயம் செய்திருந்தார்கள். இந்த வார நட்சத்திரத்திற்கு நிறைய Focus கிடைக்கிறது. வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாகக் குழுவிற்கு எனது நன்றி.

கடந்த ஒரு வாரமாக நான் எழுதிய பதிவுகள் உங்களுக்கு ரசிக்கதக்கவையாக இருந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்

Leia Mais…

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2

ஒரு நிறுவனத்தின் பங்கு எப்பொழுது உயரும் ? அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்தால் தான் அதன் பங்குகளும் உயர்வடையும் ? வளர்ச்சியின் அளவுகோள்கள் என்ன ? உற்பத்தி, விற்பனை, வருமானம், நிகர லாபம் இவையெல்லாம் தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும். நாம் நம் பணத்தை முதலீடு செய்யும் பொழுது நம் பணம் பெருக வேண்டும் என்ற ஆசையில் தான் முதலீடு செய்கிறோம். ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் வளர்ச்சியடைந்தால் மட்டுமே நம் பணம் பெருக முடியும்.

ஒரு நிறுவனத்தின் தற்கால லாபத்தை மட்டுமே கொண்டு முதலீடு செய்யக் கூடாது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது, வரும் ஆண்டில் எந்தளவுக்கு உயரும் என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு 10% வளர்ந்த ஒரு நிறுவனம், இந்த ஆண்டு 12% மாக உயர்ந்தால் தான் அது வளர்ச்சி. ஒரு நிறுவனம் உயர்ந்தால் தான் நாம் வாங்கும் பங்குகளும் உயரும். அந்த உயர்வும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றாற் போலவே இருக்கும். 10% மாக இருந்த வளர்ச்சி அதே அளவுக்கு இருந்தால், நாம் வாங்கும் பங்குகளும் அதே விலையில் தான் இருக்கும். லாபத்தில் சரிவு இருந்தால், நம்முடைய சேமிப்பின் மதிப்பும் கரைந்து போய் விடும்.

எனவே நாம் பங்குகளை வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி கணித்தப் பிறகே வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு இருக்கக் கூடிய வர்த்தக வாய்ப்பு, அந்தத் துறைக்கு இருக்க கூடிய வாய்ப்புகள், போட்டி நிறுவனங்கள் இதைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.

வளரும் நிறுவனங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

 • குறைவாக வளரும் நிறுவனங்கள்
 • சராசரியாக வளரும் நிறுவனங்கள்
 • வேகமாக வளரும் நிறுவனங்கள்

குறைவாக வளரும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்காது. தற்போதையச் சூழலில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தை உதாரணமாகச் சொல்லலாம். FMCG நிறுவனங்கள் என்று சொல்லப்படும், இத்தகைய நிறுவனங்கள் ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்தன. கோடிக்கணக்கான இல்லங்களை இவர்களின் தயாரிப்புகள் எட்டியது. ஆனால் தற்பொழுது உள்ள சுழலில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. புதியதாக மக்களை கவரும் எந்தப் பொருட்களையும் தயாரிக்காமல், இருக்கின்ற சந்தையை தக்க வைத்துக் கொள்ளவே இந்த நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பணம் பெருகாது.

சராசரியாக வளரும் நிறுவனங்கள் என்று இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களை சொல்லலாம். ஆட்டோ நிறுவனங்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஹீரோ ஹோண்டா, பஜாஜ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேகமாக வளரும் நிறுவனங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10% - 15% லாபத்தை இந்தப் பங்குகள் கொடுக்கும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது ஓரளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்லாம். பெரும்பாலும் பெரிய நிறுவனங்களான ரிலயன்ஸ் போன்றவை இனி அதிக வளர்ச்சி பெறக்கூடியவை அல்ல. ஆனால் சராசரியாக 20% அளவுக்கு லாபம் தரக்கூடியவை.

வேகமாக வளரும் நிறுவனங்களாக மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லலாம். பல நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 50% லாபம் தந்தது. விப்ரோ 30% கொடுத்தது. Outsourcing மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகள், மென்பொருள் நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இதைத் தவிர நடுத்தரமான நிறுவனங்கள் வேகமாக வளரக் கூடியவை. மிட்கேப் என்று சொல்லப்படும் இந்த நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத் தளங்களைப் பெருக்கிக் கொண்டு வேகமாக வளரக் கூடியவை. இத்தகைய நிறுவனங்களில் மிக அதிக லாபம் கிடைக்கும். ஆனால் தங்களுடைய வர்த்தகத் தளங்களை அதிகப்படுத்த இந்த நிறுவனங்கள் முயற்சிக்கும் பொழுது சில நேரங்களில் சறுக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சறுக்கும் பொழுது பங்குகளும் கடுமையாகச் சரியும். எனவே வேகமாக வளர்ந்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகளையும், சாதகமான மற்றும் பாதகமான சூழல்களையும் ஆராய்ந்தப் பிறகே முதலிடு செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம் எப்படி ஆராய்வது ? ஆண்டறிக்கையை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியவரும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டிலும் அந்த காலாண்டிற்கான அறிக்கையைத் தாக்கல் செய்யும். அந்த அறிக்கைகளைக் கொண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அறிக்கைகளை எப்படி ஆராய்வது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 1

Leia Mais…

இந்த வாரச் சரிவும், எதிர்கால நம்பிக்கைகளும்

இவ்வார தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - இந்த வாரச் சரிவும் எதிர்கால நம்பிக்கைகளும்

Leia Mais…
Saturday, January 08, 2005

காணாமல் போகும் எழுத்துக்கள்

நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கி மூன்று மாதங்களாகிறது. எழுதலாமா, வேண்டாமா என்ற பலமான யோசனைக்குப் பின், சரி ஆனது ஆகட்டும், தமிழ்மணம் வாசகர்கள் பாடு திண்டாட்டம் தான் என்று முடிவு செய்து இந்தப் பதிவினைத் தொடங்கினேன்.

கல்லூரியில் படிக்கும் பொழுது, எனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பிரதி கொண்டுவர முடிவு செய்தோம். சில வாரங்கள் யோசித்து எழுதி, நகலிட்டு சிலப் பிரதிகளை நண்பர்களிடையே விநியோகித்தோம். அதற்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பார்த்து, போதுமடா சாமி என்று ஒரே இதழுடன் முடித்துக் கொண்டோம். இதைப் போலவே நெய்வேலியில் நண்பர்கள் சிலருடன் ஆரம்பித்த கையெழுத்துப் பிரதிக்கும் மூடுவிழா தான்.

கடந்த காலங்களை அசைப் போட்டுக் கொண்டே தான் வலைப்பதிவைத் தொடங்கினேன். தற்பொழுது குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஆர்வமுள்ளத் துறையைப் பற்றி எழுதுவதே எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பங்குச் சந்தையைப் பற்றி எழுதினேன். எழுதத் தொடங்கிய பொழுது வரவேற்பு ஆரவாரமாக இருந்தாலும், பின் பின்னூட்டங்கள் குறைந்துப் போனது. பின்னூட்டம் ஊக்க சக்தியளிக்கும் டானிக் போன்றது. ஒரு பின்னூட்டம் கிடைத்தால் கூட மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்படும். பின்னூட்டங்கள் கிடைக்காதப் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுதுதெல்லாம் பின்னூட்டங்கள் கிடைக்காமல் போனால் வருத்தம் ஏற்படுவதில்லை. பழகிப் போய் விட்டது.

நமக்கு ஏன் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று யோசிக்கும் பொழுது நாம் எத்தனைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்துள்ளோம் என்று நினைத்துப் பார்ப்பேன். நான் பலப் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் கொடுத்தது கிடையாது. நம்மைப் போலத் தானே பிறரும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன். அலுவலகம், குடும்பம், படிப்பு என்று பல வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தைத் தான் வலைப்பதிவிற்காகச் செலவிடுவேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒவ்வொரு பதிவாகப் படித்துக் கொண்டே சென்று விடுவேன். என்னைப் போலவே நிறையப் பேர் இருக்கக் கூடும்.

இந்த மனநிலைக்கு நாம் பழகிக் கொண்டால் நம்முடைய இயற்கையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கும் என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டங்களுக்காக எழுதும் பொழுது எழுத்தில் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. பின்னூட்டங்களைப் பெற வேண்டும் என்று எழுதப்படும் சிலப் பதிவுகளில் இந்த செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரியும். இதைப் போலவே முகமூடி அணிந்து எழுதப்படும் சில வலைப்பதிவுகள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. நிஜத்தில் எழுதமுடியாமால் நிழலாக எழுதும் பொழுது கிடைக்கும் சுதந்திரம் அந்த எழுத்தில் பிரதிபலிக்கும். ஆனால் அதே சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

வலைப்பதிவுகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. நிறையப் பதிவுகள் தனித்தன்மையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆரோக்கியமானச் சூழல் தான். எழுத வேண்டும் என்ற ஆவல் பலருக்கு இருக்கிறது. யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று தனிப்பட்டியலிட நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு பாணியில் சிறப்பாகவே இருக்கிறது.

ஆனால் இணையத்திற்குள்ளும் வராமல், புத்தகத்திற்கும் வராமல் நிறைய எழுத்துக்கள் ஆங்காங்கே மறைந்துப் போய்க் கொண்டிருக்கின்றன.
என் சொந்த ஊரான நெய்வேலியில் நிறைய எழுத்தாளர்கள் உண்டு. நெய்வேலியில் வேலைப் பார்க்கும் அவர்களில் நிறையப் பேர் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். இதைப் போலவே நெய்வேலியின் அருகிலுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுவார்கள். புத்தகங்கள் வெளியிடுமளவுக்கு அவர்களுக்கு வசதி இருக்காது.

நெய்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார்.
அருமையாகக் கவிதைகள் எழுதுவார். சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். அவரது சில முயற்சிகள் கைக்கூடிய வேளையில் சிலப் பிரச்சனைகள். நொந்துப் போய், சொந்த கிராமத்திற்கே சென்று விட்டார். இன்னும் கவிதைகள் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.

இவரைப் போல பலர். இவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றித் தெரியாது. புத்தகங்களை வெளியிட வசதிகளும் இருக்காது. குமுதம், ஆனந்த விகடன் இதழ்களுக்கு இவர்கள் அனுப்பும் படைப்புகளும் பிரசுரமாகாது. அப் பகுதியில் வரும் சில சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கைப் போராட்டத்திற்கிடையேயும், கிராமத்து ரசனையில் அவர்களின் எழுத்து மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் சில காலங்களில் அந்த எழுத்து மறைந்துப் போய் விடுகிறது.

பி.கு: தமிழ்மணத்தின் "இந்த வார நட்சத்திரத்திற்காக" எழுதியது


Leia Mais…
Friday, January 07, 2005

ஹர்ஷத் மேத்தா - 2

பங்குச் சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பணச் சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

பணச் சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன் வாங்க/கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தை. இது குறைந்த காலத் தேவைகளுக்காக பணத்தை பரிமாறும் ஒரு இடம் என்று சொல்லலாம். அதிகபட்சமாக ஒரு வருடம், குறைந்தபட்சமாக ஒரு நாள் கூட கடன் வாங்கலாம்/கொடுக்கலாம். தங்களிடமிருக்கும் மிகுதியானப் பணத்தை வங்கிகள் இந்தச் சந்தையில் கடன் கொடுத்து வட்டி மூலமாக லாபம் அடையும். பணச் சந்தையில் கடன் பெறுவதற்கும்/கொடுப்பதற்க்கும் பல வழிகள் இருக்கின்றது. Call Money, Term Money, T-bills, Repo என்று பல வெவ்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறும் (இதற்கெல்லாம் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே தொடருவோம்).

இதில் Repo அல்லது Ready Forward Contracts என்ற கடன் பெறும் முறையை மட்டும் கவனிப்போம். ஏனெனில் நம்முடைய வில்லன் ஹர்ஷத் மேத்தாவின் புண்ணியத்தால் இதிலிருந்தப் பல ஓட்டைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது.

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள அரசுக் கடன்பத்திரங்களை பணச் சந்தையில் விற்று, தங்களின் குறுகிய காலத் தேவைக்காகப் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதனை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

அதாவது, பத்திரங்களை விற்பவர், அதனை மறுபடியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பப்பெற்றுக் கொள்வதற்கும் சேர்த்தே ஒப்பந்தம் செய்வார். தற்பொழுது விற்கும் விலையையும், திரும்பப்பெற்றுக் கொள்ளும் விலையையும் முதலிலேயே தீர்மானித்து அதற்கேற்ப தான் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், பறிமாறப்படும் பணத்திற்கு, ரெப்போ விகிதம் (Repo rate) என்று சொல்லப்படும் வட்டி வசூலிக்கப்படும். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதை திரும்பப் பெற்று கொள்வதற்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்படுவதால் இதனை Repurchase Agreement (Repo) என்று சொல்வார்கள்.

வங்கிகள், தங்களின் குறைந்தகாலத் தேவைக்கு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தான் இந்த ரெப்போ வர்த்தகம் மூலம் பணச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.

சரி..வங்கிகள் எப்படி செயல்படுகின்றன. வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக பணம் திரட்டுதல். திரட்டியப் பணத்தைக் கொண்டு கடன் வழங்குதல்.

ஆனால் தங்களிடம் இருக்கும் அனைத்துப் பணத்தையும் வங்கிகள் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கையிருப்பாக ஒவ்வொரு வங்கியும் தங்களிடமோ அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கள் கணக்கிலோ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனை Cash Reserve Ratio (CRR) என்று சொல்வார்கள். இவ்வாறு கையிருப்பாக வைத்திருப்பதால் பயனாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு உடனடி தேவையிருக்கும் பொழுது எளிதில் பணம் கிடைக்கும் (இதனால் தான் வங்கி வைப்பு நிதியில் நாம் எப்பொழுது கேட்டாலும் உடனே பணம் திரும்பக் கிடைக்கிறது).

இதைப் போலவே பணமாக இல்லாமல் தங்கமாகவோ, அரசு கடன் பாத்திரங்களாகவே மற்றொரு குறிப்பிட்ட சதவீதம் வங்கிகளின் கையிருப்பில் இருக்க வேண்டும். இதனை Statutory Liquidity Ratio (SLR) என்று சொல்வார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் பணத்தேவை, கடன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவ்வாறு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.

வங்கிகள், தங்களிடம் கையிருப்பில் இருக்கும் SLR விகிதம் குறையும் பொழுது அதனைச் சரி செய்ய புதிதாக கடன்பத்திரங்கள் வாங்குவதை விட ரெப்போ மூலம் குறுகியக் காலத்திற்கு கடன்பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இவ்வாறு பத்திரங்களை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஒன்றுச் சேர்ப்பது தான்
தரகர்களின் வேலை. ஒப்பந்தம் வங்கிகளுக்கிடையே செய்யப்படும். பத்திரங்களையும் பணத்தையும் வங்கிகள் தான் பறிமாறிக் கொள்ள வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இங்கே தான் சில விதிமீறல்கள் நடைபெறத் தொடங்கின.

பத்திரங்களை விற்பவர்கள், பத்திரங்களை நேரடியாக வாங்குபவர்களிடம் கொடுக்காமல் தரகர்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைப் போலவே பணத்திற்கான காசோலை நேரடியாக பத்திரங்களை விற்றவர்களிடம் செல்லாமல் தரகர்கள் வழியாக செல்லத் தொடங்கியது.

இவ்வாறு பத்திரங்களும் காசோலைகளும் தரகர்கள் மூலமாகவே வங்கிகளுக்கு செல்லத் தொடங்கியது. இதில் ஒன்றும் தவறு இல்லை. தரகர்களைக் கொண்டு தான் வர்த்தகத்தை நடத்த முடியும். வங்கிகளுக்கும் இந்த முறையில் வசதி இருந்தது. வங்கிகளின் தேவையை தரகர்களால் எளிதாகப் பூர்த்திச் செய்யமுடிந்தது. இந்தியாவில் எங்குமே காணப்படும் சாதாரணமான விதிமீறல்.

ஆனால் ஹர்ஷ்த் மேத்தாவின் கிரிமினல் மூளை இதிலிருந்த ஓட்டைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது, இருந்த நரசிம்மராவ் அரசு, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்த நேரம். இனி தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் வசந்தகாலம் தான் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தை உயரத் தொடங்கியது. இந்தக் காளைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.

சந்தை உயருவதாலும், லாபம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தரகர்களும், முதலீட்டு நிறுவனங்களும் பணச் சந்தையில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். பணச் சந்தையில் புரளும் கோடிக்கணக்கானப் பணத்தை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து விட்டால், பல மடங்கு லாபம் பார்க்கலாம்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு இதிலிருந்த ஓட்டைகளும் வாய்ப்புகளும் புரிபடத் தொடங்கியது.

Leia Mais…
Thursday, January 06, 2005

ஹர்ஷத் மேத்தா - 1

சாணக்கியக் காளையின் வில்லங்கக் கதை - 1

தற்பொழுது சில மாதங்களாக பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது. SEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ?


இத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.


பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் SEBI கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது.


சாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்துப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டது. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தைக் கண்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.


இது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் "Big Bull". அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வும், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,
கரடிகள் சரிவையும் குறிக்கும்)


இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான்.


சாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான்
உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய
அதிகப் பணம் தேவைப்பட்டது. கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.


ஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.

ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் "இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்" என்று சொன்னானாம்.

அந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Leia Mais…
Wednesday, January 05, 2005

Who Moved my Cheese

இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ? ஸ்பென்சர் ஜான்சனால் எழுதப்பட்ட புத்தகம். பல மேலாண்மை நூல்களை எழுதியுள்ள ஸ்பென்சர் ஜான்சன், மெலிதாக இழையோடும் ஒரு கதையைக் கொண்டு, வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும்படி மிக எளிதாக எழுதியிருக்கிறார்.

நாம் அனைவருமே வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் எத்தனை மாற்றங்களை மிகவும் திடமாக எதிர்கொள்கிறோம் ? பல மாற்றங்களைக் கண்டு அஞ்சி ஓடிக் கொண்டே தான்இருப்போம். எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், இருக்கின்ற நிலையிலேயே காலத்தை ஓட்டுவதைத் தான் பெரும்பாலானோர்கள் விரும்புகின்றனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான், நீங்கள் எனப் பெருவாரியான மக்கள் இப்படித் தான் உள்ளோம்.

நம்முடைய கேரியரின் (career) துவக்கத்தில் நல்ல வேலையைத் தேடி அலைவோம். அந்த வேலைக் கிடைத்து விட்டால், அதனைச் சுகமாக அனுபவிக்கத் தொடங்கி விடுவோம். அடுத்தக் கட்டத்தைப் பற்றி யோசிப்பவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்கள் கூட திருமணத்திற்குப் பிறகு வேலை மாற்றங்களை அதிகம் விரும்புவதில்லை. மாற்றங்கள் நம்மை சறுக்கி விடுமோ, இருக்கின்ற நிலையில் இருந்து பிசகி விடுவோமோ என்ற பயத்திலும், அச்சத்திலும் தான் மாற்றங்களை கண்டு அஞ்சி ஓடி விடுகிறோம். இருக்கின்ற வேலையிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, நமக்கு நாமே பலக் காரணங்களை கற்பித்துக் கொண்டு குண்டு சட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

வேலை மாற்றம் என்று மட்டுமில்லாமல், நம் வேலையில் எதிர்கொள்ளும் பலப் பிரச்சனைகள், நிறுவனத்தில் நமக்கு மிகவும் பிடித்தத் துறையில் இருந்து பிடிக்காத துறைக்கு மாறும் பொழுது நாம் எதிர்கொள்ளும் மாற்றங்கள், பணியிட மாற்றங்கள் என வாழ்க்கையின் எந்த மாற்றத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதை இக் கதை எளிதாக விளக்குகிறது.

இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது. மாற்றங்கள் எவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு குட்டிக் கதையைக் கொண்டு ஸ்பென்சர் ஜான்சன் விளக்கியிருக்கிறார். மாற்றங்களை Cheese என உருவகப்படுத்திக் கொண்டு, ஒரு
அம்புலிமாமா கதையைக் கொண்டு, நமக்கு மிகவும் பிடித்த Cheese ஐ யாராவது எடுத்துக் கொண்டாலோ, அல்லது, நமக்கு மிகவும் பிடித்த Cheese க்கு பதிலாக புதிய Cheese வைக்கப்பட்டாலோ எப்படி அதை எதிர்கொள்வது என்று கதையின் போக்கிலேயே விளக்குகிறார்.

இதைப் போலக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் பெரும்பாலும் தத்துவமழை பொழிந்து படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புத்தகமோ, சிறுவர் கதைப் போல ஒரு கதையைக் கொண்டு, அதுவும் சுமார் 50 பக்கங்களை மட்டுமே கொண்டு சொல்ல வந்தக் கருத்தை மிகத் தெளிவாக விளக்குவது சிறப்பு.

இக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

Leia Mais…

சரிவு, சரிவு, கடும் சரிவு

கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை எதைப் பற்றியும் கவலைப்படாமல் எகிறிக் கொண்டே இருந்தது. இந்தக் காளைச் சந்தை சரியும் வாய்ப்பு இருப்பதாகவே அனைவரும் கருதினர். ஆனால் எந்த ஒரு பெரியச் சரிவையும் சந்தை எதிர்கொள்ளவே இல்லை. எனது நேற்றையப் பதிவில் கூறியிருந்ததைப் போல அதிக அளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட சந்தை, நேற்று 28 புள்ளிகள் மட்டுமே சரிந்தது.


ஆனால் இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சி சந்தை கடுமையயகச் சரிந்து விட்டது. அவ்வப்பொழுது, சந்தையில் ஓரளவிற்குச் சரிவிருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக ஒரு கட்டத்தில் BSE குறியீடு சுமார் 300 புள்ளிகள் (Intraday) சரிவடைந்திருந்தது. இறுதியாக BSE குறியீடு 6458 (192 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும், NSE 2025 (78 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. இந்தச் சரிவு பாரதிய ஜனதா தோல்விக்குப் பிறகு பங்குச் சந்தையின் கறுப்பு தினம் என்று சொல்லப்படும் 2004, மே 17ல் நடந்த சரிவிற்க்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரியச் சரிவு. ஆனால் கடந்த முறை நடந்தச் சரிவு போல் இல்லாமல், முதலீட்டாளர்களின் லாபவிற்பனைக் (Profit Booking) காரணமாகத் தான் சந்தை சரிந்தது.


இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீடுகள் சரியத் தொடங்கின. உலோகப் பங்குகளான Hindalco, NALCO, TISCO போன்றவை சரியத்தொடங்கின. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange - LME) உலோகங்களின் விலை சரிவடைந்ததையடுத்து இந்தப் பங்குகளும் சரியத்தொடங்கின. மென்பொருள் நிறுவனங்களுக்கு வரும் காலாண்டில் லாபம் குறையக் கூடும் என்ற எதிர்ப்பர்ர்பு காரணமாக மென்பொருள் பங்குகளையும் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கினர்.


இது தவிர பங்குகளின் விலை உச்ச நிலையில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இந்த லாப விற்பனையால் எல்லாப் பங்குகளுமே குறிப்பிடத்தக்க அளவில் சரியத் தொடங்கின. இந்தச் சரிவு எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. எல்லாத் துறைப் பங்குகளுமே கடும் சரிவை எதிர்கொண்டன.


இன்று குறியீட்டில் இருந்த அனைத்து பங்குகளுமே சரிவடைந்திருந்ததன. BSE குறியீட்டில் எந்தப் பங்குகளுமே உயரவில்லை. NSEல் டாபர் (Dabur) பங்கு மட்டும் 1.8% உயர்வடைந்தது. குறியீட்டுப் பங்குகள் தவிர ஏனையப் பங்குகளையும் இந்தச் சரிவு விட்டுவைக்க வில்லை. சுமார் 2019 பங்குகள் சரிவடைந்த நிலையில் 319 பங்குகள் மட்டுமே உயர்வடைந்ததைக் கொண்டு சந்தை
எந்தளவுக்குச் சரிவைடைந்துள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம்.


காலையில் சரிவடைந்தச் சந்தை அச் சரிவில் இருந்து மீளவேயில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் (FII) பங்குகளை விற்கத் தொடங்கியதால் சரிவு மிக அதிகமாக இருந்தது. மதியம், சந்தை சுமார் 300 புள்ளிகளுக்கு சரிவடைந்து விட்டது.


சந்தையில் பங்குகள் விலைக் குறைந்து விட்டதால், மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டினர் (Value Buying). இதையடுத்து வர்த்தகத்தின் முடிவில், சரிவு ஓரளவுக்குச் சரி செய்யப்பட்டு பங்குச் சந்தை 192 புள்ளிகளுடன் சரிவடைந்தது.

இந்தச் சரிவு செல்லும் செய்தி என்ன ?

மே மாதம் 17,2004 சரிவுடன் இந்தச் சரிவை ஒப்பிடக்கூடாது. அந்தச் சரிவு முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக நடந்தச் சரிவு (Panic Selling). ஆனால் தற்பொழுது நடந்துள்ளச் சரிவு அச்சம் தரும் சரிவு அல்ல. இது ஒரு வாய்ப்பு. சந்தை கடுமையாக விலையேறி இருந்ததால் நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் சந்தைக்கு செல்வதற்கே அச்சப்படும் சூழல் இருந்தது. எப்பொழுது சரிவு ஏற்படுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்களைப் பயமுறுத்திக்கொண்டே இருந்தது. தற்பொழுது இந்த அச்சம் நீங்கி விட்டது என்று தான் சொல்வேன். நல்லப் பங்குகளை தெரிவு செய்து முதலீடு செய்யும் நேரமிது.

அடுத்து வரும் வாரங்களில் நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும். நிதிநிலை அறிக்கையும் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும். இவைகளைப் பொறுத்து தான் சந்தையின் அடுத்தக் கட்ட உயர்வும் தாழ்வும் ஏற்ப்படும். தற்போதையச் சரிவு தற்காலிகமானது தான். அடுத்து வரும் நாட்களில் இந்தச் சரிவு சரி செய்யப்படும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

சரி..எந்தப் பங்குகளை வாங்கலாம் ?

நேற்றும், இன்றும் சிமெண்ட் பங்குகள் திடமாக இருக்கின்றன. நேற்று நல்ல உயர்வைப் பெற்ற இந்தப் பங்குகள், இன்றும், இந்தக் கடும் சரிவுக்கிடையிலும் ஓரளவுக்கு உயர்வைப் பெற்றன. குஜராத் அம்புஜா, பிர்லா சிமெண்ட போன்றவை இன்று உயர்வடைந்தப் பங்குகள். ACC பங்குகள் இன்றுச் சரியவும் இல்லை. உயரவும் இல்லை. சிமெண்ட்டிற்கு இருக்கும் தேவையும், தற்பொழுதுள்ள சந்தை நிலவரத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது சிமெண்ட பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம் இருக்கக்கூடும்.

அதைப் போலவே பார்மா(Pharma), ஜவுளி(Textile) போன்ற துறைகளும் நீண்ட கால முதலீட்டில் லாபம் தரக்கூடியவை.

பிற துறைகளைப் பொறுத்தமட்டில் நல்லப் பங்குகளாக தெரிவு செய்தால் லாபம் நிச்சயம்.

Leia Mais…
Tuesday, January 04, 2005

நல்ல நிறுவனத்தின் குணங்கள்

பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?

"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,
Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை
போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.

அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "பல்ராம்பூர் சினி" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?

சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை
தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான். பஜாஜ் நிறுவனத்தைப் பற்றி உதாரணமாக கூறியிருந்தேன். பஜாஜ் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தி, அந்த
மாடல் அனைவரையும் கவர்ந்து விற்பனைப் பெருகிய பொழுது, பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அதிக அளவில் அந்த பைக்குகள் விற்பதால் பஜாஜின் உற்பத்திப் பெருகி,
லாபமும் அதிகரித்து, பங்குகளின் விலையையும் எகிறச் செய்யும். அந்தக் கதையின் இன்னெரு பக்கமும் உள்ளது.

ஹிந்துஸ்தான் லீவர் என்ற நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடையில் கிடைக்கும் சோப்பு, டூத்பேஸ்ட் என்று அனைத்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் தான்
தயாரிக்கப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் ரூ25,000 பங்குகளில் முதலீடு செய்வதென முடிவு செய்தார். பலவாறு யோசித்து ஹிந்துஸ்தான் லீவரே சிறந்த நிறுவனம் என முடிவு செய்து, அந்தப் பங்குகளில் முதலீடு
செய்தார். அவர் முதலீடு செய்த பொழுது பங்குகளின் விலை 250 ரூபாய். இந்த வருடம், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைச் சரிந்து பங்குகளின் விலை 125ரூபாயாகி விட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளில் உபயோகிக்கப்படும் பலப் பொருட்கள் இந் நிறுவனத்திற்குச் சொந்தமானவை தான். பின் ஏன் பங்குகள் சரிவடைந்தன. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும்.

பஜாஜ் கதைக்கு வருவோம். பல்சர் அறிமுகம் செய்தாகி விட்டது. பல்சரும் பெருகி விட்டது. பஜாஜ் பங்குகள் விலையும் எகிறி விட்டது. இன்றும் கூட பல்சர் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டு தானே இருக்கிறது.
பாஜாஜின் பங்குகளை தற்பொழுது வாங்கலாமா? இங்கு தான், நம்முடைய விற்பனை ஆய்வை, ஆண்டறிக்கையுடன் பொருத்திப் பார்க்கும் ஆய்வு
தேவைப்படுகிறது. பஜாஜின் மொத்த உற்பத்தியில் பல்சரின் உற்பத்திச் சதவீதம் என்ன ? பிற மாடல்களின் உற்பத்திச் சதவீதம் என்ன ? சென்ற ஆண்டு பல்சர் எந்தளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு
எந்தளவுக்குச் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா ? பைக் சந்தையில் பஜாஜின் பங்கு எவ்வளவு (Market Share). Market Share அதிகரித்துள்ளதா ? குறைந்துள்ளதா ? போட்டி நிறுவனங்களுடன்
ஒப்பிடும் பொழுது பஜாஜின் விற்பனை எப்படியுள்ளது ? இப்படியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின் முடிவு நமக்கு எதைச் சொல்லும் ?

பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்றால் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தானே பொருள். ஒரு நிறுவனம் வளரும் பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளும் உயரும். வளர்ச்சி குறையும் பொழுது அதற்கேற்றாற்ப் போல் பங்குகள் விலையும் சரியும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது பங்குகளின் விலையும் அதை பிரதிபலிக்கும். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் சரிந்தது இந்த விதிகளின் படி தான்.
போட்டி நிறுவனங்கள் பெருகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொருட்கள், கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் சந்தையில் குறைவாகவே விற்பனையாகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் அந் நிறுவனத்தின் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. அதன் எதிரொலி சந்தையிலும் இருக்கத் தானே செய்யும். நல்ல வளர்ச்சியடைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, வளரும் நிறுவனங்களில்
முதலீடு செய்வதே சிறந்தது. இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனமான பார்தி நிறுவனப் பங்குகள் தான் அதிக லாபமடைந்தன. ஏன் இந்த வளர்ச்சி ? "நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே ஏர்டெல் கிடைத்தப் பொழுதே" உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஏர்டெல் வளருகிறது. இந்த எண்ணம் தோன்றியவுடன் அந்தப் பங்குகளையும் வாங்கியிருந்தால், ஏர்டெல்லுடன் நாமும் வளர்ந்திருப்போம்.

கடந்த ஒரு வருடத்தில் பார்திப் பங்குகள் சுமார் 100% வளர்ச்சிப் பெற்றிருந்தன. நீங்கள் 2003 டிசம்பரில் ரூ10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 20,000 ரூபாய். அது போலவே வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் எந்தளவுக்கு வளரும் என்பது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடும் பொழுதே, நமக்குப் புரியும். மக்கள் தொகையில் ஏர்டெல்லுக்கு மிக அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் தான் வளர்ச்சியில் தேக்கமடைந்த பெரிய நிறுவனப் பங்குகள் அதிக லாபம் தருவதில்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் லாபம் அதிகம் தரும். 2004ம் ஆண்டு கூட நடுத்தர நிறுவனப் பங்குகளான
மிட்கேப் (Midcap) பங்குகள் தான் அதிக லாபம் தந்தன.

அடுத்து வரும் பதிவுகளிலும் நிறுவனங்களை எப்படி ஆய்வு செய்வது என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.

Leia Mais…

இன்றையச் சந்தை நிலவரம்

தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தச் சந்தை, இன்று சற்று சரிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள், லாபம் எடுப்பதற்காகப் பங்குகளை விற்றதால் தான் குறியீடு சரிவடைந்தது. BSE குறியீடு 28 புள்ளிகள் சரிவடைந்து 6651 புள்ளிகளுடனும், NSE 11 புள்ளிகள் சரிவடைந்து 2104 புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த வாரமும், நேற்றும், பங்குக் குறியீடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. எல்லாப் பங்குகளுமே விலை ஏறி இருந்தன. இன்று, இந்த உயர்வைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கத் தொடங்கினர்.

இன்று Reliance, Reliance Energy, IPCL, Reliance Capital போன்ற ரிலயன்ஸ் குழுமப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்தன. அது போலவே மென்பொருள் பங்குகளும் இன்று சரிவடைந்தன. நேற்று இந்தப் பங்குகள் லாபத்துடன் இருந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இன்று ஏன் இவைச் சரிந்தன என்பது நமக்குப் புரியும். லாப விற்பனை தான் (Profit Booking).

வங்கிப் பங்குகளும், சிமெண்ட் பங்குகளும் நல்ல லாபமடைந்தன. இந்த ஆண்டு சிமெண்டிற்கு அதிக தேவையிருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சிமெண்ட் நிறுவனங்கள் சிமெண்ட்டின் விலையை உயர்த்தி உள்ளன. இதனால் இந் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சிமெண்ட் பங்குகளான குஜராத் அம்புஜா, ACC போன்றவை இன்று நல்ல உயர்வைப் பெற்றன.

கடந்த சில நாட்களாக அதிக உயர்வைப் பெற்றச் சந்தை, ஓரளவுக்குச் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகக் குறைந்தப் புள்ளிகளே குறியீடு சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் லாப விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க முனையவில்லை.

அது போலவே பங்குகளை வாங்குவதிலும் பெரிய ஆர்வம் யாருக்குமில்லை. சந்தை சரியக்கூடும் என்ற எண்ணத்திலேயே அனைவரும் இருந்ததால், யாரும் பங்குகளை அதிகமாக வாங்க வில்லை. இத்தகைய வர்த்தகத்தால் தான் சந்தை கொஞ்சம் தள்ளாட்டத்துடன் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து பின் 28 புள்ளிகள் சரிவடைந்தது.


Leia Mais…
Monday, January 03, 2005

திருக்குறளும், இன்றைய பொருளாதாரமும்

திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம் என்ற விதியை நானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். எக் காலத்திற்கும் ஏற்ற இந் நூல், இக்கால பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருந்துகிறதா என்று சோதனை செய்ய ஒரு சிறிய முயற்ச்சி. பிழை இருந்தால் மன்னியுங்கள்.

அதிகாரம் : நாடு

 • தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
  செல்வரும் சேர்வது நாடு.
குறையாத விளைபொருளும், நல்ல அறிஞர்களும், கேடில்லாத செல்வமும் உள்ள நாடே நல்ல நாடு

விளைச்சல் என்பதை இங்கு உள்நாட்டு உற்பத்தி என்று எடுத்துக் கொள்ளலாம். இன்று எல்லா நாடுகளிலும் பற்றாக்குறையும் தட்டுப்பாடுமே நிலவுகிறது. குறைவில்லாத உற்பத்தி இன்று எந்த நாட்டிலும் இல்லை. மிகுதியான பொருளை ஏற்றுமதி செய்வதும், உள்நாட்டில் இல்லாதப் பொருளை இறக்குமதி செய்வதும் தான் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை. எல்லா நாட்டு நிதி நிலையிலுமே பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தான் எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வாறு பற்றாக்குறையைக் குறைக்க கல்வி அவசியமாகிறது. மனிதவள மேம்பாடு இருந்தால் தான் தொழில் பெருக முடியும். தொழில் பெருகினால் தான் நாட்டின் செல்வம் பெருகும். வள்ளுவரின் அந்த Dream நாட்டை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
 • பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்
  ஆற்ற விளைவது நாடு
மிக்க பொருள்வளம் உடையதாகவும், எல்லோரும் விரும்பத்தக்கதாகவும், கேடு இல்லாமல் மிகுதியாக விளைபொருள் தரும் நாடே நல்ல நாடாகும்

பொருளாதார வளமுடைய நாடே இன்று எல்லோராலும் விரும்பப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என்று படையடுப்பதன் நோக்கம் என்ன ? அந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றமும், மிகுதியான வேலை வாய்ப்பும் தானே.
 • பொறையருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறையருங்கு நேர்வது நாடு
அரசன் சுமத்தும் வரிச் சுமையைத் தாங்கி, அந்த வரிகளை செலுத்தும் நாடே நல்ல நாடு

இந்தியாவில் தற்பொழுது கூட வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் மிகக் குறைவு. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலமாகத் தான் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எல்லோரும் வரிச் செலுத்தினால் தான் நல்ல நாடு என்ற நிலையை நோக்கி நாம் நகர முடியும். வரியை ஒரு சுமையாக எண்ணி ஏய்க்க நினைத்தால் நாடு எப்படி மேன்மை அடைய முடியும்.
 • உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
  சேரா தியல்வது நாடு
பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை உயர்த்துவது தான் இன்றைய வளரும் நாடுகளுக்குள்ள முக்கியமான சவால். அது போலவே நல்ல சுகாதாரமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவே இன்று எல்லா வளரும் நாடுகளும் முயன்று கொண்டிருக்கிறது. இவ்வாறு முயன்று கொண்டிருக்கிற நாடுகளை வளரும் நாடுகள் எனவும், முயன்று வெற்றிப் பெற்று விட்ட நாடுகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் என்றும் சொல்கிறோம். வறுமை இருந்தாலும், பகையை வெற்றிக் கொள்ள இன்று எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகை இருந்தாலும், அந்தப் பகையை சமாதானமாக மாற்றுவதற்கும் முயற்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்தால் தான் மக்கள் சுமுகமாக இருக்க முடியும். நல்ல நாடு என்ற நிலைக்குச் செல்ல முடியும்
 • பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
  கொல்குறும்பும் இல்லது நாடு
வள்ளுவருக்கு காஷ்மீர் தீவிரவாதிகளையும், உல்பா தீவிரவாதிகளையும் கூட தெரிந்திருக்கிறது பாருங்கள். இந்த தீவிரவாதங்களும், அழிவு செய்யும் குழுக்களும் இல்லாதிருந்தால் நம் நாடு எப்படி இருந்திருக்கும். குண்டு வெடிப்புகள் இருந்திருக்காது. காந்தியையும், பிற தலைவர்களையும் தீவிரவாதத்திற்குப் பலிகொடுத்திருக்க மாட்டோம்.
 • இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
  வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
நீர் ஆதாரங்கள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு இது நன்றாகவே புரியும். தமிழ்நாட்டில் காவிரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் குறைந்திருக்கும். அது போலவே நதி நீர் இணைப்பு நடைப்பெற்றால், விவசாயம் பெருகி நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக வளர்ச்சியடைய முடியும். இத்தகைய நல்லச் சூழ்நிலை நிச்சயமாக நம் நாட்டில் இல்லை. சில மாநிலங்களில் வேண்டுமானால் சொல்லலாம்.
 • பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
  அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து
நல்ல உற்பத்தி, சுகாதாரம், பற்றாக்குறை இல்லாத செழிப்பான சூழ்நிலை, சுகமான வாழ்வு, பாதுகாப்பான நாடு இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அழுகு தருவது. இத்தகைய ஒரு அழகான சூழ்நிலை இந்தியாவில் உதயமாகத் தான் நாம் அனைவரும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.
 • ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
  வேந்தமை வில்லாத நாடு.
எல்லா செல்வங்களும் இருந்தாலும், நல்ல அரசன் இல்லாவிடில் அதற்கு மதிப்பில்லை

இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மாறிக் கொண்டே இருந்த பிரதமர்களாலும், நிலையற்ற தன்மையினாலும் நாடு அடைந்த பின்னடைவுகளை எண்ணும் பொழுது வள்ளுவரின் வாக்கு இக்காலத்திலும் பொருந்தத்தானே செய்கிறது.


Leia Mais…

சோழர்களின் பொருளாதாரப் போர்கள்

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன.

அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும்,
பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

இந்த வர்த்தகச் சூழநிலையைக் கொஞ்சம் அலசுவோம்

சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் . பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது

ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான் (உலக வர்த்தகத்தில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் இணையத் தளத்தில் இந்த நிகழ்வும் இடம் பெற்றுள்ளது)

போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அரபு நாட்டுடனும் சோழர்கள் வர்த்தகம் செய்துள்ளார்கள். தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு தான் இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள்.


சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.

பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).


இவ்வாறு ஏற்றமுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், பிரிட்டிஷாரின் வரவுக்குப் பிறகு நிர்மூலமாகி, ஏழை நாடாகி விட்டது. இன்று மறுபடியும் பொருளாதாரம் வளர்ச்சி பெற தொடங்கியிருக்கிறது

Leia Mais…
Sunday, January 02, 2005

பழையன நினைந்து புதியன புகுவோம்

இந்தியப் பங்குச் சந்தைக்கும் பொருளாதாரத்துக்கும் 2004 ஆம் ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டு. வரலாறு காணாத உயர்வைப் பங்குச் சந்தை பெற்றிருக்கிறது. 2004ம் ஆண்டு துவக்கத்தில் 5838 புள்ளிகளுடன் இருந்த BSE
குறியீடு தற்பொழுது 6602ல் இருக்கிறது. சுமார் 760 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது. இது சுமார் 13% வளர்ச்சி. இது போலவே தேசிய பங்குச் சந்தை 1877 ல் தொடங்கி 2,080க்கு உயர்ந்து, சுமார் 11% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட துவக்கத்தில் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்ததாலும் பாரதிய ஜனதா "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்வைத்தது. பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று விடும் என்ற எண்ணத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, காங்கிரஸ் வெற்றிப் பெற்று, இடதுசாரிகள் ஆதரவுடன் அரசமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது ஒரே நாளில், மே மாதம் 17ம் தேதி, குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்தது.

இந்தச் சரிவு அரசியல் மாற்றங்களினாலும், இடது சாரிகளை உள்ளடக்கிய மைய அரசு எந்தளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற அச்சத்தினாலுமே நிகழ்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்
வலுவாகவே இருந்தது. அடுத்து வந்த வாரங்களில் பங்குச் சந்தை ஒரளவுக்கு உயர்ந்தது என்றாலும், புதிய அரசின் பொருளாதார கொள்கைகளைப் பற்றிய தெளிவு இல்லாததால், பல நாட்கள் சந்தையில் அதிக சரிவும் இல்லாமல், உயர்வும் இல்லாமல் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.

ஜுலை மாதம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்குப் பிறகே வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்குச் சந்தையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற பொழுது நடந்த பங்குச் சரிவுக்கு ஸ்பேக்குலேசன் தான் முக்கிய காரணம் என்று கருதிய அரசு தேவையில்லாமல் ஸ்பேக்குலேசன் செய்து சந்தையை சரிவடையச் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரியை விதித்தது. ஒரு நல்ல அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்தாலும், பங்கு பரிவர்த்தனை வரியை ஏற்காமல் பங்குச் சந்தை சரிந்தது. இந்த வரி விகிதம் பங்குத் தரகர்களின் வேண்டுகளுக்கிணங்க பிறகு ஓரளவு குறைக்கப்பட்டது.

குறியீடு 6000ஐ நெருங்கினாலே அதிகம் என அனைவரும் எண்ணிய சூழ்நிலையில், அரசின் பொருளாதார கொள்கை மேல் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு பங்குச் சந்தை இன்று 6600ஐ எட்டி விட்டது. இதில் பெரும்பாலான உயர்வு கடந்த இரு மாதங்களில் தான் நிகழ்ந்தது.

இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 2004ல் தான் குவிந்தது. ரூபாய் 38,965 கோடி (8.5 பில்லியன் டாலர்) அளவுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் (FII) முதலீடு செய்யப்பட்டது.

அதே போல பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை பொது விற்பனைக்கு வெளியிட்டன (IPO). TCS சுமார் 5,500 கோடிக்கும், NTPC சுமார் 5000 கோடிக்கும் பங்குகளை வெளியிட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 30,500 கோடி
ரூபாய் IPO மூலம் திரட்டப்பட்டது.

குறியீட்டுப் பங்குகளில், பார்தி பங்குகள் (ஏர்டெல் செல்பேசி நிறுவனம்) தான் இந்த வருடம் அதிக லாபம் கண்டது. 110 ரூபாயில் இருந்த இந்தப் பங்குகளின் தற்போதைய விலை ரூ215. சுமார் 100% உயர்வு. இதைப் போல இன்போசிஸ் பங்குகளும் மிக அதிக அளவில், சுமார் 50% உயர்வைப் பெற்றிருந்தன.

இந்த ஆண்டு கடும் சரிவுற்றப் பங்கு இந்துஸ்தான் லீவர் (HLL) தான். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த விலைக்கு இந்தப் பங்குகள் சரிந்தன. சுமார் 30% வீழ்ச்சி.

இந்த ஆண்டு அதிக உயர்வைப் பெற்றது MIDCAP எனப்படும் நடுத்தரமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழ்நிலையில் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கக்கூடும்

இந்த ஆண்டு (2005)

கொஞ்சம் சிக்கலான, குழப்பமான மனநிலையில் தான் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டில் பங்குச் சந்தையின் அபரிதமான எழுச்சி எல்லோரையும் அச்சப்படுத்தி உள்ளது. பங்குகளின் விலை ஏறுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் தான் கடந்த ஆண்டு சந்தை லாபம் பெற்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் படசத்தில் சந்தை சரியக் கூடும். சந்தையின் போக்கினை, நம்மால் தெளிவாக கணிக்க இயலாது. வரும் வாரங்களில் நிகழக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து தான் சந்தையின் போக்கு இருக்கும்.

இம் மாதம், பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கும். சனவரி 12ம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்தக் காலாண்டில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது எல்லா ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கும். அதிலும், சுமார் 80% மென்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செய்யப்படுகிறது என்பதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக் கூடும். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களை இத்தகைய அந்நியச் செலவாணி ஏற்ற இறக்கங்களில் இருந்து FX Forwards போன்ற ஓப்பந்தங்கள் மூலமாக தற்காத்துக் கொள்ளும். ரூபாயின் மதிப்பு உயருவதால், வரும் காலாண்டிற்கு புதியதாக செய்யப்படும் FX Forwards ஒப்பந்தகங்களின் மதிப்பும் உயரும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே மென்பொருள் பங்குகள் சரியும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டுடன் ஜவுளிக்கான கோட்டா முறை முடிவடைகிறது. இதனால் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என்று கருதப்படுகிறது. இந்தத் துறையின் பங்குகள் கவனத்திற்குரியவை.

அது போலவே இந்த ஆண்டுடன் பேடண்ட முறை அமலுக்கு வருகிறது. இது பார்மா (Pharma) நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகக் கூடும்.

அடுத்த மாதம் நிதியமைச்சர் தன்னுடைய அரசின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பற்றாக்குறை குறைப்பு, உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள், அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், அரசால் விதிக்கப்படும் மற்றும் குறைக்கப்படும் வரிகள், வருவாயைப் பெருக்குவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள், தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் எனப் பல பிரச்சனைகளை எப்படி நிதி நிலை அறிக்கை கையாளுகிறதோ அதைச் சார்ந்தே பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் அமையும்.

பங்குச் சந்தை சில நேரங்களில் சரிவடையலாம், பின் உயரலாம். நல்ல நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலமாகவே நாம் லாபம் பார்க்க இயலும். அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

கடந்த ஆண்டில் பல சாதனைகள் நடந்திருக்கிறது. புது ஆண்டிலும் அதைப் போல சாதனைகள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய நினைவுகளுடன் புதிய ஆண்டில் புகுவோம். பழையன நினைந்து புதியன புகுவோம்.

இந்தப் புத்தாண்டில் உங்கள் பணம் பெருகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Leia Mais…

புதிய வாய்ப்புகள், சவால்கள்

இந்த ஆண்டில் இருந்து கோட்டா முறை ஜவுளித் துறையில் விலக்கிக் கொள்ளப்படுவதால், ஜவுளித் துறைக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் தங்களுக்கு தேவையான ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் ஒதுக்கி அந்த அளவுக்கு மட்டுமே அந்த நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும். உதாரணமாக தன் தேவையில் 10% சதவீதத்தை பாக்கிஸ்தானில் இருந்தும், 15% பங்களாதேஷில் இருந்தும், 10% இலங்கையில் இருந்தும் இறக்குமதி செய்யும். ஒதுக்கப்பட்ட கோட்டாவுக்கு அதிகமாக அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாது. இதனால் ஏற்படும் நன்மை, குறிப்பிட்ட நாடுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஏற்றுமதியை நிச்சயமாக பெற முடியும்.

இந்த கோட்டா முறை உலக வர்த்தக சங்கம் (WTO) சட்டதிட்டங்களின் உருவாக்கப்பட்ட Agreement on Textiles and Clothing (ATC) என்ற ஒப்பந்தப் படி சனவரி 1, 2005 முதல் விலக்கப்படுகிறது. கோட்டா முறையால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7% ஜவுளித் துறையைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்கு 25%. ஆனால் உலகின் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3% என்ற சொற்ப அளவில் தான் உள்ளது. இந்த கோட்டா முறை விலக்கப்படுவதால் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளுக்குமே இந்த வாய்ப்பு இருப்பதால், பிற நாடுகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு தான் வய்ப்புகளை பெற முடியும்.

குறிப்பாக சீனாவின் கடும் சவாலை இந்தியா சந்தித்தாக வேண்டிய சூழ்நிலை. 2002ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஜவுளித் துறையின் சிலப் பிரிவுகளில் கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பொழுது,
இத்துறைகளில் 9%மாக இருந்த சீனாவின் பங்கு 45%மாக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 70% ஐ எட்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் அமெரிக்காவின் மொத்த ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு 16%. கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இது 50%ஐ தாண்டும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு மட்டுமல்லாது, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

சவால்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இருந்து நிச்சயமாக முன்னேற்றம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏராளமான வாய்ப்பு இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கிறது. எந்தளவுக்கு நாம் அதனைப் பயன்படுத்தி கொள்கிறோம், பிற நாடுகள் கொடுக்கும் சவால்களை எதிர்கொள்கிறோம், தரமான உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்.

அடுத்த வாய்ப்பு பார்மா (Pharma) துறையில், புதிய பேடண்ட் (patent) சட்டம் அமலுக்கு வருவதன் மூலமாக கிடைத்திருக்கிறது. இது வரையில் இருந்த மருத்து தயாரிப்புமுறைக்கான காப்புரிமை (process patents) நீங்கி, தயாரிக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை அமலுக்கு வருகிறது (product patents). இதனால் சுமார் 90% மேற்பட்ட மருந்துகள் காப்புரிமை பெற்றப் பிரிவில் இருந்து நீங்குகிறது. இவ்வாறு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்புகள் மட்டும் பல பில்லியன்கள்.

அமெரிக்காவின் USFDA எனப்படும் Food and Drug Administration அங்கீகாரம் பெற்ற 70க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர அமெரிக்காவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மென்பொருள் துறையில் உள்ளது போல இந்தியாவிற்கு தனது தயாரிப்புகளை (Outsourcing) மாற்றும் வாய்ப்புகளும் இருக்கிறது.
இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான ரேன்பேக்சி, சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருக்கிறது

மென்பொருள் துறை வளர்ச்சிப் பெற்றது போலவே, பார்மா மற்றும் ஜவுளித் துறைகளும் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இரு துறைகளின் வளர்ச்சி, தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக கவனிக்கப்படும்.


Leia Mais…