பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Sunday, October 31, 2004

பங்குகளை விற்கலாமா ?

பணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம். பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை. ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் (IPO) பங்குகளை வாங்குவார்கள். அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள். பிறகு பங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள்.

என் நண்பர் ஒருவர் TCS பங்குகளை வாங்கினார். TCS பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.

"TCS பங்குகளை யாராவது விற்பார்களா? 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே" என்று என்னை கோபித்து கொண்டார்.

ஆனால் உண்மையில் அன்று விற்றிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.

வாங்கும் விலை
17 x 850 = 14,450.00

பங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி, பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால், எவ்வளவு லாபம் வரும்

விற்கும் விலை
17 x 1150 = 19550

லாபம் = ரூ 5000

TCS நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே TCS பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.

என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு, அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.

தினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும், இப்பொழுது விற்பதால் லாபமா, இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன ? விற்று விட்டு, விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.

அதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.

பங்குகள் வாங்கி விற்பதில் இத்தகைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் நிச்சயம் நம் பணம் பெருகும்.

சரி..இந்த வாரம் சந்தை எப்படி இருக்கும்

சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை, கடந்த வாரம் RBI யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும், சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும், கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.

கச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இம் மாதமும் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.

இந்த வார காளைகளின் தகவல் - "பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்"

Leia Mais…
Thursday, October 28, 2004

கச்சா எண்ணெய்

இன்போசிஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வரப்பிரசாதம். சென்ற காலாண்டு அறிக்கையின் பொழுது ரூ1400 ஆக இருந்தது. சிறந்த காலாண்டு அறிக்கையினால் ரூ 1600க்கு தாவியது. இந்த மாத துவக்கத்தில் 1700 ரூபாயில் இருந்து இப்பொழுது ரூ1950ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மாதம் மட்டும் 250 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அதிக லாபம் அடைந்த பங்கு இன்போசிஸ் தான். நீங்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று தனுஷ் அடைந்திருக்கும் சந்தோஷத்தை அடைந்திருக்கலாம் (அது யாரு தனுஷ் - நம்ம தலீவரோட(?) மருமகன் தான்)

இன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி. பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். சந்தையின் இந்த உற்சாக நிலையினால் BSE குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது. NSE 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது.

திங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற, இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர்.

RBI யின் நிதிக் கொள்கையும், கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5% குறைகிறது

RBI யும் நாட்டின் வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலேயே பாதிப்படைவதாக கூறியிருக்கிறது.

இன்று கச்சா எண்ணெய் கொஞ்சம் இறங்கியிருக்கிறது. இது தொடருமா ?

Leia Mais…
Tuesday, October 26, 2004

RBI யின் நிதி கொள்கை

ரிசர்வ் வங்கி இன்று தனது இடைக்கால நிதி மற்றும் கடன் கொள்கையை அறிவித்து இருக்கிறது. எதிர்பார்த்தபடியே, 2004-2005 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6% முதல் 6.5% மாக இருக்கும் என அறிவித்திருக்கிறது. முன்பு 6.5% முதல் 7% மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைந்த அளவிலான பருவ மழை போன்ற காரணங்களால் குறையக் கூடும் என தெரிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்கமும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5% என்ற இலக்கை கடந்து, 6.5% மாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

ஆனால் வட்டி விகிதத்தை தற்பொழுதுள்ள 6% என்ற நிலையில் இருந்து அதிகரிக்கவில்லை. வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுவனங்களின் முதலீடுகளை குறைத்து, நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் அதனை அப்படியே விட்டுள்ளது.

ஆனால ரெப்போ வட்டி விகிதம் 4.75% ஆக மாறி இருக்கிறது. (ரெப்போ - Repo - Repurchase Agreement என்பது மிக குறைந்த கால பணபறிமாற்றத்திற்கான ஒரு வர்த்தகம். தன்னிடம் உள்ள Securities ஐ வைத்து கடன் பெறுவது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இந்த Securities ஐ திரும்ப பெற்று கொள்வார்கள். திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்திரவதத்துடன் இந்த வர்த்தகம் நடைபெறுவதால் இதனை - Repurchase Agreement என்று சொல்வார்கள்)

இந்த ரெப்போ விகித மாற்றம் தொழில் துறையை அதிகம் பாதிக்காது.

வட்டி விகிதம் உயர்த்தப் படாததால் நிறுவனங்களின் முதலீட்டிற்கு பாதிப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக இருந்த்து. மதியம் வரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீடு, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவித்தப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டது.

நேற்று முதலீட்டாளர்களின் விற்பனையால் BSE குறியீடு 60 புள்ளிகள் சரிவு கண்டது. இந்த சரிவு இன்று மதியத்திற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் ஈடு செய்யப்பட்டது. BSE குறியீடு 70 புள்ளிகள் உயர்ந்து 5,651 லும் NSE 24 புள்ளிகள் உயர்ந்து 1,781 லும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

நேற்று சந்தை சரிவடைந்த பொழுதும் நல்ல லாபகரமாக இருந்த இன்போசிஸ், இன்றும் 40 ரூபாய்க்கும் அதிகமாக விலை ஏறியது. கடந்த சில நாட்களாக சரிவு முகமாக இருந்த சத்யம் இன்று அதிக லாபம் அடைந்தது.

வங்கிப் பங்குகளான ஸ்டேட் பாங்க் (SBI), இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB), பாங்க ஆப் பரோடா போன்றவையும் நல்ல முன்னேற்றம் கண்டன.

HINDALCO, TISCO, SAIL போன்ற உலோகப் பங்குகளும், ரிலயன்சும் இன்று லாபகரமாக இருந்தன.

Leia Mais…
Sunday, October 24, 2004

தத்தளிக்கும் சந்தை

கடந்த வாரத்தை பார்க்கும் பொழுது, எல்லா நாட்களிலும் பங்கு வர்த்தகம் மந்த நிலையிலேயே இருந்தது. செவ்வாயன்று இறுதி ஒரு மணி நேரத்தில் சந்தை உயர்ந்ததை தவிர வேறு நல்ல நிகழ்வுகள் கடந்த வாரம் நடக்க வில்லை. இந்த உயர்வு கூட அடுத்து வந்த நாட்களில் சரிந்து போய் விட்டது.

கடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள். இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் forcast ஏமாற்றம் அளிக்கிறது. மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, TCS போன்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.

இந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ். இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விப்ரோவும் இது போலத் தான்.

மொத்ததில் இந்த வாரம் காளைகளின் ஒரு வரி தகவல் - "சந்தையில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்".

கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள், அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும்

நல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது. பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள், வெளியேறி விடாதீர்கள்.

புதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள். சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள்.

சந்தை தற்பொழுது தத்தளித்து கொண்டிருக்கிறது. ஆனால் முழ்கி விடாது. மெதுவாக கரையேறி விடும்

Leia Mais…
Saturday, October 23, 2004

பங்குக் குறியீடு - 2

பங்குக் குறியீடுகளை இரு முறையில் உருவாக்கலாம்.

  • சந்தை மூலதன நிறையிட்ட குறியீடு (Market Capitalization weighted Index)
  • பங்கு விலை நிறையிட்ட குறியீடு (Price weighted Index)

சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.

உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி, ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது, அதனுடைய சந்தை மூலதனம் (Market Capitalization) = 1 கோடி x 600 = 600 கோடி

பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும், உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் (Base Market capitalization) என்று சொல்வார்கள்.

இதனைப் போன்றே பங்குக் குறியீட்டின் அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) உருவாக்கப் படும்.

உதாரணமாக ஒரு குறியீடு

நான்கு நிறுவனங்களை இந்தக் குறியீட்டில் கொண்டு வருவோம்

இன்போசிஸ்
பங்குகள் = 100
விலை = 1000
சந்தை மூலதனம் = 100 x 1000 = 100000

விப்ரோ
பங்குகள் = 50
விலை = 500
சந்தை மூலதனம் = 50 x 500 = 25000

ONGC
பங்குகள் = 75
விலை = 600
சந்தை மூலதனம் = 75x 600= 45000

TISCO
பங்குகள் = 25
விலை = 150
சந்தை மூலதனம் = 25x150= 3750

இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.

அடிப்படை சந்தை மூலதனம் = 100000 + 25000 + 45000 + 3750 = 173750

அதனைக் கொண்டு குறியீட்டில் உள்ள பங்குகளின் மதிப்பீடு கணக்கிடப் படுகிறது.


பங்கு மதிப்பீடு

இன்போசிஸ் = 100000/173750 = 0.575539568

விப்ரோ = 25000/173750 = 0.143884892

ONGC = 45000/173750 = 0.258992806

TISCO = 3750/173750 = 0.021582734

மொத்த மதிப்பீடு = 0.575539568 + 0.143884892 + 0.258992806 + 0.021582734 = 1.0

அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) 1000 என எடுத்துக் கொண்டால்

பங்குக் குறியீடு
1.0 x 1000 = 1000

இதன் அடிப்படையில், பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது

இன்போசிஸ், விப்ரோ பங்குகளில் உயர்வும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?

விலை

இன்போசிஸ் = 1120
விப்ரோ = 600
ONGC = 435
TISCO = 25

இந்த விலை மாற்றத்தால் சந்தை மூலதனமும், மதிப்பீடும் மாறுகிறது.

குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும், அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.

இன்போசிஸ் = 100 X 1120 = 112000 = 112000/173750 = 0.644604317

விப்ரோ = 50x 600 = 30000 = 30000/173750 = 0.172661871

ONGC = 75 x 435 = 32625 = 32625/173750 = 0.187769784

TISCO = 25 x 25 = 625 = 625/173750 = 0.003597122

பங்குகளின் மொத்த மதிப்பீடு = 0.644604317 + 0.172661871 + 0.187769784 + 0.003597122 = 1.008633094

இப்பொழுது குறியீட்டின் நிலை ?

1000 x 1.008633094 = 1008.63

பங்குக் குறியீடு 8.63 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் BSE மற்றும் NSE குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

NSE குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும், அந்தப் பங்கு, வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும், முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.

குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.

NSE ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் S&P CNX Nifty குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.

NSE ன் மற்ற குறியீடுகள்.

CNX Nifty Junior - இது CNX Nifty க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் (Sector) தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி NSE ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.

இதிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனிக் குறியீடு உள்ளது.
BSETECK
BSEPSU
BANKEX

இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் bseindia.com, nseindia.com போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.

Leia Mais…
Wednesday, October 20, 2004

பங்குக் குறியீடு - 1

இன்று பங்குக் குறியீடு சரிந்து விட்டது, ஏற்றம் கண்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே...அது என்ன பங்குக் குறியீடு ? அதன் ஏற்றமும் சரிவும் எதனால் ஏற்படுகிறது ?

Index என சொல்லப் படுகின்ற குறியீடு, பலப் பங்குகளின் குழுமம். பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது. உதாரணமாக BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. NSE 50 பங்குகளைக் கொண்டது. இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது.

பல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் (Diversification). ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது. அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும்.

இன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு, குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும். TISCO சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும்.

இதோ ஒரு சிறிய குறியீடு

இன்போசிஸ், விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.

இன்போசிஸ் = +8
விப்ரோ = +2
TISCO = -2
ONGC = -3
உயர்வு = +10
சரிவு = -5
குறியீட்டின் நிலை = 5 புள்ளிகள் உயர்வு

TISCO, விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், இன்போசிஸ், ONGC பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.

இன்போசிஸ் = -5
விப்ரோ = +2
TISCO = +2
ONGC = -3
உயர்வு = +4
சரிவு = -8
குறியீட்டின் நிலை = 4 புள்ளிகள் சரிவு

இந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும், சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் Speculators மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது, பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது.

இன்போசிஸ் = -10
விப்ரோ = -6
TISCO = -4
ONGC = -8
உயர்வு = +0
சரிவு = -28
குறியீட்டின் நிலை = 28 புள்ளிகள் சரிவு

இதனை மிக எளிதாக எழுதி விட்டாலும், இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும், இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.

Leia Mais…

கரடியாட்டம்

கடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது. செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் BSE மற்றும் NSE குறியீடுகள் முறையே 58, 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது. சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.

இன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து BSE 66 புள்ளிகள் சரிவுடன் 5,672 லும், NSE 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1,790 லும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8% சதவீதம் அதிகம். ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது (25 ரூபாய் வீழ்ச்சி).

இது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ், விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன

பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கையும் கடுமையான சரிவையே சந்தித்தது.

இன்று அறிக்கை தாக்கல் செய்து மிகுதியான லாபம் அடைந்த பங்கு குஜராத் அம்புஜா சிமெண்ட்.

நேற்று காளை, இன்று கரடி, நாளை ??

Leia Mais…
Monday, October 18, 2004

Speculation

நான் முன்பு எழுதிய "ஒரு நாள் வர்த்தகத்தின்" தொடர்ச்சியாக இதனைப் படியுங்கள்.

Day trading ஒரு ரிஸ்க்கான வேலை. அன்றைக்கு லாபகரமாக இருக்கின்ற பங்குகளை வாங்கிக் கூட நஷ்டம் அடைய முடியும். சரிந்து கொண்டிருக்கிற பங்குகளை வாங்கிக் கூட லாபம் பார்க்க முடியும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் அந்தப் பங்குகளை விற்க தொடங்க, விலை சரிந்து நாம் நஷ்டம் அடைவோம். இதில் நாம் கடைப் பிடிக்கும் எந்த ஒரு உத்தியும் நிரந்தரமாக பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நாளில் சந்தை நிலவரத்தைப் பொருத்துத் தான் நமது லாபமும் நஷ்டமும். சில நிறுவனங்கள் இதற்கான டிபஸ் தருகின்றன. ஆனால் இவற்றின் வெற்றி சதவீதம் 50% மட்டுமே. சில நாட்களில் அவர்கள் சொல்லும் அத்தனை உத்திகளும் நஷ்டத்தில் முடிவடைந்திருக்கின்றன.

பல நிறுவனங்கள் இதற்கான மென்பொருள்களை தருகின்றன. sharekhan.com, 5paisa.com, indiabulls.com, kotakstreet.com போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதில் சில நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கான தரகு தொகையை முன்கூட்டியே வசூலித்து விடுகின்றனர். நாம் அந்த தரகுத் தொகைக்கு கட்டாயமாக வர்த்தகம் செய்தாக வேண்டும். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை நமக்கு அற்பமாக தெரியும். சந்தை சரிவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் அந்தப் பக்கம் செல்ல மாட்டோம். தரகுத் தொகை பறிபோய் விடும்.

Day trading நம்மை ஈர்ப்பதற்கான ஒரே காரணம், அதிக முதலீடு இல்லாமல், ஒரு குட்டி வியபாரத்தை வீட்டில் இருந்து கொண்டே சொகுசாக பார்க்கலாம் என்பது தான். ஆனால் இதில் சரிவும் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரம் லாபம் பார்த்த தொகையை விட அதிகமாக ஒரே நாளில் காணாமல் போனதும் உண்டு. மிகவும் டென்ஷனான வேலை இது. ஒரு நாள் முழுவதும் இதற்கென ஒதுக்க கூடிய சூழ்நிலை இருந்தால் நல்லது. அலுவலகத்தில் இருந்து கொண்டே இதில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. என்றாவது ஒரு நாள் நம்மை கவிழ்த்து விடும்.

பத்தாயிரம் முதலீட்டிற்கு எழுபதாயிரம் பங்குகள் வாங்கலாம் என்பது தான் நம்மை ஈர்க்கும் கவர்ச்சி வாசகம். ஆனால் நீண்ட நாள் முதலீட்டிற்கு கூட இப்பொழுது இது போன்ற வசதிகளை தரகு நிறுவனங்கள் தருகின்றன. நம்மிடம் இருக்கும் பணத்தை விட இரு மடங்கு அதிகமாக பங்குகளை வாங்கலாம். அந்த தொகைக்கான வட்டியை வசூலித்து கொள்வார்கள். இது கடன் வாங்குவது போலத் தான் என்றாலும், நல்ல நிறுவனங்களின் பங்குகள் தரும் லாபத்தை கணக்கில் எடுத்து கொள்ளும் பொழுது, வட்டி ஒன்றும் பெரிய தொகை இல்லை.

Day Trading அல்லது Speculation க்கும், பங்குகளில் முதலீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. Speculation னில் அதிக ரிஸ்க் இருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதில் அது குறைவு.


Leia Mais…

சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரம்

துவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம், இறுதியில் சரிவடைந்தது. அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற்பனையால் BSE 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும், NSE 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது.

மென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது. பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது. ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது.

இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் HDFC ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது. லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் - ICICI வங்கி, டாபர், BHEL.

இன்றைய வர்த்தகம் முழுமையாக கரடிகளின் ஆளுமையிலேயே இருந்தது.

Leia Mais…
Sunday, October 17, 2004

காளைகளின் தகவல்கள்

இந்த வார காளைகளின் தகவல்கள்

ஓவ்வொரு வாரமும், இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும், வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது, முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது. "Technical Charts"ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும். சில நேரங்களில் பொய்த்துப் போகும். ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால், ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் ?!.

இதோ நான் திரட்டிய தகவல்கள்

மென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் (Profit Booking) இதன் விலையில் சரிவு ஏற்பட்டது. மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும்.

கடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது. உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும், சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும். இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் (Hindalco, SAIL, NALCO, TISCO) சரிவடைந்தன. இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும்.

தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும். ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

ONGC, ரிலயன்ஸ் ஆகியப் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. இந்த வாரமும் இவை தொடரக் கூடும்.

வரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.

வெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா, கரடிகளின் பிடியிலேயே தொடருமா ?

ஆவலுடன் காத்திருக்கிறேன்

Leia Mais…
Friday, October 15, 2004

ஒரே நாள் வர்த்தகம்

இன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் "Intra Day Trading" பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன். இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நல்லா பணம் பார்க்கலாம். நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும்.

அதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும். நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது. லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க.

அது என்ன "Intra Day/Margin Trading".

இன்றே பங்குகளை வாங்கி, விற்று விட வேண்டும்.

நம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க. அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம். இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு Exposure தருகின்றன.

சரி.. மறுபடியும் ஒரு கணக்கு

நேற்று இன்போசிஸ் பங்கு 100 ரூபாய் வரை விலை ஏறியது.

பங்குத் தரகு, பங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது. பங்குத் தரகு, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம். தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு. சில நிறுவனங்கள், அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர்.

தோராயமாக 15 பைசா (பங்குத் தரகு + பங்குப்பரிவர்த்தனை) என்று வைத்து கொள்வோம்.

வாங்கும் விலை
40 x 1740 = 69600
தரகு = 69600 x .0015 = 104.40
மொத்த வாங்கும் விலை = 69,704.40

விற்கும் விலை 1800 (லாபம் போது சாமி என்று இந்த விலைக்கு விற்றிருந்தால்)

விற்கும் விலை
40x 1800 = 72,000
தரகு = 72,000 x .0015 = 108
மொத்த விற்கும் விலை = 72,108.00

லாபம் = 2187.60

பத்தாயிரம் முதலீடுக்கு கிடைக்கும் லாபம் 2187.60

சரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ? ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும். அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம்.

சரியும் பங்குகளில் கூட லாபம் பார்க்க முடியும். எப்படி ?

பங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும். இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் fluctuations ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம்.

இந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள Real time charts மூலம் பார்க்கலாம். அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

nseindia வில் உள்ள வரைப் படத்திற்கான சுட்டி

இந்த வர்த்தகத்தில் உள்ள தொல்லைகள்

கணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம். லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம்

சந்தை நிலவரத்தை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்

நாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும்.

இந்த வர்த்தகத்திற்கு நம்மிடம் இருக்கும் மிகுதியான பணத்தை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

நம்முடைய அவசர தேவைகளுக்கான பணத்தை இதில் கொண்டு வரவே கூடாது

Leia Mais…
Thursday, October 14, 2004

மென்பொருள் ஆளுமை

மென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது. மேலும், கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு, அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி, இறுதியில் BSE 36 புள்ளிகளும், NSE 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது. விப்ரோ, சத்யம், பாட்னி, HCL போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன. இன்போசிஸ் 1800 - 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன். ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ ?

சத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே, இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ ?

பெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் BPCL போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் - HINDALCO, NALCO, SAIL, TISCO இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன.

ஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும்.


Leia Mais…
Wednesday, October 13, 2004

அறிக்கைகளும் முதலீடும்

இன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. TCS மற்றும் Hughes நிறுவனங்களில், TCS அறிக்கை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. அதனுடைய நிகர லாபம் 14.1% அதிகரித்து 576.40 கோடி லாபத்தை இந்த காலாண்டில் எட்டியுள்ளது. ஆனால் Hughes நிறுவனத்தின் லாபமோ 3.64% மட்டுமே அதிகரித்துள்ளது.

இன்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளைய வர்த்தகத்தில் TCSன் பங்குகள் உயரக் கூடும். Hughes பங்குகள் சரியக்கூடும்.

பத்ரி பின்னுட்டத்தில் தெரிவித்து இருந்தது போல அறிக்கைகளின் ஏற்றத்தாழ்வுகளால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை (பெரிய இழுப்புகளை சந்தித்து இருந்தாலொழிய). ஆனால் அந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படும். நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த அறிக்கைகள் சில செய்திகளை தெரிவிக்கும்.

இன்போசிஸ் பங்குகள் இப்பொழுது நல்ல லாபகரமான ஒரு முதலீடாக இருக்குமென பல பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு முதலீடாக இருக்கும். இதன் விலை 1800 - 1850க்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.தற்பொழுது இதன் விலை - 1711. மூன்றாம் காலாண்டில் தன்னுடைய வருவாய் ரூ1,869 கோடி முதல் ரூ1,882 கோடி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் (இது கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் பொழுது 50% அதிகம்) அதன் பங்கு விலையில் ஏற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.

அதைப் போல TCS பங்குகளும் நல்ல லாபகரமான முதலீடாக இருக்கும்.

எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே offshoring மூலமாக நல்ல லாபம் அடைந்துள்ளனர். இவர்கள் பிற்காலத்தில் சந்திக்க கூடிய சவால் - சில பெரிய அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக தங்கள் கிளைகளை இங்கு துவக்க ஆரம்பித்துள்ளனர். Goldmansachs, Morgan Stanley போன்ற நிறுவனங்கள் இப்பொழுது தங்களுடைய மென்பொருள் நிறுவனங்களை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்கின்றனர். அது வெற்றியடையும் பட்சத்தில் பல நிறுவனங்களும் இதையே பின்பற்றக்கூடும். இது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும்.

இது உடனடியாக நடக்க கூடிய ஒன்றல்ல என்பது இந்த நிறுவனங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

Leia Mais…
Tuesday, October 12, 2004

லாபம் போதும் சாமி...

இரு நாட்கள் - இரு வேறு அறிக்கைகள். ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது. மற்றொன்று நம்பிக்கையை அளித்தது. ஆனாலும் சந்தை இரு நாட்களும் கரடிகளின் ஆணைக்குட்பட்டு சரியத் தொடங்கியுள்ளது.

திங்களன்று எம்பசிஸ் Mphasis BFL நிறுவனம் அளித்த அறிக்கை பங்குச் சந்தையில் மென்பொருள் பங்குகளை சரிய வைத்தது. இந்த காலாண்டில் Mphasis BFLக்கு வருவாய் குறைந்துள்ளதால் (இழுப்பு அல்ல) மொத்த மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்குமோ என்ற அச்சத்தில், இன்போசிஸ் உட்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன. வருவாய் இழுப்பு அந்நியச்செலவாணியாலேயே எற்பட்டதாக Mphasis BFL நிறுவனம் கூறியது. மற்றபடி தங்கள் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. சிறு பொறி கிடைத்தால் பற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை அதன் வருவாய் இழுப்பையே அதிகம் கவனித்தது.

இன்று காலை மென்பொருள் பங்குகளின் வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கையைப் பொருத்தே அமையும் என்பதால் ஒரு சிறு பரபரப்பு என்னுள் எழுந்தது. வேறு என்ன. இன்போசிஸ் நல்ல அறிக்கையை தரும் என்ற எண்ணத்தில் நானும் சில இன்போசிஸ் பங்குகளை வாங்கி வைத்திருந்தேன்.

Mphasis BFL, Infosys ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஒரே அளவில் வைத்து பார்க்க இயலாது. இன்போசிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம். பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. அந்த நம்பிக்கை இருந்தாலும் போட்ட பணம் என்னகுமோ என்ற கவலை ஒரு புறம்.

ஆனால் அனைவரின் கவலையையும் போக்கி இன்போசிஸ் நிறுவனம் ஒரு சிறந்த அறிக்கையை கொடுத்தது.இன்போசிஸ்ஸின் வருவாய் இந்த காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் சுமார் 32 புதிய Clients இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர். மொத்த Clients எண்ணிக்கை 431. Offshore வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சுமார் 5000 பேர் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் காலாண்டில் மேலும் 4000 பேர் சேர்க்கப்படுவர்.

Mphasis BFL போன்ற நிறுவனத்திற்கும், இன்போசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை ஒரு விஷயம் படம்பிடித்து காட்டியது. Mphasis BFL நிறுவனம் அந்நியச்செலவாணி விஷயத்தில் நஷ்டம் கண்டது. ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ Forward contracts மூலம் தனது அந்நியச்செலவாணியை திறம்பட நிர்வாகித்துள்ளது (சரி..அது என்ன Forwards. FX Forwards எனப்படுவது அந்நியச்செலவாணியில் தினமும் நிகழும் மாற்றத்தில் இருந்து ஒரு நிர்வாகம் தன்னை தற்காத்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு உத்தி. உதாரணமாக இம் மாதம் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 45.80. ஆனால் தினமும் நிகழும் பல்வேறு மாற்றத்தினால் அது 45க்கும் வரலாம், 48க்கும் செல்லலம். அந்நியச்செலவாணி அதிகமாக பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தன்னை இத்தகைய நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்து கொள்ள FX Forwards எனப்படும் ஒரு ஒப்பந்தத்தை வங்கிகளிடம் செய்து கொள்ளும். அதாவது ஒரு டாலரை ரூ 46.50க்கு ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம். பறிமாற்றம் செய்யும் நாளில் அது 45 ஆக இருந்தாலும், 48ஐ எட்டினாலும் 46.50க்குத் தான் அந்த பறிமாற்றம் நிகழும். இது ஒரு சிக்கலான கணக்கு). ஆனால் Mphasis BFL நிறுவனம் தன்னை இந்த விதத்தில் தற்காத்து கொள்ளாததால் இந்த காலாண்டில் நிகழ்ந்த நிலையற்ற பணப் பறிமாற்றத்தில் இழுப்பை எதிர்கொண்டது.

சரி...பங்குச் சந்தை என்ன ஆனது. இன்போசிஸ்ஸின் பங்குகள் ஆரம்பத்திலேயே சுமார் 40 ரூபாய் எகிறியது.பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் பங்குகள் அதிக விலையை எட்டியதால் லாபம் அடையும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இன்போசிஸ் பங்குகள் கூட சற்று சரிவடைந்து ஓரளவிற்கு லாபமுடன் (25 ரூபாய் அதிகமாக) இருந்தது.

BSE 41 புள்ளிகள் சரிவடைந்து 5,677 என்ற அளவிலும், NSE 24 புள்ளிகள் சரிவடைந்து 1788 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச் சந்தை எப்பொழுதுமே தொடர்ந்து லாபகரமாக சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் லாபம் போதும் சாமி என எல்லோரும் பங்குகளை விற்ப்பார்கள். அது தான் கடந்த இரு தினங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மணிசங்கர் அய்யர் பிரதமரை சந்தித்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி விவாதிக்கப் போகிறார் ? விலை ஏறினால் எண்ணெய் விற்ப்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற பங்குகளுக்கு குஷியாக இருக்கும். நமக்கு ?? பெட்ரோல் பங்க் பக்கம் போகும் பொழுது வயிறு எரியும்.

பின்னூட்டம்

Leia Mais…
Sunday, October 10, 2004

காளைகளின் தகவல்கள்

பங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம். கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாதாளம் தான்.

கடந்த வாரம், BSE பங்குக் குறியீடு 82 புள்ளிகளும், NSE 42 புள்ளிகளும் உயர்ந்தது.

இந்த வாரம் எப்படி இருக்கும் ?

வரும் வாரம் பல நிறுவனங்கள் தங்களது இரண்டாம் காலாண்டு அறிக்கைகளை (Q2 Results) வெளியிடும். அந்த அறிக்கையைப் பொறுத்துத் தான் பங்குச் சந்தையின் போக்கு அமையும். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் முதலில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த காலாண்டில் இன்போசிஸின் சிறப்பான செயல்பாடு இந்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அறிக்கையைப் பொருத்து இன்போசிஸ் பங்குகள் விலையில் மாற்றம் தெரியும்.

சரி எந்தப் பங்குகளை நாம் வாங்கலாம் ?

சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பெரியக் காளைகள் தெரிவிக்கும் தகவல்களைத் திரட்டி தருகிறேன்.

இந்த வார "காளைகளின் தகவல்கள்".

இந்த வாரம் பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை அறிவிப்பதால் அந்தத் துறைப் பங்குகளை வாங்கலாம். அறிக்கைகளின் நிலவரத்தைப் பொருத்து அந்தப் பங்குகளின் விலை ஏறக்கூடும்.

கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகமாக இருப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளான ONGC போன்றவை நல்ல லாபகரமாக் இருக்கும். ஆனால் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதில்லை என்ற முடிவில் இருந்து மாறினால் இந்த நிறுவனப் பங்குகள் முன்னேறும்.

மற்றபடி ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளும், வங்கிப் பங்குகளும் விலை ஏறக்கூடிய சாத்தியக் குறுகள் இருப்பதாக காளைகள் சொல்கின்றன.

ரிலயன்சைப் பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று சொல்கின்றனர்.

இந்த வாரம் பங்குச் சந்தை காளைகளின் ஆதிக்கத்தில் இருக்குமா ? கரடிகளின் ஆணைக்கு உட்படுமா ?

காளை, கரடி இந்த இரண்டு சந்தையிலுமே சில பங்குகள் நல்ல லாபகரமாகத் தான் இருக்கும். நான் திரட்டிய இந்த பங்குகள் அந்த வரிசையில் இருந்தால் நல்லா இருக்கும் ? பார்ப்போம் ?

பின்னூட்டம்

Leia Mais…
Saturday, October 09, 2004

பணப் பெருக்கம்

தீபாவளிக்கு ஒரு உடை வாங்க வேண்டும் என்றதும் எதையெல்லாம் யோசிப்போம்

எவ்வளவு விலை ?
துணி எப்படி உள்ளது ?
விலைக்கு ஏற்ற துணி தானா ?
துவைத்தால் சுருங்கிப் போகுமா ?
நிறம் மங்கிப் போகுமா ?
நம்முடைய நிறத்திற்கு ஏற்றதாக இருக்குமா ?

இன்னும் யோசித்து, கடையிலுள்ள உடைகளை அலசி ஆராய்ந்து, கடை சிப்பந்தியை கடுப்பேற்றி, எல்லா வகையிலும் ஏற்றதாக சில துணிகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு துணியை இறுதியில் தேர்ந்தெடுப்பதற்குள் தீபாவளி நெரிசலில் வேர்த்து விடுகிறது.

ஆனால் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கும் பொழுது இந்த அளவுக்கு நாம் யோசிப்பதே இல்லை. பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு விடுகிறோம். நாமாக யோசித்து வாங்கினாலும் விலைக் குறைந்த பங்குகளாக நிறைய வாங்கி அது விலை ஏறும் பொழுது நிறைய பணம் பார்க்கலாம் என்று பேராசைப் படுகிறோம்.

உண்மையில் நடப்பது என்ன ?

விலைக் குறைந்த பங்குகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது மிகச் சிறிய நிறுவனங்களாக இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறுவதற்கான சாத்தியக் குறுகள் இல்லை. பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலேயே இருக்கும். இல்லாவிட்டால் சரியும். இதனால் போட்ட முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பணம் காணாமல் கூட போகும்.

அதற்காக குறைந்த விலைப் பங்குகள் எல்லவற்றையும் விட்டு விலக வேண்டும் என்பது அர்த்தமாகாது. குறைந்த விலையோ அதிக விலையோ நல்ல நிறுவன பங்குகளாகத் தான் வாங்க வேண்டும்.எப்படி அந்த நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு கொள்வது ?

ஒரு நிறுவன பங்குகள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.தற்பொழுது பங்குச் சந்தையின் நிலை என்ன ?குறுகிய கால முதலீடா இல்லை நீண்ட நாள் முதலீடா ?நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் காளைச் சந்தையில் எப்படி இருந்தது, கரடிச் சந்தையில் எவ்வளவு சரிந்தது.அதனுடைய தற்பொழுதய விலை (Valuations) சரியான அளவில் உள்ளதா இல்லை அதிக விலையிலோ, குறைந்த விலையிலோ இருக்கிறதா ?அந்த நிறுவனத்தின் எதிர்கால் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?

என்று மண்டையை உடைத்து ஆராய வேண்டும். செலவழிக்க கூடிய துணிகளுக்கே யோசிக்கும் பொழுது, முதலீடு செய்யும் பணத்திற்கு யோசிப்பதில் பாதகம் இல்லை.

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் நுழைவது மிகவும் அவசியம். பங்குச் சந்தை குறியீடு சரியும் பொழுது நாம் அஞ்சி ஓடி விடுகிறோம் ? விலை அதிகரிக்கும் பொழுது நுழைந்து அதிக விலையில் பங்குகளை வாங்கி நஷ்டப் படுகிறோம். மாறாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலை இருக்கும் பொழுது விற்க வேண்டும்.

சரி மறுபடியும் ஒரு சின்ன கணக்குஇந்த முறை விலை குறைந்த ஒரு பங்கு பற்றியதுSAIL (Steel Authority of India) -

சென்ற மாதம் இந்த நிறுவன பங்குகளின் விலை - ரூ39 என்ற அளவில் இருந்தது.

100 பங்குகளை சென்ற மாதம் வாங்கி இருந்தால்
100 x 39 - 3900

இன்று அதன் விலை - ரூ50
100 x 50 - 5000

இந்த லாபத்தை நாம் பெற்றிட என்ன செய்திருக்க வேண்டும் ?

தினசரிகளில் "Business" என்ற ஒரு பிரிவு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Leia Mais…
Friday, October 08, 2004

காளை..கரடி..பன்றி..

பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market - காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய்? போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க, அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு, மிரட்டின (Merrill Lynch நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் சின்னம் காளை) என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. Merrill Lynch சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள்? தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

மறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க, அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து, அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை. சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ. விஷயத்தை சொல்லுடா! என்று மனதுள் நினைத்து கொண்டே (பின்ன? வெளிய சொல்ல முடியுமா?) பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.

அப்பொழுது தெரிந்துகொண்ட விபரங்கள்தான் பங்குச் சந்தை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.

காளை, கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து, காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.

அப்படியானால், பன்றி என்பது?

“Bulls make money,
bears make money,
but pigs just get slaughtered!”

பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.

என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் ?

பின்னூட்டம்

Leia Mais…
Thursday, October 07, 2004

இன்றைய சூடான பங்கு

இன்று NTPC (National Thermal Power Corporation) நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது (Initial Public Offer - இதன் சரியான தமிழாக்கம் தெரியவில்லை. ஆனால் "ஆரம்ப பொது விலைக்குறிப்பீடு" அந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும். பங்குச் சந்தையின் பல சொற்களை தமிழ்ப் படுத்தலாமா என்று ஒரு யோசனை. ஏற்கனவே அத்தகைய சொற்கள் இருந்தால் சொல்லுங்களேன். பத்ரி கூறிய "பரஸ்பர நிதி" போல).

அது என்ன IPO ?. ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகள் வெளியிடும் பொழுது ஒரு விலை நிர்ணயித்து, தனது பங்குகளை பொது விற்பனைக்கு வழங்கும். இது முதன்மைச் சந்தை எனப்படுகிறது. இதில் விற்ற பின் தான் இரண்டாம் சந்தையான பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் (Listing).

சரி...விஷயத்திற்கு வருவோம். NTPC நிறுவன பங்குகள் இன்று முதல் பொது விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்கலாமா வேண்டாமா?

இதைப் பற்றிய ஒரு சின்ன ஆய்வு

மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான NTPC நாட்டின் மின் உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளது. அது மட்டுமின்றி தற்பொழுது நீர்மின் நிலையங்களை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது. இது இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தினால் இந்த நிறுவனத்தின் வருவாய் தேய்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இவர்களின் இலவச மின்சார அறிவிப்புகள் இந்த நிறுவனத்தின் லாபத்தை கடுமையாக பாதிக்கும். அதைப் போல இந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநில மின்வாரியங்கள் அதற்கான பணத்தை செலுத்த மறந்து விடுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனை இப்பொழுது ஒரளவிற்கு தீர்க்கப்பட்டு விட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான பாக்கி பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 85கோடி பங்குகள் 52 முதல் 62 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பங்குகள் கிடைக்க கூடிய சாத்தியக் குறுகள் குறைவு என்பதால் மும்மை கள்ளச் சந்தையில் 12 ரூபாய் அதிகம் வைத்து விற்கபடுகிறதாம். பங்கு விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனைக்கு உள்ள பங்குகளை விட இரண்டு மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாம்.

சரி போகட்டும்... நாம் உரியமுறையில் விண்ணப்பிப்போம். கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் குடி முழ்க போவதில்லை.

இன்று பங்குச் சந்தையின் நிலை என்ன ?. B.S.E குறியீடு 70 புள்ளிகள் முன்னேறி 5784 க்கும், N.S.E. 20 புள்ளிகள் உயர்ந்து 1815 க்கும் வந்துள்ளது. இந்த அளவில் இருந்து 6000 நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகிறது. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குங்கள். சற்று கவனமாக தெரிவு செய்யுங்கள்.

Leia Mais…
Wednesday, October 06, 2004

ஏற்றங்களும், இறக்கங்களும்

வலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும், இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி, துளசி, கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி. இத்தகைய வாழ்த்துக்கள் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறது.

சூப்பர் ஸ்டார் "அருணாச்சலம்" போன்றவர்களுக்குத் தான் பணத்தை செலவழிப்பது கஷ்டமான ஒன்று. ஆனால் நம்மைப் போன்ற அற்ப உயிர்களுக்கு அது மிக சுலபம். மாத சம்பளம் மாத நடுவிலேயே காணாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போடுவதும், திடீர் என வரும் செலவுகளால் மண்டையை உடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சம்பாதிப்பதை கட்டிக் காப்பது மிகவும் கடினம். அதனால் தான் நம்மவர்கள் வங்கிகளிலும், அரசாங்க சிறுசேமிப்புகளிலும் பாதுகாப்பாக பணத்தை சேர்த்து விடுகின்றனர். அல்லது அதிக "வட்டி" ஆசையில் நிதி நிறுவனங்களில் கொடுத்து பின்னர் பனகல் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

வங்கிகளை விட அதிக லாபம் தரக்கூடிய, அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு செயல் படுகிற பங்குச் சந்தையை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை ?

ஒரு சின்ன கணக்கு போடுவோம்ரூ5000க்கு, வங்கிகளின் வைப்பு நிதியில், ஒரு மாத வட்டி முப்பது ரூபாய்க்கும் குறைவாகத் தான் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளை உதாரணமாக எடுத்து கொள்வோம்

கடந்த வாரம் இந்த பங்குகளின் விலை - ரூ580 என்ற அளவில் இருந்தது. இன்று அதன் விலை – 630 க்கு மேல்.

9 பங்குகளை கடந்த வாரம் வாங்கி இந்த வாரம் விற்றிருந்தால்வாங்கும் விலை - 9x580 = 5220விற்கும் விலை - 9x630 = 5670

பங்குத் தரகு, புதியதாக ஐயா சிதம்பரம் அவர்களின் புண்ணியத்தால் வந்துள்ள பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை கழித்து நிகர லாபமாக வரும் தொகை ரூ425க்கும் மேல்.

இது வங்கிகளின் வைப்பு நிதியைப் போல ஒரே நிலையாக இல்லாமல் ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும்இருக்கும். ஆனால் வங்கிகளை விட அதிக அளவில் லாபம் தரும்.

பங்குச் சந்தையின் இந்த ஏற்ற இறக்கம் தான் பலரின் அச்சத்திற்கு காரணம். இது பங்குச் சந்தையின் இயல்பான தன்மை (Speculation). தக்காளி, வெங்காய விலைப் போலத் தான். ஆனால் நாம் தேர்வு செய்யும் பங்குகளைப் பொருத்து தான் நம்முடைய லாபம் அமையும். நல்ல நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிய வாய்ப்பு இல்லை. அதைப் போல குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீடு இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

சரி...இப்பொழுது பங்குச் சந்தை எப்படி உள்ளது ? இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது. பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்க தொடங்கியதில் பங்குகளின் விலையில் நேற்று சரிவு ஏற்ப்பட்டது. ரிலயன்ஸ், இன்போசிஸ், சத்யம் பங்குகள் சரிவடைந்தன. நேற்று வரை முன்னேறிக் கொண்டிருந்த விப்ரோ இன்று சற்று சரிந்துள்ளது

எங்கே கிளம்பிட்டீங்க பங்குகள் வாங்கவா ? கொஞ்சம் இருங்க...பங்குச் சந்தையில் புதியதாக பங்குகளை வாங்க இது உகந்த நேரம் இல்லை. பங்குச் சந்தையை நம் கவனத்தில் இருந்து நகர்த்தாமல் காத்திருப்போம்.

பின்னூட்டம்

Leia Mais…
Tuesday, October 05, 2004

பங்குச்சந்தை ஒளிர்கிறதா ?

இன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 91 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 31 புள்ளிகளும் உயர்ந்தது. தொடக்கத்திலேயே BSE குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததால் மேலும், மேலும் ஏறிக் கொண்டே இருந்தது.

மாருதி, ரிலயன்ஸ், விப்ரோ, இன்போசிஸ், சத்யம், ONGC பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வது ஒரு நல்ல அறிகுறி.

சில நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு அறிக்கைகளை வெளியிடும். அது பங்குச் சந்தைக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இடையில் அவ்வப்பொழுது சில டெக்னிக்கல் திருத்தங்கள் (Technical corrections) நடக்க கூடும். (அந்த திருத்தம் இந்த வாரமே நடக்க கூடுமோ?) ஆனாலும் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பங்குச் சந்தை ஆரோக்கியமான இடம் தான்.

கொஞ்சம் யோசித்து நல்ல பங்குகளாக வாங்கிப் போடுங்கள். லாபம் வந்தால் என்னை வாழ்த்துங்கள். (சரிந்தால் ? … ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்).

Leia Mais…
Monday, October 04, 2004

கச்சா எண்ணெய் எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஒரு பேரல் (பீப்பாய் ?) $50 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப் படுத்தும் என்பதால் பங்குச் சந்தையை பாதிக்கும்.

கடந்த சில வாரங்களாகவே எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் ஏறிக் கொண்டே இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தான் இந்த முதலீடுக்கு முக்கிய காரணம். பண வீக்கம் 8%க்கு கீழ் இருப்பதும், வளர்ச்சி 7%க்கு மேல் இருப்பதும் முதலீட்டாளர்களூக்கு நம்பிக்கை ஊட்டுகிறது

தற்பொழுது மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 5,675 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 1,775 என்ற உயர் நிலையிலும் இருக்கிறது. கடந்த வாரம் பல துறைகளை சார்ந்த பங்குகள் லாபகரமாக இருந்தன. அதில் குறிப்பிட தகுந்தது கச்சா எண்ணெய் நிறுவனமான - ONGC பங்குகள். கடந்த வாரம் மட்டும் சுமார் 40 ரூபாய்க்கு இந்த பங்குகளின் விலை ஏறியது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்த நிறுவனத்திற்கு லாபம் தரும் எனபதால் இந்த நிலை.

அதைப் போல மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், சத்யம், விப்ரோ பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. இந்த பங்குகள் சரிந்து கடந்த வார இறுதியில் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த துறைக்கும் கச்சா எண்ணெய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடந்த வாரமே ரூ300 ஐ தொட்டு விடும் என எலலோரும் கூறிய டாடா ஸ்டீல் (TISCO) பங்குகள் ரூ280 - 295 க்கும் இடையில் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது.

பங்கு குறியீடுகள் உயர்ந்து காணப்படுவதால், மேலும் உயரக் கூடுமா, சரியக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது. பங்குகளின் விலை (Valuations) சற்று அதிக அளவில் தான் உள்ளது. பங்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இல்லாததால், சற்று எச்சரிக்கையாய், கச்சா எண்ணெய் விலை மீது ஒரு கண் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.

நாளை தொடங்கும் வாரம் ஒரு முக்கியமான ஒன்று. நம்பிக்கையுடன் காத்திருப்போம்

Leia Mais…
Saturday, October 02, 2004

எனது முதல் பதிவு

முதலில் என்ன எழுதலாம் என யோசித்த பொழுது, எனது பங்குச் சந்தை அனுபவத்தை எழுதலாம் என்று தோன்றியது.

"நடக்கும் என்பார், நடக்காது...நடக்காது என்பார், நடந்து விடும்"

இது எதற்குப் பொருந்துமோ இல்லையோ...பங்குச் சந்தைக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு நான்கு வருடம், ஒரு பெரிய அமெரிக்க stock broking நிறுவனத்தின் செயலிகளை கட்டி மேய்த்திருப்பதன் வாயிலாக பங்குச் சந்தைப் பற்றி அறிந்திருக்கிறேன். அந்த இருமாப்பில் களத்தில் குதித்த பொழுது தான் அது ஒரு புரியாத புதிர் என்று புரிந்தது. அது எனக்கு மட்டும் புதிர் இல்லை, இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும் கூட அப்படித்தான் போலும்.நான் கணக்கு வைத்திருக்கும் பங்கு நிறுவனம், இந்த பங்குகளை இந்த விலைக்கு வாங்கி இந்த விலைக்கு விற்கலாம் என டிப்ஸ் கொடுப்பார்கள், ஒரு நாள் சில ஆயிரங்கள் கிடைத்த சந்தோசத்தில், அடுத்த நாள் அவர்களின் டிப்சை அப்படியே பின் பற்றினால் கையை கடிக்கும்.விலை ஏறியது போதும் என்று பங்குகளை விற்ற அடுத்த நிமிடம், விலை இன்னும் சில ரூபாய்கள் எகிறி கடுப்பேற்றும். குறைந்த விலைக்கு வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் வாங்கிய பங்குகள் வாங்கியவுடன் இன்னும் விலை குறைந்து எப்பொழுது ஏறும் என டென்ஷனுடன் கணினி திரையை பார்த்து வெறுத்து போகும்.

Intra day முறையில் பங்குகளை வாங்கி விற்பது போன்ற டென்ஷனான வேலை வேறு எதுவும் இல்லை.சில நொடிகளில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இழப்பு ஏற்பட்டால் சில மணித்துளிகளில் சில ஆயிரங்கள் காணாமல் போகும்.வெளிப்புறத்தில் சூதாட்டம் போல தோன்றினாலும் அதன் நுட்பம் அறிந்து, எற்படும் இழப்புகளை சரிக்கட்டி பொறுமையாக மதி நுட்பத்துடன் முதலீடு செய்தால் இது பணத்தை அறுவடை செய்யும் இடம் தான்.

அடுத்தவர்கள் டிப்சை மட்டும் நம்பாமல், தினசரி செய்திகளையும் அது பங்குச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளையும் கணிக்க வேண்டும். அந்த நாளில் குறிப்பிட்ட துறைகளையும், பங்குகளையும் நமது இலக்காக கொள்ள வேண்டும். பங்குகளின் ஏறு முகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அது சரிந்தால் எந்த அளவுக்கு சரியும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்(Stop Loss).சரியான நேரத்தில் பங்குச் சந்தையில் நுழைவதும், விற்பதும் ஒரு கலை தான். அது எனக்கு இது வரை கைகூட வில்லை. நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்களேன் ?


சரி...எனக்கு நேரமாகி விட்டது. இன்று ஒரு முக்கிய வேலை இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பத்ரி தோன்றுகிறார்.கண்டு மகிழப் போகிறேன். காந்தி ஜெயந்தியன்று என்ன ஒரு பொருத்தமான படம். பத்ரி நாடுக்காக ஆற்றும் சேவைகளையும், தியாகங்களையும் காந்தி ஜெயந்தியன்று கண்டு புல்லரிக்கலாம்.ஒரு பொருத்தமான படத்தை இந்தத் திருநாளில் திரையிடும் சன் டிவிக்கு கோடி நமஸ்காரம்.

பின்னூட்டம்

Leia Mais…

வாங்க..வாங்க..

எனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும். இது எனது நெடுநாள் ஆசை. ஆனால் என்ன எழுதுவது, தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விகள் என்னை வில்லனாய் தடுத்து எழுத விடாமல் செய்தன. சரி, யோசித்தது போதும், பொங்கி எழுவோம் என முடிவு செய்து இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கி உள்ளேன்.

"யார் யாரோ வலைப்பதிவு ஆரம்பிச்சிடுரங்கப்பா" என்று நீங்கள் திட்டுவது காதில் விழுந்தாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன்.

படித்து விட்டு ஒரு வரி விமர்சனம் எழுதி போடுங்கள், சந்தோசமாய் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துவேன்.

பின்னூட்டம்

Leia Mais…