பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Friday, April 01, 2005

உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1

உலகின் பொது நாணயமாக (World's reserve currency) அமெரிக்க டாலர் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வாரம் ஹிந்து நாளிதழில் கூட இது பற்றிய ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது.

உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.

1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.

இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.

உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?

உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?

அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மை

உலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.

பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.

உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.

சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.

இந்த நிலை ஏற்படுமா ? அமெரிக்க டாலர் உலக நாணயாமாக இருக்கும் நாட்கள் எண்ணப்படுகிறதா ?

அடுத்தப் பதிவில் பார்ப்போம்

Leia Mais…