பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Tuesday, February 28, 2006

Budget 2006 - Short comment

உள்கட்டமைப்பிற்கு ஊக்குவிப்பு, நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சி, வரி விதிப்பில் மாறுதல், Populist அறிவிப்புகள் என ஒரு கூட்டுக்கலவையாக சிதம்பரம் இந்த ஆண்டின் பட்ஜெட்டினை அளித்திருக்கிறார்.

நல்ல பட்ஜெட், ஆனால் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை

Leia Mais…
Sunday, February 26, 2006

லாலு, சிதம்பரம், பட்ஜெட் மசாலா

அடுத்த பட்ஜெட் சீசன் தொடங்கி விட்டது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என்று பிப்ரவரி இறுதி வந்தாலே முதளிட்டாளர்கள் மத்தியிலும், வியபாரிகள் தொடங்கி பெரிய கார்ப்ரேட் நிறுவனம் வரை ஒரே பரபரப்பாக இருக்கும். பட்ஜெட் குறித்த அலசல்கள், நிதியமைச்சரின் திட்டங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, பங்குச்சந்தையில் அது ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகள் போன்றவை அலசப்படும். ஆனால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, எந்தளவிற்கு முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன என்பதை பற்றி யாராவது அலசுகிறார்களா என்பது தெரியவில்லை. நிதியமைச்சர் அறிவிக்கும் சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமலே காணாமல் போய் விடுகின்றன.

இந்தியாவின் பட்ஜெட் உலகின் பல நாடுகளில் இருக்கும் நிதி நிறுவனங்களால் கவனிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகப்படியான விளம்பரம் பட்ஜெட்டிற்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த அதிகப்படியான விளம்பரம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே போய் விட்டது. பட்ஜெட் குறித்து ஜோசியர்களிடம் கருத்து கேட்கிறார்களாம், என்னத்தச் சொல்ல

பட்ஜெட் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு எதிர்பார்ப்பு இயல்பாக என்னுள் எழுந்து விடும். இதற்கு இந்தியாவின் வணிக ஊடகங்களிலும், ஆங்கில ஊடகங்களிலும் கொடுக்கப்படும் விளம்பரமும் முக்கிய காரணம். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் இல்லாததால் இந்திய ஊடகங்களின் இந்த விளம்பரம் என்னை எட்டாததால், ஒரு சிறு ஆர்வம் மட்டுமே உள்ளது.

பட்ஜெட்டிற்கும் எனக்குமான அறிமுகம் சிறு வயதிலேயே தொடங்கி விட்டது என்று சொல்லலாம். பட்ஜெட் நெருங்கும் சமயத்தில் சில பொருட்களை என் அப்பா எங்களுடைய கடையில் அதிகமாக வாங்கி வைக்கத் தொடங்குவார். உதாரணமாக சிகரெட். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கும். பட்ஜெட் வரப் போவுது, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று எங்கள் கடைக்கு சப்ளை செய்யும் சப்ளையர்கள் சொல்வதை கடையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் நேரத்தில் கவனித்து இருக்கிறேன். எப்பொழுது பட்ஜெட் போடுவார்கள், அது பற்றி செய்திகளின் என்ன வாசிக்கிறார்கள், சிகரெட் விலை ஏறியிருக்கிறதா என்பதை கவனித்து ஓடிப்போய் அப்பாவிடம் சிகரெட் விலை ஏறியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இத்தகைய ஆர்வத்துடன் தான் பட்ஜெட் குறித்த செய்திகளை கவனிக்கத் தொடங்கினேன். பட்ஜெட் இரவு செய்திகளை நிச்சயமாக பார்த்து விடுவேன். மறுநாள் இந்துவில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து விடுவேன். பல விஷயங்கள் புரியாது. இருந்தாலும் ஒரு ஆர்வத்துடன் படிப்பேன். நாங்கள் முதன் முதலில் தொலைக்காட்சி பெட்டி வாங்கிய பொழுது பட்ஜெட்டிற்கு முன்பாக வாங்க வேண்டும் என்று கூறி என் அப்பா வாங்கியதும் ஞாபகத்தில் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகு நாங்கள் வாங்கிய அதே தொலைக்காட்சிப் பெட்டி கொஞ்சம் விலையேறியதையும் கவனித்து என் அப்பாவிடம் கூறி இருக்கிறேன்.

ஒரு விஷயத்தை கவனிக்கலாம். பட்ஜெட் என்பது விலையேற்றத்திற்கான ஒரு வருடந்திர ஏற்பாடு என்பதாகத் தான் பல காலங்களாக இருந்து வந்திருக்கிறது. புதிய வரி விதிப்புகள், பொருட்களின் விலையில் மாற்றம் என்பது தான் பட்ஜெட்களின் நியதியாக இருந்துள்ளது. சிறுக சிறுக உயர்த்துப்படும் வரியில் இருந்து மாற்றம் பெற்று பொருளாதாரத்தை மாற்றும் திட்டங்களின் வடிவமாக பட்ஜெட் மாறியது 1991க்குப் பிறகு தான். மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை கொண்டு வந்தப் பின்பு தான் பட்ஜெட் தயாரிக்கும் முறையில் பல மாறுதல்களும் ஏற்ப்பட்டன. இந்தியாவின் Dream பட்ஜெட்டாக சிதம்பரத்தின் பட்ஜெட்டை கூறும் அதே நேரத்தில் இந்தியாவின் மோசமான பட்ஜெட்களில் ஒன்றாக மது தண்டவதேயின் பட்ஜெட்டை சொல்வார்கள். அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்காக மிக அதிக அளவில் வரி விதிக்கப்பட்ட பட்ஜெட்டாக அது கூறப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பில் இன்று பல்வேறு நிர்பந்தங்களும், அரசியல் தொந்தரவுகளும், கூட்டணி நிர்ப்பந்தங்களும் எழவே செய்கின்றன. பட்ஜெட் என்பது ஒரு "populist" அறிவிப்பாக இருந்தாக வேண்டும். அதுவும் இன்று மைய அரசில் கூட்டாச்சி முறை வந்துள்ள நேரத்தில் பல துறைகள் பல்வேறு கூட்டணி கட்சிகளின் வசமுள்ள சூழ்நிலையில் தங்கள் மாநிலத்திற்கு ஓதுக்கீடுகளை பட்ஜெட்டில் கொண்டு வரவேண்டும் என்ற நிர்பந்தம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. இவர்கள் நிதியமைச்சர்களை நிர்பந்திக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் என்றால் பட்ஜெட்டில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென பொருளாதார வல்லுனர்களும், தொழில்துறையினரும் நிதியமைச்சரை மற்றொரு புறம் நிர்பந்திக்கின்றனர். இவை தவிர தன்னுடைய அரசாங்கம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்த வேண்டிய பிரதமர் மற்றும் ஆளும்கட்சியின் கொள்கைகள் இவற்றிடையே சிக்கித் தவித்து பட்ஜெட் இறுதியில் வெளிவரும் பொழுது ஒரு "கூட்டக்கலவையான மசாலாவாக" வந்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்தும் பட்ஜெட்டாக எல்லோரின் நோக்கங்களிலும் சிறிதளவாவது நிறைவேறினால் போதுமானது என்று நினைக்கும் நிலைக்கு இன்று பட்ஜெட் சென்று விட்டது.


கடந்த வாரம் தக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் சரக்கு கட்டணங்களில் உயர்வில்லாமலும், சிலவற்றில் வரி குறைக்கப்பட்டும் இருக்கும் அதே நேரத்தில் பயணிகள் கட்டணங்களிலும் உயர்வு இல்லை. தொழில் நிறுவனங்களுக்கும், பொதுஜனங்களுக்கும் சலுகை என்னும் பொழுது இது நல்ல பட்ஜெட் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தற்பொழுது சரக்குகள் நத்தை வேகத்தில் செல்லும் நிலையை மாற்ற அதிவேக சரக்கு போக்குவரத்தை துவங்க தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கப்போவதாக லாலு அறிவிக்கிறார். தனியார் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி. பொதுத்துறை நிறுவனங்களின் சில பிரிவுகளை தனியார் மயமாக்குவதை பொருளாதார சீர்திருத்தமாக அந் நிறுவனங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் சலுகை என்பதான லாலுவின் டிரேட் மார்க் populist அறிவிப்பு அவருக்கும் அவரைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்புறம் ரயில்வே நிலையங்களில் Internet cafe, ATM, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா என ஒரே கவர்ச்சிகரமான அறிவிப்புகள். இதனை ஒரு Balanced Budget என்று ஊடகங்கள் எழுதுகின்றன. ஆனால் இன்னும் எத்தனையோ நல்ல முயற்சிகளை எடுக்கலாம். ஆனாலும் எடுக்க முடியாத நிலையில் தான் இன்றைய அரசியல் சூழ்நிலை உள்ளது.

இனி இந்த சீசனின் உச்சகட்ட க்ளைமாக்ஸ் பொது பட்ஜெட் செவ்வாயன்று அரங்கேறும். ரயில்வே பட்ஜெட் ஒரு சின்ன மசாலா கலவை என்றால் இது பெரிய அளவிளான மசாலா கலவை. பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஒரு யாதார்த்தமான அணுகுமுறையை கையாள வேண்டுமென சிதம்பரம் கடந்த பட்ஜெட்டில் இடதுசாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இன்னும் அது வேண்டுகோளாகத் தான் இருக்கிறது. அவர்களுக்கும் யதார்த்தம் புரிந்ததாக தெரியவில்லை, அரசுக்கும் அதனை செயல்படுத்தி ஆட்சியை இழக்கும் தைரியம் இல்லை. இன்று பட்ஜெட் தயாரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்று நமக்கு புரிகிற அதே நேரத்தில் அதனையே கூறிக்கொண்டிருப்பதும் அர்த்தமற்றவை.


இன்று சிதம்பரமாக இருந்தாலும், வேறு எந்தக் கூட்டணியின் நிதியமைச்சராக இருந்தாலும் "out of the box"ஆக சிந்தித்து புதிய வரிவிதிப்புகளை கொண்டு வந்து அரசுக்கு வருமானத்தையும், சாதாரண மக்களுக்கான Populist அறிவிப்புகளையும் வெளியிட்டாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். சீர்திருத்தங்கள் மூலமாக நிதி வருவாயை அதிகரிக்கலாம் என்றாலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்றவை குறித்தெல்லாம் தற்போதைய அரசு அதிகம் பேச முடியாது. இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி எதையும் செய்து விட முடியாது. இந் நிலையில் புதிய வரி விதிப்பு சிந்தனைகளை கொண்டு வந்தால் தான் தொழில்துறையை அதிகம் பாதிக்காமலும், நடுத்தர வர்க்க மக்களின் வெறுப்பை எதிர்கொள்ளாமலும், சாதாரண மக்களுக்கான Populist அறிவிப்புகளை வெளியிடமுடியும். அப்படித் தான் கடந்த முறை "10,000" ரூபாய்க்கான வரியும், Fringe Benefits வரியும் கொண்டு வரப்பட்டது. இத்தகைய வரிகள் யாரையும் அதிகம் பாதிக்க வில்லை. அதே நேரத்தில் அரசுக்கு வருமானத்தையும் கொண்டு வந்தது. கடந்த முறை பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 10,000 ரூபாய்க்கான வரி போல இம்முறை அவர் எந்தப் புதிய வரியை கொண்டு வரப்போகிறார் என்பது அதிகம் கவனிக்கப்படும்.


புதிய வரி விதிப்புகள் குறித்து சிதம்பரம் பொருளாதார நிபுணர்களுடன் பிற நாடுகளின் முறைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மிக அதிக அளவிளான வருவாயை அரசுக்கு பெற்று தரவே செய்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பொருளாதாரம் ஆண்டுக்கு சுமார் 8% வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் 75% இருக்கும் தொழில் துறை, சர்வீஸ் துறை போன்றவை நல்ல வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் அரசின் வருவாயில் சுமார் 13% பல்வேறு மானியங்களுக்கும், சுமார் 22% அரசு செலுத்த வேண்டிய வட்டிகளுக்கும், 14% பாதுகாப்புச் செலவீனங்களுக்கும் சென்று விடுகிறது. இது போக எஞ்சியவை மாநிலங்களுக்கு மானியமாகவும், அரசின் பிற முக்கியமான திட்டங்களுக்கு செல்கிறது என மார்கன் ஸ்டேன்லி கூறுகிறது. இது மிகவும் குறைவு என்றும் உள்கட்டமைப்புக்கு அதிக ஒதுக்கீடு இல்லை என்பதும் பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு.

நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், இந்தப் பட்ஜெட்டில் பெரிய சீர்திருத்தங்கள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பில் அரசு அதிகளவில் முதலீடு செய்வது குறித்தும், நிதிப் பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக (Fiscal deficit at 4% of GDP) சிதம்பரம் எப்படி கொண்டு வரப்போகிறார் என்பது குறித்தும் தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளும், கல்வி, சுகாதாரம் போன்றவையும் மிகவும் முக்கியமானவை. அரசு இதற்கு எந்தளவுக்கு செலவிடப்போகிறது என்பது கவனிக்கப்படும். சீனாவுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் மின்சாரம் இருமடங்கு அதிக விலையில் இருப்பதாகவும், துறைமுகங்களில் பொருள்களை ஏற்றுவதும், இறக்குவதற்குமான நடைமுறைகள் மிக மோசமாக இருப்பதாகவும் bloomberg தெரிவிக்கிறது. விமான நிலையங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. அதன் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். இதனை சரி செய்ய அரசு எத்தகைய திட்டங்களைக் கொண்டு வரப் போகிறது என்பதும் தொழில் துறை எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று. இதைத் தவிர வேறு எதையாவது கூறி சிதம்பரம் நம்மை வியப்பில் ஆழ்த்துவாரா என்று தெரியவில்லை.

சிதம்பரம், Balanced but slightly populist பட்ஜெட்டை கொடுக்கப் போகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

Leia Mais…
Monday, February 06, 2006

நேற்று - பத்தாயிரம், நாளை ???நன்றி : Economic TimesLeia Mais…