பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Wednesday, March 30, 2005

சந்தை ஏன் சரிகிறது ?

கடந்த சில வாரங்களாக சந்தை கடுமையாகச் சரிந்து கொண்டிருக்கிறது. மைய அரசின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வரலாறு காணாத உயர்வைப் பெற்று 7000ஐ தொட்டு விடும் என்று அனைவரும் எண்ணியதற்கு மாறாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 587 புள்ளிகள் சரிந்து விட்டது. இது போலவே தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 198 புள்ளிகள் சரிந்து விட்டது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1,47,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் சந்தையில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு இந்த வாரம் திங்களன்று நல்ல லாபமுடன் தொடங்கிய வர்த்தம் செவ்வாயன்று கடும் சரிவைச் சந்தித்து. காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவுடன் காணப்பட்ட சந்தை ஒரு கட்டத்தில் 180 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்திருந்தது. புதனன்றும் சந்தையில் கடுமையான தள்ளாட்டமே நிலவி பிறகு ஓரளவு லாபமுடன் வர்த்தகம் நிறைவுற்றது

ப.சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வேகமாக எகிறியச் சந்தை எதனால் இப்படி சரிந்து கொண்டிருக்கிறது ? ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ?

இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வும் தாழ்வும் இந்தியர்களின் கைகளில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளில் தான் சந்தையின் போக்கு இருக்கிறது.

உதாரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பார்தி பங்குகளில் ஏற்பட்ட சரிவை பார்த்தாலே சந்தையின் மொத்த போக்கும் புரிபடும். பார்தி பங்குகளில் தன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அன்று காலை 233 ரூபாயை எட்டிய பார்தி பங்குகள் இந்த செய்தி வெளியானவுடன் சரியத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் இனி பார்தி பங்குகளில் ஏற்றமிருக்காது என்று கருதி இந்தப் பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.

சந்தையின் மொத்த போக்கும் இதேப் போலத் தான் இருக்கிறது. சந்தையின் செண்டிமெண்டை மாற்றும் அதி வல்லமை மிக்கவர்களாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இருக்கின்றனர்.
அவர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து விலகுகிறார்களா ? கிடையாது. ஆனால் அவர்களின் முதலீடு குறைந்துள்ளது, அல்லது மேலும் குறையக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது.

ஏன் இந்த அச்சம் ?

  • அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் அமெரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தியதும் மேலும் உயர்த்தக் கூடும் என்ற ஊகங்களும்
  • கச்சா எண்ணெய்யின் விலையேற்றம்

பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மற்றும் பிற ஆசியப் பங்குச்சந்தைகளை லாபம் ஈட்டும் ஒரு இடமாக கருதியே முதலீடு செய்கின்றனர். அவர்களின் முதலீட்டிற்கு தேவைப்படும் நிதியும் மிக குறைந்த வட்டியில் அமெரிக்காவில் கிடைக்கிறது. அந்தப் பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் பொழுது ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் முதலீட்டிற்கு தேவைப்படும் பணத்தின் வட்டியும் அதிகரிக்கிறது.

வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் இங்கு ரிஸ்க் மிக அதிகம். அதிக வட்டியை கொண்டு பெற்ற பணத்தை ரிஸ்க் அதிகம் உள்ள நாடுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளின் சந்தையிலோ அல்லது பாண்ட் போன்ற Debt சந்தையிலோ முதலீடு செய்வதை பாதுகாப்பான நல்ல முதலீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் கருதக் கூடும். அதனால் அவர்களின் முதலீடு இந்திய மற்றும் பிற ஆசிய பங்குச்சந்தைகளில் குறையலாம். அவ்வாறு குறையும் பொழுது இந்தப் பங்குச்சந்தையின் உயர்வு கேள்விக்குறி தான்.
இந்த அச்சம் தான் இந்திய மற்றும் ஆசியாவில் உள்ள பிற பங்குச்சந்தைகளை சரிய வைக்கிறது.

செவ்வாயன்று மும்பை பங்குச்சந்தை சரிந்த பொழுது ஆசியாவில் இருக்கும் பிற பங்குச்சந்தைகளும் கடுமையாக சரிந்தன. ஜப்பானின் Nikkei குறியீடு 225 புள்ளிகளும், ஹாங்காங்கின் Seng 185 புள்ளிகளும், தென்கொரியாவின் Kospi 18 புள்ளிகளும், தாய்வானின் Taiex 87 புள்ளிகளும் சரிந்தன. இவையனைத்தும் 1.5% முதல் 2% அளவிலான சரிவு. இந்தியப் பங்குச்சந்தையின் சரிவு சுமார் 2.19%
ஆசிய நாடுகளில் காணப்படும் இந்தச் சூழ்நிலையே இந்தியப் பங்குச்சந்தையிலும் பிரிதிபலிக்கிறது.

வெளிநாட்டு முதலீடு பற்றிய இந்த அச்சம் சரியானதது தானா ?

ஜனவரி மாதத்திலும் இதே அச்சம் நிலவியது. பிறகு அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.25 என்ற குறைவான விகிதத்தில் மட்டுமே உயர்த்தப்பட்டதால் அந்த பாசிடிவ் செண்டிமெண்ட்டில் சந்தை எகிறியது. பிறகு பட்ஜெட்டை ஒட்டிய வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை முடக்கி கொண்டதால் சந்தை தடுமாறியது. பட்ஜெட்டிற்கு பிறகு வெளிநாட்டு முதலீடுகள் மறுபடியும் அதிகரிக்க குறியீடு 7000 ஐ நெருங்கியது. இப்பொழுது மறுபடியும் சரிகிறது.

சந்தையின் தற்போதைய சரிவு இப்பொழுதுள்ள சூழ்நிலைகளை ஒட்டிய தற்காலிக பின்னடைவு தான். முதலீட்டாளர்களின் இந்த அச்சம் தற்போதைய சூழ்நிலைகளைச் சார்ந்து இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

குறுகிய கால சாதக பாதகங்களை விட நீண்ட காலத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு இழுக்கும் அஸ்திரம் நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரம் அவர்களை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி இழுக்கும் வல்லமை கொண்டது. உலகில் வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று (மற்றொன்று சீனா). இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலீடுகளை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி நிச்சயமாக இழுக்கும். வளர்கின்ற பொருளாதாராங்களில் தான் அவர்களுக்கு லாபமும் அதிகம்.

சரி...அடுத்து என்ன நடக்கும் ?

இந்த ஆண்டு இது வரை சுமார் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அடுத்து நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் நிலவரத்தைப் பொறுத்து தங்கள் முதலீடுகளை மறுபடியும் சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய நிறுவனங்களின் அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சந்தை நல்ல முன்னேற்றம் அடையும்.

மும்பை பங்குச்சந்தை குறியீடு 6000 க்கும் கீழ் சரியும் வாய்ப்புகள் இருப்பதாக தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.

ஆனால் உண்மையில் பங்குகள் நமக்கு குறைவான விலையில் கிடைக்கின்றன, அல்லது மேலும் சரியும் பொழுது இன்னும் குறைவான விலையில் நமக்கு கிடைக்க போகின்றன என்பது தான் உண்மை.
ஒரு நல்ல முதலீட்டாளன் சந்தையில் எதிர்நீச்சல் போட வேண்டும். அதாவது சந்தை சரியும் பொழுது, அந்த சரிவு நிலையில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். சந்தை உச்ச நிலையில் இருக்கும் பொழுது பங்குகளை விற்று விட வேண்டும்.

இது நல்ல பங்குகளை குறைந்த விலையில் வாங்கக் கூடிய சரியான தருணம்.

(இன்றைய வர்த்தகம் தொடங்கி விட்டது. மும்பை பங்குச்சந்தை 80 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறிக் கொண்டு இருக்கிறது)

Leia Mais…
Monday, March 21, 2005

ஹர்ஷத் மேத்தா - 91992 ல் நடந்த பங்குச்சந்தை ஊழலுக்குப் பிறகு 1998ல் மறுபடியும் ஒரு புதிய ஊழலை ஹர்ஷத் மேத்தா செய்யத் துணிந்தான். இவ் வார தமிழோவியத்தில் ஹர்ஷத் மேத்தா 9ம் பாகத்தில் அது பற்றி எழுதியிருக்கிறேன்

மேலும் கடந்த வார சந்தை நிகழ்வுகள் குறித்து தமிழோவியம் பங்குச்சந்தைபார்வையில் ஒரு அலசல் - Block Deal

Leia Mais…
Wednesday, March 09, 2005

அமுதசுரபி - நிதிச் சிறப்பிதழ்இம் மாத அமுதசுரபி இதழ், நிதிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல நல்ல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

பங்குச்சந்தை பற்றிய எளிய அறிமுகமாக பங்குச்சந்தை - உள்ளும், புறமும் என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது

Leia Mais…
Monday, March 07, 2005

பட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்பட்ஜெட் நாளன்று, பங்குச்சந்தை சரிய வேண்டும். இது தான் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் எழுதப்படாத நியதி. இந்த ஆண்டு ஒரு மாற்றம். பங்குச்சந்தை பட்ஜெட் தினத்தன்று 144 புள்ளிகள் எகிறியது.

கடந்த ஆண்டை தவிர சிதம்பரத்தின் ஒவ்வொரு பட்ஜெட்டையும் பங்குச்சந்தை ஆரவாரமாய் வரவேற்கவேச் செய்துள்ளது. கடந்த ஆண்டு கூட பங்குப் பரிவர்த்தனை வரி (STT) என்ற வரியாலேயே பங்குச்சந்தை சரிந்தது. மற்றபடி அது கூட ஒரு சிறப்பான பட்ஜெட் தான்.

பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் மிக அதிகமாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, இந்த வருட முடிவில் 8000ஐ எட்டும் என்று மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனம் கணித்துள்ளது. இதை விட ஆச்சரியம் அடுத்த பத்தாண்டுகளில் குறியீடு 25,000 எட்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

குறியீடு உயர வேண்டுமானால் பங்குச்சந்தைக்கு பணம் குவிய வேண்டும். பணம் குவியவிருக்கும் சில வழிகளைப் பற்றி இவ் வார தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - எகிறப் போகும் பங்குச்சந்தை என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.


Leia Mais…
Thursday, March 03, 2005

பட்ஜெட் 2005 - 4 - Fringe Benefits Taxஇந்தப் பட்ஜெட்டின் மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம் - Fringe Benefits Tax. திரு.மாலன் தன் பதிவில் கூறியிருந்த இரண்டு இந்தியாவில், வளமான ஒரு இந்தியாவை எரிச்சல் படுத்தியிருக்கும் வரி.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் பலச் சலுகைகளுக்கு இந்த Fringe Benefits Tax மூலம் வரி விதிக்கப்படுகிறது. நிறுவனத்தின் நிறைய ஊழியர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்துவதால் இந்த வரி ஊழியர்களுக்கு விதிக்கப்படாமல் நிறுவனங்களுக்கு (Cost To Company) விதிக்கப்படுகிறது.

கீழே தரப்பட்டுள்ள பலச் சலுகைகளுக்கு இனி வரி விதிக்கப்படும்.

As many as eighteen categories of expenses are proposed to be covered. These include entertainment, festival celebrations, gifts, use of club facilities, food and beverages (excluding that at the work place), maintenance of guest house, conference, employee welfare, use of health clubs, sports and similar facilities, sales promotion including publicity, conveyance, tours and travel including foreign travel expenses, hotel boarding and lodging, running and maintenance of motor cars and aircrafts, consumption of fuel other than industrial fuel, use of
telephone, scholarship to the children of employees.

பெரிய பட்டியல் தான். இதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது - foreign travel expenses, hotel boarding and lodging. இதற்கு எழுந்த பலமான எதிர்ப்புக் காரணமாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த வரியால் அதிகம் பாதிப்படைவது மென்பொருள் நிறுவனங்கள் தான். வெளிநாட்டுப் பயணங்கள் மென்பொருள் நிறுவனங்களில் முக்கியமானது. வெளிநாட்டிற்கு System Study போன்றவற்றுக்குகாகச் செல்லும் வழக்கம் மென்பொருள் நிறுவனங்களின் தொழில் சார்ந்த நடைமுறை. வெளிநாட்டிற்குச் செல்லும் ஊழியர்களுக்கு வழங்கும் அலவுன்சங்கள், தங்கும் வசதிகள், போக்குவரத்துச் செலவுகள், இந்தியாவிற்கு பேசும் தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றுக்கு இப்பொழுது வரி கிடையாது.

உதாரணமாக நான் அமெரிக்காவிற்கு B1 விசாவில் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பயணம் மேற்கொள்ளாமல் என்னால் இங்கு வேலை செய்ய முடியாது. அங்குச் சென்று அங்குள்ள தேவைகளை அறிந்தப் பின் தான் இந்தியாவில் அந்தப் பணியைச் செய்ய முடியும்.

இதற்கான விமானச் செலவு தவிர அங்கு தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தொகையை அலவுன்சாக கொடுப்பார்கள். ஹோட்டலில் தங்கும் செலவு, போக்குவரத்துச் செலவு, தொலைபேசிச் செலவு என அனைத்தும் எனக்குத் தரப்படும் சலுகைகள்.

எனக்கு அலவுன்சாக தரப்படும் தொகையை நான் சேமித்து இந்தியாவிற்கு எடுத்து வந்தாலும், இந்தத் தொகைக்கு எந்த வரியும் கிடையாது. எனது நிறுவனம் தன் கைவசமுள்ள அந்நியச் செலவாணி மூலமாக எனக்கு இதனை தருவதால் எனது நிறுவனத்திற்கும் வரி கிடையாது.

ஆனால் சிதம்பரம், இவ்வாறு செலவு செய்யப்படும் தொகைக்கு வரி கொண்டு வந்துள்ளார். 30% வரி இந்த தொகை மீது விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த வரி எனக்கு விதிக்கப்படாது. எனது நிறுவனத்திற்க்கு விதிக்கப்படும் (Cost to Company).

இது தான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மென்பொருள் நிறுவனங்களில் வெளிநாட்டுப் பயணம் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கணிசமானத் தொகை இந்தப் பயணத்திற்காகச் செலவிடப்படுகிறது. இன்போசிஸ், விப்ரோ, சத்யம் போன்ற நிறுவனங்களின் லாபத்தில் சுமார் 1% இந்த புது வரிக்குச் சென்று விடும் என்று இந் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் சிறிய மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தப் புது வரி கணிசமான இழப்பை ஏற்படுத்தும். லாபத்தில் 5% மேல் இழப்பு ஏற்படும் என்று இந் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

சிலப் பிரிவுகளை மறுபரிசீலனைச் செய்வதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். தொழில் சார்ந்த செலவுகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணம் போன்றவற்றின் மீதான வரியில் மாற்றம் இருக்கும்.

ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மீதான வரி தொடரக்கூடும்.

மென்பொருள் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஏராளமானச் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த புது விரி காரணமாக எழக்கூடிய பிரச்சனனகள் குறித்து இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தச் சலுகைகள் பறிபோய் விடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சலுகைகளை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் சம்பளம் உயரக் கூடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக என் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு சம்பளம் தவிர ஒரு குறிப்பிட்ட தொகை பொழுபோக்குக்காக என் நிறுவனத்தால் ஒதுக்கப்படுகிறது. இது சம்பளம் தவிர கூடுதலாக தரப்படும் ஒரு சலுகை. இது எனக்கு பணமாக கிடைக்காது. சுற்றுலா, Fisherman Cove க்குச் சென்று ஜாலியாக ஒரு நாளைச் செலவிடுவது என்று இந்தப் பணம் செலவழிக்கப்படுகிறது. போக்குவரத்து, ஹோட்டலில் டின்னர் போன்றவற்றுக்குச் செலவிடப்படும் தொகைக்கு தற்பொழுது எந்த வரியும் கிடையாது. ஆனால் இந்தப் புது வரியால் 15% - 30% வரி விதிக்கப்படுகிறது.

இதனால் என்ன நடக்கும் ? எனக்கு இந்தச் சலுகை பறிபோகலாம்.

அல்லது இந்தச் சலுகைக்கிற்கு ஒதுக்கப்படும் தொகை சம்பளத்தில் சேர்க்கப்படலாம். நிறுவனங்களும் அதே தொகையைச் செலவு செய்யும் கூடுதல் வரியில் இருந்தும் தப்பிக்கும்.

இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஊழியர்களுக்கு பாதிப்பும் இருக்கும். பாதகமும் இருக்கும்.

நிதியமைச்சர் இந்தச் சலுகைகளை வெறும் பொழுதுபோக்குச் செலவுகளாக பார்ப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. இது பொழுது போக்குச் செலவுகள் தான் என்றாலும் நிறுவனங்கள் ஏன் இந்தச் செலவுகளைச் செய்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இதனையும் தொழில் சார்ந்தச் செலவாகத் தான் நான் நினைக்கிறேன்.

எப்படி ?

நாம் இப்பொழுது ஒரு புதிய மேலாண்மையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் மேலாண்மைக்கும் பிறத் துறைகளில் இருக்கும் மேலாண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. பத்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்குச் சென்றால் மேலாளரிடம் டோஸ் வாங்கும் கதையெல்லாம் அரசு நிறுவனங்களில், சிறிய நிறுவனங்களில் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நான் அனுபவப்பட்டதில்லை. சில மணி நேரங்கள் தாமதமாகச் சென்று சில மணிநேரங்கள் மட்டுமே பணியாற்றி விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். எந்த மேலாளரும் இதற்கு டோஸ் விட்டதில்லை. வெள்ளிக்கிழமை வந்தால் அலுவலகத்தில் இருக்கும் சிலர் 3 மணிக்கே வீட்டிற்கு கிளம்பி விடுவார்கள். யாரும் இதனையெல்லாம் கண்டு கொண்டதில்லை. இங்கு தேவை End Result மட்டுமே.

ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்துக் கொண்டிருக்காமல் ஒரு மாறுதல் தேடி சுற்றுலாவுக்கு தங்கள் ஊழியர்களை நிறுவனங்கள் அழைத்துச் செல்கின்றன. இது மாறுதலுக்காக மட்டும் இல்லை. Team Building என்றும் சொல்வார்கள். இந்தப் பயணம், பொழுதுபோக்கு மூலமாக பணியாற்றும் திறன் அதிகரிக்கரிக்கிறது (Productivity). இதனாலேயே இத்தகைய பொழுதுபோக்குகளுக்கு கணிசமானத் தொகை செலவழிக்கப்படுகிறது. இவ்வாறு செலவழிக்கப்படும் தொகைக்கு வரியும் இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்பொழுது நிறுவனங்கள் இந்தச் செலவுகளை தொடருமா என்று தெரியவில்லை. பெரிய நிறுவனங்கள் தொடரலாம். சிறிய நிறுவனங்கள் நிறுத்தலாம்.

இது தவிர அவ்வப்பொழுது ஊழியர்களுக்குச் சில Gifts வழங்கப்படும். இது ஊழியர்களை ஊக்கப்படுத்தும் ஒரு நடவடிக்கை. நிறுவனங்கள் CMM போன்ற நிலையை அடைந்தால் அதனைக் கொண்டாடும் விதத்தில் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுப் பொட்கள் வழங்குவார்கள். இது வெறும் Gifts அல்ல. இந்த வெற்றியில் உனக்கும் பங்கு இருக்கிறது என்று ஊழியர்களுக்கு அறிவிக்கும் செயல். இதன் மூலம் அவர்களின் Morale, Committment போன்றவையும் அதிகரிக்கிறது. இனி இந்தப் பரிசுகள் கேள்விக்குறி தான்.

இது தவிர ஊழியர்கள் பயன்படுத்தும் தொலைபேசிச் செலவுகள் போன்றவற்றுக்கும் இனி வரி உண்டு. வீட்டில் தொலைபேசி இருந்தாலும், கையில் செல்பேசி இருந்தாலும், அலுவலகத் தொலைபேசியையே பயன்படுத்தும் பலருக்கும் இனி பிரச்சனை தான் :-)

தனியார் நிறுவன ஊழியருக்கு தரப்படும் சலுகைக்கு இவ்வாறு வரியைக் கொண்டு வரும் அரசு, தன்னுடைய ஊழியர்களுக்கும் இந்த முறையை கொண்டு வருமா ? இந்த வரி மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு வரி உண்டு. ஆனால் "நம் மக்கள் பிரதிநிதிகள்" சென்னைக்கும் தில்லிக்கும் இடையே மேற்கொள்ளும் விமானப் பயணங்களுக்கு எந்த வரியும் இல்லை.

இதைப் போலவே அரசு ஊழியர்கள் அனுபவிக்கும் பலச் சலுகைகளுக்கு வரியே இல்லை. அரசு தனக்குத் தானே வரி விதித்து கொள்வதில் எவ்வித லாஜிக்கும் இல்லை தான். ஆனால் இந்த வரியால் எனது சலுகை பறிபோகிறது என்னும் பொழுது இது ஏற்றத் தாழ்வு தானே ?

ஒரு நிறுவனத்திற்கு Corporate Tax போன்ற வரி விதிக்கப்படுகிறது. தனது வரியெல்லாம் போக மீதம் உள்ள தொகையை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கும் உரிமை ஒரு நிறுவனத்திற்கு உண்டு. மாறாக நிறுவனம் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் வரி விதிப்பது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் மூக்கை நுழைப்பது போலத் தான்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இத்தகைய பொழுது போக்குகளுக்கு வரி விலக்கு 1997ல் ப.சிதம்பரத்தால் தான் அளிக்கப்பட்டது. அவரே அதனை மறுபடியும் மாற்றியிருக்கிறார்.

ஆனால் தொழில் சார்ந்தச் செலவுகளுக்கு வரியிருக்காது என்று நேற்று வெளியாகியுள்ள அறிவிப்பு நல்ல மாற்றம்.

Leia Mais…
Tuesday, March 01, 2005

பட்ஜெட் 2005 - 3 - 10,000 ரூபாய் பிரச்சனைஇந்தப் பட்ஜெட்டின் சர்சைக்குரிய விஷயம் 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் வரி விதிக்கும் முறை. இது பலமாக விவாதிக்கப்படுகிறது. பல எண்ணங்கள், வாதங்கள். வலைப்பதிவில் கூட இரு வேறானக் கருத்துக்கள். இது பற்றி எழுதிய அருணா கூட இது சரியான முடிவு என்று கூறியிருக்கிறார்.

அரசுக்கு வருமானத்தை உருவாக்கவும், அதே சமயத்தில் வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்தப் புது வரி மூலம் சிதம்பரம் முயற்சிக்கிறார் என்ற வகையில் இந்த வரி விதிப்பு முறை வரவேற்கத்தக்கது. ஆனால் இம் முறை நடைமுறைக்கு ஒத்து வராது என்பது எனது கருத்து.

தினமும் பல இலட்சம் பணம் எடுக்கும் பெரிய நிறுவனங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். மற்றவர்களைப் பற்றி மட்டும் விவாதிப்போம்

சிதம்பரம் இந்த வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக கூறும் காரணங்கள் என்ன ?

  1. வங்கியில் இருந்து தினசரி நிறையப் பணம் எடுக்கப்படுகிறது. பிறகு இந்தப் பணம் மறைந்து விடுகிறது. இந்த புதிய வரி மூலம் எடுக்கப்படும் பணம் track செய்யப்படுகிறது. அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது. வரி ஏய்ப்பும் தடுக்கப்படுகிறது
  2. மக்களை காசோலை மூலம் பணம் எடுக்கும் முறைக்குத் தள்ள வேண்டும்
  3. பிரேசில் போன்ற நாடுகளில் வரி ஏய்ப்பை தடுக்க இம் முறை வெற்றிகரமாக அமலில் இருக்கிறது.

முதல் காரணத்தைப் பற்றிப் பார்ப்போம். அவரின் கருத்தில் உண்மை இருக்கிறது. பல லட்சம் சம்பாதிக்கும் பணக்காரர்களால் மட்டும் அல்ல. போதிய வருமானம் ஈட்டும் ஆனால் வரிக் கட்டத் தவறும் சாதாரண மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.


சம்பளம் வாங்குபவர்களின் பணத்தைப் பற்றி சிதம்பரம் கவலைப்படவில்லை. அவர்களின் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு இருக்கிறது. ஆனால் சம்பளம் வாங்காத பலரின் வருமானம் இவ்வாறு மறைந்து போவது உண்மை. இவர்கள் தான் முழுதாக வரி ஏய்ப்பவர்கள்.


உதாரணமாக இரு வியபாரி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரின் வருமானம் track செய்யப்படுவதேயில்லை. அவராக பார்த்து ஏதாவது வருமானவரிச் செலுத்தினால் தான் உண்டு. ஆனால் வருமான வரிச் செலுத்தும் சம்பளம் வாங்குபவர்களை விட அவர் நிறைய வருமானம் ஈட்டக் கூடியவர் என்றால் அரசுக்கு இழப்பு தானே. அவர்களை இவ்வாறு ஏதாவது ஒரு வரிச் செலுத்த வைக்கத் தான் சிதம்பரம் முயற்சி செய்கிறார். இந்த வகையில் இந்த முறை வரவேற்கத்தக்கது.


ஆனால் அதற்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் மிகக் குறைவு. வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு 1 லட்சம் அல்லது 50,000 என்ற உச்சவரம்பு வைக்கலாம். இதனை விட அதிக அளவு கூட வரி விதிக்கலாம். இம் முறை மூலம் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் எளியவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். இன்னும் கூட ஒரு படிச் சென்று வருமான வரிச் செலுத்துபவர்களை இம் முறையில் இருந்து விடுவிக்கலாம். இதனால் நாங்கள் ஏன் தேவையில்லாமல் மற்றொரு வரிச் செலுத்த வேண்டும் போன்ற கேள்விகளும் குறையும்.


இது நடைமுறைக்கு கொண்டு வர முடியும் ? முடியும்.

இப்பொழுது எல்லா வங்கிகளும் PAN எண் கேட்கிறார்கள். இதன் மூலம் யார் வருமான வரிச் செலுத்துகிறார்கள் என்பது தெரியும். நிறைய வங்கிகள் கணினி மயமாகி விட்டதால் இதனை செயல் படுத்துவதில் சிக்கல் இருக்காது. ஆரம்பத்தில் சிக்கல் இருக்கலாம். எல்லாப் புதிய முறைக்கும் ஆரம்பத்தில் சிக்கல் இருக்கவேச் செய்யும் ?

10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் மிகக் குறைவு என்றாலும், இந்த புது வரியின் நோக்கம் வரி ஏய்ப்பை தடுக்கவே என்பதால் ஒழுங்காக வரிச் செலுத்துபவர்களை இதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இது கல்விக்கான ஒரு செஸ் என்றால் நிறையப் பேர் கேள்வி கேட்க மாட்டர்கள். ஆனால் வரி என்றாலே அது சைக்காலஜிக்கலாக ஒரு எதிர் வினையை ஏற்படுத்துகிறது.


அடுத்ததாக, மக்களை காசோலை மூலம் பணம் எடுக்கும் முறைக்குத் தள்ள வேண்டும் என்கிறார்.


இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.


சென்னையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து செங்கற்பட்டுக்குச் செல்லுங்கள். அங்குள்ள எத்தனை வங்கிகளில் காசோலை பயன்படுத்தப்படுகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து ஏதாவது குட்டி ஊருக்குச் செல்லுங்கள், வங்கிகளில் காசோலையே இருக்காது. சிதம்பரத்தின் சொந்த ஊரான சிங்கங்கையில் கூட இதே நிலைமை தான் இருக்கும்.


பின் எப்படி காசோலையை பயன் படுத்த முடியும் ?


எல்லா வங்கிகளிலும் காசோலை வந்து விட வில்லை. ICICI, SBI போன்ற சில வங்கிகள் தான் நாடெங்கும் பல இடங்களில் கிளைகளை வைத்துள்ளன. காசோலைகளையும் வைத்துள்ளார்கள். ஆனால் நகரங்களை விடுத்து கிராமங்களில் உள்ளோர் காசோலை மூலமாக பணத்தைப் பறிமாறிக் கொள்ள முடியுமா ?


இது எல்லாவற்றையும் விட நம் நாட்டில் மக்கள் பலருக்கு பணம் எடுக்கும் Withdrawl form எப்படி நிரப்புவது என்று கூட தெரியாது. நான் வங்கிக்கு செல்லும் பொழுது நிறையப் பேருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள் எப்படி காசோலையை நிரப்புவார்கள்.


இந்தச் சூழலில் பிரேசில் நாட்டுடன் நம் நாட்டை ஒப்பிட முடியாது.


அருணா தன் பதிவில் கூறியுள்ளது போல கடன் அட்டை (Credit Card) நிறுவனங்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும். ஆனால் இதுவும் கூட நகரங்களில் தான். மற்ற இடங்களில் கடன் அட்டையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.


இது நீண்ட காலத்திற்கானத் திட்டம் தான். ஆனால் தற்போதையச் சூழலில் சாத்தியம் இல்லாதது. அதுவும் 10,000 ரூபாய் என்னும் பொழுது தான் எல்லோரும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கின்றனர். தொகை அதிகமாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை.


இது எல்லாவற்றையும் விட கறுப்பு பணம் வங்கிகளுக்கே வருவதில்லை என்பது வேறு விஷயம். வங்கிகளுக்கு வராமல் வேறு மார்க்கத்தில் எங்கோ மறைந்து விடுகிறது.


இந்தப் புது வரியால் வங்கிகளுக்குத் தான் நன்மை. தேவை என்றால் தவிர வங்கிகளில் இருந்து இனி யாரும் பணம் எடுக்க மாட்டார்கள்.


எது எப்படியிருந்தாலும் சிதம்பரத்தின் புத்திசாலித்தனம் பலிச்சிடுகிறது. வேறு எந்த நிதியமைச்சரும் இது வரை யோசிக்காத பல வரிச் சீர்திருத்தங்களை சிதம்பரம் தான் செய்திருக்கிறார். வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சி என்ற வகையில் இந்த வரி ஒரு நல்ல ஆரம்பம். இது தீவிரமாக விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களுடன் வர வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

ஆனால் நிச்சயம் இது போன்ற வரி வேண்டும்.

Leia Mais…