பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Saturday, November 26, 2005

வால்மார்ட் - என்ன பிரச்சனை ? - 2சென்னையிலும், பெங்ளூரிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பெருகி வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவை கொடுக்கும் ஊதியம் போன்றவை சில நேரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு சமன்பாடு இல்லாத நம் சமுதாயத்தில் இந்த நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துவதாகவே எனக்கு தோன்றும். அரசு நிறுவனங்களிலும், பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை விட பல மடங்கு அதிக சம்பளத்தை மென்பொருள் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 30வயதிற்கும் உட்பட்ட இளைஞர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களைச் சார்ந்த, இவர்களைக் குறிவைத்து இயங்கும் பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உதாரணமாக உல்லாச கேளிக்கை இடங்கள். நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து, பேஷன் ஷோ வரை எங்களைப் போன்றவர்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயங்கள் ஒரு பகுதி சமுதாயத்திற்கு அந்நியமாக தோன்றுகிறது. பொருளாதர ரீதியில் ஒரு வீட்டுக் கடன் பெறும் பொழுது கூட எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை, முக்கியத்துவம் பிறருக்கு கிடைப்பதில்லை. இதுவெல்லாம் ஏற்கனவே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது போல தான் தோன்றுகிறது.

இன்று ஏதோ ஒரு டிகிரியுடன் நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே ஒரு நல்ல வேலையில் நுழைந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையில் என்ன செய்கிறோம், ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கும். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவிற்கு வருகின்றன வேலைகளில் 50%-70% வேலைகள் Production Support /Maintenance வேலைகள் தான். சமீபத்தில் ABN AMRO நிறுவனம் இன்போசிஸ் மற்றும் TCS நிறுவனங்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வேலைகளை கொடுத்தது. இதில் பெரும்பாலான வேலைகள் Production Support /Maintenance தான். இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mechanical Engineer) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Copy-paste செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் உள்ள பிற துறைகளில் நல்ல சம்பளம் இல்லை. ஏனெனில் outsourcing இந்த துறைகளில் குறைவாகவே உள்ளது அல்லது கொஞ்சமும் இல்லை.

ஒரு பிரிவினர் நிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருக்க கொஞ்சமாக படிப்பறிவு உள்ள semi-skilled or unskilled ஊழியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். மிகக் குறைந்த சம்பளம் தான். பணியும் கடினம். அவர்களுக்கு அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும். வேறு வழி கிடையாது.

மற்றொரு பிரிவினர் இருக்கின்றனர். எந்த வேலையும் கிடைக்காமல் சிலர் ஆட்டோ ஓட்டுகின்றனர். சிலர் டூ வீலர்களில் பொருள்களை பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள், தள்ளு வண்டிகளிலும், பிளாட்பாரங்களிலும் வியபாரம் செய்யும் சிலர் இப்படி ஒரு மிகப் பெரிய கூட்டம் தன் அன்றாட தேவைகளுக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

படித்தும் வேலை கிடைக்காத நிறையப் பேரை பார்த்திருக்கிறேன். கல்லூரியில் டிகிரி முடித்து விட்டு ஆட்டோ ஓட்டுபவர்களையும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் காவலர்களாக வேலை செய்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாதவர்கள் எங்கோ மூலை முடுக்குகளில் சின்ன கடை வைத்துக் கொள்வார்கள்.

"எங்கள் காலத்தில் இருந்தது போல் இன்று மளிகைக் கடையை வைத்து பணமெல்லாம் பெரிதாக சம்பாதித்து விட முடியாது. ஏதோ காலத்தை ஓட்டலாம்" என்று என் அப்பா சொல்வார். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கடைத் தெருவில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. இன்று மூலை முடுக்கெல்லாம், திரும்பிய பக்கமெல்லாம் கடைகள் தான். தெருவுக்கு தெரு குட்டிக் கடைகள் முளைத்து விட்டன.

இது எதனால் ஏற்பட்டது ? இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் ? இதனைச் செய்து தான் தீர வேண்டுமா ?

நல்ல வேலைவாய்ப்பு இருந்தால் இந்த வேலை இவர்களுக்கு தேவையில்லை தான். தற்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை ஒரு நிர்பந்தம் காரணமாக எழுவது. அவர்களுக்கு அதை செய்வதில் ஆர்வமோ, உடன்பாடோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனாலும் செய்து தான் தீர வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட முடியும்.

இந்தியா போன்ற மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நாட்டில் அரசாங்கமோ, இங்கிருக்கும் தனியார் நிறுவனங்களோ மட்டுமே வேலைவாய்ப்பை பெருக்கி கொடுத்து விட முடியாது. இவ்வளவு மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய நிறுவனங்களோ, மூலதனமோ இந்தியாவில் அதிகம் இல்லை.

கடந்த நிதி நிலை அறிக்கையில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. இது போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கைகளிலும் வரும். அதனைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அரசாங்கம் எப்படி இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் ? எங்கிருந்து பணம் வரும் ? எல்லாமே Populist அறிவிப்புகள். கூட்டணி கட்சிகளை/ஓட்டு வங்கிகளை திருப்தி படுத்தும் நடவடிக்கைகள். இது வரை அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டதென தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைக்களுக்கு என்ன தான் தீர்வு ஏற்பட முடியும் ?

வால்மார்ட், k-Mart/Sears, Target போன்ற நிறுவனங்களை இந்தியாவில் திறக்க அனுமதிப்பது முழுமையான தீர்வாகும் என்று சொல்லமுடியா விட்டாலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

எப்படி ?

வால்மார்ட் ஏதோ மளிகை சாமான்களை விற்கும் நிறுவனம் என்றோ, இருக்கின்ற மளிகைக் கடைகளை காலி செய்து விட்டு பணத்தை அள்ளிக் கொண்டு அமெரிக்காவிற்கு பறந்து விடும் என்றோ கூறப்படும் வாதங்கள் அர்த்தமற்றவை. வால்மார்ட் போன்ற நிறுவனங்களால் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை (Trade deficit) தற்பொழுது சுமார் 150பில்லியன் டாலர்கள். 1989ல் இது சுமார் 6பில்லியனாக இருந்தது. அடுத்து வந்த 14ஆண்டுகளில் இது பல மடங்கு உயர்ந்து 2003ல் 124 பில்லியனை எட்டியது. 2004ல் மற்றொரு 20% உயர்ந்து 150பில்லியன் டாலர்களை எட்டியது என அமெரிக்க அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

இது கூறும் தகவல்கள் என்ன ?

சீனாவின் ஏற்றுமதி மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது

இதற்கு முக்கிய காரணம் வால்மார்ட் போன்ற ரீடையல் நிறுவனங்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் அது உண்மை.

பொருளாதாரத்தில் Push, Pull என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. Push என்பது Manufacturing நிறுவனங்கள் தாங்கள் எந்தப் பொருள்களை உற்பத்திச் செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்து சந்தைக்கு அனுப்பும் முறை. இது தான் ஆரம்ப காலங்களில் - 1980 வரை வழக்கில் இருந்த முறை

Pull என்பது, ரீடையல் நிறுவனங்கள் சந்தையில் என்ன பொருள் விற்கும், எவ்வளவு விற்கும், அதற்கு பயனீட்டாளர்கள் என்ன விலை கொடுப்பார்கள், என்ன தரத்தில் அதனை எதிர்பார்ப்பார்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது.

இந்த Pull முறையைக் கொண்டு வந்து அமெரிக்கச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ரீடைல் நிறுவனங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக வால்மார்ட் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனா - அமெரிக்க Trade deficitல் வால்மார்ட்டின் பங்கு சுமார் 10% என்பதில் இருந்து வால்மார்ட் ஏற்படுத்திய தாக்கம் நமக்கு புரியும்.

வால்மார்டின் தாரக மந்திரம் ஒன்றே ஒன்று தான் - குறைந்த விலை
அமெரிக்காவெங்கிலும் இருக்கும் தன் கிளைகளுக்கு வால்மார்ட் மிகக் குறைந்த விலைக்கு பொருள்களை சீனாவில் இருந்து பெற்று வரும். அமெரிக்காவில் இருக்கும் தன் கிளைகளுக்கு சீனாவில் உற்பத்திச் செய்யும் பொருள்களை இறக்குமதி செய்யும். இதனால் சீனாவில் Manufacturing நிறுவனங்களின் வளர்ச்சி அதிகளவில் உயர்ந்தது. சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே சென்றது.

அமெரிக்காவில் செய்யப்பட்ட பல பொருள்களின் விலை அதிகமானதால் சீண்டுவார் இல்லாமல் போயின. அமெரிக்க Manufacturing நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. சுமார் 1.5மில்லியன் வேலைகளை அமெரிக்கர்கள் இழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் இழந்த வேலைகள் சீனாவிற்கு சென்றன. சீனாவில் பல வேலைவாய்ப்புகள் உருவாகின. சீனாவின் பொருளாதாரமும் Manufacturing மூலம் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டது.


இந்த மாற்றங்களை வால்மார்ட் எப்படி ஏற்படுத்தியது ? சீனாவிற்கு ஏற்பட்ட இது போன்ற மாற்றங்கள் இந்தியாவிலும் ஏற்பட முடியுமா ?

அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

Leia Mais…

WALMART - என்ன பிரச்சனை ? - 1சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

மேலும் படிக்க...

Leia Mais…