பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Wednesday, November 22, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 9

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு)

ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை சார்ந்த பல நடவடிக்கைகளில் முதல் ஆளாக
இருந்திருக்கிறான். பங்குச்சந்தையின் மூலமாக சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்ந்தவனும் ஹர்ஷத் மேத்தா தான், அதே பங்குச்சந்தையை சரிய வைத்து வில்லனாக மாறியவனும் அவன் தான். அது போல இன்றைக்கு நானும் இன்னும் பலரும் செய்து கொண்டிருக்கும் பங்குச்சந்தைப் பற்றிய இணையப் பதிவை இந்தியாவில் முதன் முறையாக செய்தவனும் ஹர்ஷத் மேத்தா தான். ஆனால் அவனுடைய எல்லா செயல்களிலும் வில்லனத்தனமே மிஞ்சி இருந்தது. தான் செய்ய நினைக்கும் எதையும் செய்யும் துணிவும் அவனிடம் இருந்தது. சந்தையை உயர்த்த செய்யும் அவனது வித்தைகளில் அவனுக்கு நிறைய நம்பிக்கைகளும் இருந்தது. 1992 ஊழலுக்கு பிறகும், தன் ஊழல் கதை உலகமெங்கும் தெரிந்தப் பிறகும் மறுபடியும் அதே வித்தையை செய்யத் துணிந்தான். இதை விட ஆச்சரியம் அவனது ஊழல் கதை தெரிந்தப் பிறகும் முதலீட்டளர்கள் அவனையே தங்கள் வழிகாட்டியாக நினைத்தார்கள்.

1992 ஊழலுக்கு பிறகு நடந்தவை நாடு அறிந்தவை தான். ஹர்ஷத் மேத்தா மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு ஜாமினில் வெளியே வந்தான். அப்பொழுது பிரதமராக இருந்த நரசிம்மராவ் மீது ஊழல் புகார்களை சுமத்தினான். இவ்வாறு ஹர்ஷத் மேத்தாவின் கதையே கலர்புள்ளானது தான். இந்தக் கதைக்கெல்லாம் நாம் செல்ல வேண்டாம். ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை மட்டும் கவனிப்போம். முதல் இன்னிங்சில் அனைவரையும் அதிர வைத்த, பலரை தற்கொலை செய்ய வைத்த ஹர்ஷத் மேத்தா தனது இரண்டாவது இன்னிங்சை மிக கவனமாக திட்டமிட்டான்.

1997ல் தனக்கான ஒரு இணையத் தளத்தை ( www.harshad.com ) ஏற்படுத்தினான் அடுத்து வரும் ஆண்டுகளில் இணையம் முக்கியத்துவம் பெறும் என்று கணித்தான். இணையத்தின் மூலமாக பங்குச்சந்தையை பற்றிய கட்டுரைகளுடன் நின்று விடாமல் டிப்ஸ் கொடுக்க தொடங்கினான். ஆனால் இது நல்லப் பங்குகளுக்கான டிப்ஸ் அல்ல. தான் விலையேற்றம் செய்யப் போகும் பங்குகளுக்கான டிப்ஸ். இது முதலீட்டாளர்களை தன் வலைக்குள் கொண்டு வரும் டிப்ஸ். அவன் டிப்ஸ் கொடுத்த பங்குகள் - BPL, Videocon, Sterlite போன்றவை.

BPL பங்குகள் 137%, விடியோகான் பங்குகள் 232% ஸ்டெரிலைட் பங்குகள் 41% என மூன்றே மாதத்தில் பங்குகள் விலை எகிறின. ஹர்ஷத் மேத்தா இதை எப்படி செய்தான் ? நாரிமன் பாய்ண்டில் இருந்த Growmore Research & Asset Management Ltd நிறுவனம் தம்யந்தி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. ஹர்ஷத் மேத்தா இந்த நிறுவனத்தில் தனக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோற்றத்துடன் தன் மைத்துனர்களிடம் நிறுவனத்தை ஒப்படைத்து விட்டு பங்குச்சந்தையை பற்றி பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் பத்திகள் எழுத தொடங்கினான். அவனுக்கு பட்டுக்கம்பளம் விரித்த பத்திரிக்கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை குழுமமும் ஒன்று. அந்த பத்திரிக்கை தான் இந்த ஊழல் கதையை சுசித்தா தலால் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தது என்று நினைக்கும் பொழுது இந்த சுழற்சி வியப்பளிக்கிறது. ஆனால் தங்கள் பத்திரிக்கையின் விற்பனையை பெருக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்ற நோக்கிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்று நினைக்கும் பொழுது வியப்பு ஏற்படாது. இந்த உலகின் யதார்த்த நிலை தான் நம் கண் முன்னால் விரியும்.

ஹர்ஷத் மேத்தாவின் இரண்டாவது இன்னிங்சில் BPL, விடியோகான், ஸ்டெரிலைட் போன்ற நிறுவனங்கள், மும்பை பங்குச்சந்தையின் சில அதிகாரிகள், தம்யந்தி நிறுவனம் என பலர் கூட்டணி அமைத்துக் கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்கவர் மும்பை பங்குச்சந்தையின் இயக்குனர்களில் ஒருவரான ராஜேந்திர பாந்தியா. மும்பை பங்குச்சந்தையின் இயக்குனராக இருக்கும் இவருடைய பினாமி பங்குத் தரகு நிறுவனத்துடன் ஹர்ஷத் மேத்தா கூட்டணி அமைத்துக் கொண்டான். இது சாதாரண கூட்டணி அல்ல. பல தரப்பினரை உள்ளடக்கிக் கொண்ட பிரமாண்டக் கூட்டணி. சுமார் 30க்கும் மேற்பட்ட தரகு நிறுவனங்களை ஒன்று சேர்த்துக் கொண்டான். அதில் 18 முக்கியமான தரகு நிறுவனங்களும் அடங்கும். இது போதாதா, தனியாளாக இருந்து பங்குச்சந்தையை உயர்த்தியவன் இப்பொழுது கூட்டணி அமைத்து சில நிறுவனங்களின் பங்குகளை உயர்த்துவது என்று முடிவு செய்தான். தன் நிறுவனப் பங்குகளை உயர்த்துமாறும் இந்த நிறுவனங்கள் ஹர்ஷத் மேத்தாவிடம் கூறின.

இந்த மெகா கள்ளக் கூட்டணி தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவார்கள். ஹர்ஷத் மேத்தா இந்தப் பங்குகளை வாங்குமாறு முதலீட்டாளர்களுக்கு டிப்ஸ் கொடுப்பான். இவ்வாறு இந்த கூட்டணி மூன்றே மாதங்களில் இந்தப் பங்குகளின் விலையை எகிறச் செய்தன. உதாரணத்திற்கு BPLல் வர்த்தகம் செய்யப்பட்ட மொத்த பங்குகளின் எண்ணிக்கையான 55 லட்சம் பங்குகளில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானப் பங்குகளை இந்தக் கள்ளக் கூட்டணி தன் கையில் வைத்திருந்தது. பங்குகளின் விலை எப்படி எகிறுகிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் (தெரியாதவர்கள் முந்தைய அத்தியாயத்தை படியுங்கள்). இவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டே இருக்க பங்குகளின் விலை எகிறியது. 1998ம் ஆண்டு துவக்க மாதங்களில் 100 முதல் 180 ரூபாயில் இருந்த BPL பங்குகள் அடுத்த மூன்று மாதங்களில் 445 ரூபாய்க்கு எகிறியது. அது போலவே விடியோகான் பங்குகள் 25 ரூபாயில் இருந்து 165க்கு உயர்ந்தது.

சரி..இவ்வாறு பங்குகளை உயர்த்துவதற்கு பணம் வேண்டுமே எங்கிருந்து அந்தப் பணம் கிடைத்தது ? இந்த ஊழல் மூலமாக ஏதாவாது புதிய ஓட்டையை கண்டு பிடித்துக் கொண்டானா ?

ஹர்ஷத் மேத்தாவிற்கு தங்கள் பங்குகளை உயர்த்துமாறு கூறிய நிறுவனங்களே பணம் கொடுத்தன. இது தவிர பங்கு வர்த்தகத்தில் இருந்த சில ஓட்டைகளையும் இந்த கூட்டணி பயன்படுத்திக் கொண்டது. அதில் குறிப்பிடத்தககது கப்ளி (Kapli) என்று சொல்லப்படும் ஒரு முறை. பங்குச்சந்தையில் Clearing System என்று ஒன்று இருப்பது அனைவருக்கும் தெரியும். இறுதி செட்டில்மெண்ட் இது மூலமாகவே செய்யப்படும். இந்த கப்ளி முறையைக் கொண்டு தரகர்கள் Clearing System ல் தங்களது மற்றொரு Clearing Systemமை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது தரகர்கள் இடையே வர்த்தகத்திற்கான பணப்பட்டுவாடாவிற்கு பதிலாக கப்ளி அல்லது Credit Notes என்று சொல்லப்படும் காசோலை போன்ற ஒன்றை கொடுத்து தங்களது கணக்கை நேர் செய்து கொள்ளும் முறை உண்டு. இது தரகர்கள் பணத்தை தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் வட்டி பிரச்சனையில்லாமல் வர்த்தகம் செய்து கொள்ளும் பிரச்சனையில்லாத வர்த்தகமாக இருந்தது. இந்த புதிய ஊழலின் பொழுது இந்த தரகர் கூட்டணி தங்களுக்கிடையே வர்த்தகங்களை செய்வார்கள். பணம் செட்டில்மெண்ட் செய்ய நேரிடும் பொழுது கப்ளி என்னும் Credit Notes கொடுத்து விடுவார்கள்.

இந்தக் கள்ளக் கூட்டணி இது தவிர பல வழிகளில் தங்கள் வர்த்தகததைச் செய்தன. ஒரு தரகர் தனது லிமிட்டை அடைந்துவிட்டால் மற்றொரு தரகர் மூலமாக வர்த்தகம் நடக்கும். பங்குகள் வாங்குவதற்கான பணத்தையும் தங்களுக்கிடையே பரிமாறிக் கொண்டனர். இது தவிர மற்றொரு அதிர்ச்சி தரும் உண்மையும் உண்டு. அது தான் இரவில் BSE ன் Trading System ல் இந்தப் பங்குகளில் வர்த்தகம் செய்தது போல போலியான பரிமாற்றங்களை நுழைத்து விடுவார்கள். BSEன் Vice President அந்தஸ்தில் இருந்த உயர் அதிகாரிகளும் இந்த ஊழலில் பங்கு வகித்ததால் அவர்களால் இதனைச் செய்ய முடிந்தது. இந்த போலியான வர்த்தகத்தை BSE கணினியில் நுழைத்ததாலும் கணிசமான அளவு பங்குகள் உயர்ந்தன.

இவ்வாறு உயர்த்தப்பட்ட இந்தப் பங்குகளில் மிக அதிகமான கப்ளிக்களும், Carry Forward முறைகளும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய கப்ளி முறையும், Carry Forward முறையும் இப்பொழுது தடை செய்யப்பட்டுவிட்டன.

ஆனால் தனது இரண்டாவது இன்னிங்சில் ஹர்ஷத் மேத்தாவால் அதிகமான பணத்தை திரட்ட முடிய வில்லை என்பதால் பங்குக் குறியீடுகளில் உயர்வு ஏற்படவில்லை. ஹர்ஷத் மேத்தா மற்றும் கூட்டணியால் சுமார் 200% உயர்வை இந்தப் பங்குகள் பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது BSE குறியீடு சுமார் 11% வீழ்ச்சியையே கண்டது.

இந்த ஊழல் கதையையும், தடைசெய்யப்பட்ட சில முறைகள் பற்றியும் அதில் இருந்த ஓட்டைகள் குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

அடுத்தப் பதிவுடன் இந்தியப் பங்குச்சந்தை ஊழலின் முதல் பகுதியை நிறைவு செய்கிறேன்

Leia Mais…
Tuesday, November 21, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 8

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு)

1208, நாரிமன் பாயிண்ட், ஹர்ஷத் மேத்தாவின் கனவுத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகம். ஆம், கனவுத் தொழிற்சாலைத் தான். கனவுகளை முதலீட்டாளர்களுக்கு விற்பனைச் செய்யத Growmore Research & Asset Management Ltd என்ற பங்குத்தரகு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பங்குகளின் விலையை உயர்த்தும் வித்தைக்கு இங்கு தான் விதை விதைக்கப்பட்டது.

1991, நரசிம்மராவ் தலைமையில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை துவங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விதை விதைத்தார். இருக்கமாக மூடிவைக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரக் கதவுகள் அகலத் திறக்கப்பட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதினர். பங்குச்சந்தையின் மேதையான ஹர்ஷத் மேத்தாவும் இந்த பொருளாதார வளர்ச்சி பங்குச்சந்தைக்கு ஏற்றம் கொடுக்கும் என்று சரியாகக் கணித்தான். ஆனால் பங்குகள் வாங்குவதற்கு நிறையப் பணம்
தேவைப்படுமே ? அதற்கு தான் நாட்டின் வங்கித் துறையில் இருந்த ஓட்டையைப் பயன்படுத்தி பணத்தைச் சேகரித்தான். அதைத் தான் விரிவாக முந்தைய வாரங்களில் பார்த்தோம்.

சேகரிக்கப்பட்ட பணம் பங்குச்சந்தைக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை பல காலங்கள் இந்த ஊழல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கும். ஹர்ஷத் மேத்தாவின் கனவெல்லாம் பங்குச்சந்தை தானே ? எனவே இயல்பாக இந்தப் பணத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து விட்டான். பத்திர ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றொரு தரகரான ஹித்தன் தலால் வெறும் பத்திரத் தரகராக இருந்ததால் பங்குச்சந்தை ஊழலில் அதிகமாக அவனது பெயர் அடிபடவில்லை. ஹர்ஷத் மேத்தா பத்திர ஊழலில் சேர்த்தப் பணத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து பல வருடங்களாக தணியாமல் இருந்த தன் கனவைத் தணித்துக் கொண்டான். ஆனால் அதற்காக நாடு கொடுத்த விலை மிக அதிகம்.

ஜுன் 1991, மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 1170ல் இருந்தது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் குறியீடு 4467 புள்ளிகளை எட்டியது. 11 மாதங்களில் 3297 புள்ளிகள் உயர்வு. இந்தயப் பங்குச்சந்தை வரலாற்றின் பிரம்மிக்கத்தக்க உயர்வு. நரசிம்மராவ் அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அனைவரும் நினைத்தனர்.

ஜனவரி 1992, மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 2000 புள்ளிகளைக் கடந்தது. ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். ஹர்ஷத் மேத்தா எந்தப் பங்குகளில் முதலீடு செய்கிறானோ அதைப் அப்படியே பின்பற்றி முதலீடு செய்தால் போதும். நம் பணம் பெருகி விடும் என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கும், பிற தரகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. ஹர்ஷத் மேத்தாவிற்கு Big-Bull என்றச் செல்லப் பெயரும் பங்குச்சந்தை வட்டாரங்களில் சூட்டப்பட்டது. பங்குச்சந்தையில் எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அரசுக்கே அறிவுறுத்தும் வகையில் ஹர்ஷத் மேத்தா புகழ் பெற்றிருந்தான். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் கே.பி.கீதாகிருஷ்ணன் ஹர்ஷத் மேத்தாவை பங்குச்சந்தையில் எத்தகைய சீர்திருந்திருங்களை மேற்கொள்ளலாம் என்ற விவாதத்திற்கு அழைத்திருந்தார். ஹர்ஷத் மேத்தாவின் கருத்துக்கு மைய அரசே முக்கியத்துவம் கொடுத்தது என்னும் பொழுது சாதாரண முதலீட்டாளர்களை கேட்கவா வேண்டும். ஹர்ஷத் மேத்தவை அப்படியே பின்பற்றினர்.

ஊர் பெயர் தெரியாதப் பங்குகள் எல்லாம் எகிறின. கர்நாடகா பால் பியரிங் என்றொரு நிறுவனம். தற்பொழுது எந்தப் பங்குச்சந்தையிலும் இந்தப் பங்குகள் இல்லை. ஆனால் அன்றைக்கு ஹர்ஷத் மேத்தாவின் Growmore தரகு நிறுவனத்தின் Portfolio வில் இந்தப் பங்கு இருந்தது. பைசா பிரயோஜனம் இல்லாத இந்தப் பங்கு 1000 ரூபாயை எட்டியது.

பிப்ரவரி 1992, மைய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரம். குறியீடு 3000 ஐ எட்டியது. ஒரே மாதத்தில் பல மடங்கு உயர்வு. ஹர்ஷத் மேத்தா புகழின் உச்சியை அடைந்தான். 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப் பெரிய வீட்டில் ராஜா போல வாழ்ந்தான். அவனது வீட்டில் நீச்சல் குளம் தவிர ஒரு கோல்ப் மைதானமும் இருந்தது. பலக் கார்கள். இதில் 10 கார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஹர்ஷத் மேத்தவிற்கு மிகவும் பிடித்த கார் டோயோட்டா லெக்சஸ். இது போல பல டோயோட்டோ மாடல்கள் அவனிடம் இருந்தன.

பங்குச்சந்தை உயர்வதைக் கண்ட பலச் சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினர். பலரின் பல வருடச் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. தங்கள் ஓய்வுதியத்தையும் பலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள். ஹர்ஷத் மேத்தா எந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளானோ அந்தப் பங்குகளில் தான் அவர்கள் முதலீடு செய்தனர். கர்நாடகா பால் பியரிங் (Karnataka Ball Bearing), மஸ்தா லீசிங் (Mazda Leasing) போன்ற ஊர் பெயர் தெரியாதப் பங்குகள். சிறு முதலீட்டாளர்கள் இவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று தான் ஹர்ஷத் மேத்தாவும் எதிர்பார்த்தான். இந்தப் பங்குகள் எல்லாம் எகிறிக் கொண்டே இருந்தது.

ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திய வித்தைகளிலேயே மிக எளிமையான வித்தை பங்குச்சந்தையை உயர்த்தியது தான். பங்குச்சந்தையை உயர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நிறையப் (நிறைய….) பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் உயர்த்தலாம். ஒரு சிலர் கூட்டணி அமைத்தும் உயர்த்தலாம். இதற்கு தேவை மூளை கூட இல்லை. நிறையப் பணம். அவ்வளவு தான். ஹர்ஷத் மேத்தாவும் இதைத் தான் பின்பற்றினான். அவனுக்கு கைகொடுத்தது சிறு முதலீட்டாளர்களின் அறியாமை.

ஒரு பங்கு எவ்வாறு உயருகிறது ?

Demand/Supply இந்த சின்னத் தத்துவம் தான் பங்குகளின் விலையை உயர்த்துகிறது. ஒரு பொருளுக்கு தேவை அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பொருளின் விலை உயரும். தேவையில்லாதப் பொருள் அல்லது நிறையப்பேர் விற்கும் பொருள் கடுமையாகச் சரியும்.

ஹர்ஷத் மேத்தாவிற்கு வங்கிகளில் இருந்த பல ஓட்டைகள் மூலமாக நிறையப் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கினான். நிறையப் பணம் இருந்ததால் நிறையப் பங்குகளை அவனால் வாங்க முடிந்தது. அவன் வாங்கியப் பங்குகளின் விலை எகிறியது. இது செயற்கையாகச் செய்யப்படும் ஏற்றம். இந்த ஏற்றத்தைக் காணும் சிறு முதலீட்டாளர்கள் என்னச் செய்வார்கள் ? இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரே முதலீட்டு தத்துவம் தான். எந்தப் பங்கு விலை எகிறுகிறதோ அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். அவ்வளவு தான். ஹர்ஷத் மேத்தாவை பின்பற்றி அவன் முதலீடு செய்தப் பங்குகளையே எல்லோரும் வாங்குவார்கள். பங்குகள் மேலும் எகிறும்.

பங்குகளை வாங்குவதற்கான ஏற்ற விலையில் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஒரு முறை இருக்கிறது. அதற்கு பெயர் தான் டெக்னிகல் அனலிசிஸ். எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாத முறை இது. பங்குகளின் தற்போதையச் சூழலை வைத்து பங்குகளை வாங்கலாமா/வேண்டாமா என்று முடிவுச் செய்யும் முறை. இதில் பல முறைகள் இருக்கிறது என்றாலும், சிம்பிளாக சொல்வதென்றால் ஒரு பங்கு ஏற்றத்துடன் இருக்கும் பொழுது அந்தப் பங்குகளை வாங்கலாம் என்று தான் இந்த டெக்னிகல் அனலிசிஸ் பரிந்துரைக்கும். முதலீட்டாளர்களும் அதைத் தான் செய்வார்கள். ஏற்றத்துடன் இருக்கும் பங்குகளை அப்படியே வாங்குவார்கள். பங்குகளின் அடிப்படையை ஆராயும் முறையை சிறு முதலீட்டாளர்கள் கண்டு கொள்வதே இல்லை. அது தான் ஹர்ஷத் மேத்தா போன்ற பேராசைத் தரகர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் உயரும் பங்குகளை நோக்கி படையெடுத்தவுடன் விலை மேலும் எகிறும். தான் எதிர்பார்த்தது போல பங்குகள் விலை எகிறியவுடன், தன்னுடையப் பங்குகளை ஹர்ஷத் மேத்தா உடனே விற்பான். மொத்தமாக நிறையப் பங்குகள் விற்கப்படும் பொழுது பங்குகளின் விலைச் சரியும். ஹர்ஷத் மேத்தாவிற்கு மட்டும் நிறையப் பணம் கிடைக்கும். பாவம் அப்பாவி சிறு முதலீட்டாளர்கள். அவர்களின் சேமிப்பெல்லாம் கரைந்து போய்விடும்.

இவ்வளவு தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திய டெக்னிக். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது தான் அன்றைக்கு இந்தியப் பங்குச்சந்தையின் லட்சணம்.

மார்ச் 1992, ஹர்ஷத் மேத்தாவின் வித்தையால் குறியீடு 4000 புள்ளிகளை எட்டியது. ஹர்ஷத் மேத்தா தான் எல்லாப் பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திலும் காணப்பட்டான். அவன் தான் பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையான செல்வாக்கு. கரடிகளுக்கு வேர்கடலை கொடுத்து தான் பங்குச்சந்தையை வெற்றிக் கொண்டதாக சிம்பாளிக்காக கண்பித்தான் (இந்தத் தொடரின் முதல் பாகத்தை படியுங்கள், கரடிகளுக்கு வேர்கடலை கொடுத்த காரணம் புரியும்).

ஏப்ரல் 1992, குறியீடு 4400 ஐ எட்டியது. பலப் பங்குகள் பல மடங்கு அதிக விலையில் இருந்தது. ஹர்ஷத் மேத்தாவிற்கு மிகவும் பிடித்தமானப் பங்கு சிமெண்ட் நிறுவனமான ACCன் பங்குகள். இன்றைக்கு 370 ரூபாய் இருக்கும் இந்தப் பங்குகள் ஹர்ஷத் மேத்தாவால் 10,000 ரூபாயை எட்டியது. இது தவிர ரிலயன்ஸ், TISCO போன்ற பங்குகளும் ஹர்ஷத் மேத்தாவால் எகிற வைக்கப்பட்டன.

1992, ஏப்ரல் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. சுசித்தா தலால் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இந்த ஊழல் கதையை அம்பலப்படுத்தினார்.

ஹர்ஷத் மேத்தா என்ற தனி மனிதன் இந்தியப் பொருளாதாரத்தின் குறியீடு என்றுச் சொல்லப்படும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டை தன்னந்தனியாளாக 3000 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிற வைத்தான் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறதல்லவா ?

இந்த ஊழல் கதையை பற்றிச் சொல்லும் பொழுது 3500 கோடி பங்குச்சந்தை ஊழல் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஊழல் கதையை சுசித்தா தலால் வெளியிட்டப் பிறகு ஒரே வாரத்தில் குறியீடு சுமார் 2800 புள்ளிகள் சரிவுற்றது. 1,00,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள முதலீட்டாளர்களின் சேமிப்பு கரைந்துப் போனது. பல முதலீட்டாளர்கள், வங்கி ஊழியர்கள், தரகர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியப் பங்குச்சந்தையின் மாபெரும் உயர்வுக்கு காரணமாக ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையின் மாபெரும் சரிவிற்கும் காரணமானான். அவன் மேல் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஹர்ஷத் மேத்தா கைது செய்யப்பட்டான். அவனது பங்குகள், வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஆனால்…ஹர்ஷத் மேத்தாவின் கதை இத்துடன் நின்று விடவில்லை.

1208, நாரிமன் பாயிண்ட்ல் இருந்து, 1992ல் செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனமான Growmore Research & Asset Management Ltd, 1997ல் தம்யந்தி (Damayanti Group) என்ற பெயரில் மறுபடியும் பங்குச்சந்தையில் நுழைந்தது. இம் முறை ஹர்ஷத் மேத்தாவிற்கு பட்டுக்கம்பளம் விரித்தது, இந்த ஊழல் கதையை முதன் முதலில் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியா என்பது தான் வருத்தமான விஷயம்.

இந்த ஊழல் கதையின் இன்னும் பல விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் தொடர்ந்து பார்ப்போம்.

Leia Mais…
Thursday, November 16, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 7

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு)

பங்குச்சந்தை தான் ஹர்ஷத் மேத்தாவின் கனவு. சாதாரணக் கனவு அல்ல. பெரியக் கனவு. “நான் கனவுகளை விற்க முயலுகிறேன். பணத்தை உருவாக்குவது மிக எளிதான வேலைத் தான். பணம் சம்பாதிக்கப் பங்குச்சந்தைக்கு வாருங்கள்” என்று முதலீட்டாளர்களுக்கு அவன் அழைப்பு விடுத்தான்.

பங்குச்சந்தை மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்தான். இந்தியாவின் மாபெரும் பங்குச்சந்தை ஊழலுக்கு வித்திட்ட ஹர்ஷத் மேத்தா, அத் துறையைப் பற்றி கல்லூரிக்குச் சென்று படிக்காதவன். எல்லாம் அனுபவப் பாடம் தான். பல கஷ்டங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட வித்தை.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய்ப்பூர் தான் ஹர்ஷத் மேத்தாவின் சொந்த ஊர். தன் தம்பி அஸ்வினுடன் மும்பைக்கு குடியேறி நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காசாளாராக வேலைக்குச் சேர்ந்தான். பங்குச்சந்தை மீது ஒரு அபரிதமானக் காதல். காசாளாராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உணவு இடைவேளையின் பொழுது மும்பை பங்குச்சந்தைக்கு ஓடி வருவான். அப்பொழுதெல்லாம் இணையம், கணினி மயமான வர்த்தகம் இல்லாத நேரம். பங்குகளைக் கூவி கூவி விற்பார்கள். அந்த வர்த்தகத்தின் மீது அவனுக்கு அபரிதமானக் காதல். பணம் சம்பாதிக்கும் திடமான வழி இது தான் என்று நம்பினான். பங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன், கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான்.

பங்குகளைக் கற்பதே கொஞ்சம் கடினம் தான். அதில் நிபுணராக ஆவது அதைவிடக் கடினம். வெறும் ஏட்டுச் சுரக்காயைக் கொண்டு பணம் சம்பாதித்து விட முடியாது. ஹர்ஷத் மேத்தாவிற்கு ஏட்டுச் சுரக்காய் தெரியாது. அதனால் நிறைய நஷ்டம் அடைந்தான். நஷ்டங்கள் அவனுக்கு அனுபவத்தைக் கொடுத்தது. முதலீட்டில் தேர்ச்சிப் பெற்றான். அத்துடன் அவனது கனவு நின்றுவிடவில்லை. அவன் கனவின் முக்கியமான ஒன்று பங்குத் தரகராக வேண்டும் என்பதே. தரகராவது சாதாரணமான விஷயம் இல்லை. முதலில் ஒரு புரோக்கரிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் சப் புரோக்கராகச் சேர்ந்தான். ஆனால் அதன் பிறகு அவனது வளர்ச்சி பிரம்மாண்டமானது.

ஹர்ஷத் மேத்தாவின் கனவு தான் அவனை ஒவ்வொரு கட்டத்திலும் வழி நடத்தியது. பங்குச்சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் பங்குச்சந்தையில் நுழைந்து, புரோக்கராக உயர்ந்ததுடன் அவனது கனவு நின்று விட வில்லை. "கனவுகளை காசாக்கலாம்" என்று யோசித்தான். இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தான் ஒரு வழிக்காட்டியாக மாற வேண்டும் என்று நினைத்தான். சினிமா ஸ்டார்கள் பின் அலையும் ரசிகர்கள் போல தன் பின்னால் முதலீட்டாளர்கள் அணிவகுக்க வேண்டும் என்று பேராசைப்பட்டான். அது தான் அவனை பங்குச்சந்தையின் மிகப் பெரிய புரோக்கர் (Big Bull) என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது. இந்த நிலைக்குச் செல்வதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி தான் அவனை இறுதியில் வில்லனாகவும் மாற்றியது.

அவனது கனவிற்கு ஏற்றாற்ப் போலவே அவன் தொடங்கியத் தரகு நிறுவனத்தின் பெயரும் அமைந்திருந்தது. தனது சகோதரர்கள், அஸ்வின் மேத்தா, ஜோதி மேத்தா ஆகியோருடன் இணைந்து அவன் தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் - Growmore Research & Asset Management Ltd. இந்தப் பெயருக்கு தகுந்தாற்ப் போலவே அவனது வளர்ச்சியும் அபாரமானதாக இருந்தது. பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். பல அட்டைப்படங்களை அலங்கரித்தான். இதற்கு உண்மையானக் காரணம் பங்குச்சந்தைக்கு வங்கிகளில் இருந்து கடத்தப்பட்ட பணம் தான். என்றாலும் இதைச் செயல்படுத்திய மூளை அபாரமானது.

ஆனால் ஹர்ஷத் மேத்தாவின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் ? அவன் மட்டுமே காரணமல்ல ? கடந்த சில வாரங்களாக நாம் கவனித்த வங்கிகளில் இருந்தச் சில ஓட்டைகள் மட்டுமே காரணமல்ல. நாம் அனைவருமே காரணகர்த்தாக்கள்.

நாம் எப்படி காரணமாகமுடியும் என்று கேட்கிறீர்களா ?

நம்முடைய அறியாமை தான். சிறு முதலீட்டாளர்கள் பலரின் அறியாமை. பங்குச்சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள். படிக்காதவர்கள் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். திவாலாகிப் போன நிதி நிறுவனங்களின் பின் அலைவார்கள். ஆனால் நம்மைப் போல நன்கு படித்தவர்கள் அறிவாளித்தனமாகச் சிலர் பேசினால், அவர்களை அதி புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறோம்.

ஒரு பங்கு உயரும் பொழுது, அந்தப் பங்குகள் ஏன் உயருகிறது ? இந்த உயர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. உயரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சீக்கிரமாக நம் பணம் பல மடங்காகப் பெருக வேண்டும் என்ற பேராசை தான் தலைத்தூக்குகிறது. பங்குகளை ஆராய்வதற்கு நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண முதலீட்டாளர்கள், பங்குகளை நன்று அறிந்து, ஆய்வு செய்து நிறையப் பணம் சம்பாதித்தும் இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரியாத ஒன்றை ஒருவன் செய்யும் பொழுது சிறு முதலீட்டாளர்களை மட்டுமே குறைச் சொல்லி என்னச் செய்வது என்று கேட்கிறீர்களா ?

ஆனால் ஹர்ஷத் மேத்தா ஒரு முறை மட்டுமே இதைச் செய்ய வில்லை. 1992 ஊழலுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளிவந்த ஹர்ஷத் மேத்தா 1997ல் மறுபடியும் இந்த ஊழலைச் செய்ய முயன்றான். ஓரளவுக்கு அதற்கு பலனும் கிடைத்தது. இது எதைக் காட்டுகிறது ? நம் அறியாமை என்பதைத் தவிர வேறு என்னச் சொல்வது.

இது தவிர ஊடகங்களின் பணத்தாசை. ஹர்ஷத் மேத்தாவை மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக கட்டியப் பத்திரிக்கைகள் பின் அவனை வில்லனாகச் சித்தரித்தன. பிறகு அவனைக் கொண்டே பணத்தை பெருக்க நினைத்தன.

1992ல் ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் 1997ல் தன் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்று முடிவுச் செய்தது. ஹர்ஷத் மேத்தாவைக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முதலீட்டு பத்தியையும் தொடங்கியது.

பத்திரிக்கைகளின் பொறுப்பு எத்தகையது என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

இங்கு பணம் தான் பிரதானம். மற்றதெல்லாம் அர்த்தமற்றது. இதில் பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள் அல்ல - “யோசிக்காமல் முதலீடு செய்யும் அறிவாளிகள்”

ஆனால் ஹர்ஷத் மேத்தாவை இன்றும் பலர் ஹீரோவாகத் தான் பார்க்கிறார்கள். பங்குச்சந்தையை உயர்த்தியதால், இந்தியப் பங்குச்சந்தையின் சூட்சமங்களை வெளிப்படுத்தியதால் அவனை பலர் ஹீரோவாகப் பார்கிறார்கள்.

பங்குச்சந்தையை உயர்த்திய ஹர்ஷத் மேத்தாவின் வித்தையை அடுத்தப் பதிவில் பார்ப்போம்

Leia Mais…
Wednesday, November 15, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 6

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து)

கடந்தப் பாகத்தில் பத்திரங்களே இல்லாமல் கடன் பெறும் முறையை BR எனப்படும் Bank Receipt மூலம் செய்ய முடியும் என்று பார்த்தோம். இந்த BR கொண்டு பணம் பெறும் முறையையும் ஹர்ஷத் மேத்தா, ஹித்தன் தலால் போன்றப் பங்குத்தரகர்கள் தங்களின் பணத்தேவைக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

அதாவது பத்திரங்களே தேவைப்படாமல் ஏதாவது ஒரு வங்கியில் BR பெற்று விடுவார்கள். அந்த BRஐ கொண்டு Ready Forwards அல்லது ரெப்போ வர்த்தகம் மூலம் பிற வங்கிகளுக்கு விற்பார்கள். விற்கும் வங்கிக் கொடுக்கும் காசோலையை தங்களின் வங்கிக் கணக்குக்கு கொண்டுச் சென்று விடுவார்கள். இதற்காகப் பலச் சிறிய வங்கிகளை தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டார்கள். அதிகம் அறியப்படாத வங்கிகளான கர்நாட் வங்கி Bank of Karad - BOK), மெட்ரோபாலிட்டன் கூட்டுறவு வங்கி (Metropolitan Cooperative Bank - MCB) போன்ற வங்கிகளின் உயர் அதிகாரிகளை தங்களின் ஊழல் கூட்டணிக்கு உடந்தையாக கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். இந்த வங்கிகளில் இருந்து BR பெற்று அந்த BR பணமாக மாற்றப்பட்டு பங்குச்சந்தையில் நுழையும்.

இப்படி பல இடங்களில் இந்த ஊழல் கதைகள் நடந்து கொண்டிருந்தப் பொழுது இத்தகைய வர்த்தகங்களை கண்காணிக்கும் கட்டுப்பாடுகள் என்னாயிற்று ? கண்காணிப்பில் எங்கு ஓட்டை விழுந்தது ?

வங்கிகளின் பல்வேறு வர்த்தகத்திற்குப் பலப் பிரிவுகள் உண்டு. வங்கிகளில் ஒவ்வொரு பிரிவும் தனியாகவே செயல்படவேண்டும். வங்கி, யாரிடம் கடன் வாங்குவது/கொடுப்பது என்பதை முடிவுச் செய்ய ஒரு துறை இருக்கும். வாங்கியப் பத்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒரு பிரிவு உண்டு. அது போலவே SGL கணக்குகளில் இருக்கும் வங்கியின் பத்திர கணக்கு வழக்குகளை பராமரிக்கவும் ஒரு பிரிவு உண்டு.

இந்தப் பத்திரங்களைப் பாதுகாக்கும் பிரிவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இருப்பார்கள். இரண்டு அதிகாரிகள் இருந்தால், பத்திரங்களைப் பாதுகாப்பதில் ஊழல் நடக்கும் பட்சத்தில் அதிகாரிகளில் யாராவது ஒருவர் அதற்கு உடந்தையாகப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இரண்டு அதிகாரிகள் இருக்கும் முறை அமலில் இருந்தது.

ஆனால் நாம் இந்தத் தொடரின் 4வது அத்தியாயத்தில் பார்த்ததுப் போல கஸ்டோடியன் பாதுகாப்பில் இருக்க வேண்டிய பத்திரங்கள் யாரோ சில உயர் அதிகாரிகளிடம் விதிமுறையை மீறி இருந்தது. SGL கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இது போல மற்றொரு பெரிய ஓட்டை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானலும் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தச் சூழல். அதாவது BR மூலம் பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்க முடியும் என்பது அனைத்து வங்கிகளுக்கும் தெரியும். வங்கிகளில் Risk Management என்பது முக்கியமான ஒன்று. இந்த Risk Management ல் Market Risk, Credit Risk என்று பலப் பிரிவுகள் உண்டு. இதற்குள்ளெல்லாம் நாம் செல்ல வேண்டாம். Credit Risk என்பதைப் பற்றி மட்டும் கவனிப்போம்.

பெயரைப் போலவே இது கடன் கொடுப்பதால் வரும் பிரச்சனைகளை அலசும் பிரிவு. கடன் பெறும் வங்கியின் பயனாளர்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பார்களா என்று அலசி ஆரய்வது தான் இந்தப் பிரிவின் முக்கிய வேலை. பயனாளர்கள் ஒவ்வொருவரின் creditworthiness அலசப்பட்டு அவர்களின் மதிப்பிற்கேற்ப ஒரு உச்சவரம்பு விதிக்கப்படும். இதற்கு Limit என்றுப் பெயர். இந்த லிமிட்க்குள் தான் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். இதற்கு அதிகமாக கடன் வழங்கப்படமாட்டாது.

ஆனால் பத்திர ஊழல் நடைப்பெற்ற பொழுது, சிறிய வங்கிகளான கர்நாட் வங்கி போன்றவற்றுக்கு அதன் லிமிட்டை விட அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதனைச் செய்தது ஏதோ நம்மூர் வங்கிகள் மட்டுமல்ல. சர்வதேச வங்கியான Standard Chartered கூட லிமிட்டை கொஞ்சம் கூட மதிக்காமல் பல கோடிகளை சிறிய வங்கிகளுக்கு ரெப்போ மூலம் வாரி வழங்கியுள்ளது.

சரி..வங்கிகள் தான் இவ்வாறு கண்காணிப்பில் கோட்டை விட்டன என்றால், கண்காணிப்பதற்கென்றே இருக்கும் ரிசர்வ் வங்கி என்னச் செய்து கொண்டிருந்தது ?

ரிசர்வ் வங்கி அதன் கண்காணிப்பு பிரிவான PDO மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் என்று பார்த்தோம். PDO வின் வேலை வங்கிகளிடமிருக்கும் பத்திரங்களை எல்லாம் அதன் விற்பனைக்கேற்ப பராமரிப்பது. ஆனால் இந்தப் பராமரிப்பு சரியாகச் செய்யப்படவில்லை. SGL ரிசிப்டுகள் பவுன்சாகும் பட்சத்தில் வங்கிகளிடம் உடனடியாக அது தெரிவிக்கப்பட
வேண்டும். ஆனால் பேப்பர் ஒர்க் மூலம் பல செயல்கள் நடந்துக் கொண்டிருந்ததால் இது சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இப்படி பல ஓட்டைகளுக்கிடையில் ஊழல் ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.

சரி.. நாம் கதைக்கு வருவோம். ஹர்ஷத் மேத்தா கதை என்று சொல்லிவிட்டு ஊரில் இருக்கும் அனைத்து கணக்கு வழக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா ? என்னச் செய்வது ? மேலே கூறிய ஓட்டைகள் இல்லாவிட்டால் ஹர்ஷத் மேத்தா என்ற கிரிமினல் உருவாகியிருக்க மாட்டானே. ஒரு சிலர் ஹர்ஷத் மேத்தா இந்த ஊழலில் பலிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டான், பலப் பெரிய மீன்கள் இதில் சிக்காமல் தப்பி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது.

பல கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த ஊழல் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. உயர் அதிகாரிகள் என்றால் மேலிடத்திலுள்ள மிகப் பெரிய அதிகாரிகள். ஆனால் இந்தத் தொடரின் நான்காவது பாகத்தில் கூறியிருந்த பவ்தேக்கர் போன்ற பல அப்பாவிகளை சிக்க வைத்து விட்டு பல உயர் அதிகாரிகள் தப்பி விட்டனர்.

ஒரு வெளிநாட்டு வங்கியில் Credit Risk Management பிரிவிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நான் அந்தத் துறையில் தான் வேலைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பயனாளரின் (Counterparty) கணக்கு வழக்குகளும் கடுமையாக அலசப்படும். பல்வேறுச் சூழ்நிலைகளை செயற்கையாக உருவாக்கியும் அலசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வங்கியான Standard Chartered வங்கி கொஞ்சம் கூட அலசாமல் கடன் கொடுத்தது என்பதை ஏற்க முடியாது. விதிமுறைகளை மீறி கடன் கொடுக்க வேண்டுமென்றால் அந்த வங்கியின் முக்கிய அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். கைமாறியப் பணத்தில் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை. ஹர்ஷத் மேத்தாவும் சில அதிகாரிகளும் தான் சிக்கிக்கொண்டனர். பெரிய மீன்கள் தப்பி விட்டனர்.

என்ன ஹர்ஷத்மேத்தாவை முதலில் வில்லன் என்றீர்கள், இப்பொழுது பலிகடா என்கிறீர்களே என்று கேட்கிறீர்களா ? ஹர்ஷத்மேத்தா நிச்சயம் வில்லன்தான். வில்லன்களின் இரு வகை இருக்கிறார்கள். மறைமுக வில்லன், நேரடி வில்லன். மறைமுக வில்லன்கள் பல நேரங்களில் தப்பி விடுகிறார்கள். நேரடி வில்லன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹர்ஷத் மேத்தா நேரடி வில்லன்.

சரி…இந்த ஊழல் கதையில் பத்திரங்களின் பங்குகளை பார்த்து விட்டோம். இங்கிருந்து நகர்ந்து அடுத்த பதிவில் Dalal Street க்கு வருவோம்.

Leia Mais…
Monday, November 13, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 5

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SGL ரிசிப்ட்ஸ்களை விற்கும். அதனை National Housing Board நிறுவனம் வாங்கும். இதற்கு இடைத்தரகராக ஹர்ஷத் மேத்தா செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பத்திரங்களை விற்றப் பணம், ஸ்டேட் பாங்க் வங்கிக்கு செல்லாமல் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்குக்குச் சென்று விடும்.

நாம் இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாத்தில் எப்படி வங்கிகள் தங்களுடைய Privileged/Corporate Customer களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம். அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு காசோலை வாங்காமல், வங்கிகளில் பெயரில் காசோலைப் பெற்று அதனை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்வார்கள். பரிவர்த்தனைச் செய்யும் பணத்திற்கு வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்கவே இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த முறையைத் தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திக் கொண்டான்.

பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதற்காக NHB, காசோலையை ஹர்ஷத் மேத்தாவிடம் கொடுக்கும். ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் காசோலையை தங்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்து கொள்ளுமாறு சொல்வார்கள். நடைமுறையில் இருக்கும் சலுகைப் படி ஸ்டேட் பாங்க் வங்கிக்கு கிடைக்க வேண்டியப் பணம் ஹர்ஷத் மேத்தாவின் கணக்குக்குச் செல்லும். ஹர்ஷத் மேத்தா அந்தப் பணத்தினைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துப் பங்குகளை விலை உயரச் செய்வான்.

அவன் பங்குச் சந்தையில் பங்குகளை உயர வைத்த விதம் பற்றிப் பின்பு பார்க்கலாம். முதலில் இந்தப் பத்திரங்களின் கதையை கவனிப்போம்.

மேலே உள்ள ஊழல் கதையைப் படித்தவுடன், இது என்ன அவரவர் இஷ்டம் போல நடக்கும் கூத்தாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ?

சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கவேச் செய்தன. அந்தக் கட்டுப்பாடுகளை நிறுவி கண்காணிக்க வேண்டியப் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு முறையில் பல ஓட்டைகள் இருந்தன.

SGL ரிசிப்ட்சை மட்டுமே கொண்டு இந்த ஊழல் நடைபெற்று விட வில்லை. மற்றொரு முறையையும் தரகர்கள் கையாண்டனர். இதுவும் பத்திரப் பரிமாற்றத்தில் இருந்த ஒரு ஓட்டைத் தான்.

Bank Receipt எனப்படும் BR மூலமும் பலக் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்தது. அது என்ன BR ?

பத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதிலாக வாங்கும் வங்கியும் விற்கும் வங்கியும் ரிசிப்ட் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்.

அதாவது பத்திரங்களை விற்கும் வங்கி இந்த BRல் பத்திரங்களை விற்பதாகக் கூறி வாங்கும் வங்கியிடம் கொடுக்கும். பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கும் வங்கி, குறிப்பிட்ட தேதியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடியும் பத்திரங்களை திரும்பக் கொடுப்பதாக இந்த BRல் ஒப்புக் கொடுக்கும். ஏறத்தாழ இது ஒரு ஒப்பந்தம் போலத் தான். இந்த ஒப்பந்தங்களை வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களின் பேரில் தான் மேற்கொள்ள வேண்டும்.

பத்திரங்களின் சேமிப்புக் கணக்கான SGL கணக்கு மூலமாகவே பத்திரங்கள் பரிமாறப்படுகின்றன என்று கடந்தப் பதிவில் பார்த்தோம். உண்மையான அரசு கடன் பத்திரங்கள் எப்பொழுதும் பரிமாறப்படுவதேயில்லை. மாறாக, SGL கணக்கில் இருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ற அளவில் ஒரு காசோலைப் போல SGL ரிசிப்ட்ஸ் தான் வழங்கப்படும் என்றும் பார்த்தோம். இந்த முறைப் படி BR பயன்பாட்டில் இருந்திருக்கவே கூடாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி BR மூலம் பரிவர்த்தனைச் செய்யக்கூடாது. ஆனால் இந்த முறை தான் பத்திர ஊழலில் மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்த SGL ரிசிப்ட்சை Public Debt Office (PDO) எனப்படும் ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஒரு பிரிவு தான் தன் பொறுப்பில் வைத்திருந்தது. குறிப்பிட்ட அளவுக்கு பத்திரங்கள் இல்லாவிட்டால் வங்கிகள் கொடுக்கும் ரிசிப்ட்ஸ் பவுன்ஸ் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே பத்திரங்கள் அளவு குறையும் பொழுது குறிப்பிட்ட வங்கிகளுக்கு அது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லாமே Paper Work காக இருந்தக் காலம்.

எனவே வங்கிகள் இந்த SGL ரிசிப்ட்சை அதிகமாகப் பயன்படுத்தாமல் நடைமுறை வசதிக்காக BR எனப்படும் Bank Receipt மூலமே தங்கள் பரிமாற்றதை செய்து கொண்டிருந்தன. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இம் முறை வழக்கில் இருந்தது.

வங்கிகளுக்கு இந்த BR முறையில் பல வசதிகள் இருந்தன.

  • BR மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கான இந்த டீல் முடிந்தவுடன் ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். பத்திரங்களை SGL மூலம் பரிமாறிக் கொள்வதிலுள்ள பிரச்சனைகள் இதில் கிடையாது.
  • பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறைக்கு BR உதவிகரமாக இருந்தது.

அது என்ன பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறை ?

இதற்குப் பெயர் Short Selling. பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் வழக்கிலிருக்கும் ஒரு முறை.

உங்களிடம் பத்திரங்களோ, பங்குகளோ இல்லாமலேயே விற்க முடியும்.

ஒரு நகையை விற்க வேண்டுமென்றால் உங்களிடம் கண்டிப்பாக நகை இருக்க வேண்டும். ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் தான் அதனை விற்க முடியும்.

ஆனால் பங்குகளிலும், பத்திரங்களிலும் மட்டும் தான் நம்மிடம் இல்லாதப் பத்திரங்களையும், பங்குகளையும் விற்க முடியும். இதற்கு பெயர் தான் Short Selling.

உதாரணமாக இன்போசிஸ் நிறுவனப் பங்கு சரியப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறது. தற்போதையச் சந்தை விலை 1900 ரூபாய். நீங்கள் ஒரு 100 பங்குகளை (உங்களிடம் இல்லாதப் பங்குகள்) விற்கலாம். சந்தைச் சரிகிறது. இன்போசிஸ் பங்குகளின் சந்தை விலை 1800 ரூபாய்க்குச் சரிந்து விடுகிறது. இப்பொழுது நீங்கள் 100 பங்குகளை வாங்கி விடலாம்.

நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 1800 = 1,80,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000

லாபம் = 10,000

இதற்கு நேர்மாறாக இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்து 2000ஐ எட்டினால், உங்களுடைய நஷ்டம் 10,000

நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 2000 = 2,00,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000

இதே முறையில் பத்திரங்கள் இல்லாமலே விற்று லாபம் பார்க்கலாம்.

ஒரு பத்திரத்தின் சந்தை விலைச் சரியப்போகிறது என்ற செய்தி ஒரு வங்கிக்குத் தெரியவரும். உடனே தன்னிடம் இல்லாதப் பத்திரங்களுக்கு ஒரு BR கொடுத்து விற்று விடும். சந்தை விலைச் சரிந்தப் பிறகு குறைவான விலையில் பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் லாபம் கிடைக்கும்.

BRல் இருக்கும் பல வசதிகளுக்காக வங்கிகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வர்த்தக முறையில் ஊழல் செய்வதற்கும் வய்ப்புகள் இருந்தன. இந்த வாய்ப்புகளைத் தான் ஹர்ஷத் மேத்தாவும் பிற புரோக்கர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்று அந்தப் பணத்தைப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரும் முறை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஏதோ ஒரு வங்கி மூலம் ஒரு BR.

கிரிமினல் மூளையுடைய ஹர்ஷத் மேத்தாவிற்கு இதற்கா வழி கிடைக்காமல் போய் விடும் ?


Leia Mais…
Thursday, November 09, 2006

Fundamental Analysis - P/E - 2

கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம்.

பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

P/E எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தால் இது தெளிவாகும். கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் P/E கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்று சொல்வார்கள். பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை leading or projected P/E என்று சொல்வார்கள்.

பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது. ஒரு பங்கின் உண்மையான மதிப்பை விட அது எதிர்காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது, பங்குகளின் விலையை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.

P/E = Market Price / Earnings

இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

Market Price = P/E * Earnings

ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த (ஜனவரி 2005 நிலவரம்) காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தன. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி".

P/E அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E = 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

மாறாக P/E = 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

PEG = P/E / (projected growth in earnings)

ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

ஒரு நிறுவனத்தின் P/E = 30, வளர்ச்சி விகிதம் = 15% என்றால்

PEG = 30/15 = 2

PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

References : Buffettology, Peter Lynch - One up on the wall Street

Leia Mais…
Wednesday, November 08, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 4

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Subsidiary General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதிகாரியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Subsidiary General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது.

சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை.

(எந்த தவறும் செய்யாமல் இந்த வழக்கில் சிக்கிக்கொண்ட பவ்தேக்கர் இன்றும் நீதி கேட்டு இந்திய நீதிமன்றங்களின் வாசலில் நீதிக்காக காத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்பொழுது அது குறித்து நான் எழுதிய பதிவு - நியாயம் கேட்டு ஒரு போராட்டம்


இந்திய நீதிமன்றங்களின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக வலைப்பதிவுகளில் உலாவிக் கொண்டு இருக்கும் "சிலருக்கு" இது எல்லாம் தெரியாது என்று நம்புகிறேன். இடஒதுக்கீடு, மரணதண்டனை போன்ற வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள், இந்த வழக்கு குறித்தும் நீதிமன்றத்துக்கு ஆதரவாகவும், எனக்கு நீதிமன்றங்கள் செயல்படும் முறை தெரியவில்லை என்றும் பின்னூட்டம் எழுதி விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்)


Leia Mais…

Fundamental Analysis - P/E - 1

முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, ஒரு நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, அந்தப் பங்குக்கு நாம் கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை Fundamental Analysis என்று சொல்வார்கள்.

பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள்.

  • Fundamental Analysis
  • Technical Analysis
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.

இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.

நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.

பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள் சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.

இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம்.

பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/E Ratio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.

ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).

ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.

P/E = Market Price / EPS

Market Price = பங்குகளின் சந்தை விலை
EPS = ஒரு பங்குடைய லாபம்

EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.

EPS = Net Profit / No. of outstanding shares

அதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS

ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்

EPS = 35,000 / 10,000 = 3.5

இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.

சரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.

P/E = Market Price / EPS

பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்
ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5

P/E = 35/3.5 = 10

இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது ?

P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.

மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.

நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.

மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)

நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).

இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.

இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?

P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) ?

1 என்று இருக்கும் பங்குகளில் தானே ? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.

அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire 10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.

நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிக வளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.

புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா ? அடுத்தப் பதிவில் P/E பற்றித் தொடர்கிறேன்.

குழப்பம் தெளிகிறதா என்று பார்ப்போம்.

References : Buffettology, Peter Lynch - One up on the wall Street

இந்தப் பதிவு ஜனவரி 24, 2005ல் எழுதப்பட்டது. இந்தப் பதிவின் பின்னூட்டங்களையும், தொடர்புடைய பிற சுட்டிகளையும் படிக்க இங்கே செல்லலாம்

Leia Mais…
Tuesday, November 07, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 3

பாகம் 1, பாகம் 2

கடந்த பதிவில் தரகர்களிடையே வங்கிகளின் கோடிக்கணக்கான பணம் எவ்வாறு கைமாறுகிறது என பார்த்தோம். இவ்வாறு பெரும் பணம் நம் மூலம் கைமாறும் பொழுது "அந்தப் பணத்தை நம் கணக்குக்கு கொண்டு செல்லலாமா ?” என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. சிலருக்கு தோன்றியவுடன் மறைந்து விடும். நியாயம் இல்லை என்றோ, அவ்வாறு செய்வதற்கான வழி வகை தெரியாமலோ, இல்லை பயத்திலோ இதைப் பெரும்பாலானோர் செய்வதில்லை. ஆனால் இதனை எப்படி செயல்படுத்த முடியும் என்று சிலர் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் தான் கிரிமினல்கள். ஹர்ஷத் மேத்தாவும் அதைத் தான் செய்தான்.

இவ்வாறு கைமாறும் பணத்தை தன் வங்கிக் கணக்குக்கு கொண்டு சென்று விட்டால் என்ன என்று தோன்றியவுடன் ஒரு வழி அவனுக்குத் தென்பட்டது. Account Payee காசோலைகள் குறிப்பிட்ட கணக்குகளில் மட்டுமே வரவு செய்யப்படும் என்பது நமக்கு தெரியும். என் பெயருக்கு வரும் காசோலையை உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் நிச்சயமாக வரவு செய்ய முடியாது. ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உண்டு.

ஒரு "வங்கியின் பெயரில்" Account Payee முறையில் வரும் காசோலைகள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் தவிர Current Account என்று சொல்லப்படுகிற ஒரு பெரிய நிறுவனத்தின் (Privileged/Corporate Customer) வங்கிக் கணக்குகளில் வரவு செய்து கொள்ள முடியும்.

ஏன் இந்த முறை பின்பற்றப்பட்டது ? இதுவும் ஒரு விதிமீறல் தான். ஆனால் வழக்கில் இருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமீறல்.

நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சுமார் 100 கோடி பணம் முதலீடு செய்ய உடனடியாகத் தேவைப் படுகிறது. ஒரு வங்கியிடமிருந்து (A வங்கி) கடன் பெறுகிறீர்கள். உங்களுடைய வங்கிக் கணக்கு வேறோரு வங்கியில் இருக்கிறது (B வங்கி). A வங்கியில் இருந்து, உங்கள் பெயருக்கு கடன் பெற்று B வங்கியில் உள்ள உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவு செய்ய வேண்டுமெனில் உங்களுக்கு குறைந்தது 2 நாட்கள் தேவைப்படும். முதலீடு, கடன் என்று வரும் பொழுது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முக்கியம். இவ்வாறு இரண்டு நாட்கள் உங்களுக்கு வர வேண்டிய பணம் காலதாமதாகும் பொழுது, அதனால் ஏற்படும் வட்டி இழப்பு மட்டும் பல லட்சங்கள்.

இதைத் தவிர்க்க சில முறைகளை வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கின்றன. இது எல்லா வங்கிகளும் தங்கள் Privileged Customer க்கு செய்து தரும் ஒரு வசதி. அதாவது நீங்கள் A வங்கியிடமிருந்து கடன் பெறும் பொழுது, உங்கள் பெயருக்கு கடன் பெறாமால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் B வங்கியின் பெயரில் காசோலைகளைப் பெறுகிறீர்கள். ஏன் ?

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செல்லும் பொழுது, ரிசர்வ் வங்கியில் இரு வங்கிகளுக்குமே கணக்கு இருப்பதால் அதனைக் கொண்டு ஒரே நாளில் பணத்தைப் பெற்று விட முடியும். அதனால் B வங்கியின் பெயரில் பணத்தைப் பெற்று நீங்கள் தரும் காசோலை, உங்கள் வங்கிக் கணக்குக்கு உடனடியாக வரவு செய்யப்படும். இதன் மூலம் தேவையில்லாமல் ஏற்படும் காலதாமதம், வட்டி இழப்பு போன்றவை தவிர்க்கப்படும்.

பத்திரங்களும், காசோலைகளும் தரகர்கள் மூலமாகக் கைமாறும் பொழுது வங்கியின் பெயரில் வரும் காசோலையை தங்கள் கணக்குக்கு தரகர்கள் வரவு செய்து கொள்ளத் தொடங்கினர். அதாவது ஒரு வங்கியிடமிருந்து மற்றொரு வங்கிக்கு, பத்திரங்களைக் கொண்டு கடனாக வரும் தொகையை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொண்டு விட்டார்கள். இது கூட தவறில்லை தான். ஏனெனில் இவ்வாறு Repo மூலமாகச் செய்யப்படும் கடன் மிகவும் பாதுகாப்பான ஒரு கடன் முறை. தரகர்கள் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் சென்றாலும் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் எனும் பொழுது ஒரு நம்பகத்தன்மை இருந்தது.

பத்திரங்களைக் கொண்டு கடன் பெறும் முறையில் தரகர்கள் தங்கள் வங்கிக் கணக்குக்கு பணத்தைக் கொண்டு வந்து பின் வங்கிகளுக்கு தங்களின் கமிஷன் தொகையைக் கழித்துக் கொண்டு கடன் கொடுத்து கொண்டிருந்தனர். இவ்வாறு கடன் பெறும் முறையில் தரகர்கள் தயவு வங்கிகளுக்கு தேவைபட்டதால், இந்த நடைமுறை, அத்துமீறலாக இருந்தாலும் செவ்வனே நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த ஓட்டையைத் தான் ஹர்ஷத் மேத்தா மற்றும் ஹித்தன் தலால் போன்றோர் பயன்படுத்திக் கொண்டனர்.

பத்திரங்களைக் கொண்டு கடன் பெறும் முறையில், பத்திரங்களே இல்லாமல் கடன் பெற்று விடும் முறையை ஹர்ஷ்த் மேத்தா யோசிக்கத் தொடங்கினான். பத்திரங்களே இல்லாமல் எப்படி கடன் பெற முடியும் ? இவ்வாறு நடக்கும் பொழுது வங்கிகளைக் கண்காணித்து கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது ? ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு எப்படிச் சிதறிப் போனது ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம்

Leia Mais…
Monday, November 06, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 2

பங்குச்சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பணச்சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

பணச்சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன் வாங்க/கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தை. இது குறைந்த காலத் தேவைகளுக்காக பணத்தை பரிமாறும் ஒரு இடம் என்று சொல்லலாம். அதிகபட்சமாக ஒரு வருடம், குறைந்தபட்சமாக ஒரு நாள் கூட கடன் வாங்கலாம்/கொடுக்கலாம். தங்களிடமிருக்கும் மிகுதியானப் பணத்தை வங்கிகள் இந்தச் சந்தையில் கடன் கொடுத்து வட்டி மூலமாக லாபம் அடையும். பணச் சந்தையில் கடன் பெறுவதற்கும்/கொடுப்பதற்க்கும் பல வழிகள் இருக்கின்றது. Call Money, Term Money, T-bills, Repo என்று பல வெவ்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறும் (இதற்கெல்லாம் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே தொடருவோம்).

இதில் Repo அல்லது Ready Forward Contracts என்ற கடன் பெறும் முறையை மட்டும் கவனிப்போம். ஏனெனில் நம்முடைய வில்லன் ஹர்ஷத் மேத்தாவின் புண்ணியத்தால் இதிலிருந்தப் பல ஓட்டைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது.

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள அரசுக் கடன்பத்திரங்களை பணச் சந்தையில் விற்று, தங்களின் குறுகிய காலத் தேவைக்காகப் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதனை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

அதாவது, பத்திரங்களை விற்பவர், அதனை மறுபடியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பப்பெற்றுக் கொள்வதற்கும் சேர்த்தே ஒப்பந்தம் செய்வார். தற்பொழுது விற்கும் விலையையும், திரும்பப்பெற்றுக் கொள்ளும் விலையையும் முதலிலேயே தீர்மானித்து அதற்கேற்ப தான் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், பறிமாறப்படும் பணத்திற்கு, ரெப்போ விகிதம் (Repo rate) என்று சொல்லப்படும் வட்டி வசூலிக்கப்படும். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதை திரும்பப் பெற்று கொள்வதற்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்படுவதால் இதனை Repurchase Agreement (Repo) என்று சொல்வார்கள்.

வங்கிகள், தங்களின் குறைந்தகாலத் தேவைக்கு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தான் இந்த ரெப்போ வர்த்தகம் மூலம் பணச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.

சரி..வங்கிகள் எப்படி செயல்படுகின்றன - "வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக பணம் திரட்டுதல். திரட்டியப் பணத்தைக் கொண்டு கடன் வழங்குதல்".

ஆனால் தங்களிடம் இருக்கும் அனைத்துப் பணத்தையும் வங்கிகள் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கையிருப்பாக ஒவ்வொரு வங்கியும் தங்களிடமோ அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கள் கணக்கிலோ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனை Cash Reserve Ratio (CRR) என்று சொல்வார்கள். இவ்வாறு கையிருப்பாக வைத்திருப்பதால் பயனாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு உடனடி தேவையிருக்கும் பொழுது எளிதில் பணம் கிடைக்கும் (இதனால் தான் வங்கி வைப்பு நிதியில் நாம் எப்பொழுது கேட்டாலும் உடனே பணம் திரும்பக் கிடைக்கிறது).

இதைப் போலவே பணமாக இல்லாமல் தங்கமாகவோ, அரசு கடன் பாத்திரங்களாகவே மற்றொரு குறிப்பிட்ட சதவீதம் வங்கிகளின் கையிருப்பில் இருக்க வேண்டும். இதனை Statutory Liquidity Ratio (SLR) என்று சொல்வார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் பணத்தேவை, கடன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவ்வாறு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.

வங்கிகள், தங்களிடம் கையிருப்பில் இருக்கும் SLR விகிதம் குறையும் பொழுது அதனைச் சரி செய்ய புதிதாக கடன்பத்திரங்கள் வாங்குவதை விட ரெப்போ மூலம் குறுகியக் காலத்திற்கு கடன்பத்திரங்களை வாங்கிக் கொள்ளும்.

இவ்வாறு பத்திரங்களை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஒன்றுச் சேர்ப்பது தான் தரகர்களின் வேலை. ஒப்பந்தம் வங்கிகளுக்கிடையே செய்யப்படும். பத்திரங்களையும் பணத்தையும் வங்கிகள் தான் பறிமாறிக் கொள்ள வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இங்கே தான் சில விதிமீறல்கள் நடைபெறத் தொடங்கின.

பத்திரங்களை விற்பவர்கள், பத்திரங்களை நேரடியாக வாங்குபவர்களிடம் கொடுக்காமல் தரகர்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைப் போலவே பணத்திற்கான காசோலை நேரடியாக பத்திரங்களை விற்றவர்களிடம் செல்லாமல் தரகர்கள் வழியாக செல்லத் தொடங்கியது.

இவ்வாறு பத்திரங்களும் காசோலைகளும் தரகர்கள் மூலமாகவே வங்கிகளுக்கு செல்லத் தொடங்கியது. இதில் ஒன்றும் தவறு இல்லை. தரகர்களைக் கொண்டு தான் வர்த்தகத்தை நடத்த முடியும். வங்கிகளுக்கும் இந்த முறையில் வசதி இருந்தது. வங்கிகளின் தேவையை தரகர்களால் எளிதாகப் பூர்த்திச் செய்யமுடிந்தது. இந்தியாவில் எங்குமே காணப்படும் சாதாரணமான விதிமீறல்.

ஆனால் ஹர்ஷ்த் மேத்தாவின் கிரிமினல் மூளை இதிலிருந்த ஓட்டைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது, இருந்த நரசிம்மராவ் அரசு, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்த நேரம். இனி தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் வசந்தகாலம் தான் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தை உயரத் தொடங்கியது. இந்தக் காளைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.

சந்தை உயருவதாலும், லாபம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தரகர்களும், முதலீட்டு நிறுவனங்களும் பணச் சந்தையில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். பணச் சந்தையில் புரளும் கோடிக்கணக்கானப் பணத்தை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து விட்டால், பல மடங்கு லாபம் பார்க்கலாம்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு இதிலிருந்த ஓட்டைகளும் வாய்ப்புகளும் புரிபடத் தொடங்கியது.

முதல் பகுதி

Leia Mais…
Saturday, November 04, 2006

ஹர்ஷத் மேத்தா - ஊழலின் கதை - 1

பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதி பல நாட்களாகி விட்டன. எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது குறித்த ஆர்வம் குறைந்து விட்டது. இந்தியாவில் இருந்த பொழுது பங்குச்சந்தையை தினமும் கவனிக்கும் பழக்கம் இருந்தது. அதற்கான நேரமும் இருந்தது. ஆனால் இங்கு வந்தப் பிறகு வார இறுதியில் மட்டுமே சில மணி நேரங்கள் கிடைக்கும் நிலையில் இயல்பாக பங்குச்சந்தை போன்ற வறண்ட, நிறையப் பேர் படிக்க விரும்பாத பதிவுகளை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. கடந்த வாரம் பங்குச்சந்தை குறித்து எழுதும் குப்புசாமி செல்லமுத்துவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, வலைப்பதிவுகளில் பங்குச்சந்தை குறித்து எழுதுவது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு அவருக்கும் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன். தமிழ் வலைப்பதிவு உலகில் இருக்கும் பதிவர்கள்/வாசகர்களிடையே பங்குச்சந்தைக் குறித்து படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்

என்றாலும், பல நண்பர்கள், குறிப்பாக நண்பர் ரமணி போன்றவர்கள் பங்குச்சந்தை பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாதால் அந்த ஆர்வத்தை மீண்டும் கொண்டு வரும் பொருட்டு எனது பழைய பங்குச்சந்தை பதிவுகளை மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இப்பொழுது ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் குறித்து நான் முன்பு எழுதிய தொடரை மீள்பதிவு செய்கிறேன்.

தற்பொழுது சில மாதங்களாக (2005 ஜனவரி மாதம்) பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது. SEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ?

இத்தகைய காளைச் சந்தையில் (Bull Market) பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.

பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் SEBI கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகும் சில ஊழல் நடந்தேறியது தனிக்கதை.

சாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று (2005 ஜனவரி மாதம்) சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்தப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டன. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது எப்படி ஏற்பட்டது ? இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் “Big Bull”. அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வும், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,
கரடிகள் சரிவையும் குறிக்கும்)

இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான் (தன் ஊழல் டெக்னிக்கை யாரும் கண்டுபிடிக்க முடியாது என அவன் அப்பொழுது நம்பினான்).

சாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான் உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய அதிகப் பணம் தேவைப்பட்டது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடிக்கடி ஹர்ஷத் மேத்தா செல்ல தொடங்கியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.

ஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.

ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் “இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் ” என்று சொன்னானாம்.

அந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து பார்ப்போம்.

Leia Mais…