பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Saturday, August 11, 2007

ஒரு சாமானியனின் பொருளாதாரக் குறிப்புகள் - 1

ஏற்றுமதியும், இந்திய நாணயமும்

இந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும், பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் இந்தியப் பொருள்களின் மதிப்பு உலகச்சந்தையில் மலிவாக கிடைக்கும். அதனால் இந்திய ஏற்றுமதி உயரும், பொருளாதாரம் உயரும் என்பதே அந்த வாதத்தின் பொருளாதார அடிப்படை.

பொருளாதார நியதிகளைக் கொண்டு பார்த்தால் அந்த வாதம் சரியாக இருந்தாலும் இந்திய சூழலில் இது சாமானிய மனிதனுக்கு எந்த வகையிலும் நன்மையை கொடுக்காது. நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகும் பொழுது அதன் மூலமாக ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகிறது என்றால் பலருக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார வசதிகளும் அதிகரிக்கிறது என்பது பொருள். அவ்வாறு செய்யும் பொழுது இந்திய நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதி மூலம் கிடைக்கும் மிகுதியான வருவாய் இந்திய சமூகத்தில் இருக்கும் பல சாமானிய மக்களுக்கும் சென்று சேரும் வகையில் செய்ய முடியும்.

ஆனால் இந்தியாவில் அதுவா நடக்கிறது ?

இந்தியாவின் ஏற்றுமதி அதிகம் தரும் தொழில்கள் என்று பார்த்தால் அது சர்வீஸ்ஸ் எனப்படும் மென்பொருள், ஜவுளி போன்ற தொழில்களே. இந்த தொழில்களில் ஈடுபடுவோர் குறைவு. இந் நிலையில் இந்த சொற்பமான எண்ணிக்கையில் இருப்பவருக்காக ரூபாய் மதிப்பை குறைத்து வைப்பது அதிக அளவிளான லாபத்தை இந்த தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே கொண்டு சேர்க்கிறது. அதனால் தான் இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெறுகின்றன. அந்த மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. காரணம் அவர்களின் ஊதியம் இந்திய ரூபாயில் அல்லாமல் அமெரிக்க டாலர்களிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு மணி நேரம் வேலைப் பார்த்தால் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு நிறுவனங்கள் அதில் ஒரு சிறிய பங்கினை ஊழியர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.

இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும், பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது. இந்திய ரூபாயை ஒரு கட்டுக்குள் வைத்து ஏற்றுமதிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கம் இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சென்றடையாமல் ஒரு சிறிய பிரிவினரையே சென்று சேருகிறது.

ஆனால் உள்நாட்டு உற்பத்தியினை பெருக்கும் வகைகளை ஏற்படுத்தி உற்பத்தியை பல்வேறு துறைகளிலும் பரவலாக்கும் பொழுது அதனால் எழும் ஏற்றுமதி வாய்ப்பே அனைத்து பிரிவு மக்களையும் சென்று சேருவதாக அமையும்.

ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால் இந்திய ஏற்றுமதிக்கு நல்லது என்பது பொருளாதாரத்தின் அடிப்படை என்றால் உற்பத்தி பரவலாக்கப்படாமல் ரூபாய் மதிப்பை குறைப்பது பண முதலைகளுக்கே பணத்தை மேலும் பெருக்க வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும் பொருளாதாரத்தின் அடிப்படையே.

ஆனால் இந்தியாவில் இருக்கும் பண முதலைகளும், பங்குச்சந்தைகளும் பொருளாதாரத்தின் ஒரு அடிப்படையை முன்னிறுத்தி மற்றொன்றை உதாசீனப்படுத்துகின்றன. காரணம் இவர்களுக்கு சாமானிய மக்கள் மீது எந்தக் கவலையும் இல்லை.

பொருளாதாரத்தை தட்டையாக ஆராய முடியாது. அது பலப் பரிமாணங்களைக் கொண்டது. பணவீக்கத்தையும் அதன் தக்கத்தையும் பலப் பரிமாணங்களைக் கொண்டே ஆராய வேண்டும்.

பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது. அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது. சாமானிய மக்களை சென்றடையும் வகையிலான பொருளாதார தேவைகளே அவசியமாகிறது.

நான் பொருளாதார நிபுணன் அல்ல. பொருளாதாரம் ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன். பொருளாதாரத்தை ஒரு சாமானியனின் பார்வையில் எப்படி பார்க்க முடியும் என்னும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர் கட்டுரை முயற்சி. இதனை தொடர் என்று கூட கூற முடியாது. அவ்வப்பொழுது படிக்கும், தோன்றும் சில பொருளாதாரக் குறிப்புகளை இவ்வாறு பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன்.

பணவீக்கம் குறித்த விரிவான குறிப்புகள் அடுத்த பகுதிகளில் வரும்...

Leia Mais…