பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Friday, November 26, 2004

முதலீட்டின் முதல் படி : ஆராய்தல்

அனலிஸ்டுகள், நம்மைக் குழப்புவது பற்றிப் பார்த்தோம்.

அவர்களைப் பற்றி இப்படி கூட கிண்டல் செய்வார்கள்.

வானிலை அறிவிப்பிற்கும், அனலிஸ்டுகளின் பங்குச் சந்தை அறிவிப்பிற்கும் என்ன ஒற்றுமை ?
இவர்கள் இருவரும் எது நடக்கும் என்று சொல்கிறார்களோ, அது நடக்காது.
நடக்காது என்று சொன்னால் நடந்து விடும்.

பல நேரங்களில் நாம் பிறர் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. அது நமது தொட்டில் பழக்கமாகி விட்டது. அப்பா சொல்லி எதுவும் செய்யக்கூடாது என்ற முடிவில் சின்ன வயதில் இருந்தே திடமாக இருப்பதால், அந்தப் பழக்கம் பள்ளி, அலுவலகம் என்று தொடருகிறது. நாமே பல விடயங்களில் சிந்தித்து முடிவெடுக்கிறோம். பலருக்கு சிந்தனை செய்தே மண்டையில் கிரிக்கெட் பிட்சுகள் உருவாகி விடுகிறது.

பணம் என்று வந்து விட்டால், நிச்சயமாக மிக அதிகமாக சிந்திக்கிறோம். யாரோ சொல்வதைக் கேட்டு, வீட்டு கடன் வாங்குவதில்லை. என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என பல வருடங்கள் வாடகை வீட்டிலேயே இருந்து விட்டு, நாம் செட்டில் ஆன நினைப்பு வந்தவுடன் தான் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறோம். நான் கூட என்னுடைய ஆரம்ப கால சம்பாத்தியத்தை இப்படித் தான் யார் சொல்லியும் கேட்காமல் வீணாக்கினேன். வீடு ஒரு நீண்ட கால கடன். இந்த நீண்ட காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்லியே சில வருடங்கள் ஓடிப் போய் விட்டது. ஆரம்பத்திலேயே யோசித்திருந்தால் இந்நேரம் வீடு எனக்கு சொந்தமாகியிருக்கும். ஆனாலும் பாதகமில்லை. எனக்கு எது சரியென்று பட்டதோ அதையே செய்திருக்கிறேன். என்னுடைய பல நண்பர்களும் அப்படித் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய நெருங்கிய கல்லூரி நண்பன் ஒருவனிடம் பல ஆண்டுகளாக வீடு வாங்கு, வீட்டு வாடகை மிச்சம், வருமானவரி குறையும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் கேட்கவில்லை. இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கிறான். அவன் கொடுத்த வாடகையை கொண்டு பாதி வீட்டுக் கடனை அடைத்திருக்கலாம். சமீபத்தில் அவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு லட்ச ரூபாயை பங்குகளில் முதலீடு செய்ய ஆலோசனைக் கேட்டான். எனக்கு நான் வாங்கிய பல பங்குகளே நஷ்டத்தில் முடிவடைந்திருக்கிறது. இதில் அடுத்தவருக்கு நான் சிபாரிசு செய்யப் போக அது நஷ்டம் அடைந்தால், அவன் என்னை குறை சொல்லி விடக் கூடாதே என்ற அச்சத்தில், நீயே யோசி என்றேன். ஆனாலும் விடாமல் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்தான். சில பங்குகளை சொன்னேன். அதையே வாங்கி விட்டான். இப்பொழுது அவனை விட எனக்குத் தான் பயமாக இருக்கிறது.

நான் தொடர்ந்து எனது பங்குகளை கண்காணித்துக் கொண்டே இருப்பேன். சந்தை நிலவரத்திற்கேற்ப அதனை விற்று விடுவேன். அவனுக்கும் சேர்த்து என்னால் கண்காணிக்க இயலுமா என்ன ? வீட்டு கடனில் இருக்கும் பலன்கள் தெளிவாக தெரிந்தாலும் தனக்கு ஏற்ப சிந்தித்து அதன்படியே செயல்படும் நண்பன், நான் சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல், பங்குகளில் ரிஸ்க் எடுப்பது ஏன் ? பங்குகள் என்றவுடன் ஏதோ கிரேக்கமும், ரோமனும் போலத் தான் புரியாத புதிராக நமக்கு தெரிகிறது. "பங்குச் சந்தையைப் புரிந்து கொள்வது கடினம். கடினமான கணக்கு வழக்கு" என்று நாம் நினைக்கிறோம். அதனால் யாராவது டிப்ஸ் கொடுத்தால் அதனை அப்படியே பின்பற்றுகிறோம்.

அனலிஸ்டுகளை பின்பற்றக் கூடாது என்று நான் சொல்வதால் அனலிஸ்டுகளை ஜோக்கர்கள் என்று நான் சொல்வதாக பொருளில்லை. அனலிஸ்டுகள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைக்கும் பொழுது அந்த நிறுவனத்தைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கே சென்று அதனை ஆய்வு செய்து, அங்குள்ள ஊழியர்களிடம் உரையாடி, அவர்களின் பயனாளர்களையும், போட்டியார்களையும் ஆராய்ந்து பிறகு அந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தகுந்த விலையை நிர்ணயம் செய்து முதலீடு செய்வார்கள். அந்த நிறுவனத்தின் செயல்பாடு மாறுபடும் பொழுதோ, நிறுவனத்தின் போட்டியாளர்கள் புதிய திட்டத்துடன் பயனாளர்களை கவர்ந்து, தாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையும் பொழுதோ பங்குகளை விற்று விடுவார்கள்.

அனலிஸ்டுகள் சொன்னார்கள் என்று பங்குகளை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் விற்பதை நம்மிடம் சொல்லிவிட்டு விற்பதில்லை. அதனால் தான் பல நேரங்களில் அவர்களின் பேச்சைக் கேட்டு நாம் வாங்கிய பங்குகள் சரியும் பொழுது ஏமாந்து போகிறோம். அது போலவே அனலிஸ்டுகளின் கணக்குகள் பெரும்பாலும் Theoretical தான். இரு வேறு அனலிஸ்டுகள், ஒரே நிறுவனத்தைப் பற்றி இரண்டு வெவ்வெறு விதமான கோணங்களை தரக்கூடும். அதனால் தான் அனலிஸ்டுகள் சொல்வதை முற்றிலும் ஏற்காமல், முழுவதுமாக புறந்தள்ளாமல், அதனை அடிப்படையாகக் கொண்டு, நாமும் ஆய்வு செய்து, பங்குகளை வாங்கி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அனலிஸ்டுகள் போல நம்மால் பல கணக்குகளை போட இயலாமல் போகலாம். அதனால் ஒன்றும் பெரிய பாதகமில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களை கவனித்தாலே போதும். உதாரணமாக நாம் மென்பொருள் துறையில் இருந்தால், எந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்று பெரிய ஆய்வு செய்யத்தேவையில்லை. அதே துறையில் இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு ஏதாவது பிராஜட்கள் வந்திருக்கிறதா, புதிதாக க்ளயண்ட்கள் கிடைத்துள்ளார்களா என்ற தகவல்கள் நமக்கு எளிதாக கிடைத்து விடும். அதைப் போல வேலைக்குப் புதியதாக ஆட்கள் எடுக்கப்படுகிறதா, ஏதாவது பிராட்ஜட்கள் பறிபோய் விட்டதா என்ற தகவல்களைப் பொறுத்து நாம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

அதைப் போலவே நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம், நம் அலுவலகத்தில் உள்ளவர்கள் எந்த வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கிறார்கள், வங்கியின் வசதிகள் பற்றி என்ன நினைக்கிறார்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து எல்லோரும் ஏன் ICICI போன்ற தனியார் வங்கிகள் பக்கம் போகிறார்கள், பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல்சர் திடீரென்று அதிக அளவில் நண்பர்கள் மத்தியில் பேசப்படுகிறதே, ஹீரோ ஹோண்டா பைக்குகளின் எண்ணிக்கை குறைகிறதே என நம் அன்றாட வாழ்வில் கவனிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பங்குகள் பற்றிய ஆய்வு தான். பங்குகளின் உயர்வையும், சரிவையும் இவை தானே தீர்மானிக்கிறது. பல்சர் பைக் நன்றாக இருக்கிறது என்ற நம் எண்ணமே, பஜாஜின் விற்பனை அதிகரிக்கும் என்ற செய்தியை தெரிவிக்கிறது அல்லவா ? விற்பனை அதிகரித்தால் அதன் சந்தை மதிப்பீடு உயரத்தானே செய்யும். முதலீடு செய்ய இவை தகுதியானப் பங்குகள் தான் என்ற செய்தியையும் இந்த ஆய்வு தெரிவிக்கும் அல்லவா ? ஆராய்ந்து பங்குகளை வாங்க வேண்டும். அதுவும் சரியான நேரத்தில் வாங்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒவ்வொரு மணித்துளியும் பணத்தின் நிலை மாறும். பல்சர் அறிமுகமாகி, விற்பனை சூடு பிடிக்கும் நேரத்தில், பாஜாஜின் பங்குகளை வாங்க வேண்டும். அதை விடுத்து தற்பொழுது வாங்கினால் அதன் லாபத்திற்கு உத்திரவாதம் இல்லை. நேரம் மிக முக்கியம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஒன்றும் ஒரு பெரிய கலையில்லை. அனலிஸ்டுகள் ஒன்றும் சச்சின் போல பிறப்பிலேயே மேதைகளாக பிறப்பவர்கள் இல்லை. பங்குச் சந்தையின் மேதைகளுக்கு கூட அவர்கள் வாங்கிய எல்லாப் பங்குகளும் லாபத்தில் முடிந்ததில்லை. நாம் பத்து பங்குகளை வாங்கி, அதில் ஆறு லாபமடைந்தால் போதும். மற்ற நான்கு நஷ்டமானாலும் நமது Balance Sheet லாபமாகத் தான் இருக்கும்.

சரி...சென்னையின் (பெங்களுர், தில்லி என்ற எந்த நகரத்திலும்) சாலை நெரிசலில் அவஸ்தை படும் பொழுது, சமீப காலமாக கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். பைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் கார்களுக்கு மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன ஆய்வில் இறங்க வேண்டியது தானே ?

பி.கு : இந்தப் பதிவு, பங்குச் சந்தை மேதை Peter Lynch ன் சில கருத்துகளை தழுவி எழுதப்பட்டது. அடுத்து வரும் சில பதிவுகளும் அவரைப் போன்ற மேதைகளின் எண்ண அலைகளில், என்னை பாதித்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டவையாகத் தான் இருக்கும்.

Leia Mais…
Thursday, November 25, 2004

80,000 கோடிக்கான தகராறு

நம்மூரில் சில ஏக்கர் நிலத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். வரப்பு தகராறுகள், வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அதை சுவரசியமான சண்டையாக பார்த்திருப்போம். அவை நமக்கு அவை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் இன்று, யாரோ இருவரின் சொத்து தகராறு நம்மை பீதி அடைய வைக்கிறது. சண்டையிடப்படும் சொத்து மதிப்பு, பல ஆயிரம் கோடி. 80,000 கோடிக்கான தகராறு (அம்மாடியோவ்...). ரிலயன்ஸ் நிறுவனத்தின் உரிமைக்கான சண்டை, இப்பொழுது விஸ்ரூபம் எடுத்துள்ளது.

தீருபாய் அம்பானியின் மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் தான் இன்று எல்லா முதலீட்டாளர்களின் முதல் கவலை. சில மாதங்களாகவே வதந்தியாய் இருந்த செய்தி, இப்பொழுது வெளியாகி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. மறைந்த தீருபாய் அம்பானியின் இரு புதல்வர்கள் - முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. முகேஷ் மூத்தவர் - ரிலயன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர். அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்.

ரிலயன்ஸ் நிறுவன குழுமத்திற்குள் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஓட்டுமொத்த ரிலயன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தனது தந்தை தன்னை தான் நியமித்துள்ளதாகவும், தானே இதன் தலைவர் என்றும் முகேஷ் அம்பானி கூறுகிறார். அனில் இதனை ஏற்கவில்லை. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி மீடியாக்களில் அதிகம் தலைக்காட்டாதவர். ஒட்டு மொத்த குழுமத்தின் தலைவராகவும், ரிலயன்ஸ் இன்போகாம் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தின் (ரிலயன்ஸ் செல்போன்) தலைவராகவும் இருக்கிறார். Reliance Energy மற்றும் Reliance Capital போன்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அனில் அம்பானி மீடியாக்களில் அதிகமாக தென்படுபவர். ராஜ்யசபாவில் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.

இந்த இரு சகோதரர்கள் தவிர இரு சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களிடையே சமரசம் செய்ய அவர்களது தாய் கோகிலா பென் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிரச்சனை முற்றி விட்டது. குடும்பத்தில் சமரசம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நானே தலைவர் என்ற முகேஷின் அறிவிப்பு சமரசம் தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. இன்று அனில் அம்பானிக்கு ஆதரவாக உள்ளவர்கள் Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகி விட்டார்கள். சொத்து தகராறு தீவிரம் அடைவது, முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலியாகப் போகிறது.

இந்த சொத்து தகராறு, இன்று மட்டும் ரிலயன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் 2500 கோடி இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது.

ரிலயன்ஸ் பங்குகளில் இன்றைய சரிவு

Reliance Energy - விலை 549.10, சரிவு - ரூ34
Reliance Industries - விலை 503.55, சரிவு - ரூ11
Reliance Capital - விலை 136.25, சரிவு - ரூ3.75
IPCL - விலை 175.35, சரிவு - ரூ6.85

இன்று நல்ல லாபகரமாக சென்று கொண்டிருந்த வர்த்தகம், Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து சிலர் விலகிய செய்தியால் கடுமையாக சரிவுற்றது. 589 ஐ எட்டிய Reliance Energy பங்குகள், இந்த செய்தியால் அனைவரும் பங்குகளை விற்க தொடங்க, 549க்கு சரிவுற்றது.

ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களின் நிலை என்ன ?

ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவுற்று குறைந்த விலைக்கு வந்தவுடன், சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கியுள்ளனர். ரிலயன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் எதிர்காலம், இத்தகைய சிக்கல்களால் பாதிப்படையாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. நாட்டின் முதல் ஐந்து நிறுவனங்களில் ரிலயன்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் சந்தை மதிப்பீடு 15பில்லியன். இத்தகைய நிறுவனம் இந்த சொத்து தகராறால் தொய்வடைந்து விடாது. ஆனால் பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லக் கூடுமென தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு பிரச்சனை செல்லுமா? சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா ? நிர்வாகம் பாதிப்படையுமா ? ரிலயன்ஸ் ஒன்றும் மிகச் சிறந்த நிர்வாகத்தை கொண்ட நிறுவனம் அல்ல. தற்பொழுது தான் BSNL, MTNL போன்ற நிறுவனங்களுடனான பிரச்சனை முடிவடைந்தது. இது போன்ற பல நிர்வாக சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்ததுண்டு.

எனவே ரிலயன்ஸ் பங்குகள் மீது எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. ஏற்கனவே குறைந்த விலையில் பங்குகளை வாங்கியிருந்தால் பிரச்சனையின் போக்கிற்கு ஏற்றவாறு விற்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.

6000ஐ கடந்து 6100 ஐ நோக்கி சென்று கொண்டிருந்த சந்தை இப்பொழுது அம்பானிகளின் சொத்து தகராறால் 6000 அருகில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஏக்கருக்கும் குடுமிப்புடி சண்டை தான், 80,000 கோடிக்கும் அதே சண்டை தான்.

Leia Mais…
Saturday, November 20, 2004

பங்கு விலையும், முதலீடும்

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சாமானியர்களுக்கு, பங்குச் சந்தையின் வல்லுனர்களான - Analysts கள் சொல்வது பல நேரங்களில் ஏதோ ஒரு ஜோசியக்காரனின் ஆருடம் போலத் தான் தோன்றும். சில நேரங்களில் அவர்கள் சொல்வதற்கு எதிர் மாறாக வர்த்தகம் நடப்பது தான், பங்குச் சந்தையின் நுட்பங்களைப் பற்றி தெரியாதவர்களை குழப்புகிறது. எல்லாம் அறிந்தவர்களுக்கே, சந்தை புரியாத புதிராக இருக்கும் பொழுது, நமக்கெல்லாம் அது தேவை தானா என்று சந்தையில் இருந்து ஓடி விடுகின்றனர். அதற்கு தற்பொழுதய உதாரணம், வங்கிப் பங்குகள்.

சில வாரங்களுக்கு முன்பு வரை எல்லா அனலிஸ்டுகளும், தரகர்களும் கூறியது - "வங்கிப் பங்குகளுக்கு ஏற்றம் இல்லை". வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது அவை தீண்டத்தகாதவையாகவே பலருக்கு தென்பட்டது. ரூ490ல் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 440க்கு சரிவுற்ற பொழுது, வங்கிப் பங்குகள் மேலும் சரியக் கூடும் என்றே ஆருடம் சொன்னார்கள். ஆனால் கடந்த இரு வாரங்களில் வங்கிப் பங்குகள் எகிறத் தொடங்கி விட்டது. இந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 530ஐ எட்டியது.

பங்குகள் விலை சரிவடைவது தான், பங்குகள் வாங்குவதற்கான உகந்த சூழ்நிலை என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண முதலீட்டாளரை, சரிவு நிலையில் பங்குகளை வாங்க விடாமல் செய்வது இந்த அனலிஸ்டுகள் தான். பங்குகள் சரியும் பொழுது இன்னும் சரியும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம் அச்சத்தில் முதலீடு செய்யாமல் இருப்போம். நாம் அசந்த நேரத்தில் சந்தை ஏதோ ஒரு செய்தியால் பற்றிக் கொண்டு எகிறும்.

விலை ஏறும் பொழுதும் ஒரு பிரச்சனை இருக்கிறது. "இதற்கு மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை, பங்குகளின் விலை - Valuations, அதிகமாக இருக்கிறது" என்று யாராவது சொல்வார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, பங்குகள் சில ரூபாய்கள் எகிறும். நாம் குழம்பிப் போய், எப்பொழுது வாங்குவது என்று புரியாமல், சந்தை பக்கமே வராமல், நமது பணத்தை வீட்டு பீரோவிலோ, வங்கியின் சேமிப்பு கணக்கிலோ தூங்க வைத்து விடுவோம்.

பங்குச் சந்தையின் அடிப்படையே வாங்குவது, விற்பது தான். விற்பவர் இருந்தால் தான், நாம் வாங்க முடியும். இருவரின் எதிர்மறையான எண்ணங்கள் தான் சந்தையின் வர்த்தகத்தை தீர்மானிக்கிறது. பங்குகள் விலை இனி ஏறாது என ஒருவர் தீர்மானித்து, பங்குகளை விற்பார். இந்தப் பங்குகள் விலை ஏறும் என ஒருவர் தீர்மானித்து அதனை வாங்குவார். இருவரும் தங்கள் செயல்களுக்கு பல காரணங்கள் சொல்வார்கள். வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விலை உயர்வதும், யாருமே அதனை சீண்டாத பொழுது விலை சரிவடைவதும் எல்லா பொருட்களுக்கும் பொதுவானது தான். பங்குகளுக்கும் அவை பொருந்தும். அனலிஸ்டுகளின் கருத்துகளையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்காமல், முற்றிலும் புறம்தள்ளாமல் அதன் உட்கருத்தை ஆராய்ந்து நமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

தன்னுடைய "One up on the Wall Street" என்ற புத்தகத்தில் Peter Lynch என்ற புகழ்பெற்ற பங்குச் சந்தை மேதை, "பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது" என்று சொல்கிறார். இதனை படிக்கும் பொழுது என்ன எதோ உளறுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதனை ஆராயும் பொழுதோ, இல்லை நடைமுறை அனுபவத்திலோ தான் உட்கருத்தை கண்டு கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடை (பங்கு விலை x மொத்தப் பங்குகள்) ஆராய்ந்து, அது மேலும் உயரக் கூடுமா என்று கணித்து அதற்கேற்ப பங்குகளை வாங்க வேண்டும். நீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதன் வள்ர்ச்சிக்கு ஏற்றாற் போலத்தான் உயரும். ஒரு நிறுவனம் படிப்படியாகத் தான் உயர முடியும். திடீரென்று உயர்ந்து விடாது.
அதனால் பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும், அதற்கு நாம் கொடுக்கும் விலை உகந்தது தானா என்று தீர்மானிக்க வேண்டும்.

நம்முடைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த மாத துவக்கத்தில் இந்தப் பங்கு 410 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின் விலை ஏறி 500ஐ தொட்டது. பின் சரிந்து, 440 க்கு வந்தது. தற்பொழுது உயர்ந்து, 530க்கு வந்துள்ளது. இது தான் பங்குகளின் தன்மை.

410க்கு வாங்கி 500ஐ தொட்டவுடன் லாபம் போதும் என்று விற்கலாம். தவறில்லை. ஆனால் 490 க்கு வாங்கி, அது 440க்கு வரும் பொழுது தான் நம்முடைய பொறுமை சோதிக்கப் படுகிறது. பங்கு வர்த்தகத்தில் பொறுமை மிக அவசியம். சரிந்து போய் விட்டதே என்று விற்று விட்டால், பின் 530க்கு அது வரும் பொழுது நொந்து கொள்ள வேண்டியது தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற மிகப் பெரிய வங்கியின் நீண்ட கால செயல்பாடு எப்படி இருக்கும் ? அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா ? இந்த ஆராய்ச்சியின் முடிவு, நம்மை இந்த சரிவு தற்காலிகமானது தான் என்று முடிவு செய்ய வைக்கும். பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பற்றிய நீண்டகால திட்டத்தில், நம்முடைய முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டு சந்தையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்போம்.


Leia Mais…
Monday, November 15, 2004

அடுத்த இலக்கு? 6100 !!

6000ஐ எட்டுவோமா என்று குறியீடுகளைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். கடந்த வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 6000ஐ எட்டியது. சந்தையின் அடுத்த இலக்கு ?

தேர்தல் சமயத்தில் 6000ல் இருந்து சரிந்த சந்தை தற்பொழுது தான் மறுபடியும் அந்த இலக்கை அடைந்திருக்கிறது. புதிய அரசு பதவி ஏற்றப் பிறகு சந்தை நல்ல ஏற்றமுடன் தான் சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட்க்கு முன்பு வரை இடதுசாரிகளை உள்ளடக்கிய அரசின் பொருளாதார கொள்கைப் பற்றிய அச்சத்தில், திக்குதெரியாத காட்டில் திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சந்தைக்கு பட்ஜெட்டுக்குப் பிறகு நல்ல ஏற்றம்.

இந்த உயர்வு ஒரு நீண்ட கால காளைச் சந்தைக்கான அறிகுறி எனப் பலர் சொல்கின்றனர். அடுத்த பட்ஜெட்டை எதிர்பாருங்கள் என ப.சிதம்பரம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அரசின் பொருளாதார கொள்கையில் பெரிய மாற்றம் இல்லாத வரையில், இடதுசாரிகள் தற்பொழுது உள்ளது போலவே அவ்வப்பொழுது ஏதாவது உளறிக் கொண்டு பெரிய தலைவலி கொடுக்காமல் இருந்தால் சந்தை 6000ஐ கடந்து இன்னும் முன்னேறக் கூடும்.

வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதங்களும் இனி உயரும். வீட்டுக் கடன் உள்ளவர்கள் இனி அதிக EMI செலுத்தவேண்டியது தான். சரிந்து கொண்டே இருந்த இந்த வட்டி கடந்த ஒரு வருடமாக ஓரே நிலையில் தான் இருந்தது. இந்த ஒரு வருடத்தில், தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்த வட்டியைக் காட்டி அதிகரித்துக் கொண்ட வங்கிகள், தற்பொழுது 0.25% முதல் 0.5% வரை வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும். HDFC நிறுவனம் தன்னுடைய floating வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டது. அதைப் போலவே சில வங்கிகள் தங்களுடைய வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளனர்.

கடந்த வாரம், HDFC, சத்யம் பங்குகள் அதிக லாபம் அடைந்தன. வட்டி விகிதங்கள் உயர்த்தப் படுவதால் HDFC பங்குகள் உயர்ந்தன. HDFC பங்குகள் இந்த வாரமும் தொடர்ந்து உயரக் கூடுமென காளைகள் தெரிவிக்கின்றன. ஆனால் புதிதாக இந்தப் பங்குகளை வாங்க நினைப்பவர்கள், லாப விற்பனையால் விலை சரிவடைந்தவுடன் வாங்கலாம்.

வழக்கம் போல இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள் தொடர்ந்து உயரக் கூடும். இன்போசிஸ் 2100ஐ நோக்கி நகரும். மென்பொருள் பங்குகளில் பெரிய நிறுவனங்களான TCS, இன்போசிஸ், விப்ரோ போன்ற பங்குகள் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளதால் midcap நிறுவனப் பங்குகள் மீது கவனம் செலுத்தலாம் என சில Analysts கள் தெரிவிக்கின்றனர்.

6000ஐ எட்டி, லாப விற்பனையால் சரிந்த குறியீடு, 6100 முதல் 6200ஐ அடுத்த இலக்காக கொண்டு நகரக் கூடும். தற்பொழுதுள்ள சந்தை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடும். குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்தால் பணத்தைப் பெருக்கலாம்.

Leia Mais…
Sunday, November 07, 2004

பணவீக்கம்

இந்த வாரம் பணவீக்கம் 7.38% என்று அரசு அறிவித்திருக்கிறது.

அது என்ன பணவீக்கம்?

பணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம்.

பணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது

உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும்.

ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும்.

இந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?.

பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும்.

பொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும்.

உள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும்.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். எப்படி பங்குக் குறியீடு பங்குகளின் விலைக் குறியீடாக உள்ளதோ, அதைப் போன்றே விலைவாசி உயர்வுகளை கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும். இந்த குறியீடு தான் 7.38% மாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 7.1% மாக இருந்தது.

Wholesale Price Index மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய பொதுவான விலைவாசிக் குறியீடு.

- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படுகிறது.

- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு
- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)

இந்த பணவீக்க விகிதம் பங்குச்சந்தை முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் ?

பங்குச்சந்தை முதலீடுகளில், பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நீண்ட கால முதலீட்டில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பணவீக்கம் உயர்வதற்கேற்ப உயரும் எனக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, பொருட்களின் விலை உயர்வால், ஒரு நிறுவனத்தின் மதிப்பும் அதிகமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இது உண்மையான மதிப்பாகாது. பணவீக்கம் காரணமாக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.

மோசமான பொருளாதார சூழ்நிலையில், பணவீக்கம் உயரும் பொழுது பங்கு முதலீடுகள் சுருங்கிப் போகலாம்.

நம்முடைய பொருளாதாரமும், பணவீக்கமும் எப்படி இருக்கிறது ?

பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பது கவலை அளித்தாலும் அச்சப்படும் விதத்தில் இல்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் செய்பவர்கள், இந்தப் பணவீக்க விகிதத்தின் மேல் கவனம் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. சந்தையின் எதிர்பார்ப்பை விட பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது சந்தை சரியும். பணவீக்கம் குறையும் பொழுது சந்தை எகிறும்.

Leia Mais…

காளைகளின் தகவல்கள்

கடந்த வாரம் மிக லாபகரமான ஒரு வாரமாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகள் இந்த வாரம் பங்குக் குறியீடுகளை உயர்த்தியுள்ளது. குறியீடு 6000ஐ தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது. கடந்த வாரம் வியாக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் வார்த்தம் லாபத்திலேயே நிறைவுற்றது.

இந்த வாரமும், பங்குச்சந்தைக்கு ஆரோக்கியமான வாரமாகத் தான் இருக்கும்.

பங்குகளில் இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர் (HLL), ரிலயன்ஸ் பங்குகள் சிறந்த முதலீடாக இருக்கக் கூடும்.
அதிலும் குறிப்பாக இன்போசிஸ் பங்குகள் ரூ2000 ஐ கடக்கும்.

வங்கிப் பங்குகளுக்கு தற்பொழுது மவுசு அதிகரித்துள்ளது. பொதுத் துறைப் பங்குகளை விட தனியார் வங்கிகளான ICICI, HDFC Bank, UTI போன்றவற்றின் பங்குகள் விலை ஏறக்கூடுமென காளைகள் தெரிவிக்கின்றன. Business Line பத்திரிக்கை, ING Vysya Bank பங்குகளை வாங்கலாம் என சிபாரிசு செய்கிறது. பொதுவாக வங்கிப் பங்குகளில் கடந்த சில வாரங்களில் பெரிய ஏற்றம் நிகழவில்லை. அதனால் இந்தப் பங்குகளில் தற்பொழுது ஏற்றம் இருக்கும்.

கச்சா எண்ணெய் விலை ஏற்றப்பட்டிருப்பதால், எண்ணெய் நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றின் விலை மேலும் ஏறக்கூடும்.

தொடர்ந்து நல்ல விலை ஏற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதால், முதலீட்டாளர்களின் லாப விற்பனை இந்த வாரம் நடக்கலாம். Day Trading இல் சற்று உஷாராக இருக்க வேண்டும்.

Leia Mais…
Saturday, November 06, 2004

காளை வாரம்

இந்த வாரம் பங்குச்சந்தை காளைகளின் முழுமையான அதிக்கத்திலேயே இருந்தது. பல நல்ல செய்திகள் பங்கு வர்த்தகத்தை லாபமடைய வைத்தது. வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் வெற்றி, வங்கிகளில் அந்நிய முதலீடுப் பற்றிய நிதி அமைச்சரின் அறிவிப்பு, கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவு போன்றவையும், வார இறுதியில் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் NTPC பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட்தும் பங்குக் குறியீடுகளை உயரச் செய்துள்ளது.

எப்பொழுது ஏற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடந்தேறி விட்டது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் போராட்டத்தை அறிவித்து விட்டனர். உயர்வு அரசியலாக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல் ஜெயலலிதா, கருணாநிதியை குற்றம்சாட்டி இருக்கிறார். கருணாநிதியும் தன் பாணியில் விளக்கம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த உயர்வு தவிர்க்க முடியாதது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
ஒரு பேரல் டாலர்40ல் இருந்து, 55ஐ எட்டி தற்பொழுது சற்று தணிந்து 50 டாலரில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விலையை ஏற்றினால் பணவீக்கம் அதிகரித்து விடக்கூடும் என்ற அச்சத்தில், கச்சா எண்ணெய் மீதான வரியை தளர்த்தி ஓரளவுக்கு அரசு நிலைமையை சமாளிக்க முயன்றது. ஆனால் நாட்டின் தேவையில் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவதால், வெளிநாட்டு விலைக்கெற்ப உள்நாட்டு விலையை ஏற்றாவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சரிவு தான் ஏற்படும். ஏற்கனவே இந்த நிறுவனங்களின் லாபம் கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த காலாண்டு அறிக்கையிலேயே இது வெளிப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை குறை சொல்ல முடியாது. அரசியல் காரணமாக சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.

பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி சமையால் கியஸ் விலையும் எற்றப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு சிலிண்டருக்கு ரூ20ம், ஒவ்வொரு மாதமும் ரூ5ம் மாக விலை ஏற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ150க்கும் அதிகமான சலுகை விலையில் தான் சிலிண்டர்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உயர்வு கூட அரசின் சுமையை ஓரளவிற்கு குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தான்.

இந்த விலையேற்றத்தின் எதிரொலி வெள்ளியன்று பங்குச் சந்தையில் தெளிவாக தெரிந்தது. கச்சா எண்ணெய்யின் விலை எகிறும் போதெல்லாம் எண்ணெய் விற்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்து கொண்டேயிருக்கும். ஆனால் வெள்ளியன்று இந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. NSE பங்குச் சந்தையில் BPCLன் பங்குகள் 40ரூபாயும், HPCLன் பங்குகள் 20 ரூபாயும் எகிறியது.

கடந்த சில வாரங்களாக வங்கிப்பங்குகள் மீது யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ப.சிதம்பரம் வங்கித் துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தப்பிறகு வங்கிப் பங்குகளுக்கு ஏக கிராக்கி. 495 ரூபாயில் இருந்து சரிந்து 440ரூபாய்க்கு வந்து ஊசலாடிக் கொண்டிருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பங்குகள் 498ஐ இந்த வாரம் தொட்டு நிற்கிறது. ICICI பங்கும் வெள்ளியன்று நல்ல லாபம் அடைந்தது. பொதுத்துறை வங்கிப் பங்குகளை விட ICICI, UTI போன்ற தனியார் வங்கிகள் அதிக லாபத்தை தரக் கூடும்.

சில வாரங்களாக வங்கிப் பங்குகளும், எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே இருந்தது. பெட்ரோல் விலை உயர்வும், வங்கிகளில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பும் இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

NTPC நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று பங்குச் சந்தையில் சேர்க்கப்பட்டது. மிக அதிக அளவில் நேற்று வர்த்தகம் செய்யப்பட்டதும் இந்தப் பங்கு தான். முதல் நாளிலேயே சுமார் 3661 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ONGC, ரிலயன்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக NTPC இருக்கும். நேற்று வர்த்தக முடிவில் ரூ75ல் இருந்த இந்தப் பங்கு ஆறு முதல் ஒரு வருடத்தில் ரூ100ஐ தொடக்கூடும். IPO வில் குறைந்த பங்குகளைப் பெற்றவர்கள் இப்பொழுது இந்தப் பங்குகளை வாங்கலாம்.

Leia Mais…
Wednesday, November 03, 2004

பணம் சம்பாதிக்க சில விதிகள்

பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.

விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது
விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது

மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.

முதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்தப் பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.

பலர் பல வழிகளை கையாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.

வாரன் பப்பட் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.

உதாரணமாக 10 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 கோடியாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து கோடியை எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் வாரன் பப்பட அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது

சிலர் பங்குக் குறியீடுகளில் உள்ளப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

அதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய மென்பொருள் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுத்தும் (அல்லது ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம்) என்பதை மென்பொருள் துறைகளில் உள்ளவர்களுக்கும், மென்பொருள் பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும். தேர்தலின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharma பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.

பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம்.

இந்த வார சந்தை நிலவரம்

இந்த வாரம் - காளை வாரம். பங்குக் குறியீடுகள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ் முன்னிலையில் இருந்ததால், இன்று தொடக்கத்திலேயே உயரத் தொடங்கிய சந்தை, இன்றைய வர்த்தக முடிவில் BSE குறியீடு 88 புள்ளிகள் உயர்ந்து 5,843 லும், NSE 24புள்ளிகள் உய்ர்ந்து 1,837 லும் இருந்தது. செவ்வாயன்று அதிபர் தேர்தலின் முடிவுகள் பற்றிய அச்சத்தில் மென்பொருள் பங்குகள் சரிந்திருந்தன. ஆனால் புஷ் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் இன்று மென்பொருள் பங்குகள் நல்ல லாபகரமாக இருந்தது.

அதைப் போலவே கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த வங்கிப் பங்குகள், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வங்கித் துறையில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பால் உயரத் தொடங்கியுள்ளது (வழக்கம் போலவே இடதுசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்).

இன்று எல்லா துறைகளிலுமே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். புஷ் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனிப் பங்குச் சந்தைக்கு குஷி தான்.

Leia Mais…