பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Sunday, April 23, 2006

நியாயம் கேட்டு ஒரு போராட்டம்

இந்தியாவின் சட்டங்கள், நீதிமன்றங்கள் எப்பொழுதுமே சாமனிய மக்களை தான் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் இந்த சட்டங்களை தங்களுடைய செல்வாக்கு மூலமும், பணத்தின் மூலமும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செல்வாக்கு இல்லாத சாமானிய மனிதன், நீதிமன்றங்களுக்கு நடந்தே தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்து விடுகிறான். அதுவும் மிகப் பிரபலமான வழக்குகளில் மாட்டிக் கொண்டு விட்டால், கேட்கவே தேவையில்லை. பெரும் முதலைகள் தப்பி விடுவார்கள். சின்ன மீன்களை சட்டங்களும், நீதிமன்றங்களும், காவல் துறையும் வறுத்து எடுக்கும்.

அந்த நிலை தான் அருண் பவ்தேக்கர் என்னும் ஒரு சாமானிய மனிதருக்கு ஏற்பட்டுள்ளது. இவர் சிக்கிக் கொண்டது ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் வழக்கில். கடந்த 14ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறார். இதில் லாபமடைந்த பெரும்முதலைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இவருக்கு 5ஆண்டு கால கடுங்காவல் தண்டனை கடந்த வாரம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவர் செய்த தவறு என்ன ?

அரசாங்க அலுவலகங்களில், வங்கிகளில் நீங்கள் கவனித்திருக்கலாம். சில பேப்பர்கள் பலரின் மேஜைகளுக்கு செல்லும். பலர் கையெழுத்திட்டால் தான் அது செல்லுபடியாகும். அவ்வாறு ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் மும்பை கிளையில் உதவி மேலாளராக இருந்த பொழுது, பல ரிசிப்ட்ஸ்களுக்கு அவர் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப பவதேக்கர் கையெழுத்திட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட சில ரிசிப்ட்ஸ் ஹர்ஷத் மேத்தாவிற்கு ஊழல் செய்ய வாய்ப்பளித்தன. இதனை அவருடைய மேலதிகாரியான சீத்தாராமின் உத்தரவிற்கு ஏற்ப பவ்தேக்கர் கையொப்பம் இட்டார். இது ஊழலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது கூட அவருக்கு தெரியாது. ஆனால் ஹர்ஷத் மேத்தா விவகாரம் வெளியான பொழுது இதில் இவர் சிக்கிக் கொண்டார். பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. மிகுந்த இன்னல்களுக்கு உள்ளானார். அன்றாடச் செலவுகள், நீதிமன்ற செலவுகள் போன்றவற்றுக்கு கூட இவர் மிகுந்த சிரமப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் இவருக்காக போராடியது. ஸ்டேட் பாங்க் இந்த விவகாரத்தில் பவ்தேக்கருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி விட்டது. ஆனால் இப்பொழுது இவருக்கு தண்டனை என்று கோர்ட் கூறியிருக்கிறது.

மறுபடியும் இவர் கோர்ட்டுக்கு நடக்க வேண்டும். ஒரு சாதாரண வங்கி அதிகாரியாக இருந்து, கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இவர் மறுபடியும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இம்முறை சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல வேண்டும்


66 வயதான பவ்தேக்கர் இந்த வயதிலும் நியாயம் கேட்டு போராடி வருகிறார். இது பற்றிய விடியோவை பார்த்த பொழுது மிகுந்த மிகுந்த வேதனையாக இருந்தது.



இந் நிலையில் CNN-IBN இவருக்கு நியாயம் கிடைக்க போராடப் போவதாக கூறியிருப்பது மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. ஜெசிக்கா லால் போன்ற கவர்ச்சிகரமான பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒரு சாமானிய மனிதருக்கு CNN-IBN செய்யும் இந்த உதவி, ஊடகங்களின் போக்கில் ஒரு மாறுபட்ட தன்மையை கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் ராஜ்தீப்பின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

IBN News Report

2005ம் ஆண்டு நான் எழுதிய ஹர்ஷத் மேத்தா ஊழல் பற்றிய தொடரில் பவ்தேக்கர் பற்றி நான் எழுதியிருந்த ஒரு பதிவினை இங்கே மீள்பதிவு செய்கிறேன்

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Statutory General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Statutory General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது. சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை தனது குழந்தைகளுக்காக எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை.

Leia Mais…