கடந்த வாரம் IDFC பங்குகளை வாங்கலாம் என்று இங்கு பரிந்துரை செய்யப்பட்டது
இந்து பிஸ்னஸ் லைன் பத்திரிக்கையும் இன்று வெளியிட்டுள்ள தனது முதலீட்டு பரிந்துரையில் அதேப் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது
மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்
வணக்கம்
என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.
Sunday, October 02, 2005
பணம் காய்க்கும் பங்குகள் - 1 - Follow-up
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI | நேரம் 10/02/2005 09:31:00 PM
Saturday, October 01, 2005
சென்ஸெக்ஸ் தொட்ட கடந்த மாத உச்சம் - 8722 !!
[முன்னுரை: தமிழ் சசி என்னை நம்பி இங்கே எழுத் இடம் அளித்திருக்கிறார். அவருக்குப் பணிவான வந்தனம். அவரது நம்பிக்கை வீண்போகாமலிருக்க முயற்சிப்பேன் என்ற உறுதிமொழியுடன் இந்த முதல் பதிவைப் பதிக்கிறேன். நான் பங்குச் சந்தையைப் பற்றிக் கற்றது கைமண் அளவு. கற்றுக் கொள்ள வேண்டியது கடலளவு. ஆகவே என் கருத்துக்களில் தவறிருந்தால் மன்னித்துத் தயங்காமல் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொண்டு மேலும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன். -உதயகுமார் நளினசேகரன்]
சென்ஸெக்ஸ் குறியீடு கடந்த செப்டம்பர் மாதம் இறுதி நாள் வர்த்தகத்தில் 8634 என்ற அளவில் முடிவுற்றது. குறியீடு இந்த ஆண்டு 8000 என்ற அளவைத் தாண்டினால் கவலைப் பட வேண்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன் இந்திய நிதியமைச்சர் கூறி வந்தார். இப்பொழுது என்னவென்றால், பங்குச் சந்தை வளர்ச்சி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது என்கிறார்.
பங்குச் சந்தை வல்லுனர்கள் கூட பங்கு விலை/ஈட்டும் வருவாய் (Price/Earnings) விகிதம் 17 அல்லது 18 என்ற ஆரோக்கியமான அளவிலேயே உள்ளதால் கவலையில்லை என்று தெரிவிக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்த விகிதங்கள் இன்னமும் 13 முதல் 15 என்ற அளவில்தான் உள்ளன.
இது ஒரு புறமிருக்க, நாம் இந்த வளர்ச்சியைப் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம்.
இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் எனக்குத் தெரியும் வாய்ப்புகளில் சில:
- ப்ரிக் (BRIC) அறிக்கையின் படி இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளுக்குச் சிறப்பாக இருக்கப் போகிறது. 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் ஆக அதிகம் மக்கள் உழைக்கும் வயதில் இருக்கப் போகிறார்கள்
- தகவல் தொழில் நுட்பத் துறையில் அமெரிக்காவின் 50 சதவிகித்திற்கும் அதிகமான சேவை நுகர்வுகள் இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன. தற்போது ABN Amro போன்ற ஒப்பந்தங்களின் நோக்கைப் பார்த்தால் ஐரோப்பியத் துணைக் கண்டத்திலிருந்தும் இந்தியச் சேவை நுகர்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன
- மருத்துவச் சுற்றுலா (medical tourism) துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி
- வாகனங்கள், மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித் துறையானது உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதித் தேவை அளவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியால் சிறப்பாக வளர்ந்து வருகிறது
- பன்முக நூலிழை ஒப்பந்தம் அமலில் இருந்து விலக்கப் பட்ட பிறகு சீனாவின் மேல் அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஏற்படுத்திய ஏற்றுமதித் தடையால் இந்தியாவின் துணி மற்றும் ஆடை உற்பத்தித் துறை எதிர்பார்க்கும் வளர்ச்சி
- சராசரி இந்தியனின் போக்கு எதிர்காலப் பொறுப்புகளை முன்னோக்கி சேமிக்கும் நோக்கிலிருந்து செலவழித்து மகிழும் போக்கிற்கு மாறிக் கொண்டிருப்பதால் அவரது நுகரும் போக்கு (Consumerism) வளர்ந்து அதனால் சந்தையில் உற்பத்திப் பொருட்களுக்கு தேவை அதிகரித்திருக்கும் நிலை
- இந்த ஆண்டு பருவமழை இது வரை நல்ல அளவில் உள்ளதால் விவசாயத் துறையும் நல்ல விளைவுகளை எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு
- நடந்து முடிந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 8 சதவிகிதத்தைத் தாண்டியிருக்கிறது. விவசாயத் துறையின் வளர்ச்சி மட்டுப் பட்டிருந்தாலும், உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன
- இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றப் போவது வங்கித் துறை. தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய முதலீடுகளுக்குத் தேவையான பணத்தைச் சந்தையிலிருந்து புரட்டித் தொழில் வளர்ச்சிக்குத் தர வேண்டிய கடமை இந்தத் துறைக்கு உள்ளது
ஆக, பல நோக்கிலிருந்து பார்த்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சிச் செய்திகள் ஆரோக்கியமான எதிர்பார்ப்பைத் தருவதாக உள்ளன.
இந்த வளர்ச்சிக்கு ஆபத்தாகப் போகக் கூடும் சில போக்குகள் என்ன?
- பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் இந்தியா மில்லினியம் வளர்ச்சிக் குறிக்கோள்களில் - அதாவது மனித வள மேம்பாட்டில் பின் தங்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது
- இன்னமும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உழைக்கும் வயதில் இருப்பவர் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் தேவை. அவற்றை நம்மால் தக்க சமயத்தில் ஏற்படுத்த முடியவில்லையென்றால் விளையக் கூடிய பின்விளைவுகள் பாதகமானவை
- இந்த நிலையில் இடது சாரிக் கட்சிகள் சில பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒரு புறம் பல்லாயிரக் கணக்கில் பல்கிப் பெருகி வரும் சேவை மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படக் கூடும் ஆபத்தைக் கருத்தில் கொள்ள முயற்சி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. அதிக வருவாய் மற்றும் சற்றே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இந்தியனுக்கு அளிக்கக் கூடிய அத்தகைய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க யோசனைகள் செய்வதாகத் தெரியவில்லை. அதரப் பழமையான சில தொழிலாளர் நலச் சட்டங்களை, ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன், அடைகாத்து வருகிறார்கள்
- பண்ணை மற்றும் விவசாயத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் (சாலைகள், குளிர்பதன வசதிகள்) மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. இதற்கான தொழில்நுட்பதை இறக்குமதி செய்து தேவையான முதலீடுகளைச் செய்யக் வல்ல தனியாரின் அந்நிய முதலீடுகளுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்
- அரசின் தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்றவை அரசுக்கு ஏகப் பட்ட பொருட் செலவைத் தரக் கூடியவை. இந்தத் திட்டங்கள் எந்தத் திசையில் செல்லப் போகின்றன என்பதில் தெளிவில்லை
- பேசல் II நியமங்களை அமலுக்குக் கொண்டு வந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கும் அரசு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை வழங்க வேண்டிய வங்கிகளில் அதன் முதலீட்டு விகிதத்தைக் குறைக்க இயலவில்லை. முறையான செலவுகளுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்கும் நம் அரசு, வங்கிகளில் தனது முதலீட்டை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் அதிகரிக்கப் போவது எப்படி?
- சில வாரங்களுக்கு முன் தரமற்ற சில தரகர்களும், நேர்மையற்ற சில நிறுவனர்களும், சில கறுப்புப் பண முதலை முதலீட்டாளர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு சல்லிக்காசு பங்குகள் (மற்றும் வழக்கிலில்லாப் பங்குகள்) விலைகளை எக்கச் சக்கமாக ஏற்றி, பல விபரம் தெரியா முதலீட்டாளர்களின் பொருள் இழப்புக்குக் காரணமானார்கள். அரசு அமைப்புகள் சற்றே விழிப்புடன் செயல்பட்டதால் இந்த இழப்பு மேலும் பெரிதாகாமல் சமயத்தில் தவிர்க்கப் பட்டது. இருந்த்தும் இந்தியப் பங்குச் சந்தை இந்த வகை ஆபத்துகளை இன்னமும் முழுமையாகத தவிர்க்கவில்லை.
சென்ஸெக்ஸின் இந்த வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய நோக்கு என்னவென்றால் மேற்கூறிய நிலைகளோ, அல்லது வளர்ச்சிக்கு பாதகம் என்று கருதப் படும் எந்தவொரு செய்தியோ (உதாரணங்கள்: உயர்ந்து வரும் கச்சா எண்ணை விலை, மும்பை வெள்ளம், கட்ரீனா சூறாவளி ஏற்படுத்திய சேதம், ஈரான் இந்தியாவிற்கு திரவ எரிவாயு அளிக்கச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாக வந்த செய்தி) சென்ஸெக்ஸ் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.
சென்ஸெக்ஸ் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் - "இந்தியாவில் இன்று திறந்த நிலையில் முதலீடு இல்லாத ஒருவனுக்கு முதலீட்டு அறிவு மட்டு" என்று அன்னிய முதலீட்டாளர்களிடையே வளர்ந்து கொண்டிருக்கும் எண்ணமும் எதிர்பார்ப்பும்தான். கடந்த ஜீன் மாதம் முதல், மாதம் ஒரு பில்லியன் என்ற அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இந்தியாவில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகம் என்றாலும் சீனாவிற்குக் கிடைக்கும் அந்நிய முதலீடுகளை ஒப்பிடும் போது இந்தியா இன்னமும் மிகக் குறைவாகத்தான் முதலீடுகளைப் பெறுகிறது. அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வந்து கொண்டிருந்த முதலீடுகள் போக இன்று ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கூட இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டிருக்கின்றன.
Leia Mais…இடுகையிட்டது ந. உதயகுமார் | நேரம் 10/01/2005 11:06:00 PM