பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Sunday, July 09, 2006

நியூஜெர்சி பட்ஜெட்டின் அரசியல்

நம்ம ஊர் அரசியல்வாதிகளை மிஞ்சக்கூடிய "சூப்பர் அரசியல்" காமெடி நியூஜெர்சியில் நடந்தேறி உள்ளது. நியூஜெர்சி கவர்னர் கோர்சைன் தனது பட்ஜெட்டில் கூறிய புதிய விற்பனை வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவரது கட்சியை சேர்ந்த டெமாக்ராட் உறுப்பினர்களுடன் நடந்த மோதலால், பட்ஜெட்டை ஜூலை 1 காலவரைக்குள் நிறைவேற்ற முடியவில்லை.

பட்ஜெட்டை ஜூலை 1க்குள் நிறைவேற்றாததால், அரசாங்கம் எந்த செலவீனங்களையும் செய்ய முடியாது. இதனால் அத்தியாவசிய ஊழியர்கள் தவிர பலருக்கு தற்காலிக "சம்பளம் இல்லாத விடுப்பு" வழங்கப்பட்டது. அதாவது நியூஜெர்சியின் மொத்த அரசு பணியாளர்களான 84,000 பேரில் 45,000பேருக்கு பட்ஜெட் நிறைவேற்றும் வரை வேலையில்லை. அரசுப் பணிகள் முடங்கிப் போயின.

இதைத் தவிர இங்குள்ள அட்லாண்ட்டிக் சிட்டியின் பிரபலமான சூதாட்ட மையங்களில், இந்த சூதாட்டங்களைக் கண்காணிக்க கூடிய அரசின் கண்காணிப்பாளர்கள் வேலைக்கு வராததால், இங்கிருக்கும் பல கேசினோக்கள் இழுத்து மூடப்பட்டன. இதனால் சுமார் 36,000க்கும் மேலான கேசினோ ஊழியர்களுக்கு கடந்த புதன்கிழமையில் இருந்து வேலையில்லை.

ஒரு வாரமாக நடந்த இந்தப் பிரச்சனை, ஒரு வழியாக கவர்னருக்கும், அவரது எதிர்தரப்பு டெமாக்ராட் கோஷ்டியான ராபர்ட்சுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு நேற்று காலை பட்ஜெட் ஒப்புக்கொள்ளப்பட்டு இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பட்ஜெட் பிரச்சனை இது தான்.

கவர்னர் கோர்சைன் நியூஜெர்சியின் பட்ஜெட் பற்றாக்குறையான 4.5பில்லியன் டாலர்களை சரிக்கட்ட விற்பனை வரியை தற்போதைய 6%ல் இருந்து 7%மாக உயர்த்த வேண்டும் என்கிறார். இந்த வரி விதிப்பு மூலம் கிடக்கும் நிதி, பற்றாக்குறையை சரிக்கட்டவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கவர்னர் உறுதியாக இருந்தார். இந்த புதிய வரி விதிப்பு மூலம் 1.1பில்லியன் திரட்ட முடியும். ஆனால் சராசரி நியூஜெர்சி குடும்பத்தின் செலவு வருடத்திற்கு சுமார் 275டாலர்கள் அதிகரிக்கும்.

ஆனால் அவருடைய எதிர்தரப்பான ராபார்ட்ஸ், இந்த விற்பனை வரியை ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த விற்பனை வரி விதிப்பிற்கு பதிலாக அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரியை உயர்த்துவது, சூதாட்ட வரிகளை உயர்த்துவது, செலவீனங்களைக் குறைப்பது போன்றவற்றைச் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் கவர்னர் வருமான வரியை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் அவரது பட்ஜெட்டை அசம்லியில் நிறைவேற்ற அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே ஒப்புக்கொள்ள வில்லை. இதனால் எழுந்த நெருக்கடி தான் ஜூலை 1 காலவரைக்குள் பட்ஜெட்டை நிறைவேற்றாத சூழ்நிலை எழுந்து அரசுப் பணிகள் முடங்கிப் போயின.

ஒரு வழியாக நேற்று காலை, விற்பனை வரி மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டு அதிக அளவில் இருக்கும் சொத்து வரியை (Property tax) குறைக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சமரசத்துடன் ராபர்ட்சும், கவர்னர் கோர்சைனும் சமரசம் செய்து கொண்டனர். பட்ஜெட்டும் அமலுக்கு வந்துள்ளது

இந்தப் பிரச்சனையால் அட்லாண்டிக் சிட்டியில் இருக்கும் சூதாட்ட மையங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 16மில்லியன் வருமானத்தை இழந்திருக்கின்றன. இந்த சூதாட்ட மையங்கள் மூலம் நியூஜெர்சி அரசுக்கு வர வேண்டிய வரியையும் அரசு இழந்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்குப் பிண்ணனியில் இருக்க கூடிய காரணம், உள்ளூர் அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ராபர்ட்சுக்கும், கோர்சைனுக்கும் டெமாக்ரட் கட்சிக்குள் இருக்கும் போட்டி காரணமாகவே இந்தப் பிரச்சனை எழுந்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியிருந்தது. கவர்னர் கோர்சைனுக்கும், கெம்டவுன் கவுண்டியைச் (Camden County) சார்ந்தவர்களுக்கும் இருக்கும் அதிகார போட்டியின் வெளிப்பாடு தான் இந்தப் பிரச்சனை என அந்த செய்தி தெரிவித்து இருந்தது.

கவர்னர் மூன்று மாதங்களுக்கு முன்பே தனது பட்ஜெட்டை சமர்ப்பித்தார் என்று தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் ஒரு வாரம் அரசுப் பணிகள் முடங்கிப் போகும் அளவுக்கு இந்தப் பிரச்சனை சென்றது மிக மோசமான நிர்வாக முறையின் வெளிப்பாடு தான்.

Leia Mais…