பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Friday, April 01, 2005

உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1

உலகின் பொது நாணயமாக (World's reserve currency) அமெரிக்க டாலர் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வாரம் ஹிந்து நாளிதழில் கூட இது பற்றிய ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது.

உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.

1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.

இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.

உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?

உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?

அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மை

உலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.

பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.

உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.

சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.

இந்த நிலை ஏற்படுமா ? அமெரிக்க டாலர் உலக நாணயாமாக இருக்கும் நாட்கள் எண்ணப்படுகிறதா ?

அடுத்தப் பதிவில் பார்ப்போம்

7 மறுமொழிகள்:

Narain Rajagopalan said...

என்கென்னமோ, யூரோ வேண்டுமென்று தோன்றுகிறது. பார்ப்போம்.

3:25 AM, April 01, 2005
இராதாகிருஷ்ணன் said...

தொடருங்கள். டாலரின் சரிவு ஐரோப்பிய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றே அவ்வப்போது செய்திகளில் காணமுடிகிறது.

வேறு: இன்றைக்கு 'முக்கிய வணிகச் செய்திகள்' பட்டையில் 'Aptech Q4 loss at Rs 72.89 cr' என்றதைப் பார்த்தேன். தகவல்தொழில் நுட்பம் சம்மந்தமான பயிலகங்கள்/பயிற்சிக்கூடங்கள் உச்ச நிலையிலிருந்து இறங்கிக் கொண்டா உள்ளன?

4:19 AM, April 01, 2005
Sridhar Sivaraman said...

ஏன் உலக பொது கரன்ஸியக ஏதோ ஒரு நாட்டின் கரன்ஸி இருக்கவேண்டும்...
ஐநா ஒரு பொது கரன்ஸி வெளியிட முடியதா?

4:56 AM, April 01, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

நாராயணன், கிரிஸ்டோபர், இராதா, ஸ்ரீதர்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

தகவல்தொழில் நுட்ப பயிற்சி கூடங்களுக்கு இருந்த மவுஸ் குறைந்து விட்டது. உண்மையில் இந்த பயிற்சி கூடங்களில் தற்போதைய தரம் திருப்தி தரும் அளவில் இல்லை. இதுவும் தவிர Aptech போன்ற பயிற்சி கூடங்களை விட Short term கோர்ஸ்களுக்குத் தான் நல்ல மவுஸ் இருக்கிறது

ஐநா வெளியிடும் பொது நாணயமா ? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை

11:46 PM, April 01, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

நாராயணன், கிரிஸ்டோபர், இராதா, ஸ்ரீதர்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

தகவல்தொழில் நுட்ப பயிற்சி கூடங்களுக்கு இருந்த மவுஸ் குறைந்து விட்டது. உண்மையில் இந்த பயிற்சி கூடங்களில் தற்போதைய தரம் திருப்தி தரும் அளவில் இல்லை. இதுவும் தவிர Aptech போன்ற பயிற்சி கூடங்களை விட Short term கோர்ஸ்களுக்குத் தான் நல்ல மவுஸ் இருக்கிறது

ஐநா வெளியிடும் பொது நாணயமா ? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை

12:07 AM, April 02, 2005
ந. உதயகுமார் said...

தமிழ் சசி,

1. ஒரு நாட்டின் நாணயத்தின் 75 சதவிகிதம் மற்ற நாடுகள் கையில் சேமிப்பாக இருப்பது அந்த நாட்டின் நாணயத்திற்குப் பாதுகாப்பல்லவா. டாலரைக் கையில் வைத்திருக்கும் அனைத்து நாடுகளும் தன் சேமிப்பின் மதிப்பைக் காக்கும் பொருட்டு டாலரின் மதிப்பைக் காக்க முனைய மாட்டார்களா?

2. சீனாவும் இந்தியாவும் நெருங்கி வருவது போல் தோன்றுகிறது. ஆசியாவின் நெருப்பைக் கக்கும் பாம்பும் (சீனா dragon), புலியும் ( இந்தியா) மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இவை இரண்டும் கை கோர்த்துக் கொண்டால் என்ன நடக்கும்?

3. ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரேபிய நாடுகள் போல் ஏன் ஐக்கிய ஆசிய நாடுகள் உருவாக்கப் படக் கூடாது.

4. நாணயத்தின் மதிப்பு உண்மையில் ஒரு நாட்டின் வளத்தையும் (இயற்கை, மக்கள்), உற்பத்தித் திறனையும் வைத்துத்தான் கணக்கிடப் பட வேண்டும். நம் முன்னோர் உற்பத்தியைத் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். அது ஒரே சமயத்தில் நமக்கு எதிராகவும் ஆதரவாகவும் திரும்பியிருக்கிறது. புத்திசாலித் தனமாக நடந்து கொண்டால் நிச்சயம் பிழைத்துக் கொண்டு நாம் முன்னேறுவோம்.

- உதயகுமார்

12:14 AM, April 02, 2005
Muthu said...

சசி,
அருமையான கட்டுரை. தமிழில் இதுபோன்ற கட்டுரைகளைப் பார்ப்பது கொஞ்ச்ம அரிதாகவே இருகிறது. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

7:26 PM, June 15, 2005