பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, September 24, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 1

பங்குச்சந்தையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது ? இந்தக் கேள்வி சில வாரங்களாக இந்திய ஊடகங்களில் அதிகமாக அலசப்படுகிறது. பலரும் பல யூகங்களை முன்வைக்கின்றனர். BSE பங்குச்சந்தைக் குறியீடு 10,000 புள்ளிகளை எட்டும், 16,000 எட்டி விடும் தூரம் தான் போன்ற பேச்சுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 8000 நோக்கி பங்குச்சந்தை சரியும் என்ற எண்ணம் பரவலாக தென்பட தொடங்கி இருக்கிறது.

நான் சென்னையில் இருந்து இங்கு வந்த பொழுது பங்குச்சந்தை 6000ஐ கடக்கும் நிலையில் இருந்தது. இங்கு வந்த சில மாதங்களில் குறியீடு 8000ஐ எட்டி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து வந்த சில நாட்களில், ஜெட் வேகத்தில் குறியீடு 8500ஐ எட்டி என்னை அச்சப்படுத்தியது. ஆம் ...குறியீட்டின் உயர்வு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையே ஏற்படுத்தியது.

இந்த உயர்வுக்கு என்ன காரணம் ? பங்குச்சந்தைக்கு ஏதேனும் சாதகமான சூழல் நிலவியதா ?

உண்மையில் பங்குச்சந்தையை உயர்த்தக் கூடிய, இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்த்தக் கூடிய எந்த நிகழ்வும் கடந்த சில மாதங்களில் நடக்க வில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால் குறியீடு அவற்றை பற்றிக் கவலை கொள்ள வில்லை. உயர்ந்து கொண்டே தான் இருந்தது. அது போலவே பங்குச்சந்தையின் உயர்வுக்கு பிறகு பங்குவிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய Correction கூட நிகழ வில்லை. இது போன்றவை தான் அனைவரது மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்தியப் பங்குச்சந்தையின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் - Global excess Liquidity. தற்பொழுது உலகில் இருக்க கூடிய மிக அதிக அளவிலான பண புழக்கம். இது பற்றி அலசுவதற்கு முன்பாக இந்த உயர்வின் காரணமாக எழுந்திருக்கும் ஊடக எண்ணங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவலை போன்றவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

இந்தியப் பங்குச்சந்தையின் எதிர்காலம் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. அடுத்து வரும் சில ஆண்டுகளில் குறியீடு 15,000 கடக்கும் என்ற பரவலான எண்ணத்தில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் அது படிப்படியாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கேற்ப வளர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறக்கூடிய சூதாட்ட மையமாக இந்தியப் பங்குச்சந்தை மாறி விடக்கூடாது.

ஹர்ஷத் மேத்தாவின் ஊழலால் பங்குச்சந்தை உயர்ந்த நிலையும் அதன் பிறகு கேத்தன் பராக்கின் கதையுடனும் தற்போதைய நிலை ஓப்பிட்டு பார்க்கப்படுகிறது. பிரதமர், நிதியமைச்சர், மைய அரசின் புலனாய்வு துறை, வருமான வரித் துறை போன்ற அனைத்து துறைகளும் பங்குச்சந்தையை கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியப் பங்குச்சந்தைக்கு பணம் வரும் வழிகள் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. வங்கிகளில் இருந்து ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தைக்கு பணத்தை மாற்றியது போல தற்பொழுது ஏதேனும் செய்யப்படுகிறதா என்பது குறித்து அரசாங்கம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. பங்குத் தரகர்களின் அலுவலகங்கள், வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது தேவை தானா என்று கேள்வி எழுப்பப்படுகிற அதே நேரத்தில் குப்பை நிறுவனங்களின் சூம்பிக் கிடந்த பங்குகள் விலை எகிறியுள்ளதை பார்க்கும் பொழுது பங்குச்சந்தையில் மற்றொரு ஊழல் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிகழ்வுகள் இந்தியப் பங்குச்சந்தையை உலகின் பல முண்ணனி பங்குச்சந்தைகளின் தரத்திற்கு இணையாக உயர்த்தி இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தை என்றில்லாமல் ஆசியாவில் இருக்க கூடிய பல பங்குச்சந்தையிலும் இந்த முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு 8.5 பில்லியன் டாலர்களுக்கு முதலீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இவர்களின் முதலீடு இது வரையில் 8பில்லியன் டாலரை எட்டி விட்டது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் செய்யும் முதலீடு தான் குறியீடுகளின் உயர்வுக்கு முக்கிய காரணம். சில பங்குங்களில் சில பங்குத் தரகர்களின் தகிடு தத்தங்கள் நடந்திருக்கிறது என்றாலும் இந்தியப் பங்குச்சந்தையின் மொத்த உயர்வுக்கும் காரணம் இந்த கோல்மால் வேலைகள் தான் என்று முடிவு செய்து விட முடியாது ? காளைச் சந்தையில் சில பங்குகளில் இது போன்றவை நிகழ்வது சர்வசாதாரணம்.

இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு முக்கிய காரணம், நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய Global Liquidity தான்.

இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்

எனது பங்குச்சந்தை பதிவை கடந்த சில மாதங்களாக வேலைப்பளு, இந்திய பங்குச்சந்தையை கவனிக்க முடியாத நேர வேறுபாடு போன்ற சூழலால் எழுத முடியாத நிலையில் இருந்தேன். எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்கள் பலருக்கு (சும்மா ஒரு பந்தா தான், கொஞ்சம் பேர் தான் மெயில் அனுப்பி இருந்தாங்க) முடிந்த வரையில் பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன். சிலருக்கு அனுப்ப முடியவில்லை. இவ்வாறான நண்பர்களின் ஆதரவு தான் மறுபடியும் என்னை எழுத தூண்டி இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி

2 மறுமொழிகள்:

Anonymous said...

vankkam Mr.Thamizsasi.
Many many thaks for your article. Our friends are very interested to read you. keep write atleast once in week on your view about indian share market situation. now only we started to invest this. i beleive your views may help us.

2:13 AM, September 25, 2005
Anonymous said...

Hi Thamizsasi,

Please try to continue your postings....we are eagerly waiting for your post here in this blog....


Regards,
Ramprasath,
Chennai

10:07 AM, September 25, 2005