இந்திய மென்பொருள் சேவைத் துறையின் ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக ஆரோக்கியமாக இருந்தன. உண்மையில் மென்பொருள் சேவை அளிக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் மற்றும் வர்த்தகம் சக்கைப் போடு போட்டன.
மழை தொடர்ந்து பெய்தால் அங்கங்கே நூற்றுக் கணக்கில் முளைக்கும் காட்டுக் காளான்கள் போல அந்தச் சமயத்தில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நோக்கத்தில், மென்பொருள் சேவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், பெயரில் மட்டுமே 'இன்·போடெக்', 'இன்·போஸிஸ்' என்று இணைப்புச் சேர்த்துக் கொண்டு, ஏமாறக் காத்திருந்த பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய பேர்வழிகள் ஏராளம்.
செபி (SEBI) நிறுவனமும், இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு
- முதலீட்டாளர்களுக்குக் களை எது பயிர் எது என்று அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
- பங்குச் சந்தை வர்த்தக முறைகளை மேம்படுத்துவது, மற்றும்
- நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவது
இருந்தும் இந்தியப் பங்குச் சந்தை முறைகளில் இன்னமும் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளன. ஆகப் பெரிய ஓட்டை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மண்டபத்தில் யாராவது சொல்லி செபிக்குத் தெரிந்ததா அல்லது அவர்களே கண்டு பிடித்தார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்டு பிடித்து விட்டார்கள். எப்படியோ செபி கண்கொத்திப் பாம்பாகச் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து முறைப் படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. பாராட்ட வேண்டியதுதான்.
காகிதப் பங்கு பத்திரங்கள் முறை வழக்கொழிந்து மின் பங்குகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. இதனால் பல முறைகேடுகள் ஒழிந்து விட்டன. இருந்தும் சமீபத்தில் இந்தியாவில் பல மின் பங்கு வைப்புக் கணக்குகளை (depository account) ஒருவரே பினாமி பெயர்களில் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வநதுள்ளது.
பங்கு வைப்புக் கணக்குகளை நடத்தும் நிறுவனங்கள் (Depository Participants) புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது வைப்பாளரின் அடையாளத்தை சந்தேகமறப் பெற வேண்டியது அவர்களின் முதன்மைப் பொறுப்பு. பினாமி கணக்குகள் ஏற்படுத்த முடியாமல் தடுக்க செபி இந்தப் பொறுப்புக்களையும், அவற்றிலிந்து தவறினால் கடும் விளைவுகளை DP நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கடும் எச்சரிக்கைகளையும் அறிவித்திருந்த போதும் இந்தக் கதி.
மிகப் பெயர் போன DP நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூட இந்தப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளன. ஒருவர் யெஸ் (Yes) வங்கியின் பங்குகளை முதன்மைச் சந்தையில் மிக அதிக அளவில் யாருக்கும் சந்தேகம் வராமல் வாங்கும் நோக்கத்தில் பல பினாமி கணக்குகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றியும் உள்ளார்.
அவர் எத்தனை கணக்குகள் ஏற்படுத்தினார் தெரியுமா? இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள்! இவர் வில்லாதி வில்லனென்றால், இவருக்குத் தம்பி ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய பினாமி கணக்குகள் சுமார் ஆயிரத்து ஐநூறு.
மனிதர் வாங்கிய பங்குகளை சந்தை அல்லாத வர்த்தகத்தில் (off market transaction) விற்ற கொஞ்ச நாளில் செபிக்கு எப்படியோ ஊசல் வாடை எட்டி விட்டது. மாட்டிக் கொண்டார் பாவம். கூடச் சேர்ந்து மாட்டிக் கொண்டிருக்கும் DP நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்புகளிலிருந்து தவறியதால் மாட்டிக் கொண்டனவா அல்லது திருட்டில் கூட்டாளிகளா என்பது இன்னமும் தெரியவில்லை. ஒரே ஆளுக்கு ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் என்றால் சந்தேகம் பலமாகதான் வருகிறது.
பலர் முதன்மைச் சந்தையில் பங்குகள் வாங்கி அவை சந்தையில் பட்டியலிடப் பட்டதும் அதிக விலையில் விற்று குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் ஆசையில் ஆழம் தெரியாமல் இந்த மாதிரிப் புதை சேறுகளில் காலை விட்டு விடுகிறார்கள். நான் தரமானவை என்று கருதும் பங்குகளில் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்வதால் முதன்மைச் சந்தை பக்கம் போவதேயில்லை.
வங்கிகள் தத்தம் முதலீடுகளை அதிகரிக்க பங்குச் சந்தையைக் கூடிய விரைவில் நாடக் கூடும். 2007 ஆண்டு வாக்கில் இந்திய வங்கிகள் BASEL II விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும். பொருளாதாரம் போகும் வேகத்தில், இந்திய வங்கிகள் துறை அபரிமிதமான் வளர்ச்சியைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றிப் பணம் பண்ணக் கூடிய விஷமிகளைக் கண்டறியக் கூடிய விழிப்பு முதலீட்டாளர்களிடம் வேண்டும்
1 மறுமொழிகள்:
pl could u try to write abt basel II...? thanks
11:11 AM, December 17, 2007Post a Comment