இந்தியப் பங்குச்சந்தை எப்பொழுது சரியும் என பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தனர். அந்தச் சரிவு நேற்று நிகழ்ந்து விட்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (BSE) 463புள்ளிகள் சரிந்ததுள்ளது. தேசியப் பங்குச் சந்தை (NSE) 147.10 புள்ளிகள் சரிந்துள்ளது. ஒரே நாளில் ரூபாய் 100,000 கோடி முதலீட்டாளர்களின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
இந்தச் சரிவு நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று தான் என்ற வகையில் பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. என்றாலும் ஒரே நாளில் ஏற்பட்ட இந்தச் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாக ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல், கடந்த பாரளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்து இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற பொழுது என வெகு சில தருணங்களில் தான் இந்தளவுக்குச் சரிவு இருந்தது. ஆனால் இம் முறை அத்தகைய பெரிய trigger எதுவும் இல்லை என்றாலும் நீண்ட நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க தொடங்க, அத்துடன் மேலும் சில காரணங்களும் சேர்ந்து கொண்டு பங்குச்சந்தையை சரிய வைத்து விட்டது.
இந்தியப் பங்குச்சந்தையே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்பத் தான் ஆடிக் கொண்டிருக்கிறது. பங்குக் குறியீடுகளின் உயர்வு இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகளைச் சார்ந்து இருக்க வில்லை. பல பங்குகளின் விலை மிகவும் உச்சகட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. மார்கன் ஸ்டேன்லி கடந்த மாதம் ஆசியாவிலேயே இந்தியப் பங்குச்சந்தையின் விலை தான் மிக அதிக அளவில் இருப்பதாக தெரிவித்து இருந்தது. பங்குச் சந்தை சரியக் கூடும் என்றாலும் 11,000 புள்ளிகளுக்கு கீழே போகக் கூடிய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து இருந்தது.
பொதுவாக பங்குச்சந்தை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பல ஆய்வு அறிக்கைகளுக்கு ஏற்ப பங்குக்குறியீட்டின் உயர்வு இருக்க வில்லை. தினமும் புதிய உயர்வுகளைப் பெற்று கொண்டே தான் இருந்தது. அதனால் இந்த அறிக்கைகளை விட முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்க கூடிய Liquidity தான் பங்குக் குறியீடுகள் உயருவதற்கு முக்கிய காரணங்களாக இருந்து வந்திருக்கின்றன. எனவே பங்குச்சந்தையின் உயர்வையும் தாழ்வையும் இதனைச் சார்ந்தே பார்க்க வேண்டும்.
பங்குச்சந்தையில் சரிவதற்கான வாய்ப்பு இருந்து கொண்டே இருந்தாலும் சில விடயங்கள் பங்குச்சந்தையை நேற்று சரிய வைக்க முக்கிய காரணிகளாக இருந்துள்ளது
- அரசு சிமெண்ட் நிறுவனங்களிடம், சிமெண்ட் விலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறியது
- கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே இருந்த தங்கம் மற்றும் பிற உலோகங்களின் விலை சரிந்தது
போன்றவை இந்தியப் பங்கு குறியீடுகளின் சரிவுக்கு முக்கிய காரணம்.
Profit taking + Speculation இவை தான் இந்தச் சரிவிற்கு முக்கிய காரணம். இந்தச் சரிவு இன்னும் தொடரும் என்று சிலரும், பங்குக்குறியீடுகள் எகிறலாம் என்று சிலரும் கூறுகிறார்கள். பொதுவாக ஒரு பெரிய சரிவிற்குப் பிறகு குறியீடுகள் உயருவது தான் வாடிக்கை. பங்குகளின் குறைந்த விலையை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முற்படுவது வழக்கம். அது பங்குகளின் விலையை உயர்த்தும்.
மாறாக மேலும் சரிவு இருந்தாலும் கூட பங்குகளை வாங்குவது நல்லது தான்.
Graph : Hindu Businessline
Monday, May 15, 2006
சரியும் குறியீடு
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI | நேரம் 5/15/2006 10:44:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
13 மறுமொழிகள்:
சசி,
10:56 PM, May 15, 2006//
மார்கன் ஸ்டேன்லி கடந்த மாதம் ஆசியாவிலேயே இந்தியப் பங்குச்சந்தையின் விலை தான் மிக அதிக அளவில் இருப்பதாக தெரிவித்து இருந்தது
//
//
மாறாக மேலும் சரிவு இருந்தாலும் கூட பங்குகளை வாங்குவது நல்லது தான்.
//
மேற்கண்டவை சிறிது முரண்பாடாக தோன்றுகிறது.
பங்குகளின் மதிப்பு உண்மையான மதிப்பை விட அதிகமாக இருக்கும் தற்போதய நிலை போன்றவற்றில், முதலீடு செய்ய பணம் இருக்கையில், அதனை என்ன செய்வது?
sylvia
வணக்கம் சசி!
11:12 PM, May 15, 2006நல்லதொருப் பதிவு! பங்கு சந்தை ஒரு கரெக்ஷனை எதிர்ப்பார்த்து நீண்ட நாட்களாக காத்திருந்தது,தற்போது நடைப்பெற்று விட்டது.ஆனால் இது 5 மாநில தேர்தல் முடிவுக்கு அப்புறம் வந்ததற்கு ஏதேனும் அரசியல் ரீதியான காரணம் இருக்குமோ என்றும் சிந்திக்க வைக்கிறது. இது போன்ற பெருத்த சரிவிற்கு காரணம் ஹெட்ஜ் ஃபண்ட் எனப்படும் அந்நிய முதலீடுகள் திடீர் என்று வெளியேறுவதே அதனை தடுக்க செபி ஏதோ புதியக்கட்டுப்பாடுகள் விதித்ததே அது என்னவாயிற்று? சில வாரங்களுக்கு முன் மோர்கன் - ஸ்டான்லி அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையிலிருந்து வெளியேரலாம் என ஆலோசனை வழங்கியதாக சிஃபி இணையதளத்தில் படித்தேன் அது உண்மையோ?
sylvia,
11:19 PM, May 15, 2006இந்தியக் குறியீடுகளின் உயர்வு குறித்தும், பங்குகளின் விலை குறித்தும் குறியீடுகள் உயரும் பொழுதெல்லாம் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. பங்குகளின் விலை உச்சகட்டத்தில் இருப்பதாக குறியீடு 8000ல் இருந்த பொழுதும் சொன்னார்கள், 1000ல் இருந்த பொழுதும் சொன்னார்கள்.
ஆனால் குறியீடு உயருவதற்கு முக்கிய காரணம் Global Liquidity தான். அந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.
அதனால் தான் பங்குகளை வாங்கலாம் என்று கூறினேன்.
பங்குகள் பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே உயரவில்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
வவ்வால்,
11:29 PM, May 15, 2006Hedge Fundsன் short selling, speculation போன்றவை பங்குச்சந்தைக்கே உரிய இயல்புகள். உலகமயமாகி விட்ட நம் பங்குச்சந்தையில் அதை தடுப்பது கடினம்.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு சரிசமமாக உள்நாட்டு முதலீடுகளும் பெருக வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற பெரிய சரிவுகளை தடுக்க இயலும். நேற்றைய சரிவிற்கும் உள்நாட்டு முதலீடுகள் சந்தைக்குள் வராமல் போனதும் ஒரு காரணம்.
இந்தியாவின் பல பரஸ்பர நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்கும் பொழுதெல்லாம், பங்குகளை வாங்கத் தொடங்குவார்கள். சரிவு சரி செய்யப்படும்.
ஆனால் நேற்று அவ்வாறு பரஸ்பர நிதிகள் பங்குகளை வாங்காததும், சரிவிற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்
இந்திய பங்கு சந்தையை ரெகுலராக கவனிக்கவில்லை என்பதால் மேம்போகாக என் கருத்தை சொல்கிறேன்.11000 என்பது நம் பங்கு சந்தைக்கு டூ மச். சராசரி P/E ratio 10க்கு மேல் இருந்தால் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது வீணே.
12:09 AM, May 16, 2006P/E ratio என்ற 8 or 10 கீழெ விழுந்தபின் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பானது
இந்தப் பதிவு குறித்து இந்தனை நாள் அறியாமல் இருந்திருக்கிறேன். வருத்தப் படுகிறேன். நல்ல செயல்; தொடர்ந்து எழுதுங்கள்.
6:08 AM, May 16, 2006குப்புசாமி செல்லமுத்து
sylvia, செல்வன்,
7:39 PM, May 16, 2006பங்குகளின் விலை என்பது என்ன ? பங்குகளின் உண்மையான விலையை சரியாக நிர்ணயம் செய்து விட முடியுமா ? பங்குகளின் உண்மையான விலைப்படி தான் இன்றைய இந்தியப் பங்குச்சந்தை இயங்கி வருகிறதா ? பங்குகளின் P/E, குறியீடுகளின் P/E இவற்றைச் சார்ந்து தான் இந்தியப் பங்குச்சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறதா ?
பங்குகளின் விலை, P/E, bookvalue போன்ற எல்லாவற்றையும் சார்ந்து மட்டுமே இன்று இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துகொண்டிருக்க முடியுமா ?
இந்தக் கேள்விகள் எழுகின்றன
பங்குச்சந்தை வர்த்தக முறையில் இது தான் விலை, இதற்குள் தான் இயங்க வேண்டும் என்ற எந்த வரையரையும் இல்லை. இன்று உலகளவில் பொருளாதாரம் சிறப்பாக இயங்குகிறது. முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் பல நிறுவனங்களிடமும், சிறு முதலீட்டாளர்களிடமும் உள்ளது. இந் நிலையில் பணம் பங்குச்சந்தைக்கும் வரும் பொழுது பங்குகள் உயருகின்றன. இந்தியப் பொருளாதாரமும் சிறப்பாக உள்ள நிலையில் இன்று முதலீட்டின் சில விதிமுறைகள் இந்தியப் பங்குச்சந்தைகளிலும், வளரும் நாடுகளின் பங்குச்சந்தையிலும் தளர்ந்து போய் உள்ளன. இந்தியப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து இருக்கிறது.
நல்ல நிறுவனங்களின் பங்குகளை இந்தச் சூழ்நிலையில் வாங்கலாம். அதாவது வளர்ச்சிப் பெறும் வாய்ப்புகள் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம்.
இந்த புதிய முதலீட்டு நிலைகள் குறித்தும், அது எவ்வாறு இது வரை நாம் நம்பி வந்த நிலைகளில் இருந்து மாறியிருக்கிறது என்பது குறித்தும் நீண்ட நாட்களாகவே ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்
// இந்த புதிய முதலீட்டு நிலைகள் குறித்தும், அது எவ்வாறு இது வரை நாம் நம்பி வந்த நிலைகளில் இருந்து மாறியிருக்கிறது என்பது குறித்தும் நீண்ட நாட்களாகவே ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன் //
8:36 PM, May 16, 2006நீங்கள் மற்றும் செல்வன் போன்றவர்களோடு உரையாடுவது மேலும் பல விஷயங்கள் கற்க உற்சாகம் அளிக்கிறது. மிக விரைவில் மேற்சொன்ன பதிவை எதிர்பார்க்கிறேன்.
சசி,
9:07 PM, May 16, 2006நல்லதொருப் பதிவு!
நன்றி!!
பங்குகளின் உண்மையான விலையை சரியாக நிர்ணயம் செய்து விட முடியுமா ? ////
9:36 PM, May 16, 2006முடியும்
பங்குகளின் உண்மையான விலைப்படி தான் இன்றைய இந்தியப் பங்குச்சந்தை இயங்கி வருகிறதா ? ///
இல்லை.அதனால் தான் நிறைய பேர் பணத்தை இழக்கிறார்கள்
//பங்குகளின் P/E, குறியீடுகளின் P/E இவற்றைச் சார்ந்து தான் இந்தியப் பங்குச்சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறதா ?///
இல்லை.அதனால் தான் நிறைய பேர் பணத்தை இழக்கிறார்கள்
///பங்குகளின் விலை, P/E, bookvalue போன்ற எல்லாவற்றையும் சார்ந்து மட்டுமே இன்று இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துகொண்டிருக்க முடியுமா ?////
புத்திசாலித்தனமாகத்தான் முதலீடு செய்ய வேண்டுமா என கேட்டால் இல்லை.முட்டாள்தனமாகவும் செய்யலாம்.P/E, bookvalue போன்றவற்றை விட்டுவிட்டு சந்தைவிலையை மட்டும் கணக்கெடுத்து செய்யப்படும் முதலீடு வாரன் பப்பட்டை பொறுத்தவரை முட்டாள்தனமானதுதான்.அவர் மிககடும் வார்த்தைகளை இவ்விஷயத்தை பொறுத்தவரை பயன்படுத்துகிறார்
வாரன் பப்பட், பீட்டர் லின்ச் போன்ற பலரின் எழுத்துக்கள் குறித்தும், Fundamental Analysis குறித்தும் என்னுடைய முந்தையப் பலப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். என்றாலும் இன்றையப் பங்குச்சந்தை நடப்பில் இவை நம்முடைய இந்தியப் பங்குச்சந்தைக்கு எந்த வகையில் ஏற்கத்தக்க அளவில் இருக்கிறது என்பது விவாதத்திற்குரியது. இந்தியப் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் நான் Fundamental Analysis படி தான் மூதலீடு செய்வேன் என்றால் நாம் குறியீடு 6000 முதல் 8000 வரை மட்டுமே நம்முடைய முதலீடுகளைச் செய்திருக்க முடியும். அது கூட கடினம் தான்.
10:22 PM, May 16, 2006ஆனால் 10,000ல் முதலீடு செய்தும் லாபம் பார்க்க முடிகிறது. அதனால் நான் அவர்கள் கூறியது அர்த்தமற்றது எனக் கூறவில்லை. இந்தியப் பங்குச்சந்தையில் அவர்கள் கூறும் அனைத்தும் முழுமையாக பொருந்தாது என்பது தான் எனது கருத்து.
அதுவும் இன்று உலமயமாகி விட்ட இந்தியப் பங்குச்சந்தை சூழலில் எந்தளவுக்கு அவர் கருத்துக்கள் பொருந்தி வரும் என்பது விவாதத்திற்குரியது
சில குப்பை பங்குகளில் முதலீடு செய்து பணத்தை இழந்து கொண்டிருப்பவர்களை பற்றி நான் பேசவில்லை.
நல்ல பங்குகளை வாங்குபவர்களின் பணம் சில மாதங்களில் இரட்டிப்பாகி உள்ளது. இது தொடருமா ? நிச்சயமாக சொல்ல முடியாது.
அதே நேரத்தில் பங்குகளின் அடிப்படையைச் சார்ந்து தான் முதலீடு செய்வேன் என்று பங்குச்சந்தையில் இருந்து ஒதுங்கியிருக்கவும் முடியாது
வாரன் பப்பட் முழுவதுமாக நம்முடைய பங்குச்சந்தைக்கு பொருந்தி வரமாட்டார். அப்படியெனில் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டிற்கு என்ன Strategy உள்ளது ? நம்மூரில் யாராவது எழுதினால் தான் உண்டு
சசி,
10:32 PM, May 16, 2006சரியும் குறியீட்டைப் பற்றிய இந்தப் பதிவு நன்றாக உள்ளது.. எனினும் எனக்கு ஒரு சந்தேகம். பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்புகளும், அக்னி ஏவுகணை சோதனையை அமெரிக்க அரசின் எதிர்ப்பதும் வெளி நாட்டு முதலீட்டாளர்களை ஆர்வமிழக்கச் செய்திருக்கும், அதனால் தான் இந்த சரிவு என்று நான் நினைத்தேன்.. சந்தைக் குறியிட்டின் சரிவில் இந்தக் காரணிகளின் பங்கு எவ்வளவு?
Sasi,
8:27 PM, May 17, 2006Thanks for the informative post.
Post a Comment