பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, September 11, 2006

9/11 : WTC : பொருளாதாரம்

அமெரிக்கர்களின் மனதில் இருந்து ஆற்ற முடியாத காயமாக உலக வர்த்தக மையம் தகர்ப்பு அமைந்து விட்டது. 9/11 சமயத்தில் இங்கு காணப்படும் மக்களின் உணர்ச்சிமயமான உணர்வுகள், தொலைக்காட்கள் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டே இருக்கும் 9/11 நிகழ்ச்சிகள் என அவர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்தை உணரமுடிகிறது. WTC தகர்க்கப்பட்டு 5ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில் அதனைச் சுற்றிய சில நினைவுகள், அதன் தகர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், உலக பொருளாதாரத்தை மாற்றி எழுதிய அந்த நிகழ்வு குறித்து இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை முதன் முதலில் நேரில் பார்த்தது 2000ம் ஆண்டு தான். அப்பொழுது மூன்று மாத பயணமாக அமெரிக்க வந்திருந்தேன். இரட்டை கோபுரங்களுக்கு அருகாமையில் இருக்கும் உலக நிதி மையத்தில் (World Financial Center) தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் இரட்டைக் கோபுரங்களுக்கு Path ரயிலில் வந்து பிறகு உலக வர்த்தக மையத்தைக் கடந்து அலுவலகம் செல்ல வேண்டும். அந்தக் கட்டிடங்களை பல முறை நிமிர்ந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். உலக வர்த்தக மையத்தின் முன்னால் ஒரு Fountain இருக்கும். மதிய வேளைகளில் நண்பர்களுடன் அந்த Fountain அருகில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருப்பது வாடிக்கை. அங்கிருந்த மிகப் பெரிய Globe சிதிலமடைந்த நிலையில் இப்பொழுது மேன்ஹாட்டன் பேட்டரி பார்க்கில் வைக்கப்பட்டிருக்கிறது.

2001ம் ஆண்டு மறுபடியும் இங்கு வந்த பொழுது இரட்டைக் கோபுரங்களின் உச்சிக்கு சென்றது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அது ஒரு சாதாரண நிகழ்வாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் அடுத்த சில மாதங்களில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பொழுது அது எனக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகி விட்டது. கோபுரங்கள் எரிந்து கொண்டிருந்த பொழுது இந்தியாவில் இருந்த நான், WTCல் நான் எடுத்துக்கொண்ட
புகைப்படங்களையும், இரட்டை கோபுரங்கள் எரிவதையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது என் மனதில் பதிவாகியது.

இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலை காரணமாகக் கொண்டு அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் WTC தாக்குதலின் பொழுது அமெரிக்காவிற்காக பரிதாபப்பட்டதும், என்னுடைய நாட்டின் ஒரு பகுதி தாக்கப்பட்டது போல உணர்ந்ததும் உண்மை.

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டப் பிறகு பலருக்கு, குறிப்பாக நிதி நிறுவனங்களில் வேலைப் பார்த்தவர்களுக்கும், மென்பொருள் துறைகளில் வேலை பார்த்தவர்களுக்கும் ஒரு சோதனையானக் காலம். நான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தின் சர்வர்கள் (Servers) மற்றும் backup tape's போன்றவை மிகப் பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட WTCல் தான் வைக்கப்பட்டிருந்தன. WTCயுடன் இவற்றையும் பல நிறுவனங்கள் இழந்தன. இவை நிதி நிறுவனங்களின் செயல்பாட்டின் உயிர் நாடி. பல நிதி நிறுவனங்கள் ஸ்தம்பித்தன.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட அடுத்த சில நாட்கள் எந்த வேலையும் இல்லை. நான் அப்பொழுது offshoreல் இருந்தேன். எங்களுடைய Source Code முற்றிலும் அழிந்து போயிருந்தது. ஒருவாறு பழைய Source Code எங்கிருந்தோ ஒரு backup tapeல் கண்டெடுத்ததர்கள். இது ஒரு பழைய version. ஆனாலும் வேறு வழியில்லை. உடனடியாக அதனை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. எங்களுடைய System ஒரு Batch processing system. System வேலை செய்யாததால் தினமும் கணிசமான இழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அது உடனடியாக வேலை செய்ய வைக்கப்பட்டால் தான் எங்களுடைய வேலையும் நிலைக்கும் என்ற நிலையில், மிகவும் கடினப்பட்டு சில நாட்களில் அதனை நிர்மாணித்தோம்.

அதனை சரி செய்து நிர்மாணத்த பொழுது எங்களை பாரட்டக் கூட யாருக்கும் அவகாசம் இருக்க வில்லை. Onsiteல் வேலைப் பார்த்த பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நாங்கள் offshoreல் இருந்ததால் தப்பித்தோம். ஒரு கட்டத்தில் புதிய Development எதுவும் செய்வதில்லை, இருக்கின்ற வேலையை பராமரித்தால் போதுமானது என்ற நிலைக்கு பல நிறுவனங்கள் வந்திருந்தன.

இந்தக் கட்டத்தில் தான் Outsourcing அதிகப் பிரபலம் அடையத் தொடங்கியது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்புக்கு முன்பு வரை outsourcingஐ பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கிய பல நிறுவனங்கள், அதனை செய்தே தீர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. ஏனெனில் அவர்கள் நிறுவனத்தின் செலவை குறைத்தே ஆக வேண்டிய தேவை இருந்தது.

இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்புக்கு பிறகு தங்களுடைய உள்கட்டமைப்பை இழந்த பல நிதி நிறுவனங்கள், இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, தங்களுடைய மென்பொருள்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன. இத்தகைய ஒரு சூழ்நிலை மறுபடியும் ஏற்பட்டாலும் தங்களுடைய வர்த்தகம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பது நிதி நிறுவனங்களின் முக்கிய தேவையாக இருந்தது. அதனால் உருவானது தான் Disaster recovery மென்பொருட்கள். இன்று ஒரு தாக்குதல் நடந்து எங்களுடைய சர்வர்கள் நாசமானாலும், வர்த்தகம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடைபெறும். அந்த தாக்குதல் நடைபெற்ற முந்தைய நிமிடம் வரையிலான data மிகப் பாதுகாப்பாக மற்றொரு இடத்தில் சேகரிக்கப்பட்டு விடும். இன்று பல நிறுவனங்கள் SRDF - Symmetrix Remote Data Facility என்ற ஒரு மென்பொருளை பயன்படுத்துகின்றன. வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையிலும் அந்த Data மற்றொரு இடத்தில் சேமிக்கப்படும். உதாரணமாக நியூயார்க்கில் நடைபெறும் வர்த்தக data, நியூஜெர்சியில் ஒரு சாதாரண, அதிகப் பிரபலம் இல்லாத இடத்தில் அந்த நிமிடமே சேமிக்கப்படும். நியூயார்க் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சர்வர் நாசமானால் நியூஜெர்சியில் இருக்கும் சர்வர் மூலம் பெரிய பாதிப்பு இல்லாமல் வர்த்தகத்தை தொடர முடியும்.

இரட்டைக் கோபுரங்களின் தாக்குதல் மூலம் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை அசைத்து பார்க்கலாம் என்பது தான் அல்கொய்தாவின் நோக்கம். ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் மேலும் வலுவாக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது.

உலகின் முதலாளித்துவம் மிகவும் வலுவாகியிருக்கிறது என்று சொன்னால் கம்யூனிஸ்ட்கள் சண்டைக்கு வருவார்கள். ஆனாலும் அது தான் உண்மை.

எப்படி உலகப் பொருளாதாரம் வலுவடைந்தது ? அடுத்தப் பதிவில் பார்க்கலாம்

2 மறுமொழிகள்:

இளங்கோ-டிசே said...

நல்லதொரு தொடர். தொடருங்கள் சசி.

8:58 PM, September 11, 2006
மயிலாடுதுறை சிவா said...

மிக எளிமையாக நன்கு புரியும்படி
சொன்னதிற்கு பாராட்டுகள் சசி.

நானும் 9/11 பாதிக்கபட்டவனில் ஒருவன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

மயிலாடுதுறை சிவா...

10:13 AM, September 12, 2006