பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, March 30, 2005

சந்தை ஏன் சரிகிறது ?

கடந்த சில வாரங்களாக சந்தை கடுமையாகச் சரிந்து கொண்டிருக்கிறது. மைய அரசின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வரலாறு காணாத உயர்வைப் பெற்று 7000ஐ தொட்டு விடும் என்று அனைவரும் எண்ணியதற்கு மாறாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 587 புள்ளிகள் சரிந்து விட்டது. இது போலவே தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 198 புள்ளிகள் சரிந்து விட்டது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1,47,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் சந்தையில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு இந்த வாரம் திங்களன்று நல்ல லாபமுடன் தொடங்கிய வர்த்தம் செவ்வாயன்று கடும் சரிவைச் சந்தித்து. காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவுடன் காணப்பட்ட சந்தை ஒரு கட்டத்தில் 180 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்திருந்தது. புதனன்றும் சந்தையில் கடுமையான தள்ளாட்டமே நிலவி பிறகு ஓரளவு லாபமுடன் வர்த்தகம் நிறைவுற்றது

ப.சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வேகமாக எகிறியச் சந்தை எதனால் இப்படி சரிந்து கொண்டிருக்கிறது ? ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ?

இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வும் தாழ்வும் இந்தியர்களின் கைகளில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளில் தான் சந்தையின் போக்கு இருக்கிறது.

உதாரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பார்தி பங்குகளில் ஏற்பட்ட சரிவை பார்த்தாலே சந்தையின் மொத்த போக்கும் புரிபடும். பார்தி பங்குகளில் தன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அன்று காலை 233 ரூபாயை எட்டிய பார்தி பங்குகள் இந்த செய்தி வெளியானவுடன் சரியத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் இனி பார்தி பங்குகளில் ஏற்றமிருக்காது என்று கருதி இந்தப் பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.

சந்தையின் மொத்த போக்கும் இதேப் போலத் தான் இருக்கிறது. சந்தையின் செண்டிமெண்டை மாற்றும் அதி வல்லமை மிக்கவர்களாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இருக்கின்றனர்.
அவர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து விலகுகிறார்களா ? கிடையாது. ஆனால் அவர்களின் முதலீடு குறைந்துள்ளது, அல்லது மேலும் குறையக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது.

ஏன் இந்த அச்சம் ?

  • அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் அமெரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தியதும் மேலும் உயர்த்தக் கூடும் என்ற ஊகங்களும்
  • கச்சா எண்ணெய்யின் விலையேற்றம்

பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மற்றும் பிற ஆசியப் பங்குச்சந்தைகளை லாபம் ஈட்டும் ஒரு இடமாக கருதியே முதலீடு செய்கின்றனர். அவர்களின் முதலீட்டிற்கு தேவைப்படும் நிதியும் மிக குறைந்த வட்டியில் அமெரிக்காவில் கிடைக்கிறது. அந்தப் பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் பொழுது ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் முதலீட்டிற்கு தேவைப்படும் பணத்தின் வட்டியும் அதிகரிக்கிறது.

வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் இங்கு ரிஸ்க் மிக அதிகம். அதிக வட்டியை கொண்டு பெற்ற பணத்தை ரிஸ்க் அதிகம் உள்ள நாடுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளின் சந்தையிலோ அல்லது பாண்ட் போன்ற Debt சந்தையிலோ முதலீடு செய்வதை பாதுகாப்பான நல்ல முதலீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் கருதக் கூடும். அதனால் அவர்களின் முதலீடு இந்திய மற்றும் பிற ஆசிய பங்குச்சந்தைகளில் குறையலாம். அவ்வாறு குறையும் பொழுது இந்தப் பங்குச்சந்தையின் உயர்வு கேள்விக்குறி தான்.
இந்த அச்சம் தான் இந்திய மற்றும் ஆசியாவில் உள்ள பிற பங்குச்சந்தைகளை சரிய வைக்கிறது.

செவ்வாயன்று மும்பை பங்குச்சந்தை சரிந்த பொழுது ஆசியாவில் இருக்கும் பிற பங்குச்சந்தைகளும் கடுமையாக சரிந்தன. ஜப்பானின் Nikkei குறியீடு 225 புள்ளிகளும், ஹாங்காங்கின் Seng 185 புள்ளிகளும், தென்கொரியாவின் Kospi 18 புள்ளிகளும், தாய்வானின் Taiex 87 புள்ளிகளும் சரிந்தன. இவையனைத்தும் 1.5% முதல் 2% அளவிலான சரிவு. இந்தியப் பங்குச்சந்தையின் சரிவு சுமார் 2.19%
ஆசிய நாடுகளில் காணப்படும் இந்தச் சூழ்நிலையே இந்தியப் பங்குச்சந்தையிலும் பிரிதிபலிக்கிறது.

வெளிநாட்டு முதலீடு பற்றிய இந்த அச்சம் சரியானதது தானா ?

ஜனவரி மாதத்திலும் இதே அச்சம் நிலவியது. பிறகு அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.25 என்ற குறைவான விகிதத்தில் மட்டுமே உயர்த்தப்பட்டதால் அந்த பாசிடிவ் செண்டிமெண்ட்டில் சந்தை எகிறியது. பிறகு பட்ஜெட்டை ஒட்டிய வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை முடக்கி கொண்டதால் சந்தை தடுமாறியது. பட்ஜெட்டிற்கு பிறகு வெளிநாட்டு முதலீடுகள் மறுபடியும் அதிகரிக்க குறியீடு 7000 ஐ நெருங்கியது. இப்பொழுது மறுபடியும் சரிகிறது.

சந்தையின் தற்போதைய சரிவு இப்பொழுதுள்ள சூழ்நிலைகளை ஒட்டிய தற்காலிக பின்னடைவு தான். முதலீட்டாளர்களின் இந்த அச்சம் தற்போதைய சூழ்நிலைகளைச் சார்ந்து இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

குறுகிய கால சாதக பாதகங்களை விட நீண்ட காலத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு இழுக்கும் அஸ்திரம் நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரம் அவர்களை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி இழுக்கும் வல்லமை கொண்டது. உலகில் வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று (மற்றொன்று சீனா). இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலீடுகளை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி நிச்சயமாக இழுக்கும். வளர்கின்ற பொருளாதாராங்களில் தான் அவர்களுக்கு லாபமும் அதிகம்.

சரி...அடுத்து என்ன நடக்கும் ?

இந்த ஆண்டு இது வரை சுமார் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அடுத்து நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் நிலவரத்தைப் பொறுத்து தங்கள் முதலீடுகளை மறுபடியும் சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய நிறுவனங்களின் அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சந்தை நல்ல முன்னேற்றம் அடையும்.

மும்பை பங்குச்சந்தை குறியீடு 6000 க்கும் கீழ் சரியும் வாய்ப்புகள் இருப்பதாக தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.

ஆனால் உண்மையில் பங்குகள் நமக்கு குறைவான விலையில் கிடைக்கின்றன, அல்லது மேலும் சரியும் பொழுது இன்னும் குறைவான விலையில் நமக்கு கிடைக்க போகின்றன என்பது தான் உண்மை.
ஒரு நல்ல முதலீட்டாளன் சந்தையில் எதிர்நீச்சல் போட வேண்டும். அதாவது சந்தை சரியும் பொழுது, அந்த சரிவு நிலையில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். சந்தை உச்ச நிலையில் இருக்கும் பொழுது பங்குகளை விற்று விட வேண்டும்.

இது நல்ல பங்குகளை குறைந்த விலையில் வாங்கக் கூடிய சரியான தருணம்.

(இன்றைய வர்த்தகம் தொடங்கி விட்டது. மும்பை பங்குச்சந்தை 80 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறிக் கொண்டு இருக்கிறது)

4 மறுமொழிகள்:

நாலாவது கண் said...

சசி,

இரண்டு வாரங்கள் என்று நினைக்கிறேன். எங்கே நம்ம ஆளைக் காணோமே என்று தவித்துப் போய்விட்டேன். ஆனால் திரும்பி வந்தபோது உங்கள் வலைபதிவு பக்கத்தில் நிறைய முன்னேற்றங்களுடன் வந்துள்ளீர்கள் போல! வாழ்த்துகள். தொழில்நுட்பமும், துறை அறிவும் கை கோர்க்கும்போது நடக்க வாய்ப்புள்ள சாத்தியங்கள் உங்கள் பக்கங்களில் பளீடுகின்றன.

பங்குசந்தை சரிவைப் பற்றி எழுதினீர்கள். இந்த வம்பாய்ப்போன VAT பற்றி எதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நான் எழுத முடியாததற்கு காரணம் அதைப் பற்றி இன்னும் பல விபரங்களை நானும் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதுதான். யாரும் செய்யாவிட்டால், இந்த ஞாயிறு அன்றாவது சம்மந்தப்பட்டவர்களைச் சந்தித்து எழுத முயல்கிறேன்.

அப்புறம், அடுத்த சனிக்கிழமை சென்னை வலைபதிவர்கள் சந்திப்புக்கு வருவீர்கள்தானே! பிரகாஷ் முன்முயற்சியில் நடக்கும் அந்த கூட்டத்தில் கட்டாயமாக சந்தித்து பேச வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கும் நண்பர்கள் வரிசையில் உங்களது பெயர் முன்னணியில் இருக்கிறது. அதனால் எல்லாம் கூடி வந்தால் அங்கு நேரில் சந்திப்போம்.

- சந்திரன்

12:30 AM, March 31, 2005
அன்பு said...

அன்புக்குரிய சசி, வணக்கம்.
வெகுகாலம் கழித்து இன்று வலைப்பதிவில் சுற்றுகிறேன்.

பல முக்கிய இணைப்புகளோடு, இந்த பங்குச்சந்தை வலைப்பதிவை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றிருக்கின்றீர்கள், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

சந்தை ஏன் சரிகிறது என்று ஒரு கலக்கலான அலசல்.

எனக்கிருந்த ஓரளவு பங்குச்சந்தை பற்றிய அறிவுக்கு, உங்கள் எழுத்துக்கள் உரமூட்டியது. இப்போது சோம. வள்ளியப்பன் அவர்களின் 'அள்ள அள்ளப் பணம்' படித்து வருகிறேன் - முடித்துவிட்டு மேல் விபரம் எழுதுகிறேன்.

உங்களைப்போன்றவர்கள் உங்களுடைய துறைசார்ந்த அறிவை எங்களுக்குப்புரிந்த தமிழில் பகிர்ந்துகொள்வது, நான் எப்போதும் சொல்வதுபோல் மிக, மிக வரவேற்கத்தக்கது. தொடர்ந்து செய்யுங்கள்.

சில வாரங்களுக்குமுன் சன் டிவி செய்தியில் - இப்போது பல கிராமப்பகுதிகளில்லாம்கூட இணையம் மூலம் பங்குச்சந்தையில் ஈடுபடுவதாக ஒரு செய்தி வந்தது. அவர்களுடைய புரிதலுக்கும், மேல் தகவலுக்கும் உங்களைப்போன்றவர்கள் தமிழில் எழுதும் இந்தக்கட்டுரைகள் போய் சேர்ந்தால் இன்னும் பலனளிக்கும், முயற்சி செய்யலாம்.

மீண்டும் வாழ்த்துக்கள்.

1:25 AM, March 31, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

சந்திரன், அன்பு,

உங்கள் கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

சந்திரன்,

எனக்கு பற்றிய மேலோட்டமான விபரங்களே தெரியும். நீங்கள் எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களது காப்பீடு பற்றிய பதிவு நன்றாக இருந்தது.

சென்னையில் நடக்கும் சந்திப்பிற்கு நிச்சயம் வருவேன்.அங்கே சந்திப்போம்

அன்பு,

அள்ள அள்ளப் பணம் நல்ல புத்தகம். அது பற்றிய எனது மதிப்பீடு

http://tamilstock.blogspot.com/2005/01/blog-post_19.html

1:16 AM, April 01, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

சந்திரன், அன்பு,

உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

சந்திரன்,

VAT பற்றி எனக்கு மேலோட்டமான விபரங்களே தெரியும். நீங்கள் எழுதுங்கள். படிக்க ஆவலாய் இருக்கிறேன். உங்களுடைய காப்பீடு பற்றிய பதிவு நன்றாக இருந்தது.

அன்பு,

மறுபடியும் உங்களை வலைப்பதிவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

அள்ள அள்ளப் பணம் நல்ல புத்தகம். அது பற்றிய எனது பதிவு - http://tamilstock.blogspot.com/2005/01/blog-post_19.html

2:20 AM, April 01, 2005