பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, December 02, 2004

வரலாறு காணாத உயர்வு

இந்த வார துவக்கத்தில், சந்தை கரடிகளின் வசமாகப் போவதாகத் தான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ரிலயன்ஸ் நிறுவனத்திற்காக அம்பானி சகோதரர்களிடையே நடைபெற்ற சொத்து தகராறு (இது பற்றிய பதிவுகள் - 1, 2) காரணமாக சந்தை சரியக்கூடுமென அனைவரும் எதிர்பார்க்க, அதற்கு நேர்மாறாக சந்தை எகிறத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கிக் குவிப்பதால் குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2004ம் ஆண்டு மட்டும் 7பில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். இந்த வாரமும் வெளிநாட்டு முதலீடுகளே பங்குக் குறியீடுகளை வரலாறு காணாத உச்சத்தை அடைய வழி வகுத்துள்ளது. தற்பொழுது BSE குறியீடு 6328 புள்ளிகளையும், NSE குறியீடு 2000 புள்ளிகளையும் எட்டியுள்ளது.

வங்கிப் பங்குகள், எண்ணெய் நிறுவனப் பங்குகள் என சில வாரங்களுக்கு முன்பு வரை யாருமே அதிகம் சீண்டாத பங்குகள் தான் சக்கை போடு போடுகிறது. செவ்வாயன்று அதிக எழுச்சியுடன் காணப்பட்ட இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள், அதற்குப் பின் சரிந்து விட்டது. கடந்த இரு வாரங்களாகவே மென்பொருள் பங்குகள் அதிக உயர்வைப் பெறவே இல்லை. ஏற்கனவே இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் மீது கவனம் செலுத்தவில்லை. அது மட்டுமில்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதால், இந்தக் காலாண்டில் மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில், அந்நிய செலாவணியால் இழப்பு ஏற்படலாம் என்ற செய்தியும் முதலீட்டாளர்களை இந்தப் பங்குகள் வாங்க விடாமல் செய்து விட்டன.

வங்கிப் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்று எல்லா வங்கிப் பங்குகளுக்குமே உய்ர்வு தான். எந்த வங்கியையும் யாரும் விட்டு வைக்க வில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 585ஐ எட்டியுள்ளது. இந்தப் பங்கு கடந்த மாதம் 430க்கு அருகே தள்ளாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பங்குகளில் HDFC, SBI எனப் பெரும்புள்ளிகள் மட்டுமில்லாமல் சிறிய வங்கிகளான பாங்க ஆப் இந்தியா போன்றவையும் நல்ல உயர்வு பெற்றுள்ளன.

சொத்து தகராறு காரணமாக எங்கே சரிந்து போய் விடுமோ என அனைவரும் அஞ்சிய ரிலயன்ஸ் பங்குகள், இந்த வாரத் துவக்கம் முதலே எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த வாரம் விலை சரிந்ததையடுத்து குறைந்த விலையில் இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ரிலயன்ஸ் நிறுவனத்தின் அடித்தளம் இந்தச் சொத்து தகராறால் சரிந்து விடப் போவதில்லை என்ற எண்ணமே முதலீட்டாளர்களை வழி நடத்தியது.

நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தையின் இந்த வார செயல்பாடுகள் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும். எல்லோருடைய எதிர்பார்ப்பிற்கும் நேர்மாறாக சந்தையின் வர்த்தகம் அமைந்து விட்டது தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். Technical Analysis ம் இந்த வாரம் பொய்யாகி விட்டது. ரிலயன்ஸ் பங்குகளை விற்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு, அந்தப் பங்குகள் லாபம் சம்பாதித்து கொடுத்தது கொஞ்சம் ஆச்சரியம் தான்.

பலரின் எதிர்பார்ப்புக்கும், Technical Analysis ம் நேர்மாறாக சந்தை ஏன் செயல்படுகிறது ?
சந்தை புரியாத புதிரா ?

பங்குச் சந்தையின் உயர்வு குறிப்பிட்ட நாளில் வாங்குபவர்கள், மற்றும் விற்பவர்களின் (Demand and Suppy) எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். இதனைப் பல நேரங்களில் சரியாக கணிக்க முடியாது. அந்த நாளில், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினால் பங்குகள் உயரும். எல்லோரும் பங்குகளை விற்க தொடங்கினால் சரியும். இந்த வாரம் அனலிஸ்டுகளின் எதிர்பார்ப்பும், Technical Analysis ம் பொய்த்துப் போனதன் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிப்பதால் தான். இதற்கெல்லாம் ஆருடம் கூற முடியாது. சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனலிஸ்டுகள் சந்தை சரிந்து போகும் என்று சொல்லி விட்டார்களே என்று சந்தையில் இருந்து ஓடி விடக் கூடாது.

சரி... தற்பொழுது வரலாறு காணாத உயர்வை பெற்றாகி விட்டது. அடுத்து என்ன ? புதிதாக முதலீடு செய்யலாமா ?

சந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். குறியீடுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கும் பொழுது முன்னேறும். பின் முதலீட்டாளர்கள் லாபமடையும் பொருட்டு பங்குகளை விற்கும் பொழுது சரியும். அந்த அளவில் கொஞ்சம் தள்ளாடும். பின் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் பொழுது மறுபடியும் எகிறும். இது ஒரு சுழற்ச்சி தான்.
சந்தையை சரியவைக்க அல்லது எகிற வைக்க கூடிய செய்திகள் வராத வரையில் இந்த சுழற்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.

இந்த வாரம் கூட இந்த சுழற்ச்சி ஏற்பட்டது.

திங்கள், செவ்வாய் கிழமைகளில் பங்குக் குறியீடுகள் எகிறியது. புதனன்று சரிவுற்றது. இன்று மறுபடியும் எகிறியுள்ளது.

தன்னுடைய The Intelligent Investor என்ற புத்தகத்தில் Benjamin Graham, "புத்திசாலி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு முதலீடு செய்ய மாட்டார்கள். பங்குச் சந்தை உயரும் பொழுது முதலீடு செய்வதும், சரியும் பொழுது விற்பதும் Speculators ன் வேலை. சந்தைக் குறியீடுகள் உயரும் பொழுது, பங்குகளின் விலையை, அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகம் உயர்த்துவதும், சரியும் பொழுது பங்குகளின் விலையை அதன் மதிப்பை விடக் குறைப்பதும் Mr.Market ன் தன்மை. பங்குகளின் உண்மையான மதிப்பை விடக் குறைவாக வாங்கி, அதன் சரியான விலையை விட அதிக விலையில் யார் விற்கிறார்களோ, அவர்கள் தான் புத்திசாலி முதலீட்டாளர்கள்" என்று கூறுகிறார்.

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீட்டால் சந்தை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீடு குறையும் பொழுதோ, முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் பொழுதோ சந்தை சரியும். இந்தியா போன்று, வளர்ச்சி அடையும் பொருளாதாரத்தை விட்டு அவர்களால் விலக முடியாது. எனவே இந்த உயர்வில் இருந்து அடுத்த கட்ட உயர்வை நோக்கி நாம் நகரப் போவது நிச்சயம்.

ஏற்றமும், இறக்கமும் இருந்தால் தான் பங்குகளை வாங்கி லாபமடைய முடியும். தற்பொழுதுள்ள நிலையில் இருந்து குறியீடுகள் சற்று சரியும் பொழுது, பங்குகளை வாங்கி விடலாம். இன்னும் குறையட்டும் என்று எதிர்பாத்துக் கொண்டே இருந்தால், குறியீடுகள் திடீரென உயரும் பொழுது நம்மால் அந்த உயர்வில் பங்கெடுக்க முடியாமல் போகலாம். எனவே சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் புத்திசாலி முதலீட்டாளராவது நம் கையில் தான் உள்ளது.

1 மறுமொழிகள்:

Anonymous said...

இந்த அசுர வேகத்தைப் பார்க்கும் போது 90களின் அமேரிக்க பங்கு சந்தையை நினைவுபடுத்துகிறது. எப்போது வெடிக்குமோ என்ற அச்சமும் மேலிடுகிறது. ஏற்கனவே இங்கு சுட்டுக்கொண்டதால் இந்தியாவில் முதலீடு செய்ய கொஞ்சம் பயமாகவும் உள்ளது!

இந்தியாவில் ரூபாய் முதலீட்டை டாலர் முதலீடாக மாற்றியதுதான் என் சமிபத்திய முட்டாள்தனமான முடிவு :((


By: dyno

10:46 AM, December 02, 2004