பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, December 19, 2004

பங்குச் சந்தையின் எதிர்காலம்

இந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வைப் பெற்று விட்டு வெள்ளியன்று BSE 74 புள்ளிகளும், NSE 21 புள்ளிகளும் சரிந்தது. திங்களன்று நல்ல உயர்வுடன் தொடங்கி 6400 புள்ளிகளைக் கடந்த பிறகு, வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் குறியீடு சரிந்தது. நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு உயர்வுக்கும் அடுத்து லாப விற்பனையால் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. பங்குக் குறியீடு சரியும் பொழுது பங்குகளை வாங்குவதே காளைகளின் ஆளுமையில் இருக்கும் சந்தையில், லாபம் பெறுவதற்கான உத்தி. இந்தச் சரிவை, ஒரு வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும்.

இந்த வாரம் சரிந்த பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளே முதலிடத்தைப் பெறுகிறது. தொடரும் பங்காளிச் சண்டை தான் இந்தப் பங்குகளை கரடிகள் வசம் இழுத்துச் சென்று விட்டது. முகேஷ், அம்பானி சகோதரர்களிடையே நிகழும் சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே இருப்பதால் தற்பொழுதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையை பாதிக்க கூடிய எந்த நிகழ்வுகளும் மற்றப் பங்குகளில் நிகழாமல் பெரும்பாலான பங்குகள் லாப விற்பனையால் தான் சரிவடைந்தன.

இன்போசிஸ், விப்ரோ, TCS போன்ற மென்பொருள் பங்குகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரளவிற்கு லாபமுடன் இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதிகமாக கவனிக்கப்பட்டவை Pharma தொலைத்தொடர்பு மற்றும் வங்கிப் பங்குகள் தான்.

சரி...தற்பொழுதுள்ள நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் ?

இதற்கு எல்லா காளைகளிடமிருந்தும் பதிலாக வரும் தகவல்

"இது வரை எந்தப் பங்குகள் அதிகம் உயரவில்லையோ, அந்தப் பங்குகளை வாங்கலாம்"

அந்தளவுக்கு எல்லா துறைகளிலுமே பங்குகள் உயர் விலையில் உள்ளது.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது -

பங்குக் குறியீடு 5000ல் இருக்கும் பொழுதும், பங்கு விலை உயர் நிலையில் இருப்பதாகத் தான் சொன்னார்கள் (Current Valuations are stretched).
குறியீடு 5500, 6000 என ஒவ்வொரு இலக்கைத் தொட்ட பொழுதும் அதே கதை தான். தற்பொழுது 6400 என்ற இலக்கை தொடும் பொழுது இதே கதை தான்.

நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் இத்தகைய காளைச் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய உத்தி என்ன ?

இந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதலீடுகளுக்குச் சாதகமாக இருந்த பொழுது 6200ஐ எட்டிய சந்தை, பின் இடதுசாரி ஆதரவை நம்பி காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கடும் சரிவுற்றது. ஆனாலும் கடந்த இரு மாதங்களாக குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் குறியீடு புதிய வரலாறுகளை படைத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை சுமார் 8பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகம். இந்த முதலீடுகள் தொடர்ந்தால் தான் பங்குக் குறியீடுகள் மேலும் உயர முடியும்.

ஆசியாவில் மிக அதிக முதலீடு இந்தியச் சந்தையில் தான் செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவில் உள்ள சீனா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீடுகள் பெருமளவில் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையே தற்பொழுது ஆசிய சந்தைகளில் முதலீடுகள் குவிவதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5% மாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையக் கூடும். அரசின் திட்டங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் 8% வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அடைந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளது. ஏனைய வளர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் பொழுது பணம் பெருகக் கூடிய இடத்தில் தானே முதலீடுகள் செய்வார்கள். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் வரையில் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி பெருகுவது, இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள், பொருளாதார அடித்தளம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசின் செயல்பாடுகளையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்க கூடிய செய்திகளையும் பொறுத்தே சந்தையின் ஏற்றம் அமையும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை 8% மாகவும், பற்றாக்குறையை பெருமளவிலும் குறைக்க அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள், நிகழ்காலத்தில் செயல்படுத்த முடியாத ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு போல மாறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தளவுக்கு அரசியல் சூழ்நிலைகளால் உள்நாட்டில் உயர்த்த முடியாமல் போனது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அரசு அறிவித்த வரிச் சலுகை, இந்த உயர்வு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடையமுடியவில்லை, பற்றாக்குறையையும் குறைக்க இயலவில்லை. வறட்சி, வெள்ளம் என்று இரண்டு சூழலிலும் விவசாயம் அல்லாடியது. ஆனாலும் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பற்றிய கனவில் சந்தை நடைபோடு கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இருந்த இந்தக் கனவு வெளிநாட்டவருக்கும் தொற்றிக் கொண்டதால் தான் முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் பகல் கனவு அல்ல. அரசின் செயல்பாடுகள் சரியாக அமைந்தால் நடக்க கூடிய ஓன்று தான். அரசு வேகமாக செயல்படவேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான சலுகைகளை குறைத்தாகவேண்டும் என்று அரசுக்கு தொழில் துறையில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது நிர்பந்தம் ஏற்படும். எந்த அரசாலும் அரசியல் காரணங்களால் இந்த சலுகையை முற்றிலும் அகற்ற இயலாது. அப்படி அகற்றுவது மத்தியதர மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு பெரும் சுமையாக கருதப்படும். ஆனால் படிப்படியாக இந்தச் சலுகையை குறைக்கலாம். அதைப் போலவே எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் துறையில் மட்டும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு நிறுவனங்களும் ஒரே துறையில் போட்டி நிறுவனங்களாக செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு யோசித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஒன்றையும் செயல்படுத்த முடியவில்லை.

இது போலவே பொருளாதார சீர்திருத்தங்களும் வேகமாக செயல்படவில்லை. உள்கட்டமைப்பு இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாஜ்பாயின் கனவுத்திட்டமாக செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் பூர்த்தியடையவில்லை. இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்களில் லாபம் காண நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய தேவையிருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எளிதில் லாபம் கிடைக்கக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்கின்றனர். அரசுக்கும், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்திற்கும் சாதகமான ஒரு செயல்திட்டம் வரையப்பட வேண்டும். முதலீடுகளை லாபம் தரும் துறைகளில் தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்பட்டால் முதலீடுகள் தானாக இந்தத் துறையில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக வாரி வழங்கும் இலவச மின்சாரம் போன்றவை சீர்திருத்தப்பட்டு, அரசுக்கு லாபம் வர வழி காணப்பட வேண்டும். மின் உற்பத்தியும், மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படுவது தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பகல் கனவு தான். என்றாலும் குறைந்தபட்சம் இலவச மின்சாரங்களையாவது நிறுத்த முயலவேண்டும். அப்பொழுது தான் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எந்தளவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து தான் முதலீடுகள் மேலும் குவியும். சனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் உள்ள நிலவரங்களுக்கேற்ப முதலீடுகள் பெருகவோ, சரியவோ வாய்ப்பு உள்ளது.

பங்குச் சந்தை தற்பொழுதுள்ள வரலாறு காணாத உயர் நிலையில் இருந்து அடுத்தக் கட்ட உயர் நிலைக்குச் செல்லும் என்ற கருத்தே முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களும் தரப்படுகிறது. 1992ல் பங்குச் சந்தை குறியீடு 4600ல் இருந்தது. 2004ல் 6400 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 40% வளர்ச்சி. ஆனால் இந்த 12 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6% வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பார்க்கும் பொழுது சந்தை இன்னும் அதிக உயர்வை பெற்றாக வேண்டும். இந்த வாதம் ஓரளவிற்கு ஏற்புடைய வாதமாகவே எடுத்துக் கொண்டாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்த வளர்ச்சி ஏன் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு முக்கிய காரணம் அரசியல் சூழ்நிலைகள். பல பிரதமர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்து விட்டோம். அமைந்த பல ஆட்சிகளில் ஒரு நிலையான ஆட்சி வாஜ்பாய் தலைமையில் தான் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெருமளவில் எழுந்த பங்குச் சந்தை ஊழல், 2000ம் ஆண்டு உலகளவில் இருந்த பொருளாதார தேக்க நிலை போன்றவை இந்த உயர்வை பாதித்திருக்க கூடும். அதைப் போலவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பொழுது குறியீடு 700 புள்ளிகள் சரிந்தது. வாஜ்பாய் அரசே தொடர்ந்திருக்கும் பட்சத்தில் இதை விட அதிக உயர்வை பங்குச் சந்தை பெற்றிருக்கலாம்.


பொருளாதார காரணங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் இவை எல்லாம் தான் பங்குச் சந்தையை சரிவுக்கும் உயர்வுக்கும் கொண்டு செல்கிறது. அவ்வப்பொழுது நிகழும் சரிவுகளை கண்டு அஞ்சாமல் முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால் லாபம் நிச்சயம் தான்.

தற்பொழுது இந்திய மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ளோர் வங்கிகள், அஞ்சல் துறை, அரசின் பத்திரங்கள் போன்ற
மிகவும் பாதுகாப்பான, ஆனால் லாபம் குறைந்த இடங்களில் தான் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எஞ்சியுள்ளோரையும் பங்குச் சந்தைக்கு அழைத்து வரக் கூடும். மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் எஞ்சியுள்ளோர் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் நிச்சயமாக பங்குச் சந்தை
ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்து வரும் வாரத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படாமல், நீண்ட கால முதலீட்டில், லாபம் தரக் கூடிய நல்லப் பங்குகளை தேர்வு செய்து, இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் நம் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்பவர்களே புத்திசாலி முதலீட்டாளர்கள்.


1 மறுமொழிகள்:

Anonymous said...

நன்று, நன்று நன்றி.

சரி, சரி, கேக்கறேனேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. இப்படி ஆராய்ந்து எழுதுபவர்களிடம் கேட்க்கக்கூடாத கேள்விதான், இருந்தாலும் எனக்குத் தலையே வெடிச்சுடும் போலருக்கு.

ஹிமாச்சல் ஃபூச்சரிச்டிக்ஸ் பற்றி சென்ற வருட ஆரம்பத்தில் மிகப் ப்ரமாதமான ஃபோர்காஸ்ட் இருந்ததால் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் வாங்கிய நாளிலிருந்து சரிந்து, சரிந்து கடைசியில் கால் பகுதிக்கு குறைந்தே விட்டது. இப்போழுது மீண்டும் சூடு பிடித்திருப்பது போலுள்ளது. இப்பங்கின் ஏற்றம் இன்னுமும் நீடிக்கும் என்று தாங்கள் கருதுகிறீர்களா? அல்லது இப்பொழுதிருப்பது வெளியேறி விடுவது நல்லதா?By: S Krupa Shankar

9:51 AM, December 21, 2004