பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, December 25, 2004

பங்குகளும், சந்தையும்

எந்தப் பங்குகளை வாங்கலாம் ? குறியீடு மேலும் உயருமா ? இந்தப் பங்குகளை இவ்வளவு விலைக்கு வாங்கினேன் ? இது மேலும் உயருமா, சரியுமா ? விற்கலாமா, வேண்டாமா ? இது தான் பங்குச் சந்தை அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.

தரகு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் முதலீட்டாளர் கருத்தரங்குக்கு சென்று பாருங்கள். அங்கு வரும் அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாமே "Forecasting" தான். இது எகிறுமா ? குறியீடு எகிறுமா ? அனலிஸ்டும் ஏதாவது பங்குகளை சொல்வார். இவர்களும் அதை வாங்கி அப்படியே அடைகாத்து கொண்டிருப்பார்கள். மறுபடியும் விற்கலாமா என்று ஒரு கேள்வியை வேறு சில அனலிஸ்டுகளிடம் கேட்பார்கள். தொலைக்காட்சி மற்றும் வணிகபத்திரிக்கைகளில் நிச்சயம் இந்தக் கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் நேரம். அறிக்கை தாக்கல் செய்திருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனம் அந்நிய செலவாணியால் எதிர்பார்த்ததை விட குறைந்த லாபமே பெற்றிருந்தது. எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சத்தில் எல்லோரும் பங்குகளை விற்க தொடங்க பங்குகள் சரியத் தொடங்கின. ஒரு பிரபல ஆங்கீலத் தொலைக்காட்சி சேனலில் "Buy/Sell" என்றொரு நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகும். முதலீட்டாளர்களின் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அனலிஸ்டுகள் கலந்து கொண்டு விடையளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் தான் 50 இன்போசிஸ் பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கியருப்பதாகவும் அதனை விற்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். முதலில் விடையளித்த அனலிஸ்ட் இன்போசிஸ் பங்குகள் தற்பொழுது 1700 ரூபாயில் இருப்பதால் அதை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம் என்றார். மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். மற்றொரு அனலிஸ்டோ இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் எகிறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொன்னார். கேள்வி கேட்ட முதலீட்டாளர் நிச்சயமாக குழம்பிப் போயிருப்பார். வந்தவரை போதும் என்று விற்றும் இருக்கலாம். அவர் மட்டுமின்றி அவரைப் போல அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்த சிலராவது பங்குகளை அச்சத்தில் விற்றிருக்கலாம். எனக்கும்
கூட கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற எண்ணத்தில் நானும் சிலப் பங்குகளை சில தினங்களுக்கு முன்பு தான் 1700 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அன்று பங்குகள் சரிந்து 1680 ரூபாயில் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏன் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்துத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. ஆனாலும் விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்து விட்டேன்.

இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பங்குகள் 1800க்கு எகிறியது. சில வாரங்களில் 2000ஐ கடந்து விட்டது. கேள்வி கேட்ட முதலீட்டாளர் விற்காமல் இருந்திருந்தால் ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் பார்த்திருக்க கூடும்.

யார் இந்த அனலிஸ்டுகள் ? அனலிஸ்டுகளுக்கு பங்குகளைப் பற்றி ஆராய்ந்து சொல்வது தான் தொழில். தாங்கள் ஆராய்ந்தவற்றை வெளியே சொல்லும் பொழுது தங்கள் தொழிலுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பான டிப்சையே தருவார்கள்.

நீங்கள் என்னிடமே எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று கேள்வி கேட்டால் நான் என்ன யோசிப்பேன் ?

நம்மை பெரிய ஆள் என்று நினைத்து இவர் கேள்வி கேட்பதால் முதலில் நம் பெயரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சொல்லும் பங்கு இவருக்கு லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. அதைப் போல மிகப் பெரிய நிறுவனப் பங்குகளாகத் தான் சிபாரிசு செய்ய வேண்டும். நஷ்டமடைந்தாலும் பெரிய நிறுவனத்தின் மேல் தான் பழி விழும். நம்முடைய டிப்ஸ் மேல் பழி விழாது. இவ்வாறு யோசித்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இன்போசிஸ் பங்குகளையோ, HDFC பங்குகளையோ வாங்குமாறு சிபாரிசு செய்யலாம். இன்போசிஸ் சரிந்தால் கூட எதிர்பார்க்காத சில நிலவரங்களால் இவ்வாறு சரிந்து விட்டது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் எந்த அனலிஸ்களிடமாவது கருத்து கேளுங்கள். ஒரு பெரிய நிறுவனப் பங்குகளையே அவர் சிபாரிசு செய்வார். வளர்ந்து வரும் நிறுவனங்களையோ, குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களையோ சொல்லவே மாட்டார். "இந்தப் பங்கு குறைந்த விலையில் இருந்த பொழுது, நான் என் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தேன். இன்று அது பல மடங்கு உயர்ந்து விட்டது" என்பார். இவ்வாறு குறைந்த விலையில் உள்ள நிறுவனங்கள் தற்பொழுது ஏதாவது உண்டா என்றால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அது நடக்காமல் போய் விட்டால் அவரது பெயரும், நிறுவனப் பெயரும் ரிப்பேராகி விடும். நடந்தப் பிறகே நம்மிடம் சொல்வார்கள்.

அதைப் போல "Forecasting" என்பதெல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியவை அல்ல. இந்த வருடம் 6000ஐ குறியீடு நெருங்குவதே கடினம் என்று சொன்னார்கள். இன்று 6500ல் இருக்கிறோம். ஒவ்வொரு இலக்கையும் கடக்கும் பொழுது சரியும் என்றார்கள். முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். பங்குச் சந்தை 2000ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி அடையும் என்று எத்தனைப் பேர் சரியாக கணித்தார்கள். அல்லது 2004 ஆம் ஆண்டு 6500 ஐ எட்டி விடும் என்று எத்தனை அனலிஸ்டுகள் கணித்துச் சொன்னார்கள். 2005ல் பங்குச் சந்தை இலக்கு என்ன என்று யாராலும் கணிக்க முடியுமா ? 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா ? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

அதைப் போல பொருளாதாரத்தை கணித்தால் பங்குச் சந்தையை கணிக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மந்தப்படும் (Recession) என்று ஒரு கருத்தும்
உண்டு. ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொருளாதாரம் மந்தப்படுவதில்லையே. பொருளாதார வல்லுனர்களால் ஏன் 2000ம் ஆண்டு பொருளாதாரம் மந்தமானதை முன்கூட்டியே கணிக்க வில்லை. முன்
கூட்டியே கணித்திருந்தால் பங்குகளை முன்கூட்டியே விற்றிருப்பார்கள். பங்குச் சந்தையும் முன்கூட்டியே சரிந்து போயிருக்கும்.

ஆக சந்தையை கணிப்பதென்பது இது வரை சரியாக நடந்ததில்லை. இனிமேல் நடக்குமா என்றும் தெரியவில்லை.

இது வரை கூறியதை வைத்து நான் உங்களைச் சந்தைப் பக்கம் வராதீர்கள் என்று சொல்வதாகத் தான் நீங்கள் நினைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

நான் சொல்ல வருவது "பங்குச் சந்தையில் நம்பிக்கை வைத்து முதலீடு
செய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்".

ICICI வங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாடெங்கும் கிளைகளை தொடங்கிக் கொண்டே இருந்தால், பயனாளர்களுக்காக வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால் அது மேலும் வளர்ச்சி அடைவதாகத் தானே பொருள். அப்பொழுது சந்தை 3000மாக இருந்தால் என்ன 6500 ஆக இருந்தால் என்ன.
நிறுவனம் வளரும் பொழுது பங்குகளின் விலையும் உயரத் தானே செய்யும். பின் எதற்கு பங்குக் குறியீடுகளைக் கண்டு அஞ்ச வேண்டும் ?

பங்குக் குறியீடுகள் உயரும் பொழுது எல்லாப் பங்குகளும் உயர்ந்து விடுகிறதா என்ன ? சில மாதங்களுக்கு முன்பு பங்குக் குறியீடுகள் எகிறிய பொழுது மென்பொருள் பங்குகள் எகிறிக் கொண்டே இருந்தது. வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டே இருந்தது. இப்பொழுது குறியீடு உயரும் பொழுது வங்கிப் பங்குகள்
உயர்கிறது. மென்பொருள் பங்குகள் சரிகிறது. குறியீடுகள் உயருவதாலேயே நாம் வாங்கிய பங்குகளும் உயர்ந்து விடாது. எந்தப் பங்குகளை நாம் தெரிவு செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் லாபமும், நட்டமும். அவ்வப் பொழுது சந்தையில் நிகழும் மாற்றங்களை கண்டு அஞ்சாமல் இருந்தால் நல்ல நிறுவனப் பங்கு எப்பொழுதும் லாபம் தரும்.

சரி..நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி தெரிவு செய்வது ? அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.


0 மறுமொழிகள்: