பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, December 12, 2004

அச்சம், எச்சரிக்கை

அச்சம், எச்சரிக்கை - இவை இரண்டும் தான் கடந்த வாரம் சந்தையை வழி நடத்தியது. வரலாறு காணாத உயர்வைப் பெற்றப் பிறகு, இதற்கு மேல் பங்குகள் விலை ஏறுமோ, ஏறாதோ என்ற அச்சத்தில் முதலீட்டாள்ர்கள் தங்களது பங்குகளை விற்றதாலும், புதிதாக பங்குகளை வாங்காமல் ஒரு வித எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் இருப்பதாலும் கடந்த வாரம் சந்தை மந்தமாக இருந்தது. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் 70 புள்ளிகள் சரிவுற்றது.

கடந்த வாரம் சரிவுற்ற பங்குகளில், சிலப் பங்குகள் சந்தையை அச்சப்படுத்திய செய்திகளால் சரிவுற்றது. ஏனைய பங்குகளில் பெரும்பாலானவை லாபம் பெறும் பொருட்டு முதலீட்டாளர்கள் விற்றவைத் தான்.

செய்திகளால் சரிவுற்ற பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான் அதிகம் சரிவுற்றது.
சகோதரர்களிடையே தொடரும் தகராறால் முதலீட்டாளர்களுக்கு மறுபடியும் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் மீது அச்சம். பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.

அடுத்ததாக மென்பொருள் பங்குகள். சில வாரங்களாகவே டாலரின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. பிற நாணயங்களான, யுரோ, யென் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பில் உள்ள ஏற்ற நிலையால் மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தக் காலாண்டில் லாபம் குறைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி மென்பொருள் பங்குகளின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதால் இந்தப் பங்குகளை அனைவரும் விற்க தொடங்கி விட்டனர். இன்போசிஸ் நிறுவனப் பங்கு சில வாரங்களாகவே ரூ2000 - ரூ2100 க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே சத்யம், விப்ரோ மற்றும் ஏனைய மென்பொருள் பங்குகளும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பில் திடீர் விழ்ச்சி ஏற்பட்டது. இந்த விழ்ச்சி மற்றும் சத்யம், இன்போசிஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கும் புதிய ADR (American Depository Receipt - அமெரிக்க பங்குச் சந்தையில் இந்தியப் பங்குகள் லிஸ்ட் செய்யப்படுவதற்கான அறிவிப்பு) போன்றவை சத்யம், மற்றும் இன்போசிஸ் பங்குகளுக்கு ஊட்டச்சக்தியாக அமையக்கூடும்.

உலகச் சந்தையில் ஸ்டீல் விலையின் சரிவால் SAIL, TISCO போன்ற ஸ்டீல் பங்குகள் சரிவுற்றன.

இந்தப் பங்குகள் தவிர பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்களின் லாப விற்பனை (Profit Booking) காரணமாகவே சரிவுற்றன.

பங்குகளின் விலை எகிறும் காளைச் சந்தையில் நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்கள். தற்பொழுது, வங்கிகளின் சேமிப்பு கணக்கில் இருந்த நிறைய முதலீடுகள் பங்குச் சந்தையை நேக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் சந்தையில் உள்ள மந்த நிலை மற்றும் வெள்ளியன்று சந்தையின் சரிவு போன்றவை சாமானிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அச்சம் தேவையற்றது. தற்பொழுதுள்ள சந்தை நிச்சயமாக காளைச் சந்தை தான். சந்தையில் அவ்வப்பொழுது முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்பார்கள். பங்குக் குறியீடு சரியும். பின் சரிவுற்ற நிலையில் பங்குகளை வாங்கும் பொழுது சந்தை எகிறும். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சந்தை மேலும் வலுவாக முன்னேற வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்த முதலீடுகள் குறைந்து போகும் எனச் சொல்வதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. கடந்த வாரம் கூட சுமார் 300 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக முதலீடுகள் குவிந்து விட்டதால், அடுத்து வரும் வாரங்களில் வர்த்தகம் மந்தமாகும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இது வரை அதிக ஏற்றம் காணாத துறைகளில் முதலீடு செய்வது பலனளிக்கும். கடந்த சில வாரங்களாக வங்கிப் பங்குகளின் விலை ஏறி விட்டது. அது போலவே டாலரின் வீழ்ச்சியாலும், விலை உச்சத்தில் இருப்பதாலும் மென்பொருள் பங்குகள் தற்பொழுது கவர்ச்சிகரமானவை அல்ல. தொலைத்தொடர்பு பங்குகள், Pharma போன்றவை லாபம் தரும். பெட்ரோல் விலையின் வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் விலை ஏறக்கூடும்.

நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்குகளை வாங்க வேண்டும். சந்தையின் போக்கைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகளை வாங்குவது நல்லது. குறியிடுகள் சரிவது கண்டு அச்சமடைய தேவையில்லை. மாறாக அது நாம் புதிதாக பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.

0 மறுமொழிகள்: