பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, February 06, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1



பிப்ரவரி மாதம் என்றாலே பட்ஜெட் மாதம், ஒரு வித பரபரப்பு அனைவருக்கும் ஏற்படுகிறது. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். வீட்டுக் கடனுக்கு வருமான வரி விலக்கு நீடிக்குமா, வரி விகிதம் உயருமா என்று பல்வேறு கவலைகள். முன்பெல்லாம் புதிதாக பொருள் வாங்க நினைப்பவர்கள் பட்ஜெட்டுக்கு முன்பே பொருள் வாங்கிவிடுவார்கள். பட்ஜெட் என்றாலே வரி உயர்வு, விலையேற்றம் என்று இருந்தக் காலம். வணிகர்கள் பட்ஜெட்டுக்கு முன்பு நிறையப் பொருட்களை வாங்கித் தங்கள் கிடங்குகளில் சேமித்துக் கொள்வார்கள்.

ஆனால் பட்ஜெட் என்பது வரி விதிப்பது மட்டும் அல்லவே. பட்ஜெட் என்பது என்ன ?அதில் இருக்கும் பலப் புரியாத வார்த்தைகளுக்குப் பொருள் என்ன ? அதைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது.


Bougette என்ற ஆங்கில வார்த்தைத் தான் கொஞ்சம் மருவி Budget என்றாகி விட்டது. Bougette என்றால் "Pouch" என்று பொருள். இங்கிலாந்து பாரளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் பொழுது பேப்பர்களை இந்த Bougetteல் எடுத்து வந்து, பிறகு பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தான் கொஞ்சம் மருவி இன்று பட்ஜெட் என்ற சொல்லாக்கத்தில் வழங்கப்படுகிறது.



இந்தியாவில் பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. 1999 வரை பட்ஜெட் மாலை 5 மணிககுத் தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் வசதிக்காக பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதனை அப்படியே பல வருடங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். February 27, 1999 அன்று யஷ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்தப் பொழுது முதன் முறையாக 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பிறகு அதுவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதியமைச்சகத்திடம் இருந்தாலும் பிற துறை அமைச்சகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. நிதியமைச்சகம் பிற அமைச்சகத்திடமும், திட்டக்குழுவிடமும் ஆலோசனைக் கேட்கும். பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பிற துறை அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி போன்ற விவரங்கள் பெறப்படும். ஜனவரி மாதத்தில் பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் துறையினர், தொழிற்ச்சங்கங்கள் போன்ற பல்வேறு குழுக்களுடன் நிதியமைச்சர் ஆலோசணைச் செய்வார்.

தற்பொழுது, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தவிர நிதியமைச்சக ஆலோசகராக இருக்கும் பார்த்தசாரதி, திட்டக்குழு துணைத் தலைவராக இருக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத்தலைவராக இருக்கும் சி.ரங்கராஜன் போன்றோருக்கும் பட்ஜெட் தயாரிப்பில் முக்கியப் பங்கு இருக்கிறது. தயாரிக்கப்பட்ட பட்ஜெட் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகே மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு பட்ஜெட் மீது ஒரு மாதம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். இதில் எதிர்கட்சிகள் மாற்றங்களை கொண்டுவர நினைத்தால் வெட்டுத் தீர்மானங்களை கொண்டு வரலாம். அல்லது சில மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இறுதியாக நிதி ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். ஏப்ரல் முதல் தேதியன்று பட்ஜெட் அமலுக்கு வரும். அடுத்த வருடம் மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் (ஏப்ரல் 1, 2005 முதல் மார்ச் 31,2006 வரை). பிறகு அடுத்த பிப்ரவரியில் (2006) அடுத்த ஆண்டிற்கான (2006 -2007) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்தியாவில் மைய அரசால் இரண்டு நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.

பொது பட்ஜெட் - நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும்




ரயில்வே பட்ஜெட் - ரயில்வே அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.




முதலில் ரயில்வே பட்ஜெட்டும், அதற்குப் பிறகு பொதுப் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

மைய அரசு தவிர ஒவ்வொரு மாநில அரசும் அம் மாநிலத்திற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இது தான் பட்ஜெட் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

பட்ஜெட்டில் பலப் புரியாத நிதி வார்த்தைகள் இருக்கும். அத்தகைய நிதி வார்த்தைகளை இப்பொழுது கவனிப்போம்.

அரசாங்கத்திற்கு வரும் பணம், செலவுச் செய்யப்படும் பணம் போன்றவை எங்கு பராமரிக்கப்படுகின்றன ?

அரசாங்கத்தில் இருக்கும் பணம் பல்வேறு கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். இதுப் பற்றிய விவரங்கள் பட்ஜெட்டில் இருக்கும். அந்தக் கணக்குகளை முதலில் பார்ப்போம்.

பொதுவாக மூன்று கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.

  • The Consolidated Fund of India (CFI)
  • Public Account
  • Contingency Fund
இவையே இந்த மூன்று கணக்குகள்

The Consolidated Fund of India (CFI)

அரசுக்கு பல வழியில் கிடைக்கும் வருவாய் CFI ல் வைக்கப்பட்டிருக்கும். அரசுக்கு செலுத்தப்படும் வரி, கடன் தொகைகளுக்கான வட்டி, பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடண்ட்கள் போன்றவை இங்கு வைக்கப்பட்டிருக்கும். இது தான் அரசின் பொதுவான நிதி. இந்த நிதியத்தில் இருந்து பணம் பெற பாரளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. பெரும்பாலும் ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு தேவையான நிதியை மானியக் கோரிக்கைகள் மூலம் மக்களவையின் ஒப்புதல் கொண்டு பெற்றுக் கொள்ளும்.

Public Account என்பது அரசுக்கு சொந்தமில்லாதப் பணம் இருக்கும் கணக்கு. அதாவது அரசு பொதுமக்களிடமிருந்து PF, சிறுசேமிப்பு போன்றவற்றின் மூலம் பெறும் பணம். இந்த நிதியில் இருந்து அரசு எடுக்கும் பணத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.

Contingency Fund என்பது எதிர்பாராச் செலவு நிதி. இயற்கைச் சீற்றங்கள் போன்ற எதிர்பாராச் செலவுகளுக்காகப் பராமரிக்கப்படும் நிதி. இதில் இருந்து பணம் பெற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை (பிரதமரின் பொது நிவாரண நிதி, எதிர்பாராச் செலவு நிதி என்று இரு வேறு நிதிக் கணக்குகள் இருக்கின்றன)

பட்ஜெட்டில் இரு வகையானப் பிரிவுகள் இருக்கின்றன
  • Revenue Budget எனப்படும் வருவாய் வரவு செலவுத் திட்டம்
  • Capital Budget எனப்படும் முதலீட்டு வரவு செலவுத் திட்டம்
Revenue Budget - வருவாய் வரவு செலவுத் திட்டம்

வருவாய்த் துறையில் அரசுக்கு கிடைக்கும் வரவினம் மற்றும் செலவினம் போன்றவற்றின் நிதி நிலையை அறிவிக்கும் பட்ஜெட் தான் Revenue Budget

அரசுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி போன்ற வரி விதிப்பு (Tax revenue) மூலம் கிடைக்கும் வருவாய், அரசு வழங்கியுள்ள கடன் தொகைக்கான வட்டி, அரசு முதலீடு செய்யும் பணத்திற்கான டிவிடண்ட் எனப் பல வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அரசுக்கு கிடைக்கும் வருவாய் Revenue receipts - வருவாய் வரவினம் என்றுச் சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒய்வுதியம், அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் போன்றவை வருவாய்ச் செலவினம் - Revenue Expenditure ஆகும். வருவாய்ச் செலவினம் என்பது பணம் கரைந்துப் போகும் செலவுகள் மட்டுமே. புதிதாகத் தொழில் துறையில் செய்யப்படும் மூலதனம் போன்ற செலவுகள் இதில் வராது.

இந்த வருவாய் வரவினம் மற்றும் வருவாய்ச் செலவினம் இவற்றின் Balance Sheet தான் Revenue Budget எனப்படும் வருவாய் நிதிநிலை அறிக்கை

Capital Budget - முதலீட்டு வரவு செலவுத் திட்டம்

புதிதாக முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் அரசுக்கு புதிதாக கிடைக்கும் கடன் போன்றவை இந்த முதலீட்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரும்.

தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், தொழில்கள் போன்றவற்றில் செய்யும் முதலீடுகளே முதலீட்டுச் செலவு - Capital Expenditure எனப்படுகிறது. இது தவிர மாநில அரசுக்கு மைய அரசு வழங்கும் கடன் போன்றவையும் இந்தப் பிரிவின்கீழ் வரும்.

அரசு பொதுமக்களிடம் இருந்து பெறும் கடன், ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பிற நாடுகளிடமிருந்து பெறும் கடன் போன்றவை முதலீட்டு வரவினம் - Capital receipts என்று அழைக்கப்படுகிறது.

முதலீட்டுச் செலவினம், முதலீட்டு வரவினம் இவற்றின் நிதி நிலைத் தான் முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகும்.

என்ன...நிதிச் சம்பந்தமான வார்த்தைகளைப் படித்தவுடன் தூக்கம் வருகிறதா ?

சரி...அடுத்தப் பதிவில் பிற முக்கியமான வார்த்தைகளைப் பார்ப்போம்.



(நிதிப் பற்றாக்குறையை குறைக்க வழியே தெரியலை... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா)

References : Economic Times

4 மறுமொழிகள்:

Anonymous said...

அருமையான கட்டுரைகள் சசி... பல பயனுள்ள தகவள்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

2:00 AM, February 15, 2005
அன்பு said...

அருமையான கட்டுரைகள் சசி... பல பயனுள்ள தகவள்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

2:02 AM, February 15, 2005
Anonymous said...

சசி , நல்ல கட்டுரை ...

6:24 AM, February 18, 2005
Anonymous said...

Excellent part keep it up.Thank you

By: Parimaleswaran

9:36 PM, February 24, 2005