பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, February 02, 2005

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 4 - P/E Ratio

கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E ம் அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம். பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

P/E எப்படி கணக்கிடப்படுகிறது ? கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்றுச் சொல்வார்கள் (பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை
leading or projected P/E என்றுச் சொல்வார்கள்).

பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது.

P/E = Market Price / Earnings

இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

Market Price = P/E x Earnings

ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தது. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி". P/E ம் அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

மாறாக P/E 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

PEG = P/E / (projected growth in earnings)

ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

ஒரு நிறுவனத்தின் P/E 30, வளர்ச்சி விகிதம் 15% என்றால்

PEG = 30/15 = 2

PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

Fundamental Analysis பற்றி அடுத்து வரும் பதிவுகளிலும் தொடர்ந்துப் பார்ப்போம்.


முந்தையப் பதிவு

1 மறுமொழிகள்: