பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Tuesday, February 08, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 2அரசுக்கு வரும் வருமானம், செலவு ஆகிய இரண்டையும் சென்றப் பதிவில் கூறியிருந்த வருவாய் வரவு செலவுத் திட்டம், முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் அடக்கி விடலாம்.

நாம் இப்பொழுது அரசுக்கு வருமானம் கிடைக்கக் கூடியச் சில வரி முறைகளைக் கவனிப்போம்.

சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். பலருக்கு இதுப் பற்றி விரிவாகவே தெரிந்திருக்கும். ஒரு சிறு விளக்கம் மட்டும் தர முயன்றுள்ளேன்.

வருமானம் நமக்கு பல வழிகளில் கிடைக்கிறது. சம்பளம், வியபாரம், வீட்டு வாடகை, முதலீட்டு லாபம் என்று பல வழிகளில் கிடைக்ககூடிய வருமானங்களுக்கு நாம் வரிச் செலுத்த வேண்டும்.

ஆண்டு வருமானம் 50,000 வரை உள்ளவர்களுக்கு வருமானவரி கிடையாது. அதற்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு சம்பளத்திற்கு ஏற்றாற்ப் போல வருமான வரி விகிதமும் மாறும். அதைப் போல நிலம், வீடு போன்ற சொத்துகளை விற்பதால் கிடைக்கும் லாபத்திற்கும் வரிச் செலுத்த வேண்டும். பங்குகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வரிச் செலுத்த வேண்டும். இதனை முதல் இலாப வரி அல்லது மூலதனலாப வரி (Capital Gains tax) என்றும் சொல்லலாம். ஆனால் பங்குகள் வாங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு அதனை விற்கும் பொழுது Capital Gains tax ல் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது தவிர நம்முடைய சம்பளத்தின் ஒரு பகுதிக்கும் சில முதலீட்டுகளுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. ஆண்டு வருமானம் 1,50,000க்குள் இருந்தால் 20% விலக்கு உண்டு. 5 லட்சத்தைக் கடந்தால் ஒன்றும் கிடையாது. நம்முடைய PF, காப்பீடு, NSC, அரசு பத்திரங்கள் போன்றவற்றுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. பிரிவு 88, 88C, 88D போன்ற பல பிரிவுகளில் வருமான வரி விலக்கு உண்டு. நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தற்பொழுது வீட்டுக் கடனில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் வரும் என்று பல வருடங்களாகச் செல்லப்பட்டாலும் இது வரை இதில் எந்த மாற்றமும் வரவில்லை. இந்தப் பட்ஜெட்டிலும் மாற்றம் இருக்க கூடாது என்பது தான் பல நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ணம்.

இந்தப் பட்ஜெட்டில் கேல்கர் கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கேல்கர் கமிட்டி பரிந்துரையில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், இக் கமிட்டி பரிவு 88ன் கீழ் இருக்கும் சில வருமான வரிச் சலுகைகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அரசு இதனை அமல்படுத்துமா என்று தெரியவில்லை.

நாட்டிலேயே ஒழுங்காக வருமான வரிச் செலுத்துவது சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் தான். ஒழுங்காக வரிச் செலுத்துபவர்கள் மேல் மேலும் பாரம் கொடுக்காமல் நாட்டின் Tax base அதிகரிக்கப்பட வேண்டும்.

வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையே Tax base எனப்படுகிறது. இந்தியாவில் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 3 கோடி பேர் மட்டுமே வரி கட்டுகிறார்கள். வரி ஏய்த்தல் இங்கு தான் அதிகமாக இருக்கிறது. குறைவான வரி மூலம் அதிகமானவர்களை நாணயமாக வரிச் செலுத்த வைக்க முடியும்.

பொதுவாக அரசு விதிக்கும் வரிகளில் இரண்டுப் பிரிவுகள் இருக்கிறது

  • நேரடி வரி
  • மறைமுக வரி
நேரடி வரி - வருமானவரி, சொத்துவரி, இலாப வரி போன்றவை நேரடி வரி என்று சொல்லப்படும் வரிகள். இந்த வரிகளை நாம் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறோம்.

மறைமுக வரி - விற்கப்படும் பொருளின் மீதான வரி. இந்த வரி பொருள்கள் மீது விதிக்கப்பட்டாலும் இறுதியில் நம் தலையில் தானே விழுகிறது. இது நாம் நேரடியாக இல்லாமல் பொருளின் மீதான விலையுடன் சேர்த்துச் செலுத்துகிறோம்.

இப்பொழுது சர்சையில் இருக்கும் முக்கியமான ஒரு வரி VAT - Value added Tax, மதிப்புக் கூட்டு வரி / மதிப்பு ஆக்க வரி.

ஒரு பொருள் தயாரிப்பில் பல இடங்களில் அதன் மதிப்புக் கூட்டப்படுகிறது. ஒரு மோட்டார் வாகான தயாரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் இடத்தில் இதற்கு சுங்கவரி, விற்பனை வரி போன்றவை உண்டு. இந்த உதிரிப்பாகங்களை பெற்று வாகனம் தயாரிக்கும் நிறுவனம் மற்றொரு முறை சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்த வேண்டும்.

உதிரிபாகம் 10 ரூபாய் என்றால், அதனை தயாரிக்கும் நிறுவனம் அதற்குச் சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்துகிறது. அந்த உதிரிப்பாகத்தைப் பெற்று வாகனம் தயாரிக்கும் நிறுவனம், தன் தயாரிப்புச் செலவாக 50 ரூபாயை செலவழித்து பொருள் செய்யும் பொழுது மற்றொரு முறை உதிரிப்பகத்தின் விலையான 10 ரூபாய்க்கும் சேர்த்து வரிச் செலுத்த வேண்டும். அதாவது 60 ரூபாய்க்கு வரிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பல நிலைகளில் வரிச் செலுத்த வேண்டிய நிலை. ஒரு பொருளின் மொத்த வரி 10% என்றால், இது பல நிலைகளில் கட்டப்படும் பொழுது 10% கடந்து விடுகிறது. இவ்வாறான வரி விதிப்பு முறை பொருட்களின் தயாரிப்புச் செலவையும் பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது.

ஆனால் VAT முறைப் படி வாகனம் தயாரிக்கும் நிறுவனம் 50 ரூபாய்க்கு மட்டும் வரிச் செலுத்தினால் போதும். ஏனெனில் ஏற்கனவே ஒரு உதிரிப்பாகத்தின் விலையான 10 ரூபாய்க்கு வரிச் செலுத்தப்பட்டு விட்டது.

இது பலனளிக்கும் திட்டம் தானே ? நிச்சயமாக. வரி குறைவதால் பொருள் தயாரிப்புச் செலவு குறையும். நிறுவனங்களுக்கு லாபம். அந்தப் பொருள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் நுகர்வோருக்கும் லாபம் தான்.

பின் ஏன் சர்சை ? பிரச்சனை ?

சுங்கவரி மைய அரசாலும், விற்பனை வரி மாநில அரசாலும் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான வரி விதிப்பு முறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறன. மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படுமோ என்ற அச்சம். இது தவிர பல பொருட்கள் இந்த VAT முறையின் கீழ் வருவதால் இது வரை வரிச் செலுத்தாத வியபாரிகளுக்கும் அச்சம். கணக்கு வழக்குகளை சரியாகப் பராமரிக்கும் நிர்பந்தமும் இருக்கிறது. சரியாக கணக்கு இருந்தாலும் அதிகாரிகளின் தொந்தரவு இருக்கும் என்று வியபாரிகள் அஞ்சுகிறார்கள்.

இப்படி பலப் பிரச்சனைகளுடன் இந்த வரி விதிப்பு முறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

சரி..வரியில் இருந்து கொஞ்சம் நகர்ந்து பட்ஜெட்டின் பிறப் பகுதிகளுக்கு வருவோம்

மானியக் கோரிக்கைகள் (Demands for grants)

நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு அமைச்சகத்துக்குமான நிதித் திட்டங்களை அறிவிக்கும். இந்தத் திட்டங்கள் மக்களவையில் ஒட்டெடுப்புக்கு விடப்படும். இதைத் தான் மானியக் கோரிக்கைகள் என்றுச் சொல்வார்கள். பொதுவாக ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் (துறைக்கும்) ஒரு மானியக் கோரிக்கைத் தான் மக்களவையில் முன்வைக்கப்படும். பெரியத் துறையாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் மக்களவையில் சமர்பிக்கப்படும்.

மானியக் கோரிக்கைகள் நிறைவேறியப் பிறகு, அந்த அமைச்சகத்திற்கான நிதி Appropriation bills என்னும் நிதி ஒதுக்கீட்டு மசோதா மூலம் குறிப்பிட்ட துறைக்கு வழங்கப்படும்.

நிதி மசோதா (Finance Bill)

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டுமே மக்களவையால் நிறைவேற்றப்படும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வழக்கில் இருக்கும் வரி போன்றவற்றை அப்படியே தொடரவும், சில மாற்றங்களை செய்யவும் நிதி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசு இத்தகைய நிதி மசோதாக்களையே தாக்கல் செய்யும்.

பட்ஜெட் பற்றாக்குறை (Budget deficit)

சுலபமானக் கணக்குத் தான், ஆனால் இதனைக் கட்டுக்குள் வைப்பது அவ்வளவு சுலபமில்லை.

வருவாய் - செலவுகள், இவைத் தான் பற்றாக்குறை.

வருவாய் வரவு செலவுத் திட்டம், முதலீட்டு வரவு செலவுத் திட்டம் என இவை இரண்டையும் கொண்டு இந்தப் பற்றாக்குறை கணக்கிடப்படும்.
நம் நாட்டில் வருவாயை விட செலவுகள் அதிகமாக இருப்பதால், வருவாய் - செலவுகள் என்றாலே பற்றாக்குறைத் தான். சில நாடுகளில் பற்றாக்குறை இருக்காது. மிகுதியானப் பணம் கையிருப்பில் இருக்கும். இதற்கு Surplus என்றுப் பெயர்.

நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit)

மேலே இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையுடன், அரசு வாங்கியிருக்கும் கடனையும் சேர்த்தால் வருவது தான் நிதிப் பற்றாக்குறை அல்லது Fiscal deficit

Direct Investment - நேரடி முதலீடு - புதிதாகத் தொழில்களில் செய்யப்படும் முதலீடு. இது வெளிநாட்டினர் மூலமாக வந்தால் - FDI - வெளிநாட்டு நேரடி முதலீடு. இதுவும் சர்சைகளில் இருக்கும் ஒரு பிரச்சனை. இடதுசாரி தலைவர்கள் இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே எதிர்க்கும் பிரச்சனை. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. கடந்த வாரம் தான் தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு 74% மாக உயர்த்தப்பட்டது. பல துறைகளுக்கும் இவ்வாறான FDI தேவைப்படுகிறது. நிதியமைச்சர் என்னச் செய்யப்போகிறார் என்று பார்ப்போம்

பணக்கொள்கை/கடன் கொள்கை (Monetary policy) - பணப்புழக்கம், வட்டி விகிதம் போன்றவற்றை சீராக வைக்கும் அரசின் செயல்திட்டமே பணக்கொள்கை/ கடன் கொள்கை எனப்படுகிறது.

நிதிக்கொள்கை (Fiscal policy) - பொருளாதாரத்தைச் செலுத்தும் முக்கியமானத் திட்டங்களில் அரசின் நிதிக்கொள்கை முக்கியமான இடத்தை வகிக்கிறது. குறைவான நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்வது. அதன் மூலம் பொருட்களுக்கானத் தேவையை அதிகரிப்பது. தேவை அதிகரிக்கும் பொழுது உற்பத்தி பெருகுவதால் நாட்டின் பொருளாதாரமும் ஏற்றமடையும்.

தொடர்ந்து அடுத்தப் பதிவில் பட்ஜெட் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலவேறு ஊடகங்களில் படித்த, கேட்டச் செய்திகளையும் எனது கருத்துகளையும் எழுதுகிறேன்.

முந்தையப் பதிவு

References : Economic Times

2 மறுமொழிகள்:

Anonymous said...

சசி, மிகவும் நல்ல கட்டுரை. பல விஷயங்களைத் தெளிவு படுத்துவதாய் இருக்கிறது. தொடருங்கள்.

By: செல்வராஜ்

1:18 PM, February 08, 2005
Anonymous said...

மிக அருமையான கட்டுரை. சிறந்த மொழிபெயர்ப்பு. பட்ஜெட் சம்பந்தமான பல விஷயங்கள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. தொடருங்கள்.

7:44 AM, February 11, 2005