பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, February 23, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 3



காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமையவிருந்த நேரம். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அமைச்சகமான Disinvestment அமைச்சகம் இனி இழுத்து மூடப்படும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவிக்க, பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்த கேள்விக்குறி எழ, மே மாதம் 17 அன்று பங்குச்சந்தை 565 புள்ளிகள் சரிந்தது. அதே நாளில் ஒரு கட்டத்தில் பங்குச்சந்தை 800 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்திருந்தது. வர்த்தகம் சந்தையில் வர்த்தகம் இரு முறை நிறுத்தப்பட்டது.

இது தான் புதியதாக அமையவிருந்த காங்கிரஸ் அரசுக்கு பங்குச்சந்தை கொடுத்த வரவேற்பு. மறுநாள் சோனியா பிரதமர் பதவி ஏற்கப்போவதில்லை, மன்மோகன் சிங் பதவி ஏற்பார் என்றச் செய்தியே பங்குச்சந்தைக் குறியீட்டை 372 புள்ளிகள் உயர வைத்தது. மன்மோகன் சிங் மேல் அந்தளவுக்கு நம்பிக்கை.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சி.ரங்கராஜன் ஆகியோரை உள்ளடக்கிய கனவுக் கூட்டணி என்னச் செய்யப் போகிறது ? இவர்களை இடதுசாரிகள் சுதந்திரமாக செயல்பட விடுவார்களா ? கூட்டணி அரசின் நிர்பந்தங்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வருகின்ற பட்ஜெட் இருக்குமா ? 1997ல் ஒரு Dream பட்ஜெட்டைக் கொடுத்த ப.சிதம்பரம் இப்பொழுது என்னச் செய்யப் போகிறார் ? வரும் திங்களன்று விடைக் கிடைத்து விடும்.

இந்தப் பட்ஜெட்டில், வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டின் ஹைலைட்டே வரிச் சீர்திருத்தமாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு அது பற்றி ஒரு Hype நிலவுகிறது. அது பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் தான் இக் கட்டுரை.

தற்பொழுதுள்ள நிலையில் நாட்டின் GDP யுடன் ஒப்பிடும் பொழுது வரி வருவாய் வெறும் 9% தான். இந்தியாவைப் போலவே வளரும் நாடுகளாக இருக்கும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இது மிகக் குறைவு. உதாரணமாக பிரேசிலில் இது 20%. தற்போதைய 9%ல் இருந்து 11% மாக இதை உயர்த்த இந்தப் பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் இருக்கும். கேல்கர் கமிட்டியின் விரிச் சீர்த்திருத்தங்கள் இந்தப் பட்ஜெட்டில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. கேல்கர் கமிட்டி எளிமையான, குறைந்த விகிதத்தில் வரி விதிப்பதைப் பரிந்துரை செய்கிறது.

தற்பொழுது நம்முடைய ஒட்டு மொத்த வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. நாம் சேமிக்கும் சேமிப்புகள் (NSC), காப்பீடு, PF, வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது பிரிவு 88 கீழ் இருக்கும் விலக்குகள். இந்த விலக்குகளை EEE (Exempt Exempt Exempt) என்றுச் சொல்வார்கள். அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுதும், அந்தப் பணம் வட்டியால் பெருகும் பொழுதும், இறுதியில் அந்தப் பணத்தை நாம் எடுக்கும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இம் முறை மாறி EET (Exempt Exempt Tax) என்ற முறை அமலுக்கு வர இருக்கிறது. அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுது அந்தப் பணத்திற்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பணம் பெருகும் பொழுதும் வட்டிக்கு விலக்கு உண்டு. ஆனால் அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படும் பொழுது, எடுக்கப்படும் பணம் முழுமைக்கும் வரி விதிக்கப்படும். முதலீடு செய்யும் பொழுது தற்பொழுது கொடுக்கப்படும் 15% ரிபேட், இனி 30%மாக உயர்த்தப்படும். ஆனாலும் இறுதியில் வரி விதிக்கப்படும் பொழுது முதலீட்டாளருக்கு கிடைக்கும் பணத்தில் கணிசமானத் தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

இது போலவே Standard Deduction என்று சொல்லப்படும் வரி விலக்கும் இனி இருக்காது. தற்பொழுது 5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 30,000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 20,000 ரூபாயும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர மகளிருக்கு வழங்கப்படும் ஸ்பெஷல் வரி விலக்குகளும் இனி நீக்கப்படும். இவ்வாறு விரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பணம் முதலீடாக மாறுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே அரசுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த விலக்கு ஒழுங்காக வரிச் செலுத்தும் சம்பளம் வாங்கும் பிரிவிற்கு அளிக்கப்படும் சலுகையாகவே இது வரையில் இருந்தது. இனி இந்தச் சலுகை இருக்காது.

வாங்கும் சம்பளம் குறையும் சாத்தியக்கூறுகள் இருக்குதுங்கோ....

வீட்டுக்கடனுக்கு தற்பொழுது அளிக்கப்படும் சலுகை அப்படியே தொடரும் என்பது வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் (வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் ரூ1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது). வீட்டுக்கடனுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை முதலீட்டாளர்களுக்கு பலன்
தருவதோடு மட்டுமில்லாமல் வீட்டு வசதித் துறையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது என்பதால் இது அப்படியே தொடரும். ஆனால் கேல்கர் கமிட்டி இதனையும் நீக்க வேண்டும் என்று தான் பரிந்துரைச் செய்திருந்தது.

சம்பளம் வாங்கும் ஒரு பிரிவினருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களும் இந்தப் பரிந்துரையில் இருக்கிறது.

தற்போதைய வருமான வரிப் விதிப்பில் உள்ள முறைப்படி 50,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. இனி அந்த உச்ச வரம்பு 1,00,000 உயர்த்தப்படும்.

மொத்தத்தில் தற்பொழுது இருப்பது போல பல சிக்கலான கணக்கு வழக்குகள் இல்லாமல் வாங்கும் சம்பளத்தை/வருமானத்தை வரி விகிதத்துடன் கழித்து விட்டால் எஞ்சியுள்ளது தான் நம் வருமானம்.

எளிமையான வரி விகிதம் தானே ? நாம் ஆடிட்டரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. சுலபமாக கணக்கிடலாம் என்பது தான் நமக்கு கிடைக்கும் ஆதாயம்.

அதெல்லாம் சரி தான்... வருமானம் குறையுமேன்னு நினைக்கிறீங்களா ?

அரசின் சலுகைகள் ஏழை மக்களுக்குத் தான் வழங்கப்படவேண்டும். பல இடங்களில் பலச் சலுகைகளை அரசு வாரி வழங்கும் பொழுது, அரசின் கவனிப்பு தேவைப்படும் பல துறைகளின் வளர்ச்சியில் தேக்கமே நிலவுகிறது. அரசு, ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு செலவழிக்கும் தொகையை விட பெட்ரோல், சிலிண்டர் போன்றவற்றுக்கு வழங்கும் subsidies தான் மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு வழங்கும் சலுகை விலையினால் அரசுக்கு சுமார் 46,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர விவசாயத்திற்கு தரப்படும் பலச் சலுகைகள் (உரம்), அரசு குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து பெறும் தானியங்கள் போன்றவற்றாலும் அரசுக்கு கணிசமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்தச் சலுகைகளை படிப்படியாக நீக்கி தேவைப்படும் பிற துறைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலேக் கூறியுள்ள சலுகைகளை நீக்கினால் தான் ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு சலுகைகளைத் தர முடியும். இத் துறைகளுக்குத் தான் அரசின் தனி கவனிப்பு தேவைப்படுகிறது. இத் துறைகளுக்கு தற்பொழுது சுமார் 6 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்படுகிறது. இது பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.


தற்பொழுது வழங்கப்படும் தேவையில்லாத வரிச் சலுகைகளை நீக்குதல், அரசுக்கு வருவாய் தரும் புது வழிகளை உருவாக்குதல் போன்றவற்றால் மூலமே கவனிப்பின்றி கிடக்கும் பலத் துறைகளின் மீது அரசு கவனம் செலுத்த முடியும். இந்தப் பட்ஜெட் அதற்கான ஆரம்பமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இவை எல்லாம் அனுமானங்கள் தான். சிதம்பரம் எந்தளவுக்கு இதற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பது திங்களன்று தெரிந்து விடும்.



முந்தையப் பதிவுகள் - 1, 2

0 மறுமொழிகள்: