பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, November 03, 2004

பணம் சம்பாதிக்க சில விதிகள்

பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.

விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது
விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது

மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.

முதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்தப் பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.

பலர் பல வழிகளை கையாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.

வாரன் பப்பட் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.

உதாரணமாக 10 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 கோடியாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து கோடியை எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் வாரன் பப்பட அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது

சிலர் பங்குக் குறியீடுகளில் உள்ளப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

அதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய மென்பொருள் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுத்தும் (அல்லது ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம்) என்பதை மென்பொருள் துறைகளில் உள்ளவர்களுக்கும், மென்பொருள் பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும். தேர்தலின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharma பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.

பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம்.

இந்த வார சந்தை நிலவரம்

இந்த வாரம் - காளை வாரம். பங்குக் குறியீடுகள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ் முன்னிலையில் இருந்ததால், இன்று தொடக்கத்திலேயே உயரத் தொடங்கிய சந்தை, இன்றைய வர்த்தக முடிவில் BSE குறியீடு 88 புள்ளிகள் உயர்ந்து 5,843 லும், NSE 24புள்ளிகள் உய்ர்ந்து 1,837 லும் இருந்தது. செவ்வாயன்று அதிபர் தேர்தலின் முடிவுகள் பற்றிய அச்சத்தில் மென்பொருள் பங்குகள் சரிந்திருந்தன. ஆனால் புஷ் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் இன்று மென்பொருள் பங்குகள் நல்ல லாபகரமாக இருந்தது.

அதைப் போலவே கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த வங்கிப் பங்குகள், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வங்கித் துறையில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பால் உயரத் தொடங்கியுள்ளது (வழக்கம் போலவே இடதுசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்).

இன்று எல்லா துறைகளிலுமே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். புஷ் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனிப் பங்குச் சந்தைக்கு குஷி தான்.

1 மறுமொழிகள்:

அன்பு said...

சூப்பர் சசி, இந்தப்பதிவு. இத, இத மாதிரிதான் கேட்டு நான் வாசகர் விருப்பம் இட்டிருந்தேன். (அத ஏண்டா இவ்ளோ லேட்டா படிச்சேன்னு திட்டாதீங்க:) ஏனென்றால், காளை/கரடி நிலவரம் பங்குச்சந்தைல முதலீட்டில் இருப்பவருக்குதான் வேண்டும் (அவரும் இங்கு வந்து நிலவரத்தை தெரிந்து கொள்ளப்போவதில்லை). அதனால், பங்குச்சந்தை உள்ளே நுழைய நினைப்பவர்களுக்கு, புதியவர்களுக்கு மேலும், மேலும் அது தொடர்பான தகவல்கள், கட்டுரைகள், அனுபவங்கள்தான் மிகவும், பெருவாரியாக பயனுள்ளதாக இருக்கும். வரவேறிபிருக்கும், என்று என் எண்ணம். அந்த வரிசையில், இந்த பதிவு சூப்பர்.

அதிலும்,

மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharma பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.

பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம்.
இதுதான் உச்சம்... மிக்க நன்றி, தொடர்ந்து கலக்குங்க....(இதுல சிலேடையெல்லாம் இல்ல:)

1:17 AM, November 26, 2004