பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, November 20, 2004

பங்கு விலையும், முதலீடும்

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சாமானியர்களுக்கு, பங்குச் சந்தையின் வல்லுனர்களான - Analysts கள் சொல்வது பல நேரங்களில் ஏதோ ஒரு ஜோசியக்காரனின் ஆருடம் போலத் தான் தோன்றும். சில நேரங்களில் அவர்கள் சொல்வதற்கு எதிர் மாறாக வர்த்தகம் நடப்பது தான், பங்குச் சந்தையின் நுட்பங்களைப் பற்றி தெரியாதவர்களை குழப்புகிறது. எல்லாம் அறிந்தவர்களுக்கே, சந்தை புரியாத புதிராக இருக்கும் பொழுது, நமக்கெல்லாம் அது தேவை தானா என்று சந்தையில் இருந்து ஓடி விடுகின்றனர். அதற்கு தற்பொழுதய உதாரணம், வங்கிப் பங்குகள்.

சில வாரங்களுக்கு முன்பு வரை எல்லா அனலிஸ்டுகளும், தரகர்களும் கூறியது - "வங்கிப் பங்குகளுக்கு ஏற்றம் இல்லை". வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது அவை தீண்டத்தகாதவையாகவே பலருக்கு தென்பட்டது. ரூ490ல் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 440க்கு சரிவுற்ற பொழுது, வங்கிப் பங்குகள் மேலும் சரியக் கூடும் என்றே ஆருடம் சொன்னார்கள். ஆனால் கடந்த இரு வாரங்களில் வங்கிப் பங்குகள் எகிறத் தொடங்கி விட்டது. இந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 530ஐ எட்டியது.

பங்குகள் விலை சரிவடைவது தான், பங்குகள் வாங்குவதற்கான உகந்த சூழ்நிலை என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண முதலீட்டாளரை, சரிவு நிலையில் பங்குகளை வாங்க விடாமல் செய்வது இந்த அனலிஸ்டுகள் தான். பங்குகள் சரியும் பொழுது இன்னும் சரியும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம் அச்சத்தில் முதலீடு செய்யாமல் இருப்போம். நாம் அசந்த நேரத்தில் சந்தை ஏதோ ஒரு செய்தியால் பற்றிக் கொண்டு எகிறும்.

விலை ஏறும் பொழுதும் ஒரு பிரச்சனை இருக்கிறது. "இதற்கு மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை, பங்குகளின் விலை - Valuations, அதிகமாக இருக்கிறது" என்று யாராவது சொல்வார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, பங்குகள் சில ரூபாய்கள் எகிறும். நாம் குழம்பிப் போய், எப்பொழுது வாங்குவது என்று புரியாமல், சந்தை பக்கமே வராமல், நமது பணத்தை வீட்டு பீரோவிலோ, வங்கியின் சேமிப்பு கணக்கிலோ தூங்க வைத்து விடுவோம்.

பங்குச் சந்தையின் அடிப்படையே வாங்குவது, விற்பது தான். விற்பவர் இருந்தால் தான், நாம் வாங்க முடியும். இருவரின் எதிர்மறையான எண்ணங்கள் தான் சந்தையின் வர்த்தகத்தை தீர்மானிக்கிறது. பங்குகள் விலை இனி ஏறாது என ஒருவர் தீர்மானித்து, பங்குகளை விற்பார். இந்தப் பங்குகள் விலை ஏறும் என ஒருவர் தீர்மானித்து அதனை வாங்குவார். இருவரும் தங்கள் செயல்களுக்கு பல காரணங்கள் சொல்வார்கள். வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விலை உயர்வதும், யாருமே அதனை சீண்டாத பொழுது விலை சரிவடைவதும் எல்லா பொருட்களுக்கும் பொதுவானது தான். பங்குகளுக்கும் அவை பொருந்தும். அனலிஸ்டுகளின் கருத்துகளையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்காமல், முற்றிலும் புறம்தள்ளாமல் அதன் உட்கருத்தை ஆராய்ந்து நமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

தன்னுடைய "One up on the Wall Street" என்ற புத்தகத்தில் Peter Lynch என்ற புகழ்பெற்ற பங்குச் சந்தை மேதை, "பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது" என்று சொல்கிறார். இதனை படிக்கும் பொழுது என்ன எதோ உளறுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதனை ஆராயும் பொழுதோ, இல்லை நடைமுறை அனுபவத்திலோ தான் உட்கருத்தை கண்டு கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடை (பங்கு விலை x மொத்தப் பங்குகள்) ஆராய்ந்து, அது மேலும் உயரக் கூடுமா என்று கணித்து அதற்கேற்ப பங்குகளை வாங்க வேண்டும். நீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதன் வள்ர்ச்சிக்கு ஏற்றாற் போலத்தான் உயரும். ஒரு நிறுவனம் படிப்படியாகத் தான் உயர முடியும். திடீரென்று உயர்ந்து விடாது.
அதனால் பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும், அதற்கு நாம் கொடுக்கும் விலை உகந்தது தானா என்று தீர்மானிக்க வேண்டும்.

நம்முடைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த மாத துவக்கத்தில் இந்தப் பங்கு 410 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின் விலை ஏறி 500ஐ தொட்டது. பின் சரிந்து, 440 க்கு வந்தது. தற்பொழுது உயர்ந்து, 530க்கு வந்துள்ளது. இது தான் பங்குகளின் தன்மை.

410க்கு வாங்கி 500ஐ தொட்டவுடன் லாபம் போதும் என்று விற்கலாம். தவறில்லை. ஆனால் 490 க்கு வாங்கி, அது 440க்கு வரும் பொழுது தான் நம்முடைய பொறுமை சோதிக்கப் படுகிறது. பங்கு வர்த்தகத்தில் பொறுமை மிக அவசியம். சரிந்து போய் விட்டதே என்று விற்று விட்டால், பின் 530க்கு அது வரும் பொழுது நொந்து கொள்ள வேண்டியது தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற மிகப் பெரிய வங்கியின் நீண்ட கால செயல்பாடு எப்படி இருக்கும் ? அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா ? இந்த ஆராய்ச்சியின் முடிவு, நம்மை இந்த சரிவு தற்காலிகமானது தான் என்று முடிவு செய்ய வைக்கும். பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பற்றிய நீண்டகால திட்டத்தில், நம்முடைய முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டு சந்தையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்போம்.


2 மறுமொழிகள்:

Anonymous said...

அன்புள்ள சசி
பொங்கு தமிழில் பங்கு சந்தை பற்றி எழுதுவது மிகவும் கடினமானது, பாராட்டுக்கள். பொங்கு தமிழை விடுத்து கொங்கு தமிழிலோ பேச்சுத் தமிழிலோ எழுதினால் சுவையாக இருக்கும்.

By: Padma

8:52 PM, November 23, 2004
அன்பு said...

சசி,

இந்தப் பதிவின் முதல்பகுதியை படித்தால் பலருக்கும் பங்குச்சந்தை மேலுள்ள பயம் கூடும் என்பதுதான் உண்மை. ஆனால் அந்த பயத்தை தெளியவைக்கிறது, இரண்டாம் பகுதி. அந்த தெளிவுஇருந்தால்தான், பொறுமை, அதேநேரம் அணுக்கமான கண்காணிப்பு இருந்தால்தான் வெற்றிபெறமுடியும் போல் இருக்கிறது.

"பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது"

இதை கண்டிப்பாக அவருடைய மொழியில் படித்திருந்தால், எனக்குத்தான் புரியல என்று விட்டிருப்பேன். நீங்கள் தமிழில் அவருடைய கூற்றை எழுதி/விளக்கியதால், அதன் உள்ளர்த்தம் புரியமுடிந்தது, நன்றி.

நீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது - ஆம், இதுவும்கூட உண்மை என்பது இப்போது அசைபோட்டுப்பார்த்தால்தான் புரிகிறது. Fixed Deposit மட்டுமல்ல பங்குச்சந்தையும் நீண்டகால முதலீடுதான் போல. ஏனென்றால் நிறுவங்கள், ஓரிரு நாளில்/குறுகிய காலத்தில் வீழ்வதோ, எழுவதோ இல்லையே!? (ஆனால், என்ரான், ஆண்டர்சன் கன்சல்டிங்க், கேப்ஜெமினி E&Y ... போன்ற குழப்பங்களும் பயமுறுத்துகிறது)

மொத்தத்தில் கலக்குறீங்க....(இது சிலேடைங்கோ:)

பத்மா,
என்ன சசியோட இந்த நடை கடினமாகவா இருக்கிறது? (என்னைப்பொருத்தவரை) இதை விட குறைத்து, பேச்சு நடைல மற்ற கில்மா மேட்டரு எழுதலாம். வணிகம்/பங்குச்சந்தை என்பதால், இதுபோன்ற ந்டை தேவையென்று நினைக்கிறேன். அல்லது படிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வராது:)
(வெள்ளாட்டுக்கு சொல்றாங்க, சோக் அடிக்கிறாங்கன்னு... போய்டும்.)

1:04 AM, November 26, 2004