பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, December 09, 2004

பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லக் கூடிய சில நல்ல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

முதலாவது, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ள முதலீட்டு கமிஷன். அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளைக் கொண்டு ஒரு உதாவாக்கரை கமிஷனை அமைக்காமல், திரு.ரத்தன் டாட்டா தலைமையில், ICICI யைச் சேர்ந்த திரு.அசோக் கங்குலி, HDFC ன் திரு.தீபக் பரேக் ஆகியோரைக் கொண்டு மூன்று நபர் முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்கும். இந்த முதலீடுகள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதற்குரிய தீர்வுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கும். ரத்தன் டாட்டா போன்ற தொழில் துறையின் மதிப்பைப் பெற்றவர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஒரு ஸ்டார் வேல்யுவுடன் முதலீட்டாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.

தற்பொழுதுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.5% - 7% கடந்து, 8% முதல் 10% ஐ கடந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் முன்னேற வேண்டுமானால் நாட்டின் உள்கட்டமைப்பின் தரம் உயர வேண்டும். தற்பொழுது பெங்களுர் போன்ற பெரிய நகரங்கள் பெருகி வரும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழி பிதுங்கிப் போய் உள்ளது. இன்போசிஸ் போன்ற இந்தியா நிறுவனங்களே பெங்களுர் தவிர முதலீடு செய்ய வேறு நகரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சென்னை ஓரளவுக்கு அவர்களின் எதிர்பார்பை தீர்க்க கூடும். ஆனால் இங்கே கூட பழைய மகாபலிபுரம் சாலையில் திட்டமிடப்பட்ட வேகத்தில் I.T.ஹைவேக்கான வேலைகள் நகராமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மகேந்திரா சிட்டி போன்ற தொழில் நகரங்களை செங்கற்பட்டு எல்லையில் தான் உருவாக்க முடிகிறது. பெரிய நகரங்களை விடுத்து இரண்டாவது கட்ட நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது கட்ட தொழில் நகரங்களை திட்டமிட்டு உருவாக்கினால் தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) இந்தியாவிற்குள் ஈர்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகிறது. தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் முதலீடு தேவை. ஆண்டுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்பட்டாலும், தற்பொழுது சுமார் 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கே முதலீடுகள் வருகிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டாலும், சீனாவில் செய்யப்படும் 50 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவிற்கு வரும் முதலீடு சொற்ப அளவு தான்.

தேவைப்படும் முதலீடுகளை ஈர்க்கத் தான் இந்த முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கமிஷனால் சாதிக்க முடியுமா ?

தொழில் துறையில் அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கிய இந்தக் கமிஷனால் முதலீடுகளை இந்தியாவின் பக்கம் நிச்சயம் ஈர்க்க முடியும். அரசாங்க அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளை இந்தக் குழுவினால் புரிந்து கொள்ள இயலும். அவர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும். அரசாங்கத்திற்குள்ள சங்கடங்களையும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளையும் அறிந்து அதற்கேற்ப ஒரு பேலன்சடு -Balanced நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். ஆனால் எல்லா கமிஷன்களையும் போல சில அரசியல் பிரச்சனைகளை இந்தக் கமிஷனும் எதிர்கொண்டே ஆக வேண்டும். இது இந்திய அரசியலில் தவிர்க்க இயலாதது. எந்தளவுக்கு அந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கம் ஈடுகொடுக்கிறதோ அந்தளவுக்குத் தான் இந்தக் குழுவின் வெற்றியும் இருக்கும்.

அடுத்ததாக இந்திய பங்குச் சந்தையில் குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் (FII Investment). கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவிந்துள்ளது. 2004ம் ஆண்டு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்களுக்கு முதலீடுகள் குவிந்துள்ளது. இது தான் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரு ஆண்டில் செய்யப்பட்டிருக்கும் மிக அதிக பட்ச முதலீடு. வெளிநாட்டு முதலீடுகள் பங்குச் சந்தையில் குவியும் பொழுது பங்குக் குறியீடுகள் எகிறும். இந்த ஆண்டு துவக்கத்தில் முதலீடுகளுக்கு சாதகமான பா.ஜ.க. அரசு இருந்த பொழுது முதல் நான்கு மாதங்கள் பங்குச் சந்தையில் முதலீடுகள் குவிந்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று இடதுசாரிகளின் ஆதரவால் அரசு அமைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டு முதலீடுகள் சரியத்தொடங்கியது. மிக மோசமாக மே மாதத்தில், இடதுசாரி தலைவர்களின் சில பொறுப்பற்ற பேச்சால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள, பங்குக் குறியீடு சரியத் தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்குப் பிறகு அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக முதலீடுகள் பெருகத் தொடங்கியது.

ஆனால் கடந்த இரு மாதங்களாக அந்நிய முதலீடு ஏன் இவ்வளவு வேகமாக குவிகிறது ? இந்திய பொருளாதாரம் மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, வலுவாக இருக்கும் நாட்டின் பொருளாதார அடித்தளம் எனப் பல காரணங்களை சொல்லலாம், என்றாலும் மிக முக்கிய காரணம் மந்தமடைந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம். அந்தச் சந்தையில் முதலீடு செய்வதை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபம் தரும் என்பதால் பல முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஆசிய நாடுகளில் குவிக்கத் தொடங்கியுள்ளது. மார்கன் ஸ்டேன்லி கேப்பிடல் இண்டர்னேஷனல் (MSCI Index) ஆசியாவிற்கான குறியீட்டு உயர்வு விகிதத்தில் இந்தியா 12% உயர்வுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சீனா, கொரியா போன்ற நாடுகளை விட இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி இம் மாதம் அதிகரித்துள்ளது. இந்த முதலீடு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது, அடுத்த பட்ஜெட்டிற்குப் பிறகு பட்ஜெட்டிற்கு ஏற்ப முதலீடுகள் மேலும் குவியும் அல்லது குறைந்து போகும். ஆனால் முதலீடுகள் அதிகரிக்கத் தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு பங்குச் சந்தையில் குவிவது நல்ல செய்தி தான் என்றாலும் இந்திய பொருளாதாரம் மேலும் முன்னேக்கி நகர வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக வேண்டும். தனியார் வங்கிகளில் 74% அளவுக்கு அந்நிய முதலீடுகளை பெருக்குவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆனால் இன்னமும் நடைமுறைப் படுத்தப் படாமல் இருக்கும் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும். விவசாயம், மனித வள மேம்பாடு போன்ற இது வரை அதிகம் கண்டுகொள்ளப் படாமல் இருக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தவிர கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவாணியை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவால்யா ஆகிய இந்தியாவின் சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களை உள்ளடக்கிய அரசு இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நல்ல திட்டங்களை திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் தான், அதற்கு அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தான் இந்தியாவின் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் மேலும் வளர்ச்சி அடையும்.

2 மறுமொழிகள்:

அன்பு said...

சசி, உங்கள் கட்டுரை மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. நல்லது நடக்கட்டும், நன்றி.

5:13 AM, December 10, 2004
இராதாகிருஷ்ணன் said...

"உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம்" - நாட்டின் வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் தொலைவிலுள்ளது.
நல்ல கட்டுரை, நன்றி!

7:22 AM, December 10, 2004