பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, February 28, 2005

பட்ஜெட் 2005 - 2



பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தப் பொழுது தள்ளாடிக் கொண்டிருந்த பங்குச்சந்தை, சிதம்பரம் பட்ஜெட் உரையை முடித்ததும் துள்ளிக் குதித்து பின் மேல் நோக்கி எழும்பி வரலாறு காணாத உயர்வுடன் இன்றைய வர்த்தகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 144 புள்ளிகள் எகிறி 6,713.86 புள்ளிகளை எட்டியது. தேசியப் பங்குச்சந்தை, Nifty 43 புள்ளிகள் எகிறி 2,103.95 புள்ளிகளை எட்டியது.



கடந்த ஆண்டு நிதியமைச்சர், பங்குப் பரிவர்த்தனை வரி என்ற ஒன்றை அறிவிக்க சரிந்தப் பங்குச்சந்தை, இந்த ஆண்டு அந்த வரியில் பெரிய அளவில் உயர்வு ஏதும் இல்லாமல் இருந்தாலே போதும் என்று தான் எதிர்பார்த்தது.

அதேப் போல ஒரு சிறு உயர்வு மட்டுமே இந்தப் பட்ஜெட்டில் செய்யப்பட்டது. இது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ப.சிதம்பரம் கூறினார். உண்மை தான் 0.015%ல் இருந்து 0.02% ஆக உயரும் வரியால் எந்தப் பாதிப்பும் இல்லை.

இது தவிர மும்பை இப் பகுதியின் நிதித் தளமாக (Regional Finance Hub) மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர நிதி தொடங்குவது பற்றி SEBI பரிசீலிக்கும் என்றும் அறிவித்தார்.

வருமான வரியில் 1 இலட்சம் வரையிலான எந்த முதலீட்டிற்கும் வரி கிடையாது என்ற அறிவிப்பும் சந்தைக்கு ஊக்கமளிக்கும். அதாவது தற்பொழுது பலர் வரிச் சலுகைக்காகவே பல சேமிப்புகளை மேற்கொள்கிறார்கள். இவர்களை முதலீட்டாளர்களாக மாற்ற வேண்டும் என்று பட்ஜெட்டிற்கு முன்பே சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன் படி 1 இலட்சம் வரை எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதி (Mutual Funds) போன்றவற்றில் கூட முதலீடு செய்யலாம். 1 இலட்சத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே பென்ஷன் பண்ட் போன்றவைகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் இந்த அறிவிப்பும் பங்குச்சந்தையின் ஏற்றத்திற்கு உதவும்.

இது தவிர வங்கிகளின் CRR வரம்பு குறித்த அறிவிப்பும் ஒரு நல்ல அறிவிப்பு. வங்கிகள் தங்கள் நிதி நிலைமை அதிகரித்துக் கொள்ள முடியும். இன்று வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஏற்றம் இருந்தது.

நாட்டின் ஏற்றுமதியை 15,000 கோடி டாலராக 2009க்குள் அதிகரிக்கப்படும். அதற்காக விதிகள் மேலும் தாரளமயமாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

G7 மாநாட்டுக்கு தான் சென்றிருந்தப் பொழுது சீனா பெறும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை சீன நிதியமைச்சர் தன்னிடம் சுட்டிக் காட்டியதாகக் கூறிய நிதியமைச்சர், சுரங்கம், வர்த்தகம், பென்ஷன் (mining, trade, pension) போன்ற துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பது பற்றி பேசிய பொழுது, வெளிநாட்டு நேரடி முதலீடு மூலமாக மென்பொருள், தொலைத்தொடர்பு, ஆட்டோமோபைல் போன்ற துறைகளில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை சுட்டிக் காட்டி உறுப்பினர்கள் ஒரு யதார்த்த நிலையை எடுக்கும் படி வற்புறுத்தினார். இது இடதுசாரிகளை நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது அவையில் சிறு சலசலப்பு இருந்தது. இந்த சலசலப்பு ஆளும் கூட்டணியில் அடுத்து வரும் வாரங்களில் பெரும் கூச்சலாக மாறக் கூடும்.

சீனா கடந்த ஆண்டு மட்டும் சுமார் 60பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா பெற்றுள்ளது எவ்வளவு தெரியுமா...4 பில்லியன்.

பின் எப்படி நாம் சீனாவை எட்டிப் பிடிக்க முடியும்.

வருமான வரி விகிதத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  • 1 இலட்சம் வரை வருமான வரி கிடையாது
  • 1,00,000-1,50,000 - 10%
  • 1,50,000- 2, 00,000 - 20%
  • 2, 50, 000 அதிகமாக உள்ளவர்களுக்கு 30%

Standard deduction போன்ற வரி விலக்குகள் எல்லாம் இனி இருக்காது. ஆனால் போக்குவரத்து, கேண்டின் என சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தரும் சலுகைகளுக்கு வருமான வரி இருக்காது.


மகளிர், முதியோரின் ஆசியை பெருவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறி மகளிருக்கான வருமான வரி உச்ச வரம்பு 1, 25, 000 லட்சம் என்றும் முதியோருக்கு 1, 50,000 லட்சம் என்றும் அறிவித்தார்.

வருமான வரியின் மாற்றங்கள் எதிர்பார்த்தது தான் என்பதால் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்கு கொடுக்கப்படும் வரி விலக்குகள் தொடரும்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

மிகச் சிறப்பான கட்டுரை..
மிக்க நன்றி..

வங்கி வரிவிதிப்பில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அரசியல்வாதிகள் கூச்சல் இடுவதிலியே தெரிகிறது இது அவர்களை பாதிக்கும் திட்டம் என்று. நடுத்தரவர்க்கம் இரண்டு நாட்களாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.

10:16 PM, February 28, 2005
Anonymous said...

மிகச் சிறப்பான கட்டுரை..
மிக்க நன்றி..

வங்கி வரிவிதிப்பில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அரசியல்வாதிகள் கூச்சல் இடுவதிலியே தெரிகிறது இது அவர்களை பாதிக்கும் திட்டம் என்று. நடுத்தரவர்க்கம் இரண்டு நாட்களாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.

By: arun

10:19 PM, February 28, 2005