பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, February 27, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 4



நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. சரக்குகளுக்கான கட்டணப் பிரிவு 4000ல் இருந்து 80 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சரக்குகளின் பல வகையான கட்டணப் பிரிவுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ரயில்வேக்கு 650 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த பலருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். பயணிகள் கட்டணத்தை அதிகரிக்காதது, ரயில்வே வழங்கும் 6500 கோடி ரூபாய் பெருமானமுள்ள மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லாதது இவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் ரயில்வேத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது சாதாரண மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எந்த அரசும் முனைவதில்லை.

ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது போல, பொது பட்ஜெட்டும் இருக்குமா? பொது பட்ஜெட்டில் இருக்கக் கூடிய முக்கிய அம்சங்களை கொஞ்சம் கவனிப்போம்

நிதிப் பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பில் பல மாற்றங்கள் இருக்கும் என்று முந்தையப் பதிவில் பார்த்தோம். இதையே வெள்ளியன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவு படுத்துகிறது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இப்போதைக்கு இருக்காது என்பது தவிர வட்டி விகிதமும் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைச் செய்கிறது. இது போலவே குறைவான வரி விகிதம், ஆனால் பரவலான மக்களை வரிச் செலுத்த வைப்பது போன்றவையும் இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) பலத் துறைகளில் கொண்டு வருவதும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் பட்ஜெட்டில் இருக்க வேண்டும். ஏற்கனவே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள அரசு இந்த பட்ஜெட்டில் வர்த்தகத் துறையிலும் (Retail), பென்ஷன் பண்ட் போன்ற துறைகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இடதுசாரிகள் இதற்கு ஒத்துழைப்பு தருவார்களா என்பது தெரியவில்லை. குறிப்பாக வர்த்தகம் - Retail துறை நம் நாட்டில் பல இடங்களில் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது அமெரிக்க நிறுவனங்களான Wal-mart, GAP, JCPenny போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கும், பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியச் சந்தையை திறந்து விடும் முயற்சி. ஏற்கனவே பல நிறுவனங்கள் (Shoprite, Metro) போன்றவை இதற்காகக் காத்திருக்கின்றன. இதனால் நம் நாட்டில் முறைபடுத்தப்படாமல் இருக்கும் பல சிறு வியபாரிகள் பாதிப்படையக்கூடும் என்பதான பிரச்சனைகள் எழுப்பப்படும்.

இது தவிர வங்கித் துறையில் அரசு கொண்டு வர இருந்த FDI வருமா என்று தெரியவில்லை.

பொருளாதார ஆய்வறிக்கை வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இருக்கும் பல விதி முறைகளை எளிமையாக்கும்படி வலியுறுத்துகிறது. இது தவிர உள்கட்டமைப்புத் துறையில் அரசு செயல்படுவது தவறென்றும் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பை தனியாரிடம் ஒப்படைப்பது மூலம் தேவையில்லாத அரசியல் தலையீடுகளைத் தவிர்க்கலாம் என்பதே ஆய்வறிக்கையின் வாதம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கும் உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. அரசு, சாலைகள் மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பில் தற்பொழுது அதிகளவில் முதலீடு செய்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறையை அதிக அளவில் உள்கட்டமைப்பில் ஈடுபடுத்த வேண்டும். சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, மின்உற்பத்தி போன்ற துறைகளில் FDI அதிக அளவில் தேவைப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை பட்ஜெட் மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார ஆய்வறிக்கையைச் சார்ந்து பட்ஜெட் அமையும் பட்சத்தில் அது ஒரு கனவு பட்ஜெட்டாகவாக இருக்கும். ஆனால் பல நிர்பந்தங்களுக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அப்படி கனவு பட்ஜெட்டாக இருக்கும் வாய்ப்புகள் குறைவாகத் தான் இருக்கிறது.

பார்ப்போம்.. நாளை தெரிந்து விடும்.

நிறைய எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக சில நாட்களாக வலைப்பதிவுகளை படிக்கக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

விடைபெறும் முன் சில லைட்டான தகவல்கள்

  • கார் தயாரிப்புக்கு விதிக்கப்படும் வரி 8%ல் இருந்து 4%மாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் கார்களின் விலைக் குறையும்.
  • A.C. விலையும் குறையும். எனவே இந்தக் கோடை காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டு ஜாலியாக இருங்கள்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

தமிழச்சி,

//ரயில்வே வழங்கும் 6500 கோடி ரூபாய் மானியம்.... // பொது விநியோகத்துறையில்... உரத்தில்... பெட்ரோலியப் பொருட்களில்... இறக்குமதிக்கு.... ஏற்றுமதிக்கு... இப்படியெல்லாம் மான்யமோ, சலுகையோ தரப்படுவது தெரியும். ரயில்வேயில் மான்யம்... அதுவும் 6500 கோடியளவுக்கு என்றால்.... அதை கொஞ்சம் விளக்கனால் நல்லது. எங்கே.... யாருக்கு...

அடுத்தும்,

4000வகைகளை வெறும் 80 வகைப் பரிவுகளாக சரக்குகள் மறுவரையறைக்கப்படும்போது 650 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் என்பது நம்பிக்கையளிக்கும் அளவாகத் தோன்றுகிறதா? உங்கள் கருத்து என்ன?

அடுத்து பட்ஜெட் வௌதயானதும் வந்து எதாவது எழுதியிருப்பீர்கள் என்று பார்த்தேன். இன்னும் நீங்கள் மேடையேறவில்லை என்று தெரிந்தது.

நான் வலைப்பதிவுக்கு புதிதுதான். ஆனால் இனி அடிக்கடி உங்கள் பதிவு பற்றி கருத்தோ, விளக்கமோ கேட்க... எழுதப்போகும் நபர் நானாக இருக்கலாம்.

- சந்திரன்

6:15 AM, February 28, 2005
Anonymous said...

நன்றி சந்திரன்,

புறநகர் ரயில் போக்குவரத்தில் சலுகை விலையிலேயே கட்டணங்கள் இருக்கிறது. உதாரணமாக சீசன் டிக்கெட்.

சீர்திருத்தங்களை நோக்கிச் செல்லும் நடவடிக்கை என்ற வகையில் நம்பிக்கையளிக்கிறது.

6:57 AM, February 28, 2005
Anonymous said...

அட... நான் அந்தப் பக்கம் போய் வருவதற்குள் மேடையேறிவிட்டீர்கள்! Part I ஐ வைத்து மட்டும் முடிவாக கருத்து சொல்ல முடியவில்லை. உங்கள் பின்னணி அறிய உங்களது பழைய பஞ்சாங்களை புரட்டினேன்.

அடுத்து உங்களது இன்னொரு பதிவையும் பார்த்து வந்தேன். அவசரத்தால் அதற்கும் இங்கேயே மறுவினை. மற்றவர்கள் பொறுத்தருள்க.

குறிப்பாக சுதந்திரம், குடியரசு தினம், காஷ்மீர்.... என நீங்கள் எழுதியதற்கு கதிரவன் எழுதிய மறுஉரையில் நிறைய உண்மையும், அதிகமான நியாயமும் இருக்கு. ஆனால் அவர் இந்தியரா என்ற கேள்விக்கு அவர் ஏன் பதில் தரக்காணோம். தனிப்பட்ட முறையில் எதுவும் பதில் வந்ததா? நான் இந்தியன்தான். வௌதப்படையாகவே சொல்கிறேன்.

கதிரவன் சொல்லும் நியாயங்கள் நிறைய இருந்தாலும், அதற்காக தீவிரவாதத்தை ஏற்க முடியாது அல்லது எடுக்க வேண்டியதில்லை என்பது பற்றியும், காஷ்மீரில் எல்லாரது தவறும் உள்ளது என்பதற்கும் இன்றைய காஷ்மீரில் விஷயங்கள் நிறைய உள்ளதாக நினைக்கிறேன்.

- சந்திரன்

7:24 AM, February 28, 2005