பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

பட்ஜெட் 2005 - 1



பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

இன்று பட்ஜெட் வாசித்த ப.சிதம்பரம், இதேக் குறளுடன் தன் பட்ஜெட் உரையை முடித்து ஒரு நல்ல பட்ஜெட்டைக் கொடுத்தார். நகரம், கிராமம் என்று எல்லா விரிந்து பரந்திருக்கும் இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், துறைக்கும் பட்ஜெட்டில் சமமாக சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.



விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற முக்கியத் துறைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாக இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கிறது

எதிர்பார்த்தது போலவே வரி விதிப்பில் நிறைய மாறுதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறைகளான ஜவுளி, பார்மா, மென்பொருள் போன்ற துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், ஜவுளித் துறைக்கு ஏரளமானச் சலுகைகளை அறிவித்தார்.

பார்மா துறையில் ஆய்வுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர சர்க்கரை ஆலைகள், கிராமப்புற நெசவுத் தொழில் போன்றவற்றுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளார்.

நாட்டில் 3ல் 2 பங்கு மக்கள் இருக்கும் விவசாயம் நாட்டின் GDPல் வெறும் 21% மட்டுமே இருப்பதால் விவசாயத்திற்கும், கிராமப் புற வளர்ச்சிக்கும் பட்ஜெட்டில் ஏராளமானச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

1.25 லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம்

66,820 கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள்

கிராமப்புற மக்களுக்கு 60 லட்சம் புதிய வீடுகள்

சுமார் 1 கோடி எக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி

கடந்தப் பட்ஜெட்டில் வருமான வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது கல்விக்கு பயன்படுத்தியது போல இந்தப் பட்ஜெட்டில் சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு கேடு செய்யும் பொருட்களின் வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது சுகாதாரத் துறைக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் பீடிக்கு செஸ் கிடையாது என்ற பொழுது பாராளுமன்றத்தில் ஒரே சிரிப்பலை

இது தவிர பெட்ரோல், டீசல் போன்றவற்றிலும் செஸ் விதிக்கப்பட்டு அது நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

குடிநீர் வசதிக்காக 4,750 கோடி செலவிடப்படும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக 83,000 கோடி ஒதுக்கப்படுகிறது

கல்விக்காக 18,337 கோடி ஒதுக்கப்படும். SC/ST மாணவர்களுக்கு கல்விச் செலவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிக்கத்து வங்கியதில் இருந்து அவை மிக அமைதியாக இருந்தாலும், இறுதியில் ஒரே கூச்சலுக்கிடையே தான் பட்ஜெட்டை முடித்தார்.

அதற்கு காரணம், வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு 10 ரூபாய் வரிச் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை தான்.

தேவையில்லாமல் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, வரிச் செலுத்தப்படாமல் நழுவி எங்கோ மறைந்து போய் விடுவதால் இந்த நடவடிக்கை என்று நிதியமைச்சர் கூறியதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இது கறுப்பு பணம், மற்றும் வரி ஏய்ப்பவர்கள் மீதான நடவடிக்கை என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
10,000 என்பது பெரிய தொகை இல்லை. வீட்டு வாடகை, பிறச் செலவுகளுக்காக மாதம் தோறும் பல குடும்பங்களுக்கு இந்தளவுக்கு ஒரே நாளில் பணம் தேவைப்படலாம். 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் என்ற வரி குறைவு தான் என்றாலும், ஏற்கனவே வருமான வரி செலுத்தியப் பிறகு வரும் தொகைக்கு நான் ஏன் மறுபடியும் வரிச் செலுத்த வேண்டும். இதில் எந்தவித லாஜிக்கும் இல்லை.

கறுப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பவர்களை நோக்கித் தான் இந்த முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றால் பணத்தின் உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது வேறு மாதிரியான ஒரு முறைக் கொண்டு வரப்பட வேண்டும்.

பட்ஜெட்டை எதிர்ப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருந்த எதிர்கட்சிகளுக்கு ஒரு காரணம் கிடைத்து விட, ஒரே கூச்சல் தான்.

பட்ஜெட் பற்றிய கண்ணேட்டம் அடுத்தப் பதிவிலும் தொடரும் மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 8

இவ் வார தமிழோவியத்தில்

மற்றும்


மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 4



நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. சரக்குகளுக்கான கட்டணப் பிரிவு 4000ல் இருந்து 80 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சரக்குகளின் பல வகையான கட்டணப் பிரிவுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ரயில்வேக்கு 650 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த பலருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். பயணிகள் கட்டணத்தை அதிகரிக்காதது, ரயில்வே வழங்கும் 6500 கோடி ரூபாய் பெருமானமுள்ள மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லாதது இவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் ரயில்வேத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது சாதாரண மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எந்த அரசும் முனைவதில்லை.

ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது போல, பொது பட்ஜெட்டும் இருக்குமா? பொது பட்ஜெட்டில் இருக்கக் கூடிய முக்கிய அம்சங்களை கொஞ்சம் கவனிப்போம்

நிதிப் பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பில் பல மாற்றங்கள் இருக்கும் என்று முந்தையப் பதிவில் பார்த்தோம். இதையே வெள்ளியன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவு படுத்துகிறது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இப்போதைக்கு இருக்காது என்பது தவிர வட்டி விகிதமும் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைச் செய்கிறது. இது போலவே குறைவான வரி விகிதம், ஆனால் பரவலான மக்களை வரிச் செலுத்த வைப்பது போன்றவையும் இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) பலத் துறைகளில் கொண்டு வருவதும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் பட்ஜெட்டில் இருக்க வேண்டும். ஏற்கனவே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள அரசு இந்த பட்ஜெட்டில் வர்த்தகத் துறையிலும் (Retail), பென்ஷன் பண்ட் போன்ற துறைகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இடதுசாரிகள் இதற்கு ஒத்துழைப்பு தருவார்களா என்பது தெரியவில்லை. குறிப்பாக வர்த்தகம் - Retail துறை நம் நாட்டில் பல இடங்களில் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது அமெரிக்க நிறுவனங்களான Wal-mart, GAP, JCPenny போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கும், பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியச் சந்தையை திறந்து விடும் முயற்சி. ஏற்கனவே பல நிறுவனங்கள் (Shoprite, Metro) போன்றவை இதற்காகக் காத்திருக்கின்றன. இதனால் நம் நாட்டில் முறைபடுத்தப்படாமல் இருக்கும் பல சிறு வியபாரிகள் பாதிப்படையக்கூடும் என்பதான பிரச்சனைகள் எழுப்பப்படும்.

இது தவிர வங்கித் துறையில் அரசு கொண்டு வர இருந்த FDI வருமா என்று தெரியவில்லை.

பொருளாதார ஆய்வறிக்கை வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இருக்கும் பல விதி முறைகளை எளிமையாக்கும்படி வலியுறுத்துகிறது. இது தவிர உள்கட்டமைப்புத் துறையில் அரசு செயல்படுவது தவறென்றும் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பை தனியாரிடம் ஒப்படைப்பது மூலம் தேவையில்லாத அரசியல் தலையீடுகளைத் தவிர்க்கலாம் என்பதே ஆய்வறிக்கையின் வாதம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கும் உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. அரசு, சாலைகள் மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பில் தற்பொழுது அதிகளவில் முதலீடு செய்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறையை அதிக அளவில் உள்கட்டமைப்பில் ஈடுபடுத்த வேண்டும். சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, மின்உற்பத்தி போன்ற துறைகளில் FDI அதிக அளவில் தேவைப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை பட்ஜெட் மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார ஆய்வறிக்கையைச் சார்ந்து பட்ஜெட் அமையும் பட்சத்தில் அது ஒரு கனவு பட்ஜெட்டாகவாக இருக்கும். ஆனால் பல நிர்பந்தங்களுக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அப்படி கனவு பட்ஜெட்டாக இருக்கும் வாய்ப்புகள் குறைவாகத் தான் இருக்கிறது.

பார்ப்போம்.. நாளை தெரிந்து விடும்.

நிறைய எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக சில நாட்களாக வலைப்பதிவுகளை படிக்கக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

விடைபெறும் முன் சில லைட்டான தகவல்கள்

  • கார் தயாரிப்புக்கு விதிக்கப்படும் வரி 8%ல் இருந்து 4%மாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் கார்களின் விலைக் குறையும்.
  • A.C. விலையும் குறையும். எனவே இந்தக் கோடை காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டு ஜாலியாக இருங்கள்.

மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 3



காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமையவிருந்த நேரம். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அமைச்சகமான Disinvestment அமைச்சகம் இனி இழுத்து மூடப்படும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவிக்க, பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்த கேள்விக்குறி எழ, மே மாதம் 17 அன்று பங்குச்சந்தை 565 புள்ளிகள் சரிந்தது. அதே நாளில் ஒரு கட்டத்தில் பங்குச்சந்தை 800 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்திருந்தது. வர்த்தகம் சந்தையில் வர்த்தகம் இரு முறை நிறுத்தப்பட்டது.

இது தான் புதியதாக அமையவிருந்த காங்கிரஸ் அரசுக்கு பங்குச்சந்தை கொடுத்த வரவேற்பு. மறுநாள் சோனியா பிரதமர் பதவி ஏற்கப்போவதில்லை, மன்மோகன் சிங் பதவி ஏற்பார் என்றச் செய்தியே பங்குச்சந்தைக் குறியீட்டை 372 புள்ளிகள் உயர வைத்தது. மன்மோகன் சிங் மேல் அந்தளவுக்கு நம்பிக்கை.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சி.ரங்கராஜன் ஆகியோரை உள்ளடக்கிய கனவுக் கூட்டணி என்னச் செய்யப் போகிறது ? இவர்களை இடதுசாரிகள் சுதந்திரமாக செயல்பட விடுவார்களா ? கூட்டணி அரசின் நிர்பந்தங்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வருகின்ற பட்ஜெட் இருக்குமா ? 1997ல் ஒரு Dream பட்ஜெட்டைக் கொடுத்த ப.சிதம்பரம் இப்பொழுது என்னச் செய்யப் போகிறார் ? வரும் திங்களன்று விடைக் கிடைத்து விடும்.

இந்தப் பட்ஜெட்டில், வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டின் ஹைலைட்டே வரிச் சீர்திருத்தமாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு அது பற்றி ஒரு Hype நிலவுகிறது. அது பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் தான் இக் கட்டுரை.

தற்பொழுதுள்ள நிலையில் நாட்டின் GDP யுடன் ஒப்பிடும் பொழுது வரி வருவாய் வெறும் 9% தான். இந்தியாவைப் போலவே வளரும் நாடுகளாக இருக்கும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இது மிகக் குறைவு. உதாரணமாக பிரேசிலில் இது 20%. தற்போதைய 9%ல் இருந்து 11% மாக இதை உயர்த்த இந்தப் பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் இருக்கும். கேல்கர் கமிட்டியின் விரிச் சீர்த்திருத்தங்கள் இந்தப் பட்ஜெட்டில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. கேல்கர் கமிட்டி எளிமையான, குறைந்த விகிதத்தில் வரி விதிப்பதைப் பரிந்துரை செய்கிறது.

தற்பொழுது நம்முடைய ஒட்டு மொத்த வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. நாம் சேமிக்கும் சேமிப்புகள் (NSC), காப்பீடு, PF, வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது பிரிவு 88 கீழ் இருக்கும் விலக்குகள். இந்த விலக்குகளை EEE (Exempt Exempt Exempt) என்றுச் சொல்வார்கள். அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுதும், அந்தப் பணம் வட்டியால் பெருகும் பொழுதும், இறுதியில் அந்தப் பணத்தை நாம் எடுக்கும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இம் முறை மாறி EET (Exempt Exempt Tax) என்ற முறை அமலுக்கு வர இருக்கிறது. அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுது அந்தப் பணத்திற்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பணம் பெருகும் பொழுதும் வட்டிக்கு விலக்கு உண்டு. ஆனால் அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படும் பொழுது, எடுக்கப்படும் பணம் முழுமைக்கும் வரி விதிக்கப்படும். முதலீடு செய்யும் பொழுது தற்பொழுது கொடுக்கப்படும் 15% ரிபேட், இனி 30%மாக உயர்த்தப்படும். ஆனாலும் இறுதியில் வரி விதிக்கப்படும் பொழுது முதலீட்டாளருக்கு கிடைக்கும் பணத்தில் கணிசமானத் தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

இது போலவே Standard Deduction என்று சொல்லப்படும் வரி விலக்கும் இனி இருக்காது. தற்பொழுது 5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 30,000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 20,000 ரூபாயும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர மகளிருக்கு வழங்கப்படும் ஸ்பெஷல் வரி விலக்குகளும் இனி நீக்கப்படும். இவ்வாறு விரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பணம் முதலீடாக மாறுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே அரசுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த விலக்கு ஒழுங்காக வரிச் செலுத்தும் சம்பளம் வாங்கும் பிரிவிற்கு அளிக்கப்படும் சலுகையாகவே இது வரையில் இருந்தது. இனி இந்தச் சலுகை இருக்காது.

வாங்கும் சம்பளம் குறையும் சாத்தியக்கூறுகள் இருக்குதுங்கோ....

வீட்டுக்கடனுக்கு தற்பொழுது அளிக்கப்படும் சலுகை அப்படியே தொடரும் என்பது வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் (வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் ரூ1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது). வீட்டுக்கடனுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை முதலீட்டாளர்களுக்கு பலன்
தருவதோடு மட்டுமில்லாமல் வீட்டு வசதித் துறையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது என்பதால் இது அப்படியே தொடரும். ஆனால் கேல்கர் கமிட்டி இதனையும் நீக்க வேண்டும் என்று தான் பரிந்துரைச் செய்திருந்தது.

சம்பளம் வாங்கும் ஒரு பிரிவினருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களும் இந்தப் பரிந்துரையில் இருக்கிறது.

தற்போதைய வருமான வரிப் விதிப்பில் உள்ள முறைப்படி 50,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. இனி அந்த உச்ச வரம்பு 1,00,000 உயர்த்தப்படும்.

மொத்தத்தில் தற்பொழுது இருப்பது போல பல சிக்கலான கணக்கு வழக்குகள் இல்லாமல் வாங்கும் சம்பளத்தை/வருமானத்தை வரி விகிதத்துடன் கழித்து விட்டால் எஞ்சியுள்ளது தான் நம் வருமானம்.

எளிமையான வரி விகிதம் தானே ? நாம் ஆடிட்டரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. சுலபமாக கணக்கிடலாம் என்பது தான் நமக்கு கிடைக்கும் ஆதாயம்.

அதெல்லாம் சரி தான்... வருமானம் குறையுமேன்னு நினைக்கிறீங்களா ?

அரசின் சலுகைகள் ஏழை மக்களுக்குத் தான் வழங்கப்படவேண்டும். பல இடங்களில் பலச் சலுகைகளை அரசு வாரி வழங்கும் பொழுது, அரசின் கவனிப்பு தேவைப்படும் பல துறைகளின் வளர்ச்சியில் தேக்கமே நிலவுகிறது. அரசு, ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு செலவழிக்கும் தொகையை விட பெட்ரோல், சிலிண்டர் போன்றவற்றுக்கு வழங்கும் subsidies தான் மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு வழங்கும் சலுகை விலையினால் அரசுக்கு சுமார் 46,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர விவசாயத்திற்கு தரப்படும் பலச் சலுகைகள் (உரம்), அரசு குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து பெறும் தானியங்கள் போன்றவற்றாலும் அரசுக்கு கணிசமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்தச் சலுகைகளை படிப்படியாக நீக்கி தேவைப்படும் பிற துறைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலேக் கூறியுள்ள சலுகைகளை நீக்கினால் தான் ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு சலுகைகளைத் தர முடியும். இத் துறைகளுக்குத் தான் அரசின் தனி கவனிப்பு தேவைப்படுகிறது. இத் துறைகளுக்கு தற்பொழுது சுமார் 6 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்படுகிறது. இது பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.


தற்பொழுது வழங்கப்படும் தேவையில்லாத வரிச் சலுகைகளை நீக்குதல், அரசுக்கு வருவாய் தரும் புது வழிகளை உருவாக்குதல் போன்றவற்றால் மூலமே கவனிப்பின்றி கிடக்கும் பலத் துறைகளின் மீது அரசு கவனம் செலுத்த முடியும். இந்தப் பட்ஜெட் அதற்கான ஆரம்பமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இவை எல்லாம் அனுமானங்கள் தான். சிதம்பரம் எந்தளவுக்கு இதற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பது திங்களன்று தெரிந்து விடும்.



முந்தையப் பதிவுகள் - 1, 2 மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 6

ஹர்ஷத் மேத்தா பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியப் பொழுது, இது பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. 1991ல் நடந்தக் கதை. எனவே இதைப் பற்றி அதிகமாக இணையத்தில் தகவல்கள் இல்லை. IIMல் இது பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எங்கள் அலுவலகத்தில் இருக்கும் கேப்பிடல் மார்க்கெட் பிரிவு நண்பர்களின் ஆய்வுகள் எனக்கு உதவி புரிந்தது. இந்த ஊழல் பற்றி "The Scam" என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளிவந்தது. இந்த ஊழலை வெளியுலகுக்கு கொண்டு வந்த சுசித்தா தலால் எழுதியப் புத்தகம். இதைக் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியுமா என்று முயற்சி செய்தேன். சென்னையில் எங்குமே இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. மும்பைக்குத் தொடர்பு கொண்டு இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்திடமே கேட்ட பொழுது இந்தப் புத்தகம் தற்பொழுது அச்சில் இல்லை. கைவசம் ஒரு புத்தகம் கூட இல்லை என்றார்கள். இந்தப் புத்தகத்திற்காக இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.



இந்த ஊழல் பற்றி ஒரு Balanced கருத்தையே ஹர்ஷத் மேத்தா கதையில் கொடுக்க முயன்றுள்ளேன். முயற்சி வெற்றியடைந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இவ்வார தமிழோவியத்தில் இந்த ஊழல் கதையின் 6 வது பாகம் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க

பட்ஜெட்டை எதிர்நோக்கி

எந்தத் திசையில் நகருவது என்று தெரியாமல் கடந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் நிலவியது. பட்ஜெட்டை ஒட்டிய சில வாரங்களில் முதலிட்டாளர்களின் எச்சரிக்கை, சந்தையை எந்த திசையிலும் செல்ல விடாமல் அலைக்கழிக்கும். அது பற்றி இவ்வார தமிழோவியத்தில் ஒரு அலசல் - "பட்ஜெட்டை எதிர்நோக்கி"

மேலும் படிக்க