பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, January 09, 2005

விடைபெறும் முன்...

இன்று பங்குச் சந்தையில் மிகச் சொற்பமான அளவுக்கே முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதத்தினரே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இந்த 6 சதவீதத்தில் கூட மும்பை, தில்லி போன்ற வட மாநில மக்கள் தான் அதிகம். தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் சில ஆயிரங்கள் தேறும். அதுவும் சென்னை, கோயம்புத்தூர் என்ற இரண்டு நகரங்களிலும் தான் நிறையப் பேர் இருப்பார்கள்.

ஆனால் இந்த நிலையிலிருந்து நிச்சயம் மாற்றம் வரும். நிறைய முதலீட்டாளர்கள் தற்பொழுது பங்குச் சந்தையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் சொற்ப வட்டி, பங்குச் சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகள் போன்றவையே அவர்களை பங்குச்சந்தைப் பக்கம் இழுத்து வருகிறது. தமிழகத்தில் சில ஆயிரங்களாக இருக்க கூடிய முதலீட்டாளர்கள், லட்சத்தை தொடும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது. நம்மைப் போன்ற புதிய தலைமுறையினர் தான் அதிகளவில் பங்குச் சந்தைப் பக்கம் வருகிறார்கள்.

பத்ரி கூட இதனைக் கணித்து தான் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் "அள்ள அள்ளப் பணத்திற்கு" நிறைய விளம்பரம் செய்கிறார் என்று நினைக்கிறேன் (நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வில்லை. பொங்கல் விடுமுறையில் படிக்க வேண்டும்)

பத்ரி, சொல்லக்தக்கதாக இருந்தால், எந்தளவுக்கு இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பிருக்கிறது என்று சொல்லுங்கள்.

விற்பனை ஊக்கம் தருவதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வருடம் பங்குச் சந்தைப் பற்றிய ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. குறியீடுகள் உயர்ந்ததால் ஏற்பட்ட ஆர்வம் மட்டுமல்ல. TCS, NTPC போன்ற IPO வும் பலமான ஆர்வத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. TCS பங்குகளை வெளியிட்ட பொழுது ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். இதைப் போல கவர்ச்சிகரமான IPO இந்த வருடமும் சந்தைக்கு வந்தால், இன்னும் நிறைய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை பக்கம் வருவார்கள்.

பங்குச் சந்தை ஒன்றும் புரியாத புதிர் அல்ல. கூர்ந்து கவனித்தால் நமக்கு எளிதாக விளங்கி விடும். முதலில் குறைந்த அளவிற்கு முதலீடு செய்யலாம். பிறகு சந்தையின் சூட்சமம் தெளியும் பொழுது முதலீடுகளை அதிகரிக்கலாம்.

என் பதிவைப் பொறுத்த வரை நிறையப் பேர் படிப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் என்னை அது பெரிதாக பாதித்ததில்லை. நான் மட்டுமே படிக்காமல் ஒரு சிலராவது படிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.

இந்த வருத்தம், இந்த வாரத்தில் ஓரளவு குறைந்துள்ளது. தமிழ்மணத்தின் "இந்த வார நட்சத்திரமாக" நான் இருந்ததால் நிறையப் பேர் என் வலைப்பதிவிற்கு விஜயம் செய்திருந்தார்கள். இந்த வார நட்சத்திரத்திற்கு நிறைய Focus கிடைக்கிறது. வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாகக் குழுவிற்கு எனது நன்றி.

கடந்த ஒரு வாரமாக நான் எழுதிய பதிவுகள் உங்களுக்கு ரசிக்கதக்கவையாக இருந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்

7 மறுமொழிகள்:

Anonymous said...

சசி, வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். தங்களுடைய பதிவை நிறைய பேர் படித்தாலும் கருத்துக்க: எழுதுவதில்லை என்பதே உண்மை. எனவே மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள். உதாரணமாக நான் தங்கள் வலைப்பதிவை என்றுமே தவறவிடுவதில்லை. ஆனால் இப்பொழுது தான் முதன் முறையாக கருத்து எழுதுகிறேன். தங்களுடைய சேவை தொடரட்டும்.

மோகன், ரியாத்.

By: Mohan P Sivam

12:25 PM, January 09, 2005
Jayaprakash Sampath said...

நான் நேற்று கிழக்குப் பதிப்பககம் ஸ்டாலில் இருந்தேன். அ.அ.பணம் பற்றி பரவலான பேச்சு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். விற்பனை பற்றி தெரியவில்லை. அடிப்படைகளை , ரொம்பவும் பயமுறுத்தாமல், சொந்த அனுபவங்கள் வாயிலாகவும், நேர் உதாரண்ங்கள் வாயிலாகவும் எளிமையாக விளக்கி இருக்கிறார் .வள்ளியப்பன். இதில் சொல்லப் படுகிற விஷயங்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு மிக அதிகம். ஆனால், விஷயம் தெரியாத , தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கிறவர்களின் ரீயாக்ஷன் ரொம்ப பாசிடிவ்வாக இருக்கிறது. நான் இந்த புத்தகத்தை , கையேடு என்று நினைத்து வாங்கவில்லை. கேதன் பாரேக், கர்ஷத் மேத்தா பற்றியெல்லாம் புட்டு புட்டு வைத்து, ஒரு த்ரில்லர் மாதிரி இருக்கும் என்று நினைத்து வாங்கினேன். வாங்கிப் படித்து விட்டு, நிச்சயமாக உபயோகப் படும் என்று நினைக்கிற நெருங்கிய உறவினர் ஒருத்தருக்கு, அப்புத்தகத்தைக் கொடுத்து விட்டேன்.

மறுமொழிகள் வரவில்லை என்று கவலைப்படாதீர்கள். உருப்படியாக எழுதுபவர்களுக்கு மறுமொழி அதிகம் இருக்காது என்பது, இணைய உலகின் எழுதப் படாத விதி. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.- இகாரஸ்

12:34 PM, January 09, 2005
இராதாகிருஷ்ணன் said...

இகாரஸின் மேற்கண்ட பின்னூட்டத்தின் கடைசி பத்தியே என்னுடைய பின்னூட்டமும்.
பொங்கல் வாழ்த்துகள்!

5:35 PM, January 09, 2005
Badri Seshadri said...

சசி: அள்ள அள்ளப் பணம் படுவேகமாக விற்பனையாகிறது. தமிழ்ப் புத்தகங்களைப் பொதுவாக வாங்கிப் படிக்காதவர்கள் கூட, நேராக கடைக்கு வருகிறார்கள்; இந்தப் புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டு பேசாமல் விருவிருவென்று நடக்கிறார்கள். மற்றொரு விஷயம்... எங்கள் கடையில் பெண்கள் - if I can generalise - வாங்குவதற்கென்று எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் பல வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் நேரடியாக வந்து இந்தப் புத்தகத்தை மட்டும் வாங்கிச் செல்கிறார்கள்.

புத்தகத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதன்பின் பங்குச்சந்தை பற்றி வேறென்னவெல்லாம் கொண்டுவரலாம் என்பதைப் பற்றியும் பேசலாம்.

பங்குச்சந்தை பற்றிய இணைய விவாதங்கள் - இப்பொழுதைக்கு நடைபெறாது. பலருக்கு அடிப்படையே தெரியாது. ஆனால் இன்னமும் ஒரு வருடம், இரண்டு வருடம் - நிச்சயமாக நிறையப் பேர் விவாதத்துக்கு வருவார்கள்.

8:49 PM, January 09, 2005
Anonymous said...

இகாரஸின் மேற்கண்ட பின்னூட்டத்தின் கடைசி பத்தியே என்னுடைய பின்னூட்டமும்.
பொங்கல் வாழ்த்துகள்!



By: vvvdhayal

11:26 PM, January 09, 2005
Anonymous said...

அன்பு சசி,
நான் உங்கள் பதிவை தவறாமல் படிக்கிறேன். ஆனாலும் பின்னூட்டமிட என்னிடம் சரக்கு ஒன்றும் இல்லை :-)
ஆசிரியர் சொல்வதை அப்படியே கேட்கும் தொடக்கப்பள்ளி மாணவன் நிலைதான்.
எனவே பின்னூட்ட எண்ணிக்கையை கவனிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
முத்துகுமார்
[என் நன்பன் வலைப்பதிவில் அவ்வளவாக interest இல்லாதவன்.ஆனாலும் உங்கள் பதிவை மட்டும் தொடர்ந்து படிக்கிறான். ]

By: Muthu

7:16 AM, January 10, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

பின்னூட்டம் எழுதிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன்.

12:25 PM, January 10, 2005