பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, January 19, 2005

அள்ள அள்ளப் பணம்

கிழக்குப் பதிப்பகம் வெளியீடு
ஆசிரியர் : சோம.வள்ளியப்பன்

இந்தியப் பங்குச்சந்தையே ஒரு விந்தையானச் சந்தை. எதனால் எழுகிறது. எதனால் சரிகிறது என்றே சில நேரங்களில் புரியாது. அடிப்படை இல்லாதப் பங்குகள் கூட திடீரென்று ஏற்றம் பெறும். கோமாளி அரசியல்வாதிகள் பலர் இருக்கும் நம் நாட்டில், அவர்களின் பல கோமாளித்தனங்கள் பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கும். கூட்டணி ஆட்சியின் பல இழுப்புகளுக்கு ஏற்றவாறு பங்குச்சந்தையும் அல்லாடும். இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பலர், பங்குச் சந்தையின் பக்கம் தலைகாட்டுவதில்லை.

வங்கிகள் கூட 15% அளவுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் பங்குச்சந்தையைப் பற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. ரிஸ்க் எடுத்து பணம் இழப்பதை விட சுமாராக கிடைக்கும் 10-15% போதுமானது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் வட்டி விகிதம் சரிந்து இன்று 5%-6% அளவுக்கு சொற்ப வட்டியே கிடைக்கும் நிலையில் பங்குச் சந்தையின் மேல் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.

ஆனால் இந்த முதலீடுகள் வங்கிகளில் உள்ள வைப்பு நிதி போல அல்ல. நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரணமாகவே நிறைய குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நிதி விவகாரங்களை தெளிவாக, எளிமையாக, இந்தியப் பங்குச்சந்தையின் சூழலுக்கு ஏற்றவாறு விவரிக்கும் புத்தகம் இருந்தால் தான் பங்குச்சந்தையைப் பற்றியே அறியாத ஒருவர் முதலீடு செய்ய முடியும். இது பற்றி ஏதாவது ஆங்கில புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் நிறுவனத்தில் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாங்கள் முனைந்த பொழுது எளிமையாக எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை. NSE பங்குச்சந்தை கையேடுகளைக் கொண்டு தான் பங்குச்சந்தையை கற்றோம். ஆனால் அது வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். முதலீடு செய்ய உதவாது. குஜராத்தியில் சில புத்தகங்கள் இருக்கக் கூடும் (ஏனெனில் ஹர்ஷத் மேத்தா முதல் பல புரோக்கர்கள் குஜராத்திகள் தான்). ஆனால் தமிழில் இது தான் ஒரே புத்தகம் மற்றும் சிறந்த புத்தகம் என்று பத்ரி தனது முன்னுரையில் கூறியிருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளலாம். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளை சிறப்பாக இந்தப் புத்தகம் விளக்குகிறது.

எந்த வித அலுப்பும் ஏற்படுத்தாமல் புத்தக நடை சிறப்பாக இருக்கிறது. வள்ளியப்பன், அவருடைய முதலீட்டு கதைகளை சொல்லிக் கொண்டே நம்மை புத்தகம் முழுவதும் அழைத்துச் செல்கிறார். புத்தகம் போகிற போக்கில் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்கிறது. புளி வியபாரத்துடன் சுவரசியமாக ஆரம்பமாகும் புத்தகம் இன்போசிஸின் கோடிஸ்வரர் கதை, நூலாசிரியர் பார்தி பங்குகளை பிறர் பேச்சிசைக் கேட்டு லாபமிழந்த கதை என்று கதையோடு பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை விளக்குகிறது.

அதைப் போலவே பங்குகள் எந்த நேரத்தில் எகிறும், சரியும் போன்ற பட்டியல்களும் சிறப்பாக இருக்கிறது. பங்குகளை சிறுக சிறுக வாங்குதல் (Systematic Investment Plan போல ), சிறுக சிறுக விற்பது (Systematic withdrawal Plan போல ) போன்ற நுட்பங்களும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். நூலாசிரியரின் இருபது ஆண்டு கால முதலீட்டு அனுபவம் புத்தகத்தில் தெரிகிறது.

முதலீட்டாளர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடு போல உதவும் வகையில் பங்குச் சந்தையைப் பற்றிய முக்கிய வார்த்தகைகளைப் பட்டியலிட்டு விளக்கியிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

புத்தகத்தில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல சில குறைகளும் இருக்கிறது.

  • புத்தகம், முதலீடு பற்றிய விஷயங்களை போதுமான அளவு விளக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. நிறுவனங்களின் அடிப்படையைச் சார்ந்த முதலீட்டை விட Momentum Trading எனப்படும் சூழ்நிலையைச் சார்ந்த முதலீட்டையே புத்தகம் பல இடங்களில் வலியுறுத்துவது போல தோன்றுகிறது. சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நிறுவனங்களின் அடிப்படையைச் சார்ந்து முதலீடு செய்யும் பொழுது நஷ்டம் ஏற்படுவதில்லை (அப்படின்னு ஒரு நம்பிக்கை).
  • அதைப் போலவே மற்றவரின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்யும் முறை மிகத் தவறானது என்றே பல பங்குச் சந்தை வல்லுனர்கள் சொல்கிறார்கள். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் வேண்டுமானால் இம் முறையைப் பின்பற்றலாம். பார்தி பங்குகளில் மற்றொருவருடைய பேச்சைக் கேட்டதாலேயே தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்றும், இது தவறான முறை என்று கூறினாலும், அதையே சில இடங்களில் வலியுறுத்தும் பொழுது முரண்பாடாக தெரிகிறது.
  • Trading முறைப்பற்றி விளக்கினாலும், எப்படி Trading செய்யலாம் என்பது போன்ற சில நுட்பங்களை விளக்கியிருக்கலாம்.
  • நூலாசிரியர் முதலீடு செய்தக் காலத்தில் தற்பொழுது உள்ளது போன்ற எளிமையான வர்த்தக முறைகள் இல்லை. அதன் பாதிப்பு புத்தகம் நெடுகிலும் தென்படுகிறது. அவர் முதலீடு செய்தக் கதைகளை விவரிக்கும் பொழுது அந்தக் கால சூழ்நிலையை ஒட்டியே விவரிக்கிறார் (பெயர் மாற்றுதல் போல). ஆனால் இக் கால சூழ்நிலையைச் சார்ந்த விவரிப்புகள் இல்லை. இது புதிதாக பங்குகளை கற்றுக் கொள்ள முனைவோருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். டிமேட், இணையம் சார்ந்த வர்த்தகம் பற்றி ஒரு சிறு குறிப்பு மட்டுமே இறுதியில் காணப்படுகிறது. 2004ல் புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் இக் கால வர்த்தக முறையை ஒட்டி கதைகளை எழுதியிருக்கலாம்.
  • பக்கம் 223, Delivery யில் இன்று வாங்கியப் பங்குகளை நாளை விற்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் இன்று வாங்கியதை நாளை விற்கலாம். BTST - Buy Today, Sell Tommorrow என்ற முறை ICICIயில் இருக்கிறது. 5paisa, Sharekhan போன்ற புரோக்கர்களிடமும் இவ்வாறு செய்ய முடியும். நம் டீமேட் கணக்குக்கு பங்குகள் வருவதற்கு முன்பே விற்க இயலும்.
  • Index - குறியீடு பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்திருக்கலாம். நிறையப் பேருக்கு குறியீடு என்றாலே என்ன என்று தெரியவில்லை. எனக்கு கூட குறியீடுகள் பற்றி விளக்கம் கேட்டு சில மின்னஞ்சல்கள் வந்தன. அதன் பேரிலேயே நான் கூட அதைப் பற்றி எழுதினேன்.

நூலாசிரியரே இறுதியில் கூறியிருப்பது போல, இது ஒரு ஆரம்பம் தான். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கு நிச்சயமாக இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். முதலீடுகளிலேயே பல முறைகள் இருக்கிறது. அதையெல்லாம் விளக்க பல புத்தகங்கள் வேண்டும்.

ஒரு நல்ல ஆரம்பத்தை துவக்கி வைத்த சோம.வள்ளியப்பன் மற்றும் கிழக்கு பதிப்பகத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

1 மறுமொழிகள்:

Badri Seshadri said...

நன்றி. உங்கள் விமரிசனங்கள் சரியானவையே. இந்தப் புத்தகத்தில் இணையம் வழி விற்பனையைப் பற்றி அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. அதற்குக் காரணம் இந்தப் புத்தகத்தின் வாசகர்கள் முடிந்தவரை புரோக்கர்கள் வழியாக வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்பதே. அதாவது இணைய வசதி இல்லாத இடங்களிலும் பயன்பட வேண்டும் என்பதே.

இணையம் வழி பங்கு வர்த்தகத்துக்கு என்று ஒரு தனிப்புத்தகம் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

BTST - நீங்கள் சொல்வது சரியே. இதை அடுத்த எடிஷன்களில் சரி செய்து விடுகிறோம். இதுவும் பொதுவாக தெருமுனை புரோக்கர்கள் வழியாகக் கிடைப்பதில்லை.

அடிப்படை வகையில் பங்குகளை வாங்குவது (மார்க்கெட் எந்த நிலையில் இருந்தாலும்) பற்றி அதிகமாக இந்தப் புத்தகம் ஒன்றும் சொல்லவில்லை என்பதும் உண்மையே. அதையும் அடுத்த எடிஷனில் சரி செய்து விடுகிறோம் - சில உதாரணங்கள் மூலம்.

டிரேடிங் பற்றி அதிகமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப் போவதில்லை. அதைத் தனியாக கவனிக்க வேண்டும் என்பது எண்ணம். ஒருவேளை பின்னிணைப்பாக வேண்டுமானால் ஒரு சாப்டர் தரலாம்.

பிறரது கருத்தைக் கேட்டு - என்னும்போது இங்கு speculation பற்றித்தான் சொல்கிறோம். Fundamental அல்லது Technical Analysis செய்து ஒரு Research Analyst சொல்வதைப் பற்றி தவறாக எதுவும் சொல்வதில்லை. இதையும் சற்றே விரிவாகச் சொல்லியிருக்கலாம்.

அடுத்த எடிஷன் இன்னமும் நான்கு மாதத்தில் வரும். அதில் இவற்றை சரியாகக் கவனித்து விடுகிறோம். உங்களது மதிப்புரைக்கு நன்றி.

9:27 AM, January 19, 2005