Monday, January 24, 2005
ஹர்ஷத் மேத்தா – 4
தொடரின் 4ம் பாகம்
தொடரின் 3ம் பாகம்
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/24/2005 07:04:00 AM No comments:
Wednesday, January 19, 2005
அள்ள அள்ளப் பணம்
கிழக்குப் பதிப்பகம் வெளியீடு
ஆசிரியர் : சோம.வள்ளியப்பன்
இந்தியப் பங்குச்சந்தையே ஒரு விந்தையானச் சந்தை. எதனால் எழுகிறது. எதனால் சரிகிறது என்றே சில நேரங்களில் புரியாது. அடிப்படை இல்லாதப் பங்குகள் கூட திடீரென்று ஏற்றம் பெறும். கோமாளி அரசியல்வாதிகள் பலர் இருக்கும் நம் நாட்டில், அவர்களின் பல கோமாளித்தனங்கள் பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கும். கூட்டணி ஆட்சியின் பல இழுப்புகளுக்கு ஏற்றவாறு பங்குச்சந்தையும் அல்லாடும். இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பலர், பங்குச் சந்தையின் பக்கம் தலைகாட்டுவதில்லை.
வங்கிகள் கூட 15% அளவுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் பங்குச்சந்தையைப் பற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. ரிஸ்க் எடுத்து பணம் இழப்பதை விட சுமாராக கிடைக்கும் 10-15% போதுமானது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் வட்டி விகிதம் சரிந்து இன்று 5%-6% அளவுக்கு சொற்ப வட்டியே கிடைக்கும் நிலையில் பங்குச் சந்தையின் மேல் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.
ஆனால் இந்த முதலீடுகள் வங்கிகளில் உள்ள வைப்பு நிதி போல அல்ல. நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரணமாகவே நிறைய குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நிதி விவகாரங்களை தெளிவாக, எளிமையாக, இந்தியப் பங்குச்சந்தையின் சூழலுக்கு ஏற்றவாறு விவரிக்கும் புத்தகம் இருந்தால் தான் பங்குச்சந்தையைப் பற்றியே அறியாத ஒருவர் முதலீடு செய்ய முடியும். இது பற்றி ஏதாவது ஆங்கில புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் நிறுவனத்தில் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாங்கள் முனைந்த பொழுது எளிமையாக எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை. NSE பங்குச்சந்தை கையேடுகளைக் கொண்டு தான் பங்குச்சந்தையை கற்றோம். ஆனால் அது வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். முதலீடு செய்ய உதவாது. குஜராத்தியில் சில புத்தகங்கள் இருக்கக் கூடும் (ஏனெனில் ஹர்ஷத் மேத்தா முதல் பல புரோக்கர்கள் குஜராத்திகள் தான்). ஆனால் தமிழில் இது தான் ஒரே புத்தகம் மற்றும் சிறந்த புத்தகம் என்று பத்ரி தனது முன்னுரையில் கூறியிருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளலாம். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளை சிறப்பாக இந்தப் புத்தகம் விளக்குகிறது.
எந்த வித அலுப்பும் ஏற்படுத்தாமல் புத்தக நடை சிறப்பாக இருக்கிறது. வள்ளியப்பன், அவருடைய முதலீட்டு கதைகளை சொல்லிக் கொண்டே நம்மை புத்தகம் முழுவதும் அழைத்துச் செல்கிறார். புத்தகம் போகிற போக்கில் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்கிறது. புளி வியபாரத்துடன் சுவரசியமாக ஆரம்பமாகும் புத்தகம் இன்போசிஸின் கோடிஸ்வரர் கதை, நூலாசிரியர் பார்தி பங்குகளை பிறர் பேச்சிசைக் கேட்டு லாபமிழந்த கதை என்று கதையோடு பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை விளக்குகிறது.
அதைப் போலவே பங்குகள் எந்த நேரத்தில் எகிறும், சரியும் போன்ற பட்டியல்களும் சிறப்பாக இருக்கிறது. பங்குகளை சிறுக சிறுக வாங்குதல் (Systematic Investment Plan போல ), சிறுக சிறுக விற்பது (Systematic withdrawal Plan போல ) போன்ற நுட்பங்களும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். நூலாசிரியரின் இருபது ஆண்டு கால முதலீட்டு அனுபவம் புத்தகத்தில் தெரிகிறது.
முதலீட்டாளர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடு போல உதவும் வகையில் பங்குச் சந்தையைப் பற்றிய முக்கிய வார்த்தகைகளைப் பட்டியலிட்டு விளக்கியிருப்பதைப் பாராட்ட வேண்டும்.
புத்தகத்தில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல சில குறைகளும் இருக்கிறது.
- புத்தகம், முதலீடு பற்றிய விஷயங்களை போதுமான அளவு விளக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. நிறுவனங்களின் அடிப்படையைச் சார்ந்த முதலீட்டை விட Momentum Trading எனப்படும் சூழ்நிலையைச் சார்ந்த முதலீட்டையே புத்தகம் பல இடங்களில் வலியுறுத்துவது போல தோன்றுகிறது. சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நிறுவனங்களின் அடிப்படையைச் சார்ந்து முதலீடு செய்யும் பொழுது நஷ்டம் ஏற்படுவதில்லை (அப்படின்னு ஒரு நம்பிக்கை).
- அதைப் போலவே மற்றவரின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்யும் முறை மிகத் தவறானது என்றே பல பங்குச் சந்தை வல்லுனர்கள் சொல்கிறார்கள். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் வேண்டுமானால் இம் முறையைப் பின்பற்றலாம். பார்தி பங்குகளில் மற்றொருவருடைய பேச்சைக் கேட்டதாலேயே தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்றும், இது தவறான முறை என்று கூறினாலும், அதையே சில இடங்களில் வலியுறுத்தும் பொழுது முரண்பாடாக தெரிகிறது.
- Trading முறைப்பற்றி விளக்கினாலும், எப்படி Trading செய்யலாம் என்பது போன்ற சில நுட்பங்களை விளக்கியிருக்கலாம்.
- நூலாசிரியர் முதலீடு செய்தக் காலத்தில் தற்பொழுது உள்ளது போன்ற எளிமையான வர்த்தக முறைகள் இல்லை. அதன் பாதிப்பு புத்தகம் நெடுகிலும் தென்படுகிறது. அவர் முதலீடு செய்தக் கதைகளை விவரிக்கும் பொழுது அந்தக் கால சூழ்நிலையை ஒட்டியே விவரிக்கிறார் (பெயர் மாற்றுதல் போல). ஆனால் இக் கால சூழ்நிலையைச் சார்ந்த விவரிப்புகள் இல்லை. இது புதிதாக பங்குகளை கற்றுக் கொள்ள முனைவோருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். டிமேட், இணையம் சார்ந்த வர்த்தகம் பற்றி ஒரு சிறு குறிப்பு மட்டுமே இறுதியில் காணப்படுகிறது. 2004ல் புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் இக் கால வர்த்தக முறையை ஒட்டி கதைகளை எழுதியிருக்கலாம்.
- பக்கம் 223, Delivery யில் இன்று வாங்கியப் பங்குகளை நாளை விற்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் இன்று வாங்கியதை நாளை விற்கலாம். BTST - Buy Today, Sell Tommorrow என்ற முறை ICICIயில் இருக்கிறது. 5paisa, Sharekhan போன்ற புரோக்கர்களிடமும் இவ்வாறு செய்ய முடியும். நம் டீமேட் கணக்குக்கு பங்குகள் வருவதற்கு முன்பே விற்க இயலும்.
- Index - குறியீடு பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்திருக்கலாம். நிறையப் பேருக்கு குறியீடு என்றாலே என்ன என்று தெரியவில்லை. எனக்கு கூட குறியீடுகள் பற்றி விளக்கம் கேட்டு சில மின்னஞ்சல்கள் வந்தன. அதன் பேரிலேயே நான் கூட அதைப் பற்றி எழுதினேன்.
நூலாசிரியரே இறுதியில் கூறியிருப்பது போல, இது ஒரு ஆரம்பம் தான். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கு நிச்சயமாக இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். முதலீடுகளிலேயே பல முறைகள் இருக்கிறது. அதையெல்லாம் விளக்க பல புத்தகங்கள் வேண்டும்.
ஒரு நல்ல ஆரம்பத்தை துவக்கி வைத்த சோம.வள்ளியப்பன் மற்றும் கிழக்கு பதிப்பகத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/19/2005 07:46:00 AM 1 comment:
Thursday, January 13, 2005
சந்தையின் சரிவு
வரும் வார தமிழோவியம் இதழ் பங்குச் சந்தை பார்வையில், பங்குச் சந்தையின் தற்போதைய சூழ்நிலைப் பற்றிய கட்டுரை வெளியாகும்.
அதைப் போலவே ஹர்ஷத் மேத்தா பற்றிய தொடரும் தமிழோவியம் இதழிலேயே வெளிவரும்
அனைவருக்கும் எனது பொங்கள் நல்வாழ்த்துக்கள் மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/13/2005 06:10:00 AM No comments:
Sunday, January 09, 2005
விடைபெறும் முன்...
ஆனால் இந்த நிலையிலிருந்து நிச்சயம் மாற்றம் வரும். நிறைய முதலீட்டாளர்கள் தற்பொழுது பங்குச் சந்தையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் சொற்ப வட்டி, பங்குச் சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகள் போன்றவையே அவர்களை பங்குச்சந்தைப் பக்கம் இழுத்து வருகிறது. தமிழகத்தில் சில ஆயிரங்களாக இருக்க கூடிய முதலீட்டாளர்கள், லட்சத்தை தொடும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது. நம்மைப் போன்ற புதிய தலைமுறையினர் தான் அதிகளவில் பங்குச் சந்தைப் பக்கம் வருகிறார்கள்.
பத்ரி கூட இதனைக் கணித்து தான் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் "அள்ள அள்ளப் பணத்திற்கு" நிறைய விளம்பரம் செய்கிறார் என்று நினைக்கிறேன் (நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வில்லை. பொங்கல் விடுமுறையில் படிக்க வேண்டும்)
பத்ரி, சொல்லக்தக்கதாக இருந்தால், எந்தளவுக்கு இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பிருக்கிறது என்று சொல்லுங்கள்.
விற்பனை ஊக்கம் தருவதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த வருடம் பங்குச் சந்தைப் பற்றிய ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. குறியீடுகள் உயர்ந்ததால் ஏற்பட்ட ஆர்வம் மட்டுமல்ல. TCS, NTPC போன்ற IPO வும் பலமான ஆர்வத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. TCS பங்குகளை வெளியிட்ட பொழுது ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். இதைப் போல கவர்ச்சிகரமான IPO இந்த வருடமும் சந்தைக்கு வந்தால், இன்னும் நிறைய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை பக்கம் வருவார்கள்.
பங்குச் சந்தை ஒன்றும் புரியாத புதிர் அல்ல. கூர்ந்து கவனித்தால் நமக்கு எளிதாக விளங்கி விடும். முதலில் குறைந்த அளவிற்கு முதலீடு செய்யலாம். பிறகு சந்தையின் சூட்சமம் தெளியும் பொழுது முதலீடுகளை அதிகரிக்கலாம்.
என் பதிவைப் பொறுத்த வரை நிறையப் பேர் படிப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் என்னை அது பெரிதாக பாதித்ததில்லை. நான் மட்டுமே படிக்காமல் ஒரு சிலராவது படிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.
இந்த வருத்தம், இந்த வாரத்தில் ஓரளவு குறைந்துள்ளது. தமிழ்மணத்தின் "இந்த வார நட்சத்திரமாக" நான் இருந்ததால் நிறையப் பேர் என் வலைப்பதிவிற்கு விஜயம் செய்திருந்தார்கள். இந்த வார நட்சத்திரத்திற்கு நிறைய Focus கிடைக்கிறது. வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாகக் குழுவிற்கு எனது நன்றி.
கடந்த ஒரு வாரமாக நான் எழுதிய பதிவுகள் உங்களுக்கு ரசிக்கதக்கவையாக இருந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.
அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/09/2005 11:52:00 AM 7 comments:
நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2
ஒரு நிறுவனத்தின் தற்கால லாபத்தை மட்டுமே கொண்டு முதலீடு செய்யக் கூடாது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது, வரும் ஆண்டில் எந்தளவுக்கு உயரும் என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு 10% வளர்ந்த ஒரு நிறுவனம், இந்த ஆண்டு 12% மாக உயர்ந்தால் தான் அது வளர்ச்சி. ஒரு நிறுவனம் உயர்ந்தால் தான் நாம் வாங்கும் பங்குகளும் உயரும். அந்த உயர்வும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றாற் போலவே இருக்கும். 10% மாக இருந்த வளர்ச்சி அதே அளவுக்கு இருந்தால், நாம் வாங்கும் பங்குகளும் அதே விலையில் தான் இருக்கும். லாபத்தில் சரிவு இருந்தால், நம்முடைய சேமிப்பின் மதிப்பும் கரைந்து போய் விடும்.
எனவே நாம் பங்குகளை வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி கணித்தப் பிறகே வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு இருக்கக் கூடிய வர்த்தக வாய்ப்பு, அந்தத் துறைக்கு இருக்க கூடிய வாய்ப்புகள், போட்டி நிறுவனங்கள் இதைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.
வளரும் நிறுவனங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
- குறைவாக வளரும் நிறுவனங்கள்
- சராசரியாக வளரும் நிறுவனங்கள்
- வேகமாக வளரும் நிறுவனங்கள்
குறைவாக வளரும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்காது. தற்போதையச் சூழலில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தை உதாரணமாகச் சொல்லலாம். FMCG நிறுவனங்கள் என்று சொல்லப்படும், இத்தகைய நிறுவனங்கள் ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்தன. கோடிக்கணக்கான இல்லங்களை இவர்களின் தயாரிப்புகள் எட்டியது. ஆனால் தற்பொழுது உள்ள சுழலில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. புதியதாக மக்களை கவரும் எந்தப் பொருட்களையும் தயாரிக்காமல், இருக்கின்ற சந்தையை தக்க வைத்துக் கொள்ளவே இந்த நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பணம் பெருகாது.
சராசரியாக வளரும் நிறுவனங்கள் என்று இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களை சொல்லலாம். ஆட்டோ நிறுவனங்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஹீரோ ஹோண்டா, பஜாஜ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேகமாக வளரும் நிறுவனங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10% - 15% லாபத்தை இந்தப் பங்குகள் கொடுக்கும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது ஓரளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்லாம். பெரும்பாலும் பெரிய நிறுவனங்களான ரிலயன்ஸ் போன்றவை இனி அதிக வளர்ச்சி பெறக்கூடியவை அல்ல. ஆனால் சராசரியாக 20% அளவுக்கு லாபம் தரக்கூடியவை.
வேகமாக வளரும் நிறுவனங்களாக மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லலாம். பல நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 50% லாபம் தந்தது. விப்ரோ 30% கொடுத்தது. Outsourcing மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகள், மென்பொருள் நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இதைத் தவிர நடுத்தரமான நிறுவனங்கள் வேகமாக வளரக் கூடியவை. மிட்கேப் என்று சொல்லப்படும் இந்த நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத் தளங்களைப் பெருக்கிக் கொண்டு வேகமாக வளரக் கூடியவை. இத்தகைய நிறுவனங்களில் மிக அதிக லாபம் கிடைக்கும். ஆனால் தங்களுடைய வர்த்தகத் தளங்களை அதிகப்படுத்த இந்த நிறுவனங்கள் முயற்சிக்கும் பொழுது சில நேரங்களில் சறுக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சறுக்கும் பொழுது பங்குகளும் கடுமையாகச் சரியும். எனவே வேகமாக வளர்ந்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகளையும், சாதகமான மற்றும் பாதகமான சூழல்களையும் ஆராய்ந்தப் பிறகே முதலிடு செய்ய வேண்டும்.
இவற்றையெல்லாம் எப்படி ஆராய்வது ? ஆண்டறிக்கையை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியவரும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டிலும் அந்த காலாண்டிற்கான அறிக்கையைத் தாக்கல் செய்யும். அந்த அறிக்கைகளைக் கொண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அறிக்கைகளை எப்படி ஆராய்வது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 1
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/09/2005 09:43:00 AM No comments:
இந்த வாரச் சரிவும், எதிர்கால நம்பிக்கைகளும்
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/09/2005 09:37:00 AM No comments: