பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1



பிப்ரவரி மாதம் என்றாலே பட்ஜெட் மாதம், ஒரு வித பரபரப்பு அனைவருக்கும் ஏற்படுகிறது. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். வீட்டுக் கடனுக்கு வருமான வரி விலக்கு நீடிக்குமா, வரி விகிதம் உயருமா என்று பல்வேறு கவலைகள். முன்பெல்லாம் புதிதாக பொருள் வாங்க நினைப்பவர்கள் பட்ஜெட்டுக்கு முன்பே பொருள் வாங்கிவிடுவார்கள். பட்ஜெட் என்றாலே வரி உயர்வு, விலையேற்றம் என்று இருந்தக் காலம். வணிகர்கள் பட்ஜெட்டுக்கு முன்பு நிறையப் பொருட்களை வாங்கித் தங்கள் கிடங்குகளில் சேமித்துக் கொள்வார்கள்.

ஆனால் பட்ஜெட் என்பது வரி விதிப்பது மட்டும் அல்லவே. பட்ஜெட் என்பது என்ன ?அதில் இருக்கும் பலப் புரியாத வார்த்தைகளுக்குப் பொருள் என்ன ? அதைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது.


Bougette என்ற ஆங்கில வார்த்தைத் தான் கொஞ்சம் மருவி Budget என்றாகி விட்டது. Bougette என்றால் "Pouch" என்று பொருள். இங்கிலாந்து பாரளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் பொழுது பேப்பர்களை இந்த Bougetteல் எடுத்து வந்து, பிறகு பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தான் கொஞ்சம் மருவி இன்று பட்ஜெட் என்ற சொல்லாக்கத்தில் வழங்கப்படுகிறது.



இந்தியாவில் பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. 1999 வரை பட்ஜெட் மாலை 5 மணிககுத் தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் வசதிக்காக பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதனை அப்படியே பல வருடங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். February 27, 1999 அன்று யஷ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்தப் பொழுது முதன் முறையாக 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பிறகு அதுவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதியமைச்சகத்திடம் இருந்தாலும் பிற துறை அமைச்சகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. நிதியமைச்சகம் பிற அமைச்சகத்திடமும், திட்டக்குழுவிடமும் ஆலோசனைக் கேட்கும். பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பிற துறை அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி போன்ற விவரங்கள் பெறப்படும். ஜனவரி மாதத்தில் பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் துறையினர், தொழிற்ச்சங்கங்கள் போன்ற பல்வேறு குழுக்களுடன் நிதியமைச்சர் ஆலோசணைச் செய்வார்.

தற்பொழுது, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தவிர நிதியமைச்சக ஆலோசகராக இருக்கும் பார்த்தசாரதி, திட்டக்குழு துணைத் தலைவராக இருக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத்தலைவராக இருக்கும் சி.ரங்கராஜன் போன்றோருக்கும் பட்ஜெட் தயாரிப்பில் முக்கியப் பங்கு இருக்கிறது. தயாரிக்கப்பட்ட பட்ஜெட் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகே மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு பட்ஜெட் மீது ஒரு மாதம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். இதில் எதிர்கட்சிகள் மாற்றங்களை கொண்டுவர நினைத்தால் வெட்டுத் தீர்மானங்களை கொண்டு வரலாம். அல்லது சில மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இறுதியாக நிதி ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். ஏப்ரல் முதல் தேதியன்று பட்ஜெட் அமலுக்கு வரும். அடுத்த வருடம் மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் (ஏப்ரல் 1, 2005 முதல் மார்ச் 31,2006 வரை). பிறகு அடுத்த பிப்ரவரியில் (2006) அடுத்த ஆண்டிற்கான (2006 -2007) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்தியாவில் மைய அரசால் இரண்டு நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.

பொது பட்ஜெட் - நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும்




ரயில்வே பட்ஜெட் - ரயில்வே அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.




முதலில் ரயில்வே பட்ஜெட்டும், அதற்குப் பிறகு பொதுப் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

மைய அரசு தவிர ஒவ்வொரு மாநில அரசும் அம் மாநிலத்திற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இது தான் பட்ஜெட் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

பட்ஜெட்டில் பலப் புரியாத நிதி வார்த்தைகள் இருக்கும். அத்தகைய நிதி வார்த்தைகளை இப்பொழுது கவனிப்போம்.

அரசாங்கத்திற்கு வரும் பணம், செலவுச் செய்யப்படும் பணம் போன்றவை எங்கு பராமரிக்கப்படுகின்றன ?

அரசாங்கத்தில் இருக்கும் பணம் பல்வேறு கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். இதுப் பற்றிய விவரங்கள் பட்ஜெட்டில் இருக்கும். அந்தக் கணக்குகளை முதலில் பார்ப்போம்.

பொதுவாக மூன்று கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
  • The Consolidated Fund of India (CFI)
  • Public Account
  • Contingency Fund
இவையே இந்த மூன்று கணக்குகள்

The Consolidated Fund of India (CFI)

அரசுக்கு பல வழியில் கிடைக்கும் வருவாய் CFI ல் வைக்கப்பட்டிருக்கும். அரசுக்கு செலுத்தப்படும் வரி, கடன் தொகைகளுக்கான வட்டி, பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடண்ட்கள் போன்றவை இங்கு வைக்கப்பட்டிருக்கும். இது தான் அரசின் பொதுவான நிதி. இந்த நிதியத்தில் இருந்து பணம் பெற பாரளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. பெரும்பாலும் ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு தேவையான நிதியை மானியக் கோரிக்கைகள் மூலம் மக்களவையின் ஒப்புதல் கொண்டு பெற்றுக் கொள்ளும்.

Public Account என்பது அரசுக்கு சொந்தமில்லாதப் பணம் இருக்கும் கணக்கு. அதாவது அரசு பொதுமக்களிடமிருந்து PF, சிறுசேமிப்பு போன்றவற்றின் மூலம் பெறும் பணம். இந்த நிதியில் இருந்து அரசு எடுக்கும் பணத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.

Contingency Fund என்பது எதிர்பாராச் செலவு நிதி. இயற்கைச் சீற்றங்கள் போன்ற எதிர்பாராச் செலவுகளுக்காகப் பராமரிக்கப்படும் நிதி. இதில் இருந்து பணம் பெற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை (பிரதமரின் பொது நிவாரண நிதி, எதிர்பாராச் செலவு நிதி என்று இரு வேறு நிதிக் கணக்குகள் இருக்கின்றன)

பட்ஜெட்டில் இரு வகையானப் பிரிவுகள் இருக்கின்றன
  • Revenue Budget எனப்படும் வருவாய் வரவு செலவுத் திட்டம்
  • Capital Budget எனப்படும் முதலீட்டு வரவு செலவுத் திட்டம்
Revenue Budget - வருவாய் வரவு செலவுத் திட்டம்

வருவாய்த் துறையில் அரசுக்கு கிடைக்கும் வரவினம் மற்றும் செலவினம் போன்றவற்றின் நிதி நிலையை அறிவிக்கும் பட்ஜெட் தான் Revenue Budget

அரசுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி போன்ற வரி விதிப்பு (Tax revenue) மூலம் கிடைக்கும் வருவாய், அரசு வழங்கியுள்ள கடன் தொகைக்கான வட்டி, அரசு முதலீடு செய்யும் பணத்திற்கான டிவிடண்ட் எனப் பல வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அரசுக்கு கிடைக்கும் வருவாய் Revenue receipts - வருவாய் வரவினம் என்றுச் சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒய்வுதியம், அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் போன்றவை வருவாய்ச் செலவினம் - Revenue Expenditure ஆகும். வருவாய்ச் செலவினம் என்பது பணம் கரைந்துப் போகும் செலவுகள் மட்டுமே. புதிதாகத் தொழில் துறையில் செய்யப்படும் மூலதனம் போன்ற செலவுகள் இதில் வராது.

இந்த வருவாய் வரவினம் மற்றும் வருவாய்ச் செலவினம் இவற்றின் Balance Sheet தான் Revenue Budget எனப்படும் வருவாய் நிதிநிலை அறிக்கை

Capital Budget - முதலீட்டு வரவு செலவுத் திட்டம்

புதிதாக முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் அரசுக்கு புதிதாக கிடைக்கும் கடன் போன்றவை இந்த முதலீட்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரும்.

தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், தொழில்கள் போன்றவற்றில் செய்யும் முதலீடுகளே முதலீட்டுச் செலவு - Capital Expenditure எனப்படுகிறது. இது தவிர மாநில அரசுக்கு மைய அரசு வழங்கும் கடன் போன்றவையும் இந்தப் பிரிவின்கீழ் வரும்.

அரசு பொதுமக்களிடம் இருந்து பெறும் கடன், ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பிற நாடுகளிடமிருந்து பெறும் கடன் போன்றவை முதலீட்டு வரவினம் - Capital receipts என்று அழைக்கப்படுகிறது.

முதலீட்டுச் செலவினம், முதலீட்டு வரவினம் இவற்றின் நிதி நிலைத் தான் முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகும்.

என்ன...நிதிச் சம்பந்தமான வார்த்தைகளைப் படித்தவுடன் தூக்கம் வருகிறதா ?

சரி...அடுத்தப் பதிவில் பிற முக்கியமான வார்த்தைகளைப் பார்ப்போம்.



(நிதிப் பற்றாக்குறையை குறைக்க வழியே தெரியலை... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா)

References : Economic Times

மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 5

இந்த வார தமிழோவியத்தில் ஹர்ஷத் மேத்தா தொடரின் 5ம் பாகம்







மேலும் படிக்க

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 4 - P/E Ratio

கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E ம் அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம். பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

P/E எப்படி கணக்கிடப்படுகிறது ? கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்றுச் சொல்வார்கள் (பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை
leading or projected P/E என்றுச் சொல்வார்கள்).

பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது.

P/E = Market Price / Earnings

இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

Market Price = P/E x Earnings

ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தது. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி". P/E ம் அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

மாறாக P/E 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

PEG = P/E / (projected growth in earnings)

ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

ஒரு நிறுவனத்தின் P/E 30, வளர்ச்சி விகிதம் 15% என்றால்

PEG = 30/15 = 2

PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

Fundamental Analysis பற்றி அடுத்து வரும் பதிவுகளிலும் தொடர்ந்துப் பார்ப்போம்.


முந்தையப் பதிவு
மேலும் படிக்க

சந்தையின் செண்டிமெண்ட்

பங்குச்சந்தைக்கும் தமிழ் சினிமாவுக்கும் பொதுவான ஒரு குணம் உண்டு. என்ன என்று தெரியுமா ? செண்ட்டிமெண்ட். தமிழ் சினிமாவுக்கு அம்மா செண்ட்டிமெண்ட், தாலி செண்டிமெண்ட் என்று பலச் செண்டிமெண்ட்கள் இருப்பது போலப் பங்குச்சந்தையின் உயர்வுக்கும் சில செண்டிமெண்ட்கள்
தேவைப்படுகின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருக்கும் சந்தையை ஊக்கப்படுத்த நிச்சயமாக ஒரு பலமான செண்டிமெண்ட் தேவைப்பட்டது. ஒரு வழியாகக் கடந்த வாரம் அது கிடைத்தது.

கடந்த திங்களன்று (ஜனவரி 24) நடந்த முதல் வர்த்தகத்திலேயே குறியீடுகள் சுமார் 77 புள்ளிகள் சரிவடைந்தவுடன், தொடர்ந்து சந்தைச் சரிவடையக் கூடும் என்றே தோன்றியது. இந்த வாதத்தையே பெரும்பாலானப் பங்குச் சந்தை வல்லுனர்களும், பத்திரிக்கைகளும் முன்வைத்தன. இதோடு சேர்த்து கடந்த வாரம் வியாழனன்று (ஜனவரி 27) டிரைவேட்டிவ்ஸ் காண்ட்ராக்ட் (Derivatives) முடிவடைவதால், சந்தை மேலும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றே அனைவரும் கருதினர். சந்தையில் உள்ள தடுமாற்றமானச் சூழலில் டிரைவேட்டிவிஸ் காண்ட்ராக்ட்டை பிப்ரவரி மாதத்திற்கு யாரும் தொடர மாட்டார்கள், பங்குகளை பங்குச்சந்தையில் விற்று விடுவார்கள் என்ற எண்ணமே பரவலாக இருந்தது.

அனைவரின் எதிர்பார்புக்கும் மாறாக கடந்த செவ்வாயன்று (ஜனவரி 25) குறியீடு 56 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சந்தையை உற்சாகப்படுத்தின. இதோடு சேர்த்து பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்திருந்தால் இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் முனைந்தனர். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FII), உள்நாட்டு நிறுவனங்கள் தவிர சிறு முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கினர். ஒரு கட்டத்தில் குறியீடு சுமார் 100 புள்ளிகள் உயர்ந்திருந்தது. குறிப்பாக வங்கி, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் முதலீடு அதிகமாக இருந்தது.

ஆட்டோமோபைல் துறையில் ஆர்வம் பெருகியதற்கு காரணம் மாருதி நிறுவனத்தின் எதிர்பார்ப்பை மிஞ்சிய அறிக்கையே. இந்தக் காலாண்டில் மாருதி சுமார் 239 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது. கடந்த காலாண்டின் லாபமான 140 கோடியுடன் ஒப்பிடும் பொழுது இது சுமார் 70% உயர்வு. பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கைச் சந்தைக்கு ஏமற்றமளித்த நிலையில் மாருதியின் அறிக்கை அந்தப் பங்குகளை எகிறச் செய்தது. இந்தியர்கள் நிறையக் கார்களை வாங்கிக் குவிக்கிறார்கள் போலும். டூ விலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இரு நிறுவனங்களின் இரு வேறான அறிக்கை இதனையேக் குறிக்கிறது.

மாருதியின் உயர்வுக்கு இது மட்டுமே காரணமல்ல. அரசிடம் இருக்கும்
மாருதியின் உரிமையில் 8% மற்றும் BHEL நிறுவனத்தின் 10% உரிமையையும் அரசு விற்கக் (Disinvestment) கூடுமென்று செய்திகள் வெளியாயின. இந்தச்
செய்திகளும் மாருதியின் பங்குகளை சுமார் 3% அளவுக்கு உயர்த்தி 422
ரூபாய்க்கு கொண்டு வந்தன.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப் போவதில்லை என்ற இந்தக் கூட்டணி அரசின் கொள்கை முடிவில் ஏற்பட்ட மாற்றம் அனைவருக்கும் வியப்பையே ஏற்படுத்தியது. வழக்கம் போல் இடதுசாரிக்கட்சிகள் நிதி அமைச்சரைக் குற்றம் சாட்டத் துவங்கினர். கூட்டணி அரசின் கொள்கை வரைவான CMPல் இருந்து விலகி அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழ, இந்த Disinvestment திட்டம் இப்போதைக்கு இருக்காது என்பதே இறுதி நிலவரம்.

மற்றொரு பொதுத்துறை நிறுவனமான NTPCம் ஒரு நல்ல அறிக்கையைக் கொடுக்க சந்தையில் பாசிடிவ் செண்டிமெண்ட் கரைபுரண்டு ஒடத் துவங்கியது. இந்தக் காலாண்டில் NTPC 1365.5 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த காலாண்டின் லாபம் 819 கோடி. இது சுமார் 66% உயர்வு. இந்த உயர்வுக்கு ஏற்றாற் போல NTPC
பங்குகளும் உயரத் தொடங்கின. NTPC பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம்
இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இதைப் போலவே HDFC நிறுவனமும் நல்ல அறிக்கையைக் கொடுத்தது.

புதனன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு சந்தைக்கு விடுமுறை. இந்திய இராணுவத்தின் ஏற்ற மிகு அணிவகுப்பை பார்த்தச் சந்தை அதே மிடுக்குடன் வியாழன்று (ஜனவரி 27) எகிறத் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, சுமார் 76 புள்ளிகள் உயர்ந்து 6239 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச்சந்தைக் குறியீடு, NSE Nifty, 23 புள்ளிகள் உயர்ந்து 1955 புள்ளிகளுடனும் வியாழனன்று வர்த்தகம் முடிவடைந்தது.

வியாழனன்று (ஜனவரி 27) முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதைப் போலவே ஏற்கனவே பங்குகளை விற்று வைத்தவர்களும் பங்குகளை வாங்கி லாபமடைய முனைந்தனர். சில நிறுவனங்களின் வியக்கத்தக்க காலாண்டு அறிக்கைகள் சந்தையை உற்சாகத்தில் ஆழ்த்தின.

பார்தி நிறுவனம் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. இந்தக் காலாண்டில்
பார்தி நிறுவனத்தின் லாபம் 70% அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் சுமார்
191 லாபம் ஈட்டிய பார்தி, இந்தக் காலாண்டில் சுமார் 372 கோடி லாபம்
ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது லாபம் 90% உயர்ந்துள்ளது.
நாட்டின் செல்பேசித் தொடர்புச் சந்தையில் ஏர்டெல்லின் பங்கு 26%. பார்தி
பங்குகள் ஒரு கட்டத்தில் சுமார் 5% உயர்ந்திருந்தது.

வியாழனன்று (ஜனவரி 27) உயர்ந்தப் பிறப் பங்குகளில் முக்கியமானவை மென்பொருள் நிறுவனமான ஹேக்சாவேர். இந்தப் பங்குகள் ஒரே நாளில் சுமார் 16% உயர்வைப் பெற்றன. இதைப் போலவே ஜவுளிப் பங்குகளான அரவிந்த் மில்ஸ், பாம்மே டையிங் போன்றவையும் லாபமடைந்தன.

அரவிந்த் மில்ஸ் நிறுவனம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் பொழுது 19%
உயர்வையும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 89% உயர்வையும்
பெற்றிருக்கின்றது. இந்தப் பங்குகளுக்கு வரும் நாட்களில் நல்ல
ஏற்றமிருக்கும்.

இறுதியாகக் கடந்த வெள்ளியன்றும், நேற்றும் குறியீடுகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப் பெரிய உயர்வை பெற்றன. வெள்ளியன்று, குறியீடு சமார் 17
9 புள்ளிகள் எகிறியது. இதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுத்த ஒரு சிறப்பான அறிக்கையே காரணம். சந்தையின் செண்டிமெண்ட் நல்ல மாற்றத்தை எதிர்கொண்டு விட்டது. கடந்த வாரம், மூன்றே நாட்களில் குறியீடு சுமார் 236 புள்ளிகள் எகிறியது.

இந்த வாரமும், திங்களன்று குறியீடு சுமார் 137 புள்ளிகள் எகிற நான்கு நாட்களில் குறியீடு 350 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறி விட்டது. சந்தையில் உற்சாகம் கரைப்புரண்டு ஓடியது. இன்று எதிர்பார்த்த மாதிரியே லாபவிற்பனையால் குறியீடு சற்று சரிவடைந்துள்ளது.

சரி...அடுத்து என்ன நடக்கும். எனது முந்தையப் பதிவுகளில் கூறியிருந்ததுப் போல சந்தை சரிவை எதிர்கொண்ட சூழ்நிலையில் சந்தையில் பங்குகளை வாங்கியிருந்தால், இப்பொழுது லாபம் அடைந்திருக்கலாம். இப்பொழுது குறியீடு மேலும் எகிறுவதும் சரிவதும் அடுத்து வரும் நிகழ்வுகளைப் பொறுத்தே அமையும்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சந்தையில் மறுபடியும் தங்களது முதலீடுகளைக் குவிக்க தொடங்கியுள்ளனர். கடந்த வெள்ளியன்று சுமார் 140 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், திங்களன்று 203 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுகள் தொடரும் பட்சத்தில் குறியீடுகள் எகிறிக் கொண்டே இருக்கும். தற்போதைய முதலீடு, நிறுவனங்களின் சிறப்பான அறிக்கை மற்றும் பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு போன்றவையாலேயே ஏற்பட்டது.

கடந்த வாரம் வெளிநாட்டு முதலீடுகளைப் பற்றிய அச்சம் Associated Chambers
of Commerce and Industry (Assocham) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் வெளிப்பட்டது. மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வருட துவக்க மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குறையும் என்று தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 8.5 பில்லியன் டாலர்
முதலீடுகளைக் குவித்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளைப் பொறுத்தே வரும் நாட்களில் இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வு இருக்கும். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தையை விட்டு அவர்களால விலகி இருக்க முடியாது.

மேலும் படிக்க

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 3 - P/E Ratio

நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை (Fundamental Analysis) என்று சொல்வார்கள்.

பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். அடிப்படை ஆய்வு(Fundamental Analysis), டெக்னிக்கல் ஆய்வு (Technical Analysis). இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.

இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.

நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.

பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள்சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.

இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம். பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/ERatio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.

ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).

ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.

P/E = Market Price / EPS

Market Price = பங்குகளின் சந்தை விலை
EPS = ஒரு பங்குடைய லாபம்

EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.

EPS = Net Profit / No. of outstanding shares

அதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS

ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்

EPS = 35,000 / 10,000 = 3.5

இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.

சரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.

P/E = Market Price / EPS

பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்
ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5

P/E = 35/3.5 = 10

இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது ?

P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.

மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.

நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.

மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)

நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).

இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.

இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?
P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) ?

1 என்று இருக்கும் பங்குகளில் தானே ? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.

அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.

நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிகவளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.

புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா ? அடுத்தப் பதிவில் P/E பற்றித் தொடர்கிறேன்.குழப்பம் தெளிகிறதா என்று பார்ப்போம்.

இப் பதிவைச் சார்ந்த முந்தையப் பதிவுகள்

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 1

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2


மேலும் படிக்க

தடுமாறும் சந்தை

கடந்த இரு வாரங்களாகவே பங்குச்சந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. சந்தையின் தடுமற்றத்தைப் பற்றி தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - தடுமாறும் சந்தை

சனவரி 10 - 14ம் தேதி வரையிலான சந்தையின் கடும் சரிவு பற்றி - சந்தையில் ஒரு சுனாமி
மேலும் படிக்க