பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, January 05, 2005

Who Moved my Cheese

இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ? ஸ்பென்சர் ஜான்சனால் எழுதப்பட்ட புத்தகம். பல மேலாண்மை நூல்களை எழுதியுள்ள ஸ்பென்சர் ஜான்சன், மெலிதாக இழையோடும் ஒரு கதையைக் கொண்டு, வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும்படி மிக எளிதாக எழுதியிருக்கிறார்.

நாம் அனைவருமே வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் எத்தனை மாற்றங்களை மிகவும் திடமாக எதிர்கொள்கிறோம் ? பல மாற்றங்களைக் கண்டு அஞ்சி ஓடிக் கொண்டே தான்இருப்போம். எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், இருக்கின்ற நிலையிலேயே காலத்தை ஓட்டுவதைத் தான் பெரும்பாலானோர்கள் விரும்புகின்றனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான், நீங்கள் எனப் பெருவாரியான மக்கள் இப்படித் தான் உள்ளோம்.

நம்முடைய கேரியரின் (career) துவக்கத்தில் நல்ல வேலையைத் தேடி அலைவோம். அந்த வேலைக் கிடைத்து விட்டால், அதனைச் சுகமாக அனுபவிக்கத் தொடங்கி விடுவோம். அடுத்தக் கட்டத்தைப் பற்றி யோசிப்பவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்கள் கூட திருமணத்திற்குப் பிறகு வேலை மாற்றங்களை அதிகம் விரும்புவதில்லை. மாற்றங்கள் நம்மை சறுக்கி விடுமோ, இருக்கின்ற நிலையில் இருந்து பிசகி விடுவோமோ என்ற பயத்திலும், அச்சத்திலும் தான் மாற்றங்களை கண்டு அஞ்சி ஓடி விடுகிறோம். இருக்கின்ற வேலையிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, நமக்கு நாமே பலக் காரணங்களை கற்பித்துக் கொண்டு குண்டு சட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

வேலை மாற்றம் என்று மட்டுமில்லாமல், நம் வேலையில் எதிர்கொள்ளும் பலப் பிரச்சனைகள், நிறுவனத்தில் நமக்கு மிகவும் பிடித்தத் துறையில் இருந்து பிடிக்காத துறைக்கு மாறும் பொழுது நாம் எதிர்கொள்ளும் மாற்றங்கள், பணியிட மாற்றங்கள் என வாழ்க்கையின் எந்த மாற்றத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதை இக் கதை எளிதாக விளக்குகிறது.

இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது. மாற்றங்கள் எவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு குட்டிக் கதையைக் கொண்டு ஸ்பென்சர் ஜான்சன் விளக்கியிருக்கிறார். மாற்றங்களை Cheese என உருவகப்படுத்திக் கொண்டு, ஒரு
அம்புலிமாமா கதையைக் கொண்டு, நமக்கு மிகவும் பிடித்த Cheese ஐ யாராவது எடுத்துக் கொண்டாலோ, அல்லது, நமக்கு மிகவும் பிடித்த Cheese க்கு பதிலாக புதிய Cheese வைக்கப்பட்டாலோ எப்படி அதை எதிர்கொள்வது என்று கதையின் போக்கிலேயே விளக்குகிறார்.

இதைப் போலக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் பெரும்பாலும் தத்துவமழை பொழிந்து படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புத்தகமோ, சிறுவர் கதைப் போல ஒரு கதையைக் கொண்டு, அதுவும் சுமார் 50 பக்கங்களை மட்டுமே கொண்டு சொல்ல வந்தக் கருத்தை மிகத் தெளிவாக விளக்குவது சிறப்பு.

இக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

5 மறுமொழிகள்:

Kasi Arumugam said...

இந்தப் புத்தகத்தையோ இவர் எழுதிய வேறு எதையுமோ நான் வாசித்ததில்லை. ஆனால்
//இதைப் போலக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் பெரும்பாலும் தத்துவமழை பொழிந்து படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புத்தகமோ, சிறுவர் கதைப் போல ஒரு கதையைக் கொண்டு,..//
என்பதைப்பற்றி என் எண்ணங்கள்: இங்கே குழந்தைகளுக்கான ஆங்கிலப்புத்தகங்கள் பலவற்றை தினமும் வாசித்தாகவேண்டிய கட்டாயம் (என்ன இனிமையான அனுபவம்!:-) இந்த 'தத்துவம் சொல்லாமல் உணரவைப்பது' ஒரு கலை. நான் புரிந்துகொண்டது நம் குழந்தைக் கதை எழுத்தாளர்கள் அதில் போகவேண்டிய தூரம் மிக அதிகம் என்பது.

உங்கள் வணிகவியல் எழுத்துக்கள் மிக நல்ல நடையில் எழுதப்படுகின்றன. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
-காசி

6:10 PM, January 05, 2005
Anonymous said...

இந்த புத்தகத்திற்கு ஏன் இவ்வளவு புகழ் என்று எனக்கு புரிந்ததேயில்லை. உங்களுடைய மூன்றாவது பத்தியில் இருப்பது தான் புத்தகம் சொல்கிறது அல்லது சொல்ல வருகிறது. நேரடியாக, மாற்றம் வரும் போது அதற்கேற்றார்போல் மாறிக் கொள் என்று சொன்னால் கேட்காமல், ஜாடை மாடையாக கதை சொன்னால் தான் ஆஹா என்கிறார்கள். இல்லை எனக்கு புரியாமல் வேறு ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா?

By: நவன்

10:33 PM, January 05, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

நவன்,

ஒரு மாற்றம் தேவை என்ற எண்ணத்தில் நான் இருந்த பொழுது, செய்து கொண்டிருந்த வேலையில் அலுப்பு ஏற்பட்டிருந்தப் பொழுது, மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு தயக்கம் இருந்தப் பொழுது இந்தப் புத்தகத்தை படித்ததால், என்னை இந்தப் புத்தகம் பாதித்திருக்கலாம்.

என்னைப் போலவே சில நண்பர்களுக்கும் இந்த உணர்வு இருந்தது, அவர்களின் வேலை மாற்றத்திற்கு இந்தப் புத்தகமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

11:32 PM, January 05, 2005
அன்பு said...

அன்புக்குரிய சசி,
வணக்கம். கடந்த சில வாரங்களாக வலைப்பதிவுப் பக்கம் வர இயலவில்லை... இடையில் பல நல்ல பதிவுகள் எழுதியிருக்கின்றீர்கள்... நண்பர்கள் பலரும் பலவிதமாக. இங்கு பரபரப்பு கூடியிருக்கிறது... விரைவில் விட்ட அனைத்தையும் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்புகின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

12:57 AM, January 06, 2005
Anonymous said...

சில ஆண்டுகள்முன், இந்த நூலை வாசித்து, ரசித்து, அதன் சுருக்கத்தைத் தமிழில் எழுதினேன். குமுதம் டாட் காம் இதழில் வெளிவந்தது.

இப்போதும் அங்கே இருக்குமா என்று தெரியவில்லை. அந்தக் கட்டுரை என்னிடம் உண்டு, ஆர்வமுள்ளவர்கள் எனக்கு (nagas_baan@rediffmail.com) எழுதலாம் (முன்னெச்சரிக்கை : வெகு சுமாரான மொழிபெயர்ப்புதான், எனக்கு இந்தத் துறையில் அதிக அனுபவம் இல்லை !)

என். சொக்கன்,
பெங்களூர்.

By: N. Chokkan

1:47 AM, January 06, 2005