Sunday, October 31, 2004
பங்குகளை விற்கலாமா ?
என் நண்பர் ஒருவர் TCS பங்குகளை வாங்கினார். TCS பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.
"TCS பங்குகளை யாராவது விற்பார்களா? 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே" என்று என்னை கோபித்து கொண்டார்.
ஆனால் உண்மையில் அன்று விற்றிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.
வாங்கும் விலை
17 x 850 = 14,450.00
பங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி, பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால், எவ்வளவு லாபம் வரும்
விற்கும் விலை
17 x 1150 = 19550
லாபம் = ரூ 5000
TCS நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே TCS பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.
என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு, அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.
தினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும், இப்பொழுது விற்பதால் லாபமா, இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன ? விற்று விட்டு, விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.
அதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.
பங்குகள் வாங்கி விற்பதில் இத்தகைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் நிச்சயம் நம் பணம் பெருகும்.
சரி..இந்த வாரம் சந்தை எப்படி இருக்கும்
சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை, கடந்த வாரம் RBI யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும், சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும், கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.
கச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இம் மாதமும் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்த வார காளைகளின் தகவல் - "பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்"
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 10/31/2004 10:21:00 AM 1 comment:
Thursday, October 28, 2004
கச்சா எண்ணெய்
இன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி. பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். சந்தையின் இந்த உற்சாக நிலையினால் BSE குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது. NSE 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது.
திங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற, இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர்.
RBI யின் நிதிக் கொள்கையும், கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5% குறைகிறது
RBI யும் நாட்டின் வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலேயே பாதிப்படைவதாக கூறியிருக்கிறது.
இன்று கச்சா எண்ணெய் கொஞ்சம் இறங்கியிருக்கிறது. இது தொடருமா ? மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 10/28/2004 12:16:00 PM 2 comments:
Tuesday, October 26, 2004
RBI யின் நிதி கொள்கை
நாட்டின் பணவீக்கமும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5% என்ற இலக்கை கடந்து, 6.5% மாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஆனால் வட்டி விகிதத்தை தற்பொழுதுள்ள 6% என்ற நிலையில் இருந்து அதிகரிக்கவில்லை. வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுவனங்களின் முதலீடுகளை குறைத்து, நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் அதனை அப்படியே விட்டுள்ளது.
ஆனால ரெப்போ வட்டி விகிதம் 4.75% ஆக மாறி இருக்கிறது. (ரெப்போ - Repo - Repurchase Agreement என்பது மிக குறைந்த கால பணபறிமாற்றத்திற்கான ஒரு வர்த்தகம். தன்னிடம் உள்ள Securities ஐ வைத்து கடன் பெறுவது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இந்த Securities ஐ திரும்ப பெற்று கொள்வார்கள். திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்திரவதத்துடன் இந்த வர்த்தகம் நடைபெறுவதால் இதனை - Repurchase Agreement என்று சொல்வார்கள்)
இந்த ரெப்போ விகித மாற்றம் தொழில் துறையை அதிகம் பாதிக்காது.
வட்டி விகிதம் உயர்த்தப் படாததால் நிறுவனங்களின் முதலீட்டிற்கு பாதிப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக இருந்த்து. மதியம் வரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீடு, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவித்தப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டது.
நேற்று முதலீட்டாளர்களின் விற்பனையால் BSE குறியீடு 60 புள்ளிகள் சரிவு கண்டது. இந்த சரிவு இன்று மதியத்திற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் ஈடு செய்யப்பட்டது. BSE குறியீடு 70 புள்ளிகள் உயர்ந்து 5,651 லும் NSE 24 புள்ளிகள் உயர்ந்து 1,781 லும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
நேற்று சந்தை சரிவடைந்த பொழுதும் நல்ல லாபகரமாக இருந்த இன்போசிஸ், இன்றும் 40 ரூபாய்க்கும் அதிகமாக விலை ஏறியது. கடந்த சில நாட்களாக சரிவு முகமாக இருந்த சத்யம் இன்று அதிக லாபம் அடைந்தது.
வங்கிப் பங்குகளான ஸ்டேட் பாங்க் (SBI), இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB), பாங்க ஆப் பரோடா போன்றவையும் நல்ல முன்னேற்றம் கண்டன.
HINDALCO, TISCO, SAIL போன்ற உலோகப் பங்குகளும், ரிலயன்சும் இன்று லாபகரமாக இருந்தன.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 10/26/2004 11:42:00 AM 2 comments:
Sunday, October 24, 2004
தத்தளிக்கும் சந்தை
கடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள். இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் forcast ஏமாற்றம் அளிக்கிறது. மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, TCS போன்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.
இந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ். இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விப்ரோவும் இது போலத் தான்.
மொத்ததில் இந்த வாரம் காளைகளின் ஒரு வரி தகவல் - "சந்தையில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்".
கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள், அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும்
நல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது. பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள், வெளியேறி விடாதீர்கள்.
புதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள். சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள்.
சந்தை தற்பொழுது தத்தளித்து கொண்டிருக்கிறது. ஆனால் முழ்கி விடாது. மெதுவாக கரையேறி விடும் மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 10/24/2004 11:02:00 AM No comments:
Saturday, October 23, 2004
பங்குக் குறியீடு - 2
பங்குக் குறியீடுகளை இரு முறையில் உருவாக்கலாம்.
- சந்தை மூலதன நிறையிட்ட குறியீடு (Market Capitalization weighted Index)
- பங்கு விலை நிறையிட்ட குறியீடு (Price weighted Index)
சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.
உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி, ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது, அதனுடைய சந்தை மூலதனம் (Market Capitalization) = 1 கோடி x 600 = 600 கோடி
பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும், உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் (Base Market capitalization) என்று சொல்வார்கள்.
இதனைப் போன்றே பங்குக் குறியீட்டின் அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) உருவாக்கப் படும்.
உதாரணமாக ஒரு குறியீடு
நான்கு நிறுவனங்களை இந்தக் குறியீட்டில் கொண்டு வருவோம்
இன்போசிஸ்
பங்குகள் = 100
விலை = 1000
சந்தை மூலதனம் = 100 x 1000 = 100000
விப்ரோ
பங்குகள் = 50
விலை = 500
சந்தை மூலதனம் = 50 x 500 = 25000
ONGC
பங்குகள் = 75
விலை = 600
சந்தை மூலதனம் = 75x 600= 45000
TISCO
பங்குகள் = 25
விலை = 150
சந்தை மூலதனம் = 25x150= 3750
இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.
அடிப்படை சந்தை மூலதனம் = 100000 + 25000 + 45000 + 3750 = 173750
அதனைக் கொண்டு குறியீட்டில் உள்ள பங்குகளின் மதிப்பீடு கணக்கிடப் படுகிறது.
பங்கு மதிப்பீடு
இன்போசிஸ் = 100000/173750 = 0.575539568
விப்ரோ = 25000/173750 = 0.143884892
ONGC = 45000/173750 = 0.258992806
TISCO = 3750/173750 = 0.021582734
மொத்த மதிப்பீடு = 0.575539568 + 0.143884892 + 0.258992806 + 0.021582734 = 1.0
அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) 1000 என எடுத்துக் கொண்டால்
பங்குக் குறியீடு
1.0 x 1000 = 1000
இதன் அடிப்படையில், பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது
இன்போசிஸ், விப்ரோ பங்குகளில் உயர்வும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?
விலை
இன்போசிஸ் = 1120
விப்ரோ = 600
ONGC = 435
TISCO = 25
இந்த விலை மாற்றத்தால் சந்தை மூலதனமும், மதிப்பீடும் மாறுகிறது.
குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும், அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.
இன்போசிஸ் = 100 X 1120 = 112000 = 112000/173750 = 0.644604317
விப்ரோ = 50x 600 = 30000 = 30000/173750 = 0.172661871
ONGC = 75 x 435 = 32625 = 32625/173750 = 0.187769784
TISCO = 25 x 25 = 625 = 625/173750 = 0.003597122
பங்குகளின் மொத்த மதிப்பீடு = 0.644604317 + 0.172661871 + 0.187769784 + 0.003597122 = 1.008633094
இப்பொழுது குறியீட்டின் நிலை ?
1000 x 1.008633094 = 1008.63
பங்குக் குறியீடு 8.63 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் BSE மற்றும் NSE குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
NSE குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும், அந்தப் பங்கு, வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும், முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.
குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.
NSE ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் S&P CNX Nifty குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.
NSE ன் மற்ற குறியீடுகள்.
CNX Nifty Junior - இது CNX Nifty க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் (Sector) தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி NSE ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.
இதிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனிக் குறியீடு உள்ளது.
BSETECK
BSEPSU
BANKEX
இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் bseindia.com, nseindia.com போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 10/23/2004 07:45:00 AM 4 comments:
Wednesday, October 20, 2004
பங்குக் குறியீடு - 1
Index என சொல்லப் படுகின்ற குறியீடு, பலப் பங்குகளின் குழுமம். பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது. உதாரணமாக BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. NSE 50 பங்குகளைக் கொண்டது. இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது.
பல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் (Diversification). ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது. அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும்.
இன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு, குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும். TISCO சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும்.
இதோ ஒரு சிறிய குறியீடு
இன்போசிஸ், விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.
இன்போசிஸ் = +8
விப்ரோ = +2
TISCO = -2
ONGC = -3
உயர்வு = +10
சரிவு = -5
குறியீட்டின் நிலை = 5 புள்ளிகள் உயர்வு
TISCO, விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், இன்போசிஸ், ONGC பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.
இன்போசிஸ் = -5
விப்ரோ = +2
TISCO = +2
ONGC = -3
உயர்வு = +4
சரிவு = -8
குறியீட்டின் நிலை = 4 புள்ளிகள் சரிவு
இந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும், சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் Speculators மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது, பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது.
இன்போசிஸ் = -10
விப்ரோ = -6
TISCO = -4
ONGC = -8
உயர்வு = +0
சரிவு = -28
குறியீட்டின் நிலை = 28 புள்ளிகள் சரிவு
இதனை மிக எளிதாக எழுதி விட்டாலும், இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும், இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 10/20/2004 11:55:00 AM 1 comment: