பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, October 28, 2004

கச்சா எண்ணெய்

இன்போசிஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வரப்பிரசாதம். சென்ற காலாண்டு அறிக்கையின் பொழுது ரூ1400 ஆக இருந்தது. சிறந்த காலாண்டு அறிக்கையினால் ரூ 1600க்கு தாவியது. இந்த மாத துவக்கத்தில் 1700 ரூபாயில் இருந்து இப்பொழுது ரூ1950ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மாதம் மட்டும் 250 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அதிக லாபம் அடைந்த பங்கு இன்போசிஸ் தான். நீங்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று தனுஷ் அடைந்திருக்கும் சந்தோஷத்தை அடைந்திருக்கலாம் (அது யாரு தனுஷ் - நம்ம தலீவரோட(?) மருமகன் தான்)

இன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி. பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். சந்தையின் இந்த உற்சாக நிலையினால் BSE குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது. NSE 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது.

திங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற, இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர்.

RBI யின் நிதிக் கொள்கையும், கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5% குறைகிறது

RBI யும் நாட்டின் வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலேயே பாதிப்படைவதாக கூறியிருக்கிறது.

இன்று கச்சா எண்ணெய் கொஞ்சம் இறங்கியிருக்கிறது. இது தொடருமா ?