பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, October 23, 2004

பங்குக் குறியீடு - 2

பங்குக் குறியீடுகளை இரு முறையில் உருவாக்கலாம்.

  • சந்தை மூலதன நிறையிட்ட குறியீடு (Market Capitalization weighted Index)
  • பங்கு விலை நிறையிட்ட குறியீடு (Price weighted Index)

சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.

உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி, ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது, அதனுடைய சந்தை மூலதனம் (Market Capitalization) = 1 கோடி x 600 = 600 கோடி

பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும், உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் (Base Market capitalization) என்று சொல்வார்கள்.

இதனைப் போன்றே பங்குக் குறியீட்டின் அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) உருவாக்கப் படும்.

உதாரணமாக ஒரு குறியீடு

நான்கு நிறுவனங்களை இந்தக் குறியீட்டில் கொண்டு வருவோம்

இன்போசிஸ்
பங்குகள் = 100
விலை = 1000
சந்தை மூலதனம் = 100 x 1000 = 100000

விப்ரோ
பங்குகள் = 50
விலை = 500
சந்தை மூலதனம் = 50 x 500 = 25000

ONGC
பங்குகள் = 75
விலை = 600
சந்தை மூலதனம் = 75x 600= 45000

TISCO
பங்குகள் = 25
விலை = 150
சந்தை மூலதனம் = 25x150= 3750

இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.

அடிப்படை சந்தை மூலதனம் = 100000 + 25000 + 45000 + 3750 = 173750

அதனைக் கொண்டு குறியீட்டில் உள்ள பங்குகளின் மதிப்பீடு கணக்கிடப் படுகிறது.


பங்கு மதிப்பீடு

இன்போசிஸ் = 100000/173750 = 0.575539568

விப்ரோ = 25000/173750 = 0.143884892

ONGC = 45000/173750 = 0.258992806

TISCO = 3750/173750 = 0.021582734

மொத்த மதிப்பீடு = 0.575539568 + 0.143884892 + 0.258992806 + 0.021582734 = 1.0

அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) 1000 என எடுத்துக் கொண்டால்

பங்குக் குறியீடு
1.0 x 1000 = 1000

இதன் அடிப்படையில், பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது

இன்போசிஸ், விப்ரோ பங்குகளில் உயர்வும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?

விலை

இன்போசிஸ் = 1120
விப்ரோ = 600
ONGC = 435
TISCO = 25

இந்த விலை மாற்றத்தால் சந்தை மூலதனமும், மதிப்பீடும் மாறுகிறது.

குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும், அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.

இன்போசிஸ் = 100 X 1120 = 112000 = 112000/173750 = 0.644604317

விப்ரோ = 50x 600 = 30000 = 30000/173750 = 0.172661871

ONGC = 75 x 435 = 32625 = 32625/173750 = 0.187769784

TISCO = 25 x 25 = 625 = 625/173750 = 0.003597122

பங்குகளின் மொத்த மதிப்பீடு = 0.644604317 + 0.172661871 + 0.187769784 + 0.003597122 = 1.008633094

இப்பொழுது குறியீட்டின் நிலை ?

1000 x 1.008633094 = 1008.63

பங்குக் குறியீடு 8.63 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் BSE மற்றும் NSE குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

NSE குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும், அந்தப் பங்கு, வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும், முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.

குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.

NSE ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் S&P CNX Nifty குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.

NSE ன் மற்ற குறியீடுகள்.

CNX Nifty Junior - இது CNX Nifty க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் (Sector) தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி NSE ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.

இதிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனிக் குறியீடு உள்ளது.
BSETECK
BSEPSU
BANKEX

இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் bseindia.com, nseindia.com போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.

4 மறுமொழிகள்:

அன்பு said...

பங்குக்குறியீடு பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி. இப்போது அந்த குறியீட்டின் ஏற்ற, இறக்கத்தை வைத்தே பங்குச்சந்தை நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம், குறியீட்டை வைத்தே காளையா, கரடியா என்பதையும் புரிந்துகொள்ளலாம். இனிமேல் இதுபோன்று குறியீடுகளை எங்கு பார்க்கும்போதும் உங்கள் விளக்கங்கள் மனதுள் ஓடும்.

இப்போது இன்னொரு துணைக்கேள்வி. இந்த குறியீட்டுமுறை இதுபோன்று எல்லாவிதமான தொழிலையும் உள்ளடக்கிய நிறுவங்களின் மொத்தமான குறியீடுதானா? அல்லது எண்ணெய் சார் நிறுவங்கள், கணிணி சார் நிறுவங்கள், வாகன நிறுவங்கள் என்று உட்பிரிவு உண்டா? அப்படியிருந்தால் அந்த ஏற்ற/இறக்கங்களை வைத்து, எந்த துறையில் இன்று முதலீடு செய்யலாம் என்று யோசிக்கலாமல்லவா?

12:58 AM, October 25, 2004
தமிழ் சசி | Tamil SASI said...

BSE, NSE குறியீடு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொதுவான குறியீடு.

தனிப்பட்ட நிறுவனங்களின் குறியீடுகள்
BSETECK - மென்பொருள் நிறுவனங்களை உள்ளடக்கிய Technology குறியீடு
BSEPSU - பொதுத் துறை நிறுவன குறியீடு

இந்த தனிப்பட்ட குறியீடுகளைக் கொண்டு அன்று எந்தத் துறை எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அதனைப் பொறுத்து நாம் முதலீடு செய்யலாம்.

11:56 AM, October 26, 2004
மஞ்சூர் ராசா said...

அன்பு சசி
உங்களின் இந்த பதிவை படித்து பங்குக்குறியீடுகள் பற்றி விரிவாக தெரிந்துக்கொண்டேன். மிகவும் நன்றி.

ஏன் நீங்கள் இப்பொழுது தொடர்ந்து எழுதுவதில்லை

6:58 AM, October 31, 2010