பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, October 20, 2004

பங்குக் குறியீடு - 1

இன்று பங்குக் குறியீடு சரிந்து விட்டது, ஏற்றம் கண்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே...அது என்ன பங்குக் குறியீடு ? அதன் ஏற்றமும் சரிவும் எதனால் ஏற்படுகிறது ?

Index என சொல்லப் படுகின்ற குறியீடு, பலப் பங்குகளின் குழுமம். பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது. உதாரணமாக BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. NSE 50 பங்குகளைக் கொண்டது. இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது.

பல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் (Diversification). ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது. அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும்.

இன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு, குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும். TISCO சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும்.

இதோ ஒரு சிறிய குறியீடு

இன்போசிஸ், விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.

இன்போசிஸ் = +8
விப்ரோ = +2
TISCO = -2
ONGC = -3
உயர்வு = +10
சரிவு = -5
குறியீட்டின் நிலை = 5 புள்ளிகள் உயர்வு

TISCO, விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், இன்போசிஸ், ONGC பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.

இன்போசிஸ் = -5
விப்ரோ = +2
TISCO = +2
ONGC = -3
உயர்வு = +4
சரிவு = -8
குறியீட்டின் நிலை = 4 புள்ளிகள் சரிவு

இந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும், சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் Speculators மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது, பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது.

இன்போசிஸ் = -10
விப்ரோ = -6
TISCO = -4
ONGC = -8
உயர்வு = +0
சரிவு = -28
குறியீட்டின் நிலை = 28 புள்ளிகள் சரிவு

இதனை மிக எளிதாக எழுதி விட்டாலும், இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும், இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.

1 மறுமொழிகள்:

அன்பு said...

பங்குக்குறியீடு என்றால் என்ன? என்ற என்னுடைய நெடுநாளைய கேள்விக்கு பதில்தந்தமைக்கு நன்றி.

4:55 AM, October 21, 2004