பணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம். பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை. ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் (IPO) பங்குகளை வாங்குவார்கள். அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள். பிறகு பங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள்.
என் நண்பர் ஒருவர் TCS பங்குகளை வாங்கினார். TCS பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.
"TCS பங்குகளை யாராவது விற்பார்களா? 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே" என்று என்னை கோபித்து கொண்டார்.
ஆனால் உண்மையில் அன்று விற்றிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.
வாங்கும் விலை
17 x 850 = 14,450.00
பங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி, பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால், எவ்வளவு லாபம் வரும்
விற்கும் விலை
17 x 1150 = 19550
லாபம் = ரூ 5000
TCS நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே TCS பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.
என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு, அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.
தினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும், இப்பொழுது விற்பதால் லாபமா, இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன ? விற்று விட்டு, விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.
அதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.
பங்குகள் வாங்கி விற்பதில் இத்தகைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் நிச்சயம் நம் பணம் பெருகும்.
சரி..இந்த வாரம் சந்தை எப்படி இருக்கும்
சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை, கடந்த வாரம் RBI யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும், சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும், கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.
கச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இம் மாதமும் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்த வார காளைகளின் தகவல் - "பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்"
Sunday, October 31, 2004
பங்குகளை விற்கலாமா ?
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI | நேரம் 10/31/2004 10:21:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
ஆஹா... ஆஹா... அருமையான யோசனைகளாகவும், நடைமுறை உதாரணங்களோடும் பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறதே... (ஆனால் மத்தியக்கிழக்கு நாடுகள்தான் என்று கோடுபோட்டு வைத்துள்ளார்களே...? இங்கு டாலர் கணக்கில் இழக்க/ஜெயிக்கவும் பயாமாய் இருக்கிறது. )
3:24 AM, November 02, 2004Post a Comment