பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, October 17, 2004

காளைகளின் தகவல்கள்

இந்த வார காளைகளின் தகவல்கள்

ஓவ்வொரு வாரமும், இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும், வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது, முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது. "Technical Charts"ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும். சில நேரங்களில் பொய்த்துப் போகும். ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால், ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் ?!.

இதோ நான் திரட்டிய தகவல்கள்

மென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் (Profit Booking) இதன் விலையில் சரிவு ஏற்பட்டது. மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும்.

கடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது. உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும், சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும். இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் (Hindalco, SAIL, NALCO, TISCO) சரிவடைந்தன. இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும்.

தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும். ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

ONGC, ரிலயன்ஸ் ஆகியப் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. இந்த வாரமும் இவை தொடரக் கூடும்.

வரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.

வெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா, கரடிகளின் பிடியிலேயே தொடருமா ?

ஆவலுடன் காத்திருக்கிறேன்

0 மறுமொழிகள்: