பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, October 04, 2004

கச்சா எண்ணெய் எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஒரு பேரல் (பீப்பாய் ?) $50 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப் படுத்தும் என்பதால் பங்குச் சந்தையை பாதிக்கும்.

கடந்த சில வாரங்களாகவே எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் ஏறிக் கொண்டே இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தான் இந்த முதலீடுக்கு முக்கிய காரணம். பண வீக்கம் 8%க்கு கீழ் இருப்பதும், வளர்ச்சி 7%க்கு மேல் இருப்பதும் முதலீட்டாளர்களூக்கு நம்பிக்கை ஊட்டுகிறது

தற்பொழுது மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 5,675 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 1,775 என்ற உயர் நிலையிலும் இருக்கிறது. கடந்த வாரம் பல துறைகளை சார்ந்த பங்குகள் லாபகரமாக இருந்தன. அதில் குறிப்பிட தகுந்தது கச்சா எண்ணெய் நிறுவனமான - ONGC பங்குகள். கடந்த வாரம் மட்டும் சுமார் 40 ரூபாய்க்கு இந்த பங்குகளின் விலை ஏறியது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்த நிறுவனத்திற்கு லாபம் தரும் எனபதால் இந்த நிலை.

அதைப் போல மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், சத்யம், விப்ரோ பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. இந்த பங்குகள் சரிந்து கடந்த வார இறுதியில் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த துறைக்கும் கச்சா எண்ணெய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடந்த வாரமே ரூ300 ஐ தொட்டு விடும் என எலலோரும் கூறிய டாடா ஸ்டீல் (TISCO) பங்குகள் ரூ280 - 295 க்கும் இடையில் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது.

பங்கு குறியீடுகள் உயர்ந்து காணப்படுவதால், மேலும் உயரக் கூடுமா, சரியக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது. பங்குகளின் விலை (Valuations) சற்று அதிக அளவில் தான் உள்ளது. பங்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இல்லாததால், சற்று எச்சரிக்கையாய், கச்சா எண்ணெய் விலை மீது ஒரு கண் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.

நாளை தொடங்கும் வாரம் ஒரு முக்கியமான ஒன்று. நம்பிக்கையுடன் காத்திருப்போம்