பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Friday, October 08, 2004

காளை..கரடி..பன்றி..

பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market - காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய்? போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க, அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு, மிரட்டின (Merrill Lynch நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் சின்னம் காளை) என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. Merrill Lynch சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள்? தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

மறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க, அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து, அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை. சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ. விஷயத்தை சொல்லுடா! என்று மனதுள் நினைத்து கொண்டே (பின்ன? வெளிய சொல்ல முடியுமா?) பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.

அப்பொழுது தெரிந்துகொண்ட விபரங்கள்தான் பங்குச் சந்தை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.

காளை, கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து, காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.

அப்படியானால், பன்றி என்பது?

“Bulls make money,
bears make money,
but pigs just get slaughtered!”

பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.

என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் ?

பின்னூட்டம்