இரு நாட்கள் - இரு வேறு அறிக்கைகள். ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது. மற்றொன்று நம்பிக்கையை அளித்தது. ஆனாலும் சந்தை இரு நாட்களும் கரடிகளின் ஆணைக்குட்பட்டு சரியத் தொடங்கியுள்ளது.
திங்களன்று எம்பசிஸ் Mphasis BFL நிறுவனம் அளித்த அறிக்கை பங்குச் சந்தையில் மென்பொருள் பங்குகளை சரிய வைத்தது. இந்த காலாண்டில் Mphasis BFLக்கு வருவாய் குறைந்துள்ளதால் (இழுப்பு அல்ல) மொத்த மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்குமோ என்ற அச்சத்தில், இன்போசிஸ் உட்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன. வருவாய் இழுப்பு அந்நியச்செலவாணியாலேயே எற்பட்டதாக Mphasis BFL நிறுவனம் கூறியது. மற்றபடி தங்கள் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. சிறு பொறி கிடைத்தால் பற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை அதன் வருவாய் இழுப்பையே அதிகம் கவனித்தது.
இன்று காலை மென்பொருள் பங்குகளின் வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கையைப் பொருத்தே அமையும் என்பதால் ஒரு சிறு பரபரப்பு என்னுள் எழுந்தது. வேறு என்ன. இன்போசிஸ் நல்ல அறிக்கையை தரும் என்ற எண்ணத்தில் நானும் சில இன்போசிஸ் பங்குகளை வாங்கி வைத்திருந்தேன்.
Mphasis BFL, Infosys ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஒரே அளவில் வைத்து பார்க்க இயலாது. இன்போசிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம். பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. அந்த நம்பிக்கை இருந்தாலும் போட்ட பணம் என்னகுமோ என்ற கவலை ஒரு புறம்.
ஆனால் அனைவரின் கவலையையும் போக்கி இன்போசிஸ் நிறுவனம் ஒரு சிறந்த அறிக்கையை கொடுத்தது.இன்போசிஸ்ஸின் வருவாய் இந்த காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் சுமார் 32 புதிய Clients இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர். மொத்த Clients எண்ணிக்கை 431. Offshore வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சுமார் 5000 பேர் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் காலாண்டில் மேலும் 4000 பேர் சேர்க்கப்படுவர்.
Mphasis BFL போன்ற நிறுவனத்திற்கும், இன்போசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை ஒரு விஷயம் படம்பிடித்து காட்டியது. Mphasis BFL நிறுவனம் அந்நியச்செலவாணி விஷயத்தில் நஷ்டம் கண்டது. ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ Forward contracts மூலம் தனது அந்நியச்செலவாணியை திறம்பட நிர்வாகித்துள்ளது (சரி..அது என்ன Forwards. FX Forwards எனப்படுவது அந்நியச்செலவாணியில் தினமும் நிகழும் மாற்றத்தில் இருந்து ஒரு நிர்வாகம் தன்னை தற்காத்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு உத்தி. உதாரணமாக இம் மாதம் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 45.80. ஆனால் தினமும் நிகழும் பல்வேறு மாற்றத்தினால் அது 45க்கும் வரலாம், 48க்கும் செல்லலம். அந்நியச்செலவாணி அதிகமாக பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தன்னை இத்தகைய நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்து கொள்ள FX Forwards எனப்படும் ஒரு ஒப்பந்தத்தை வங்கிகளிடம் செய்து கொள்ளும். அதாவது ஒரு டாலரை ரூ 46.50க்கு ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம். பறிமாற்றம் செய்யும் நாளில் அது 45 ஆக இருந்தாலும், 48ஐ எட்டினாலும் 46.50க்குத் தான் அந்த பறிமாற்றம் நிகழும். இது ஒரு சிக்கலான கணக்கு). ஆனால் Mphasis BFL நிறுவனம் தன்னை இந்த விதத்தில் தற்காத்து கொள்ளாததால் இந்த காலாண்டில் நிகழ்ந்த நிலையற்ற பணப் பறிமாற்றத்தில் இழுப்பை எதிர்கொண்டது.
சரி...பங்குச் சந்தை என்ன ஆனது. இன்போசிஸ்ஸின் பங்குகள் ஆரம்பத்திலேயே சுமார் 40 ரூபாய் எகிறியது.பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் பங்குகள் அதிக விலையை எட்டியதால் லாபம் அடையும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இன்போசிஸ் பங்குகள் கூட சற்று சரிவடைந்து ஓரளவிற்கு லாபமுடன் (25 ரூபாய் அதிகமாக) இருந்தது.
BSE 41 புள்ளிகள் சரிவடைந்து 5,677 என்ற அளவிலும், NSE 24 புள்ளிகள் சரிவடைந்து 1788 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச் சந்தை எப்பொழுதுமே தொடர்ந்து லாபகரமாக சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் லாபம் போதும் சாமி என எல்லோரும் பங்குகளை விற்ப்பார்கள். அது தான் கடந்த இரு தினங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
மணிசங்கர் அய்யர் பிரதமரை சந்தித்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி விவாதிக்கப் போகிறார் ? விலை ஏறினால் எண்ணெய் விற்ப்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற பங்குகளுக்கு குஷியாக இருக்கும். நமக்கு ?? பெட்ரோல் பங்க் பக்கம் போகும் பொழுது வயிறு எரியும்.
பின்னூட்டம்
Tuesday, October 12, 2004
லாபம் போதும் சாமி...
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI | நேரம் 10/12/2004 08:55:00 PM