பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, October 06, 2004

ஏற்றங்களும், இறக்கங்களும்

வலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும், இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி, துளசி, கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி. இத்தகைய வாழ்த்துக்கள் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறது.

சூப்பர் ஸ்டார் "அருணாச்சலம்" போன்றவர்களுக்குத் தான் பணத்தை செலவழிப்பது கஷ்டமான ஒன்று. ஆனால் நம்மைப் போன்ற அற்ப உயிர்களுக்கு அது மிக சுலபம். மாத சம்பளம் மாத நடுவிலேயே காணாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போடுவதும், திடீர் என வரும் செலவுகளால் மண்டையை உடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சம்பாதிப்பதை கட்டிக் காப்பது மிகவும் கடினம். அதனால் தான் நம்மவர்கள் வங்கிகளிலும், அரசாங்க சிறுசேமிப்புகளிலும் பாதுகாப்பாக பணத்தை சேர்த்து விடுகின்றனர். அல்லது அதிக "வட்டி" ஆசையில் நிதி நிறுவனங்களில் கொடுத்து பின்னர் பனகல் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

வங்கிகளை விட அதிக லாபம் தரக்கூடிய, அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு செயல் படுகிற பங்குச் சந்தையை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை ?

ஒரு சின்ன கணக்கு போடுவோம்ரூ5000க்கு, வங்கிகளின் வைப்பு நிதியில், ஒரு மாத வட்டி முப்பது ரூபாய்க்கும் குறைவாகத் தான் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளை உதாரணமாக எடுத்து கொள்வோம்

கடந்த வாரம் இந்த பங்குகளின் விலை - ரூ580 என்ற அளவில் இருந்தது. இன்று அதன் விலை – 630 க்கு மேல்.

9 பங்குகளை கடந்த வாரம் வாங்கி இந்த வாரம் விற்றிருந்தால்வாங்கும் விலை - 9x580 = 5220விற்கும் விலை - 9x630 = 5670

பங்குத் தரகு, புதியதாக ஐயா சிதம்பரம் அவர்களின் புண்ணியத்தால் வந்துள்ள பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை கழித்து நிகர லாபமாக வரும் தொகை ரூ425க்கும் மேல்.

இது வங்கிகளின் வைப்பு நிதியைப் போல ஒரே நிலையாக இல்லாமல் ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும்இருக்கும். ஆனால் வங்கிகளை விட அதிக அளவில் லாபம் தரும்.

பங்குச் சந்தையின் இந்த ஏற்ற இறக்கம் தான் பலரின் அச்சத்திற்கு காரணம். இது பங்குச் சந்தையின் இயல்பான தன்மை (Speculation). தக்காளி, வெங்காய விலைப் போலத் தான். ஆனால் நாம் தேர்வு செய்யும் பங்குகளைப் பொருத்து தான் நம்முடைய லாபம் அமையும். நல்ல நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிய வாய்ப்பு இல்லை. அதைப் போல குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீடு இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

சரி...இப்பொழுது பங்குச் சந்தை எப்படி உள்ளது ? இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது. பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்க தொடங்கியதில் பங்குகளின் விலையில் நேற்று சரிவு ஏற்ப்பட்டது. ரிலயன்ஸ், இன்போசிஸ், சத்யம் பங்குகள் சரிவடைந்தன. நேற்று வரை முன்னேறிக் கொண்டிருந்த விப்ரோ இன்று சற்று சரிந்துள்ளது

எங்கே கிளம்பிட்டீங்க பங்குகள் வாங்கவா ? கொஞ்சம் இருங்க...பங்குச் சந்தையில் புதியதாக பங்குகளை வாங்க இது உகந்த நேரம் இல்லை. பங்குச் சந்தையை நம் கவனத்தில் இருந்து நகர்த்தாமல் காத்திருப்போம்.

பின்னூட்டம்