பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, October 14, 2004

மென்பொருள் ஆளுமை

மென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது. மேலும், கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு, அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி, இறுதியில் BSE 36 புள்ளிகளும், NSE 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது. விப்ரோ, சத்யம், பாட்னி, HCL போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன. இன்போசிஸ் 1800 - 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன். ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ ?

சத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே, இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ ?

பெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் BPCL போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் - HINDALCO, NALCO, SAIL, TISCO இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன.

ஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும்.


0 மறுமொழிகள்: